Saturday, 11 December 2010

கலி தவிர்ப்போம்


"என்ன இந்தப் பக்கம்"

திருவல்லிக்கேணியில் முண்டாசு வசித்த வீட்டினை என் மகளுக்குக் காட்டிவிட்டு வெளியே வந்து ஸ்கூட்டரை எடுக்கும் போது முண்டாசுவின் குரல் கேட்டது

"இன்று உங்க பிறந்த நாளாச்சே.. ஹாப்பி பர்த்டே.. பர்த் டே மெசேஜ் எதுவும் உண்டா"

"ஆங்கிலத்தில் கேட்டதால் ஆங்கிலத்திலேயே பதில் சொல்லவா"

"சொல்லுங்க"

Dedicate unto her grace all knowledge you have;

Attain to her splendours, and vanquish dire want.

Rise high in the world by joyous affirmation of Lakshmi, who is revealed

In conquering armies and the traffic of far sighted Self-Control and ay! In the harmonious lays of her poet votaries; come let us affirm the energy of Vishnu, the jewel of the Crimson Flower

"ஏனையா அப்படி பார்கின்றீர் இந்தப் பாடல் எனது தமிழ்க் கவிதையினை நானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வடிவம்"


"தெரியும்.....

வெற்றி கொள் படையினிலும்‍‍ பல‌

விநயங்கள் அறிந்தவர் கடையினிலும்

நற்றவ நடையினிலும் பல‌

நாவலர் தேமொழித் தொடரினிலும்

உற்ற செந் திருத்தாயை நித்தம்

உவகையிற் போற்றி யிங்குயர்ந்திடுவோம்

கற்ற பல் கலைகளெல்லாம் அவள்

கருணை நல்லொளி பெறக் கலிதவிர்ப்போம்

என்ற பாடல் தானே"

"நன்று சொன்னீர்.. இன்னொரு செய்தி என் பிறந்தநாள் ஒட்டி சொல்லட்டுமா"

"என்ன கேள்வி சொல்லுங்கோ"

"என் படைப்புகள் படிக்காமலும், என் பேர் சொல்லி திரியும் உன்மத்தர்கள் அதானய்யா லூசுகள்... நான் தவிர்க்க சொல்லும் கலியில் அடக்கம்".. வழக்கம் போல் சுடராகி மறைந்தான்

Tuesday, 23 November 2010

பாரதி மொழி பெயர்ப்பு 2

பாரதி தரிசனம் எனும் வகையில் நான் இந்த வலையில் எழுதியவை இவை




யுக புருஷன் என நான் மதிக்கும் ஒரே நபர் முண்டாசு.. அதிருக்கட்டும்

பாரதி தன் கவிதைகளை தானே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறான் என ஆதாரத்துடன் எழுதினால் அதற்கு பதில் சொல்லாமால் அழுதால் .. எனக்கு சிரிப்பு தான் வருகிறது

கவிதை மட்டுமா .. உரை நடை ஆங்கிலத்தில் இருக்கா என யாராவது கேட்டால்

இருக்கே.. கல்கத்தா தமிழ் சங்கம் தொகுத்திருக்கும் புத்தகத்தின் முகப்பினை இங்கே படம் எடுத்து போட்டிருக்கேன். இந்தப் புத்தகம் என்னிடம் 1993 ம் ஆண்டிலிருந்து இருக்கு

புத்தகத்தின் உள்ளிருந்து மொழிபெயர்ப்புகளையும் படம் எடுத்து போடலாமா..

ச்சே பாவம் அழுகை அதிகமாகிவிடும்

Sunday, 21 November 2010

பாரதி ‍ மொழி பெயர்ப்பு






பாரதிக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு இல்லை .. இது சாரு நிவேதிதா ஆனந்த விகடன் 26 நவம்பர் 2010 தேதியிட்ட இதழில் சொல்லியிருக்கும் வசனம்.

தெரிந்தால் எழுதவேண்டும். தெரியவில்லை என்றால் ரெஃபர் செய்து கொண்டு எழுத வேண்டும்.

அட்லீஸ்ட் ஆனந்த விகடன் எடிட்டோரியலாவது இதை வெரிஃபை செய்திருக்கலாம்

பாரதி நூற்றாண்டு விழாவின் ஓர் அங்கமாக சிவகங்கை அன்னம் பதிப்பகத்தார்,

Bharati as a translator என்ற புத்தகத்தை 1982 வெளியிட்டனர். இந்த புத்தகத்தில் பாரதி தனது கவிதைகள் சிலவற்றை தானே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளதனை பாரதியின் சகோதரர் சி. விஸ்வநாதன் தொகுத்துள்ளார்

1982 ஆகஸ்ட் 17 ம் தேதி இந்தப் புத்தகத்தை தஞ்சாவூரில் வாங்கினேன்.

புத்தகத்தின் முக்கிய பக்கங்களை Photo எடுத்து இங்கே இணைத்திருக்கேன்

பக்கம் பக்கமாய்‍ 2

நண்பர் ஆறுமுகம் தொலைபேசியில் அழைத்தார், " சார் ஒரு சந்தேகம்"

"சொல்லுங்க சார். நல்லாருக்கீங்களா"

"நல்லாருக்கேன். அதாவது.. எழுத்துகள் சம்பந்தமா சில சந்தேகம்"

"கேளுங்க"

" ஒரு மொழியில் இல்லாத சப்தத்தை அந்த மொழியிலே எப்படி சொல்வது எப்படி எழுதுவது"

உரையாடலில் நான் அவருடன் பகிர்ந்து கொண்டதை உரையாடல் நடை தவிர்த்து

க்ளாக்சோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் க்ரே மெக்கன்டிரிக்.. இவர் புகழ் வாய்ந்த Principles of Physiolgy ன் ஆசிரியர். இவர் சொன்னது பொருத்தமா இருக்குமென நினைக்கின்றேன்

Nature knows nothing of letters and syllables; words are simple phones or combination of phones and each phone is formed of vibration. This is nature's long hand method of recording speech; written or printed letters are a species of shorthand invented by man

அப்ப எழுத்து முக்கியமில்லயா

Language does not function by the spoken word alone. but may assume all forms of expression, which the physical structure of the organs of speech allow

Julius E Lips தனது Origin of things ல் சொன்னது இது

"எங்கிருந்து புடிச்சீங்க இதெல்லாம்"

"புடிக்கலை படிச்சது.. டிவி மஹாலிங்கம் எழுதுன யெர்லி சௌத் இண்டியன் பாலியோகிராபினு என் அப்பா வச்சிருந்த புக்..1982 லே 16 ரூபாய்க்கு வாங்கிருக்கார்.. .. மதராஸ் யுனிவர்சிட்டி பப்ளிகேஷன்..

சரி தான் மஹாலிங்கம் புக்ஸ் எதும் ஆன்லைன்லே கிடைக்குதானு தேடினா ஃப்ளிப் கார்ட்டிலே பல்லவா இன்ஸ்க்ரிப்ஷன்ஸ் அப்படினுன்னு ஒரு புக் ஆறாயிரம் ரூபாய் வாங்கிடணும்"

"நீங்க சொன்ன புத்தகம் படிக்க கிடைக்குமா படிச்சுட்டு ரிடர்ன் செய்துடறேன்"

" வக்கீல் சார் நீங்களும் எனக்கு ரத்தன்லாலின் கமென்ட்ரி ஆன் இந்தியன் பீனல் கோட் தரேன் தரேன்னு சொல்லிட்டே இருக்கீங்க.. இன்னும் தரலை"

"தந்துடறேன் சார்.. சரி அப்ப போனை வச்சிரவா"

மஹாலிங்கம் புக்லேர்ந்து இன்னொரு சுவாரசியமான சமாச்சாரம் தரேன்

"ஜூலியன் ஹக்ஸ்லி என்பவர் கொரில்லா குரங்கின் வினோத நடவடிக்கை ஒன்றை பதிவு செய்து இருக்கார்

அதாவது கொரில்லா குரங்கு ஒன்னு மிருகக் காட்சி சாலையில் சுவற்றில் விழுந்த தன்னோட நிழல் அவுட் லைனை அப்படியே வரைஞ்சதாம்

லெனார்ட் பொவென் இப்படி இன்னொன்னு சொல்லிருக்கார் rhesus குரங்குகள் இதே போல தன்னோட கையை தரையில் வச்சி அதோட அவுட் லைனை குச்சி வச்சு வரையுமாம்"

"ஓ இன்ட்ரெஸ்டிங்"

"ஆனா இந்த கொரில்லா, குரங்கு சமாச்சாரம் உங்களுக்கு தன்படம் தானே வரையும் யாராவது ஜோக்கர்களை நினைவுபடுத்தினால் அது ஜஸ்ட் கோயின்சிடன்ஸ்

Wednesday, 17 November 2010

நாஞ்சில் நாடன் தமிழ்


நாஞ்சில் நாடன் தமிழ்

தொடற்ச்சி‍‍ - ‍‍ இப்படி தமிழ் வார்த்தை இருக்கா

ற்ச் ‍ ‍ இப்படி வல்லின மெய் ஒட்டி வரலாமா

Sunday, 14 November 2010

பக்கம் பக்கமாய்‍‍ 1


பாடப் புத்தகங்கள் தாண்டி மற்ற புத்தகங்களை எப்போது படிக்க ஆரம்பித்தேன் என என் நினைவுகளில் தேடினால் கிடைக்கவில்லை.. அரசாங்கம் சார்த்த வேலையில் இருக்கும் போது ஒரு அரசியல் தலைவர் எனக்கு பரிசாக வழங்கிய சுபாஷ் சந்திரபோஸ் குறித்த புத்தகம்.. பாரதிய வித்யா பவனின் ,"பவான்ஸ் ஜர்னல்" என என் ஆதி நினைவுகளில் இரண்டு புத்தகங்களின் நினைவுகள் முன் வந்தன.. "என்னைத்தான் நீ முதலில் படிச்சே" என இரண்டும் சண்டை பிடிப்பதாக ஒரு காட்சி அமைத்துப் பார்த்தேன்.

சில்வர் டங் சீனிவாச சாஸ்திரி ஒரு கட்டுரையில் எழுதியிருப்பார். I am not a man of one book or of a few Select Books என‌

அது போலத்தான் நானும்..கிடைத்ததை வாங்கிப் படித்துக் கொண்டே இருப்பதிலும் புத்தகங்களை தேடிக் கொண்டே இருப்பதிலும் எனக்கு ஒரு போதும் சலிப்பு வருவதில்லை..

நண்பர்கள் வட்டத்தையும் அப்படியே அமைத்துக் கொள்வதில் கவனம் செய்கிறேன்.. புத்தகப் பிரியர் எனில முதல் வரிசை .

நான் சோஷியல் நெட்வொர்க்கிங்கில் அவ்வளவாக ஈடுபடுவதில்லை ஆயினும் இப்போது சமீபமாக ஃபேஸ் புக். டிவிட்டர் என சில நிமிடங்கள் செலவு செய்கிறேன்.. இந்த தளங்களை நல்ல புத்தகங்களை குறித்த தகவல் பரிமாறும் இடமாக உபயோகிக்கலாம் என ஓர் ஐடியாவில்.. இந்த பக்கம் பக்கமாய் தொடர்

இங்கே நான் படித்த படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள். கேட்ட நல்ல சங்கீதம் இப்படி சொல்லலாம் என நினைத்து தொடர்கிறேன்.

பக்கம் பக்கமாய் என்றால் பேஜ் பேஜாக எனவும் அருகாமை எனவும் அர்த்தம் வருகிறதே என நண்பர் சொன்னார்.. ரெண்டும் ஒன்னு தான்னு சொல்லிட்டேன்.

முதல் அத்தியாயப் படம் நான் விரும்பி படித்த சிலரின் படத்துடன் தொடங்கிவிட்டால் ஒத்த சிந்தனை உள்ளவர் பக்கமாய் வருவர்.. அல்லாதார் இந்த பக்கமே வரமாட்டார் இரண்டுமே உனக்கு நல்லது என அந்த நண்பரின் ஐடியா

(இந்தப் பக்கம் வந்தவர் என் பக்கம்.. இந்தப் பக்கம் வராதவர் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது)

திருவள்ளுவர் 1(மீண்டும் சுஜாதா‍)


"சார் அது ஒன்னுமில்லை.. நீங்க எழுதினதுக்கும் இப்ப பூமில தமிழ்ல மத்தவங்க எழுதறதுக்கும் என்ன வித்தியாசம்".

'சிம்பிள் அது நான் எழுதினது. அது அவங்க எழுதினது"..

"அதில்லை சார்.. நீங்க ஒரு பெரிய ட்ரன்ட் செட்டர்.. உங்க மாதிரி வரணும்னு பலர் ஆசைப் படறாங்க அதனாலே கேட்டேன்"

"என்னை ஒரு பெஞ்ச் மார்க் ரேஞ்சுக்கு நான் என்னிக்குமே நினைச்சுன்டது கிடையாது.. நான் எழுதினதை நானே இவாலுவேட் பண்ணி நான் இத்தனை எழுதிருக்கேன் .. இதுல இத்தனை செறிவு இருந்தது .. இருக்கு. அப்படினு சொல்றதுக்கு எனக்கு தகுதியும் ஸ்டாண்டும் இருந்ததா நினைச்சுன்டதே இல்லை. எனக்கு நல்ல பாப்புலாரிட்டி இருந்ததுனு தெரியும்.. அதனாலே நான் யாரைப் பத்தி ஒரு வரி எழுதினாலும் அவங்களுக்கு ஒரு பெரிய சந்தோஷம்.. அவர்கள் அதை ஒரு நல்ல ஐடென்டிபிகேஷனாக எடுத்துன்டாங்க.. நான் படிப்பேன் நல்லாருந்தா ஒரு வரி எழுதுவேன்னு ஆசைப்ப்பட்டு நிறைய பேர் எனக்கு பொஸ்தகம் அனுப்புவாங்க‌

நானு படிச்சுட்டு பிடிச்சிருந்தா.. நல்லாருக்குனு ரென்டு வரி சொல்லுவேன். பிடிக்கலேன்னா ஐ வில் கீப் மை ஒப்பினியன் வித் மி.. நான் யாரையும் இவர் சரியா எழுதறதில்லைனு சொன்னதா நினைவில்லை.. அப்படி சொல்லிருந்தா நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்.. பொதுவாக ஒன்னு சொல்லலாம், தமிழ் இலக்கியம், இன்டியன் பிலாசபி படிக்க ஆரம்பிச்சாலே காதுகிட்ட கொஞ்சம் ஜிவ்வுனு இருக்கும் .. நமக்கு எல்லாமே தெரிஞ்சுடுத்துனு ஒருமாதிரி ஆய்டும்.. இது உலகத்திலே வேற யாருக்குமே தெரியலேன்னு ஒரு மாதிரி அகங்காரமான மோகம் வந்துடும்.. ஆனால் இதெல்லாம் மேம்போக்கா எனக்கு தெரிஞ்சிருக்குனு உனக்கு தெரியலேன்னு காட்டிக்க படிக்கிறவங்ககிட்ட இருக்கும்.. இந்தியன் பிலாசபி பத்தி இராதாகிருஷ்ணனும்.. நம்ப காஞ்சி ஸ்வாமிகளும் தெரிஞ்சி வச்சின்டு இருந்ததைவிட இப்ப அது பத்தி மாஞ்சு மாஞ்சு எழுதறவங்களுக்கு தெரியும்னு சொல்ல முடியாது.. பரமாச்சார்யாளும் இராதகிருஷ்ணனும் இப்படி ஜிவ்வுனு காத்துல மிதக்கலை"

அப்போது அவர்களுக்கு கைட் போல நியமிக்கப்பட்டவர் தனது ஜிப்பா பாக்கெட்டில் சப்தமிட்ட ஒரு கருவியை எடுத்து அதில் தெரிந்த செய்தியைப் படித்தார்..

" ரங்கராஜன்.. உங்களது முதல் மேலுலக சந்திப்பு இன்னும் ஒரு மணி நேரத்தில்.. அடுத்து இருக்கும் வசந்த மண்டபத்தில்.. நீங்கள் சந்திக்க இருப்பது திருவள்ளுவரை"

சுஜாதா அவரை நோக்கி நட்புடன் புன்னகைத்தார்..

" ஓ வள்ளுவரா எனக்கு குறள்ல நிறைய சந்தேகம்.. அதும் தர்ட் பார்ட்லே..."

கணேஷ் வசந்தின் முதுகில் "பளார்" என ஒன்று வைத்தான்

(தொடரும்)

ரகசி‍ பார்ட் 2


பார்ட் 1 படிக்க க்ளிக் செய்யவும்


"என்னடா இது அனுராதானு ஒன்னோட ஆத்துக்காரி பேர் தந்தால் யாரோட படமோ வரது"

"போங்கோ ப்ரொபசர் இதுக்கு தான் வேண்டாம்னேன். இப்ப வரலஷ்மினு மாமி பேர் தந்து ஒங்க மெமரியை ஸ்கான் செய்தால் மாமி படம் வருமா இல்லை எஸ் வரலஷ்மி படம் வருமானு பார்க்கலாம்"

"எனக்கு வரலஷ்மியெல்லாம் ப்ரேமை இல்லை.. நான் தீவிர தேவிகா ஃபேன்.. சரி அதை விடு.. இதுலேர்ந்து என்ன தெரியறதுன்னா ராஜர் ஸ்பெரி, மைக்கெல் காஸானிகர் சொன்னது நிஜம்னு"

" யாரு அவாள்லாம்"

"சரியாப் போச்சு .. கலிபோர்னியாவைச் சேர்ந்தவா.. ஸ்பிளிட் பர்சனாலிட்டி பத்தி ரிசர்ச் செய்திருக்கா.. ஸபெரிக்கு நோபெல் பரிசு கூட கிடைச்சது"

" ஓ நோபெல்"

"என்னடா ஓ நோபெலா

"யாராவது நோபெல் ப்ரைசஸ் வாங்கினா . அவரை எனக்கு எட்டாங்கிளாசிலேயே தெரியும்.. நான் ஒம்பதாங்கிளாஸ் படிக்கும் போதே அவரோட ரிசர்ச் பத்தி படிச்சிருக்கேன்னு சொல்லிண்டு திரிய நானென்ன ஓசி பாசியா"

"சரி ப்ரொபசர் விஷயத்துக்கு வருவோம்.. இப்ப இந்த ரகசியாலே என்ன காரியம் ஆகும்".

"என்ன இப்படி கேட்டுட்ட .. இது மாதிரி ஒரு லை டிடக்டர் உண்டா சொல்லு இன்னி தேதிக்கு. போலிசிலே இதை வச்சின்டு ஒரு அக்யூஸ்ட் க்ரைம்லே தொடர்பு வச்சிருந்தானா இல்லையானு நிமிஷத்துல கண்டு பிடுச்சுரலாம்.. மிலிட்டிரி ஆப்பரேஷன்லே எத்தனை உளவாளிகளைப் பிடிப்பா.. அவன்கிட்ட என்ன தகவல் இருக்குனு சுலபமாக சொல்லிடலாமே"

"எக்ஸலென்ட் .. அதே மாதிரி டாக்டர்ஸுக்கும் ரொம்ப யூஸ் ஆகும்".

"அதே தான்.. இப்ப இதோட அல்காரிதம் பத்தி சொல்றேன் கிட்ட வா"

(தொடரும்)

Saturday, 16 October 2010

ரகசி-PART1


"என்ன ப்ரொபசர் அவசரமா வாடானு போன் பண்ணிட்டு நான் வந்தது கூடத் தெரியாம.. அப்படி என்ன பார்த்துண்டு இருக்கேள்"

"வாடா பாஸ்கி., நீ வந்தது கவனிக்காம இல்லை.. இந்த சிப்பை சரி பார்த்துண்டு இருந்தேன்.. அது இருக்கட்டும் ஒன்னோட அமெரிக்கா ட்ரிப் எப்படி இருந்தது.. விஸ்தாரமா சொல்லு"

"அமெரிக்கா எங்கே ஓடிப் போறது.. நீங்க என்னவோ புது ப்ராஜெக்ட்லே இறங்கிருக்கேள்.. அதைப் பத்தி சொல்லுங்கோ"

"ஆமாடா.. இது பேரு ரகசி..இது விஷேச சர்ச் எஞ்சின்"

"கூகிள் மாதிரியா"

"இல்லை கூகிள் டெஸ்க்டாப் சர்ச் மாதிரி.. நீ கோபர்நிக் பத்தி கேள்விப்பட்டிருக்கியா"


" யெஸ் ப்ரொபசர்.. கேள்விபட்டிருக்கேன் .. நல்ல பிரபலமான டெஸ்க்டாப் சர்ச்"

"அது என்ன செய்யறது சொல்லு"

" ஒரு கம்ப்யூட்டரில் இருக்கும் எல்லாத் தகவலையும் இன்டெக்ஸ் செய்து வச்சிக்கிறது.. ஒரு சின்ன டெக்ஸ்ட் கொடுத்து தேடினாலும் அந்த வார்த்தை இருக்கும் ஃபைல் எங்கே இருக்குனு தேடி எடுத்துத் தரும்"

"நம்ம ரகசி அப்படித்தான்.. ஆனா இது மனுஷாளோட மெமரிலே தேடும். அதுக்கு தான் இந்த சிப். இந்த சிப்பை மனுஷாளோட நெர்வ்ஸ்லே கனெக்ட் செய்துட்டு இன்னொரு முனையிலே ஒரு கம்யூட்டரைக் கனெக்ட் செய்துடனும். கம்யூட்டரில் தேட வேண்டிய வார்த்தையைத் ரகசி சாஃப்ட்வேர்லே கொடுத்தா அந்த வார்த்தை சம்பந்தமா அந்த மனுஷனோட மெமெரிலே பதிவாகி இருக்கிற எல்லா விபரமும் அப்படியே ஸ்க்ரீன்லே தெரியும்"

"என்ன ப்ரொபசர் எந்திரன் சினிமா பார்த்து எதானும் ஆய்டுத்தா"

" அட கஷ்டகாலமே .. நான் சொன்னதை நீ நம்பலைனு தோண்றது.. உன்னை வச்சே இதை ப்ரூப் செய்துடறேன்"

"நான் நம்பறேன் ப்ரொபசர்.. நிச்சயமா நம்பறேன்.. நீங்கபாட்டும் என் இமெயில் பாஸ்வேர்ட்ல்லாம் தெரிஞ்சிண்டு அப்பாலே என்னைக் கேலி செய்வேள்"

"அதெல்லாம் இல்லை .. உன்னோட ப்ரைவசி பத்தி நீ பயப்பட வேணாம்.. நம்ம ரகசி அதை கண்டுபிடிக்கும் ஆனா இப்ப இந்த டெஸ்டிங்கிற்கு நீ தான் இன்புட் தரப் போற"

பாஸ்கியை பின்புறம் திரும்பி நிற்க வைத்தான் சடகோபன். பின் கழுத்திலே சலூனில் செய்வது போல ஒரு ஜில்லான திரவத்தை தடவினான்

"நெளியாதடா இப்ப ஒன்னோட நெர்வ் சிஸ்டத்திலே இந்த சிப்பை இந்த டேட்டா கார்ட் வச்சி கனெக்ட் செய்யப் போறன். குத்தும் போது லேசா வலிக்கும்"

" ஆ... ப்ரொபசர் லேசா வலிகும்னேள் .. இப்படி கடுக்கறதே"

"கொஞ்சம் பொறுத்துக்கோ.. இதோ ஆய்டுத்து.. இப்ப இந்த ஸ்கீரின்லே தெரியற டெக்ஸ்ட் பாக்சிலே எதானும் வார்த்தை கொடுத்து பாரு"

"என்ன வார்த்தை தரலாம்னு யோசிக்கிறேன்"

"ஒன்னோட ஆத்துக்காரி பேர் தாயேன்.. இரு நானே தரேன்"

"அய்யோ அது வேணாம் சொன்னாக் கேளுங்கோ"

பாஸ்கி மறுத்து முடிப்பதற்குள்.. சடகோபன் டைப் அடித்து என்டர் கீயும் அழுத்தியிருந்தான் ..

ஸ்கிரீனில் தகவல்கள் வரி வரியாக வரத் தொடங்கியது...

தொடரும்

Saturday, 9 October 2010

திமிர்


"எங்கே இந்தப் பக்கம் ".. மெரினாவிலே அதிகாலை நடந்து போகையில் பின்னாலிருந்து குரல். மிகப் பக்கத்திலே கேட்ட குரல்.. அதிலிருந்த கம்பீரம்..

யாரது முண்டாசுவா..

அவனே தான்..

ஸ்நேகிதமாகப் புன்னகைத்தேன்..

"என்னைக் குறித்து தான் ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்கின்றீர் என யூகம்"

"நீங்கள் அறியாத டெவில் பழமொழியா.."

"சொல்லுமையா என்ன ஐயம் இப்போது"

"உங்களுக்கு திமிர் அதிகம் என சொல்வார்களா.. உங்கள் காலத்தில்"

"இருக்கலாம்.. ஆனால் நான் இல்லை எனச் சொல்வேன்"

"புரியலை"

"என் பாடல் ஒன்றைக் கொண்டே விளக்கலாம். உமக்கு மிகவும் பிடித்த எனது கவிதை ஒன்றைச் சொல்லும்"

"இது என்ன கேள்வி.. உங்கள் கவிதை எல்லாமே அந்த ரகம் தான் எனக்கு"

"அதில்லை ஸ்வாமி.. அடிக்கடி சொல்வீரே .. இது தான் முண்டாசுவின் மாஸ்டர் பீஸ் என அந்தப் பாடலைச் சொன்னேன்"

"அதுவா

தேடிச் சோறு நிதந்தின்று _பல‌
சின்னஞ்சிறு கதைகள் பேசி _ ம‌ன‌ம்
வாடித் துன்ப‌ம் மிக‌ உழ‌ன்று‍ பிற‌ர்
வாட‌ப்ப‌ல‌ செய‌ல்க‌ள் செய்து‍_ந‌ரை
கூடிக்கிழப் ப‌ருவ‌மெய்தி‍ _கொடுங்
கூற்றுக் கிரையென‌ப்பின் மாயும்_ப‌ல‌
வேடிக்கை ம‌னித‌ரைப் போலே_ நானும்
வீழ்வேன் என்று நினைத்தாயோ


"இப்படியான் வேடிக்கை மனிதரிடம் இருக்கும் திமிரையும் எனக்கான செருக்கையும் ஒப்பிட எப்படித் துணிந்தீர்"

"அப்படியானால் வேடிக்கை மனிதரிடம் செருக்கு இருக்காதா.. "

"உமது கால திரைப்பட பாணியில் சொல்வதானால் எனக்கு சொல்ல நா எழவில்லை ஆனாலும் சொல்லாமால் செல்ல மனமில்லை"

"சொல்லிவிடுங்கள்"

"இப்படியான வேடிக்கை மனிதரிடம் கிறுக்கு தான் இருக்கும் செருக்கு இருக்காது"

அந்த யுக புருஷன் மிகத் தைரியமாக கடல் அலைமீது நடந்து மறைந்தான்

Sunday, 3 October 2010

எந்திரன்‍ ‍‍- சமூக பலவீனம்


இந்த கட்டுரை எந்திரன் திரைப்படம் குறித்த எனது விமர்சனமோ கருத்தோ அல்ல. நான் இன்னும் அந்த திரைப்படத்தினைப் பார்க்கவில்லை. எப்போது பார்ப்பேன் அல்லது பார்க்காமல் விடுவேனா எனவும் தெரியாது. நான் அப்படி ஒன்றும் சினிமாவை விரும்பிப் பார்ப்பவனாக இருந்ததில்லை.

எந்திரன் திரைப்படம் வெளியீடு குறித்து சன் டிவியில் வந்த வந்து கொன்டிருக்கும் விளம்பரங்கள் இந்த கட்டுரையினை எழுதத் தூண்டியது என சொல்லலாம்.

திரைப்படத்தின் முதல் நோக்கம் அதனால் வரும் வியாபார வருமானம் என்பதில் யாரும் கருத்து வேறுபாடு கொண்டிருக்க இயலாது. எந்திரனும் அதற்கு விதி விலக்கல்ல. எந்திரன் வெளிவருவதற்கு முன்பே அதன் வியாபர வெற்றி நோக்கி செய்த விளம்பரங்கள், அதீத அளவில் இருந்தன என்பது என் கருத்து.

திரைப்படம் வெளியான பின்பு அதனை ஒட்டியும் சன் டிவியில் நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன‌

அது தயாரிப்பாளர்களின் உரிமை.. அவர்களின் வியாபார வெற்றி மீதான கண்ணோட்டம் அவர்களுக்கு இருக்கும் சமூக கடமையினை மறக்கடிக்கச் செய்து விட்டது.

திரைப்படம் உலகெங்கும் வெளியானதை ஒட்டிய நிகழ்வுகளைத் தொகுத்து ஒரு நிகழ்ச்ச்சி வெளிவருவதாக முன்னோட்டம் சன் டிவியில் இரண்டு நாட்களாக காணப்படுகிறது.

ஒரு திரையரங்கின் முதல் காட்சி கதவுகள் திறக்கப்படுகின்றன மந்தையென மக்கள் கட்டின்றி ஒழுங்கின்றி ஓடிப் பிரவகித்து உள் நுழையும் காட்சி

திரையரங்கம் ஒன்றின் வெளியே திரைப்படத்தின் விளம்பரமாக வைக்கப்பட்டுள்ள பேனர் அதில் ரஜினி காந்த். அதற்கு ரசிகர்களின் பாலாபிஷேகம்

திரைப்படத்தின் ப்ரிண்ட் திரையரங்கம் ஒன்றிற்கு கொண்டு வரப்படும் காட்சி. யானை மீது வைத்து ஊர்வலம். ஊர்வலத்தில் ஒருவர் அலகு குத்திக் கொண்டும் வருகிறார். தீச்சட்டி ஒத்த ஒரு அமைப்பினை சுமந்து வருவதாகவும் தெரிகிறது.. நிறைய பால்குடங்கள் சுமந்து பெண்கள் ஆண்கள் ஊர்வலம்

ரசிகர்கள் திரைப்படத்தின் வெளியீடு குறித்து மொட்டை அடித்துக் கொள்வதும் காட்டப்படுகிறது. எந்திரன் என தங்கள் சிகையின் ஊடே அலங்காரம் செய்து கொள்வதாகவும் காட்சிகள் வருகின்றன‌

திரைப்பட கதையின் நாயகன் ரஜினி காந்தும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் உற்சாகம் கொப்பளிக்கும் சிரிப்பினை சுமந்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவுகின்றனர். படம் வியாபார ரீதியில் வெற்றி பெற்றதன் அடையாளமாக அந்த தழுவலையும் சிரிப்பையும் கருதலாம்.

ஆனால் அவர்களும் பலரும் கவனிக்கத் தவறியது இப்படி சினிமா மோகம் எத்தகைய சமூக பலவீனம் என்பதே.

பாலாபிஷேகம் செய்வதும், பால்குடம் தூக்கிவருவதும், அலகு குத்திக் கொண்டும், யானை மீதும் ஊர்வலம் வருவது யார் யார்...

இந்த சமூகத்தின் அடையாளம் என கருதப்படும் இளைஞர்கள்..

அவர்கள் ஒரு சாதாரண வியாபார சினிமாவின் வெளியீட்டுக்கு இப்படி மோகித்து.. இப்படியான செய்கைகளில் ஈடுபடுவார்கள் அவர்களின் ரசனையும், பகுத்தறிவும், மெச்சூரிட்டியும் இந்த அளவுதான்

இப்படியான பலவீனத்தைத்தான் அந்த சினிமா எந்திரன் குழுவும் விரும்புகிறது. இப்படியான இளைய சமூகத்தின் பலவீனத்தின் மீது தான் எந்திரனின் வியாபார வெற்றி எழுப்பப்பட்டுள்ளது.

திரைப்படம் வெளியான அன்று விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் அலாராம் வைத்த விழிப்பினைச் சுமந்து திரையரங்க வாசல் அடைந்து, அங்கிருந்தபடியே அங்கு தன்னைப் போலவே பிரஞ்ஞையுடம் வந்திருக்கும் ஏராளனமானவர்களின் எண்ணிக்கையினை எஸ். எம் .எஸ் , டுவிட்டர், இமெயில் என எல்லா நவீன சாதனங்களின் உதவியுடன் உலகிற்கு சொல்லி சமூக சேவை செய்தவர்கள்

முதல் காட்சி கண்ணுற்று வெளிவந்த கணம் முதல் மனதுக்குள் வாக்கியங்களை தட்டச்சு செய்தபடி விரைந்தோடி வந்து கணிணி முன் அமர்ந்து விமர்சனம் எழுதிய பதிவர்கள் .. இதில் கவிதை மட்டுமே எழுதுபவர்கள், திருப்புகழ்/ கந்தரலங்காரம் விளக்கம் என ஆத்திகம் மட்டுமே எழுதுபவர்கள் கூட விதிவிலக்கில்லாமல் ஒரு பெரும் கோஷ்டி முதல் விமர்சனம் எழுதி கட்டாயம் பார் என பரிந்துரைக்கும் நல்ல காரியம் செய்தவர்கள்

இப்படியான சமூக பலகீனங்களின் அடையாளம் எந்திரன்.. அதன் வியாபார வெற்றி இப்படியான பல்கீனத்தின் மீது எழுப்பப்பட்டுள்ளது. அதன் தொடர் வியாபார வெற்றி இப்படியான பலவீனங்கள் மேலும் பலவீனமடைவதின் அறிகுறி

தமிழ் சார்ந்த ஊடகங்களின் பிதாமகனான சன் டிவிக்கு ஒரு வேண்டுகோள் .. நீங்கள் திரைப்படம் எடுப்பதை நான் சாடவில்லை. அதற்கு விளம்பரம் செய்வதையும் நான் ஒன்றும் சொல்லவில்லை. அந்த நிகழ்ச்சிகளில்,, பாலாபிஷேகம், பால்குடம், யானை ஊர்வலம், அலகு குத்தி ஊர்வலம் வருதல்,
இதெல்லாம் நிஜமாகவே உங்களுக்கு பலமாகத் தெரிகிறதா..

மனம் தொட்டு சொல்லுங்கள்

இதெல்லாம் சமூக பலவீனமாகத் தெரியவில்லையா..

இப்படியான சமூகத்தினையா நம் சமூகம் என அடையாளம் காட்ட விழைகின்றீர்கள்..

இப்படியான பலவீனத்தையா நம் சமூகம் என தொலைக்காட்சியில் உலகெங்கும் ஒளி/ஒலி பரப்ப இருக்கின்றீர்கள்

இது தான் நம் சமூகத்தின் கலை ரசனை என சொல்லப் போகின்றீர்களா