
Saturday, 29 January 2011
குருஷேத்ரம்-4

34TH BOOK FAIR -CHENNAI - PART 4

Saturday, 22 January 2011
34TH BOOK FAIR -CHENNAI - PART 3

கிழக்கு பதிப்பகம் ஹரன் பிரசன்னாவின் கவிதை தொகுப்பு நிழல்கள் (தடம் வெளியீடு)
நான் திருத்துறைப்பூண்டிக்கு ட்ரான்ஸ்பர் ஆனவுடன் அங்கே பாச்சுலர் ஜாகைக்கு ஆரம்பத்தில் சிரமப்பட்டேன். வேதாரண்யம் சாலையில் ஒரு மான்ஷன் இருக்கிறது என ஆபிசிலே சொன்னார்கள் என மிக தைரியமாக சாமான்களுடன் அங்கே சென்றேன். அது லாட்ஜா அல்லது மான்ஷனா என குழப்பமான கட்டிடம். வெளிச்சமே வராத அறைகள். எப்படியோ சில மாதங்கள் சமாளித்தேன். அங்கே இராகவேந்திரன் என்ற பி.டபிள்யூ.டி இன்ஜினியர் அறிமுகம் ஆனார். அவர் மூலமாகத்தான் முத்துப்பேட்டை ரோட்டிலே புதுசாக அம்சமாக ரூம்கள் தயாராகி வருவதாக அறிந்து அங்கே புலம் பெயர்ந்தேன்.
பாலத்தை தாண்டி அந்தக் கரைக்கு போனபின்பு கரையிலேயே கொஞ்ச தூரம் போனால் தான் தார் ரோடு வரும். அப்படி கரையிலே போகும் போது உடைந்த வளையல் துண்டுகள், உதிர்ந்த மல்லிகைப் பூக்கள் என தவறாமல் பார்ப்பேன். முந்தைய தினம் இரவில் நடந்திருந்த ஒரு தப்புக் காரியத்தின் சாட்சிகள் அந்த ஊரைக் குறித்து நினைக்கும் நாளெல்லாம் வரும்.
நெடுநாட்களுக்கு பின்பு இணையத்தில் உலவும் போது
கால்குத்தி நிறுத்திய
கண்ணாடி வளையலின் ஒரு துண்டு
- கால்கள் பின்னியிருந்ததை
- வெம்மை பரிமாறப்பட்டதை
- வெற்றுடல்களின் போர்வையாய் இருள் இருந்ததை
நேற்றிரவுக்குள் தள்ளுமுன்
நினைத்தேன்-
கண்ணுள்ள பானைத்தலை
கந்தல் வெள்ளையாடை
வெக்கங்கெட்ட சோளக்காட்டு பொம்மை
கண்மூடியிருக்காது என
Tuesday, 11 January 2011
34TH BOOK FAIR-CHENNAI PART 2

இந்த தொடரின் முதல் பாகம் படிக்க க்ளிக் செய்யவும்
கிழக்கு பதிப்பகம் மஹாத்மா காந்தி கொலை வழக்கு :
1990 ம் வருஷத்திய பிப்ரவரி மாசத்தில் ஒரு நாள். மதராஸ் பட்டிணத்தில் இருந்து தில்லிக்கு விரைந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியின் செகன்ட் க்ளாஸ் ஸ்லீப்பர் பெட்டி.. எதிர் எதிரே இருக்கும் இரண்டு அப்பர் பெர்த்கள். ஒன்றில் 22 பிராயம் கொண்ட வாலிபன் இன்னொன்றில் அவனது தந்தை. இருவரும் சம்பாஷிக்கிறார்கள்
"அப்பா இதுக்கு முன்ன நீங்க தில்லி போயிருக்கேளா"
"என்.சி.சி கேம்ப்க்காக மூணுதரம் போயிருக்கேன். இப்ப ரீசன்டா உங்க அக்காவை குடித்தனம் வைக்க போனமேடா நானும் அம்மாவும்"
"தில்லி சுற்றிப் பார்க்க நீங்கதான் என் கூட வரணும்.. நான் டிராவல்ஸ்ல எல்லாம் போக மாட்டேன்"
"டிராவல்ஸ்லேயே போகலாம்.. ஆனா நான் கூட வரேன்"
"தில்லிலே என்ன என்ன பார்க்கப் போறோம்.."
"ரெட் ஃபோர்ட், டிபென்ஸ் ம்யூசியம்... ராஜ் காட்..."
"அப்பா.. காந்தியை ஏன் கொன்னா.. நல்லவர் தானே..."
காந்தியார் குறித்த ஓர் ஆவணபூர்வமான சம்பாஷணைத் தொடர்ச்சி என் தந்தையின் பதில். சரித்திர பேராசிரியர் அல்லவா.. கிரமமாக வரலாற்று நிகழ்வுகளை அடுக்கிய படி தொடர்ந்தது அவர் பதில்
பிர்லா மாளிகையில் காந்தியி சுடப்பட்ட இடம் காண்பித்து விட்டு, சென்றிருந்த டிராவல் பஸ்ஸை புறக்கணித்து விட்டு அங்கிருந்து ஜந்தர் மந்தருக்கு வந்து அமர்ந்து காந்தியின் சரித்திரம் தொடரப் பேசினார்.. பேசினார்.
என் மனதில் அந்த ஒற்றை ஆடை ராஜாவை நிரந்தரமாக குடியமர்த்தினார் என் அப்பா.
1993 ம் வருஷம் நான் திருத்துறைப்பூண்டிக்கு ட்ரான்ஸ்பர் ஆனதும்.. அங்கிருந்து தான் நவஜீவன் பதிப்பகத்தாருடன் தொடர்பை பலப்படுத்திக் கொண்டேன். காந்தி காந்தி என புத்தக அலமாரி நிறைந்தது..
இன்னமும் காந்தி குறித்த புத்தகங்களை மறு கேள்வி இல்லாமல் வாங்குவேன்..
இந்த பதிவை எழுதும் இந்த நாளுக்கு முந்தைய இரவில் ரிச்சர்ட் அட்டன்பரோவின் காந்தியில் ஜெனரல் ஸ்மட்ஸ் காந்தி உரையாடலை பார்த்துவிட்டு சிந்திய இரண்டு கண்ணீர் துளிகள் என் லாப்டாபின் ஸ்க்ரோல் பேட் மீது ..
(தொடரும்)Sunday, 9 January 2011
34TH BOOK FAIR -CHENNAI - PART 1

ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் போது வாங்க வேண்டிய பட்டியல் இல்லாமல் செல்வதில்லை. அந்தப் பட்டியலில் சில மாற்றங்களும் நிகழும். அப்படியாக அமைந்தது இந்த 2011 வருட சென்னை புத்தகக் கண்காட்சி. சின்ன விஷேசம் ஹரன் பிரசன்னாவிடமும். பா.ராகவனிடமும் ஆட்டோகிராப் வாங்கினேன். நான் ஆட்டோகிராப் வாங்கும் 3 வது 4 வது பிரபலங்கள் இவர்கள். இதற்கு முன் நான் கவாஸ்கரிடமும், குண்டப்பா விஸ்வநாத்திடமும் மட்டும் தான் வாங்கியிருக்கிறேன். ஒவ்வொரு புத்தகம் வாங்கும் போது அதனை வாங்குதற்குரிய காரணம் இருக்கும். இன்னார் சொன்னார் ; இங்கே ரிவ்யூ படித்தேன் என்பதாய். அதையும் தாண்டி புத்தகம் வாங்குதற்குரிய வலுவான பின் புலக் காரணம் இருக்கும். இந்த 2011 சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களுக்கான அப்படியான பின்புலம் குறித்த பதிவுகளாக எழுத ஆசை..
வாங்கிய புத்தகப் பட்டியலை வரிசையிட்டு சொல்லிவிட்டு ஒவ்வொரு புத்தகம் வாங்கிய காரணப் பின்புலம் குறித்து தொடர் பதிவுகள் எழுதுகிறேன்
2. கிழக்கு பதிப்பகம் காந்திக்குப் பின் இந்தியா இரண்டு பாகங்கள்
3. கிழக்கு பதிப்பகம் ஹரன் பிரசன்னாவின் கவிதை தொகுப்ப் நிழல்கள்
4. கிழக்கு பதிப்பகம் உணவின் வரலாறு
5. காலச்சுவடு பதிப்பகம் ஆஷ் கொலையும் இந்திய புரட்சி இயக்கமும்
6. கிழக்கு பதிப்பகம் மஹாத்மா காந்தி கொலை வழக்கு
7. பூம்புகார் பதிப்பகம் தொல்காப்ப்பிய பூங்கா
8. பாரதிய வித்யா பவன் க்ருஷ்ணாவதாரம். கே.எம் முன்ஷி ஏழு பாகங்களும்
9. கிழக்கு பதிப்பகம் ப்ராஜெக்ட் மானேஜ்மென்ட்.. இரா.மு
10. கிழக்கு பதிப்பகம் அசோகமித்ரன் 18வது அட்சக் கோடு
11. காலச்சுவடு பதிப்பகம் உப்பிட்டவரை
12. நர்மதா பதிப்பகம் தேர்ந்தெடுக்கப்பட்ட 220 பாராயணப்பாடல்கள்
13. புதிய தலைமுறை பத்தாயிரம் மைல் பயணம் ( இறையன்பு)
14. காலச்சுவடு பதிப்பகம் திலக மஹரிஷி
14. பரதன் பப்ளிகேஷன்ஸ் கண்ணனைத் தேடி
15. என்.சி.பி.ஹெச். நா. வானமாமலை.. தமிழர் நாட்டுப் பாடல்கள்
16. கிழக்கு பதிப்பகம் உருப்படு
17. உயிர்மை கணையாழியின் கடைசி பக்கங்கள்
18. உயிர்மை சுஜாதவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் தொகுதி
19. பெங்குவின் பதிப்பகம் நாரயணமூர்த்தி பெட்டர் இந்தியா பெட்டர் வேர்ல்ட்
கிழக்கு பதிப்பகம் பதிப்பித்துள்ள திராவிட இயக்க வரலாறு இரண்டு பாகங்கள்:
எண் 8:காண்டீபன் வேதாசலம் தெரு, செங்கல்பட்டு இந்த விலாசத்தில் இரண்டு வருடங்களுக்கு மேல் குடியிருந்தேன். அந்த வீடு சம்பத் என்பாருக்கு சொந்தமானது. சம்பத்தின் தந்தை மறைந்த திரு பலராமன். நான் மாடி போர்ஷனில் ஒரு சிறிய அறையில் குடியிருந்தேன். ஈ.வே. இராமசாமி தொடங்கி பல திராவிட இயக்க தலைவர்களுடன் திரு. பலராமன் நட்பு கொண்டிருந்தார் எனும் தகவலை திருமதி. பலராமன் மூலம் அறிந்திருந்தேன். அவரது அபூர்வ photo collection எனது நினவுகளில் எப்போதும் வந்து போகும் .. திரு. பலராமன் ஈ.வே.கி சம்பத் நினைவாகத்தான் சம்பத் என பெயரிட்டார் என அந்த அம்மையார் சொல்லியிருக்கிறார். திரு.பலராமன் வீட்டுக்கு வந்து அவருடன் உணவு அருந்தாத திராவிட இயக்க தலைவர்களே இல்லை என அந்த மூதாட்டி சொல்லும் போது அறியாமையும் , அதையும் தாண்டிய ஒரு பெருமையும் மிளிரிடும்.. இப்படி திராவிட இயக்கம் தொடர்பான பிரமுகர்களின் நிகழ்வுகளை யதார்த்தமாக ஒரு மூதாட்டியிடம் கேட்டுப் பெறும் வாய்ப்பு...
அப்போதிலிருந்தே திராவிட இயக்கம் தொடர்பான தகவல்களில் அதனை விழைந்து சேகரிக்கும் ஆர்வம்..
அரசாணை 44 ஆதி திராவிட நலத்துறை.. இட ஒதுக்கீட்டு வரலாற்றில் முக்கிய இடம் கொண்ட அரசாணை. இதனை அப்போது நான் பணியாற்றிக் கொண்டிருந்த அரசு சார்பு நிறுவனத்தில் அமுல் செய்ய அப்போதைய இயக்குநரான ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி முனைந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நிர்பந்தம்.. அந்த நிறுவனத்தின் பணியாற்றும் பொறியாளர் சங்கத்தின் தலைவர் நான்.. இட ஒதுக்கீடு தொடர்பான வரலாற்றினை தெரிந்து கொள்ள கன்னிமரா நூலகம், புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான நூலகம், சட்ட மன்ற நடவடிக்கைகளின் ஆவணங்கள் என தேடி தேடி படித்த போது.. அதனோட ஜஸ்டிஸ் கட்சி , சமூக நீதி, திராவிட இயக்கங்கள் என இணைந்த வரலாற்றினையும் படிக்க வேண்டியதானது.. அப்போது தொகுத்த ரெபரென்சுகளை இப்போது மீண்டும் எடுத்துப் பார்க்கிறேன்
இப்படியான ஆர்வப் பயணத்தில் ஒரு தருணம் தான் நான் இந்தப் புத்தகத்தை வாங்கிய இந்த தருணம். இரண்டு பாகங்களையும் படித்து முடித்தபின்பு விரிவாக விமர்சனம் எழுத வேண்டும்
(தொடரும்)