Thursday 1 May 2008

சபாஷ் ISRO



இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஏப்ரல் 28ம் தேதி பத்து சாட்டிலைட்டுகளை ஒரே வாகனத்தில் விண்ணில் செலுத்தியுள்ளது

CARTOSAT-2A என்ற ரிமோட் சென்சிங் சாடிலைட், IMS-1 என்ற மினி சாட்டிலைட், 8 பிற தேச நானோ சாட்டிலைட்கள் என்ற 820 கிலோ எடையைத் தூக்கிக் கொண்டு PSLV-C9 என்ற வாகனம் ஜிவ் என்று வானத்தில் எவ்விக் கிளம்பியது. அந்த குழு விஞ்ஞானிகள் இன்ஜினியர்கள் எல்லாம் கழுத்தைப் பின்னுக்கு வளைத்து கொஞ்ச நேரம் திக் திக் என்று பார்த்துவிட்டு பின்னர் சந்தோஷமாக கை குலுக்கி ஆராவரித்தார்கள்


சில சமயம் இந்த சாட்டிலைட்கள் நம்பிக்கை துரோகம் செய்துவிடும். கொஞ்ச தூரம் சமத்தாய் வானத்தில் போய்விட்டு அப்புறம் திசைமாறி தொபுக்கடீர் என்று விழுந்துவிடும். நல்லவேளை PSLV-C9 அப்படியெல்லாம் செய்யாமல் நல்லபிள்ளையாய் நடந்து கொண்டது

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் மையத்திலிருந்து ராக்கெட் கிளம்பி சுமார் 885 செகண்டில் 637 கிலோமீட்டர் தொட்டது. அங்கே CARTOSAT-2A அதன் பின்பு IMS-1 அப்புறம் 8 நானோ சாட்டிலைட்டுகள் எல்லாம் விண்வெளி வாகனத்தில் இருந்து பிரிந்தன. Polar Sun Synchronous Orbit ல் பொறுத்தப்பட்டன

அதாவது இந்த சாட்டிலைட்டுகள் பூமியில் அமைந்துள்ள சில குறிப்பிட்ட இடங்களை தினமும் ஒரே நேரத்தில் கடக்கும். இது பூமியில் அந்த குறிப்பிட்ட இடங்களில் பகல் வெளிச்சம் படும் நேரம் இந்த சாட்டிலைட் அந்த இடத்தைப் படம் எடுக்கும். தொடர்ச்சியான படங்கள்


CARTOSAT-2A ல் உள்ள PANCHROMATIC CAMERA (PAN) ரொம்ப சாமர்த்தியமானது. சுமார் ஒரு மீட்டருக்கு கழுத்தைச் சாய்த்து/ சுழற்றி சுமார் 10 கீ. மீ விஸ்தீரணத்தை ஒரு ஸ்ட்ரோக்கில் கபளீகரமாய் படமெடுக்கும்.
இந்த காமிரா பார்க்கும் திசையில் நான் வசிக்கும் மாம்பலம் பிளாட் மொட்டை மாடி வருகிறதா என விசாரிக்க வேண்டும். அப்படி இருந்தால் அந்த நேரத்தில் சிவப்பு சட்டை சிவப்பு பாண்ட் அணிந்து கொண்டு மாடியில் நின்று கையாட்ட உத்தேசித்துள்ளேன்.

நேரம் காலம் இல்லாமல் மொட்டை மாடியில் நடந்தபடி காதுக்குள் செல் போனை ஒளித்தமாதிரி வைத்துக் கொண்டு பேசும் எதிர் பிளாட் பெண் என்னை செவ்வாடையில் பார்த்து மிரண்டு ஓடிவிடக்கூடும். அதனாலென்ன. சாட்டிலைட் என்னை படம் பிடித்தால் சரி

IMS -1 ல் உள்ள காமிராக்கள் இரண்டும் இன்னும் விஷேசம்; ஒன்று 37 மீட்டர் சுழன்று 151 கிலோமீட்டர் தூரத்தை படம் எடுக்கும்; இரண்டாவது 506 மீ சுழன்று 130 கிலோமீட்டர் படமாக்கும்.

இந்த படங்களை கல்வி நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி நோக்கத்துக்கு வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளது ISRO


எட்டு நானோ சாட்டிலைட்டுகள் இரண்டு பிரிவாக உள்ளன. ஆறு நானோ சாட்டிலைட்டுகள் மொத்தமாக NLS-4 என்றும் மத்த இரண்டு NLS-5 ,RUBIN என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளன.


NLS-4 கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழக வடிவமைப்பு; இதில் உள்ள இரண்டு சாடிலைட்டுகள் ஜப்பானிலும் மிச்ச நாலு கனடா, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாண்ட்ஸ் என்று நாலு வேறு ஸ்தலங்களில் வடிவமைக்கப்பட்டவை

இந்த மாதிரி மகத்தான சாதனைகள் மக்கள் மனசில் தலைப்பு செய்தியாக முதல் பக்கத்தில் ஒரு நாள் வாழ்ந்துவிட்டு அப்புறம் மறைந்து போய்விடுவது ரொம்ப சோகம்.

சாமர்த்தியமாய் ராக்கெட் விட்டு கொண்டிருந்த ஒருத்தரை மடக்கிப் பிடித்து டெல்லிக்கு கூட்டிப் போய் ராஜ ஆஞ்ஞை பிறப்பிக்கும் உத்தியோகத்தில் சிக்கவைத்து வேடிக்கை பார்த்த நாம் கொஞ்சம் மாறத்தான் வேண்டும்

No comments: