Saturday, 22 October 2011

நாதஸ்வர போட்டிக் கதை


ரங்கசாமி அந்த நாதஸ்வர போட்டிக்கு தன்னைத் தானே நடுவராக நியமித்துக் கொண்டார்.

இப்படி தீடீரென ரங்கசாமியில் தொடங்கினால், புரிவதற்கு கஷ்டமாக இருக்கும். விஸ்தாரமாகச் சொல்கிறேன்.

ரங்கசாமிக்கு வாத்திய இசையில் ப்ரேமை அதிகம். அதுவும் நாதஸ்வர வாத்தியத்திலே மோகம் கொஞ்சம் அதிகம். இதற்கு காரணமிருக்கின்றதுJustify Full
சில காலத்துக்கு முன்பு அவருக்கு, மோகனசுந்தரம் எனும் வித்வானுடன் சிநேகிதம் உண்டானது. இந்த மோகன சுந்தரமாகப்பட்டவர் தன்னை சிக்கல் ஷண்முகசுந்தரத்துக்கு நிகராக நினைத்து, நாதஸ்வரம் வாசிக்கப் பழகினார். நாதஸ்வரம் செய்த புண்ணியமா, அல்லது வேறு என்ன காரணமோ அவருக்கு சுத்த சாஸ்திரிய சங்கீதம் கைவரவில்லை. ஆனாலும் எப்படியோ வித்வான் எனும் அந்தஸ்தினை தன்னுடன் ஒட்டிக் கொண்டார். சங்கீதம் கைவரவில்லை என்பதற்காக மோகன சுந்தரம் மனசு தளரவில்லை. கலியாணத்தில் நாதஸ்வரம் வாசிப்பவர்களுடன் ஏற்பாடுகள் செய்து முகூர்த்த மாசத்திலெல்லாம் எல்லா முகூர்த்த நாளிலும் ஏதானும் ஒரு கலியாணத்தில் வாசிக்க சான்ஸ் கிடைக்குமாறு பார்த்துக் கொண்டார்.

கலியாணத்துக்கு வருபவர்களில் யாரும் சங்கீதப் ப்ரேமை கொண்டு, இன்ன கீர்த்தனை வாசி.. இப்படி நிரவல் செய் என் விருப்பம் சொல்வதில்லையாதலின், மோகன சுந்தரத்தின் நிஜமான சாஸ்திரிய சங்கீத பலம் இன்னதென்று தெரியாமல், ஒரு வழியாக கோஷ்டி கானமாக போய்க் கொண்டிருந்தது. எப்போதாவது, யாராவது சங்கீத அபிமானி இவரிடம் ஒரு ராகத்தை சொல்லி வாசிக்க முடியுமா எனக் கேட்டால், இவர் சாமர்த்தியமாக , “நான் ரகுபதி ராகவ ராஜாராம்” என காந்திக்கு ப்ரீதியான பாட்டை வாசிக்கின்றேனே” என்று சொல்லி வாசித்து சமாளிப்பார்.. இதுமட்டும் எப்படியோ அந்த ராகவன் கருணையால் இவருக்கு சித்தித்து விட்டது. நாதஸ்வரக் கோஷ்டியில் இருக்கும் இரண்டு பிரதான இடத்திலிருந்து இவர் வாசிப்பதில்லை. பெரும்பாலும் ஒத்து ஊதுவது தான் இவர் வேலை

மோகன சுந்தரத்து தனக்கு இன்னது தெரியும் இன்னது தெரியாது என்ற பேதம் தெரியாது.. அல்லது யார் கவனிக்கப் போகின்றார் எனும் அசட்டு தைரியமும் ஜாஸ்தி.. எங்கே கலியாணக் கச்சேரிக்குப் பயணமானாலும், அங்கே சுத்த ஸாவேரி, பந்துவராளி என பேசுவார். இவரது பேச்சிலே ஒரு ரீதியான பிரமிப்பு உண்டு.. அது தான் இவரோட பலம்.. மத்தபடி சங்கீதமானது இவருக்குத் ரொம்ப தூரம்

இவர் தனது கோஷ்டியுடன் வெளியூர் கலியாணத்திற்கு ரயிலில் பிரயாணித்துக் கொண்டிருந்தார். எதிர்சாரியில் மிக அம்சமாக வேஷ்டி, சட்டை அங்கவஸ்திரம் என பளீரிடும் லட்சணங்களுடன், ஒருவர் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் நமது மோகன சுந்தரம் பேச்சுக் கொடுத்தார்.

" அடியேன்.. மோகன சுந்தரம்.. நாதஸ்வர வித்வான்.. சார் என்ன பேர்னு நான் தெரிஞ்சுக்கலாமா”

அந்த புதிய மனுஷ்யன், இவரை ஒரு தரம் தீர்க்கமாகப் பார்த்துவிட்டு, ‘ என் பேர். ராமசந்திரன்..”

”சார் என்னவா இருக்கீங்க”

அவர் ஒரு பிரபல கலாசாலையின் பெயரைச் சொல்லி அங்கே சங்கீதம் போதிக்கும் உத்தியோகத்தில் இருப்பதாகச் சொன்னார்.

வழக்கமாக காதில் கேட்கும் தவில் சப்தம் இந்த முறை , மோகன சுந்தரத்திற்கு தொண்டையில் தொடங்கி, அடி வயிறுக்கு சென்று அங்கே சொற்ப நேரம் தனி நடை வாசித்து, பின் அந்தரங்கப் பாகத்தில் மெதுவாக வாசிப்பது போலிருந்தது.

’நீங்க எங்கே நாதஸ்வரம் அப்யாசம் செய்தீங்க “ ராமசந்திரன் கேள்வி, மோகனசுந்தரத்தின் அந்தரங்க பாகத்தில் இருந்த தவில் சப்தம் இப்போது ஹிருதயத்துக்குப் பக்கத்தில் கேட்பது போலிருந்தது..

வேர்வையைத் துடைத்தபடி, “ எனக்கு பல குரு உண்டு” என்பதான பொது பதில் போட்டு சம்பாஷணையினை நிறுத்தலாம் என்று பார்த்தார்.. ராமசந்திரன் சிரித்துக் கொண்டே, “நாதஸ்வரம் மட்டும் தானா வாய்ப்பாட்டும் உண்டா” எனக் கேட்டு வைத்தார்.

இதற்கு சங்கீத ரீதியாக ராகம், ஸ்வரம் என தனக்கு தெரியாத சங்கதியெல்லாம் மோகன சுந்தரம் உளறி, அவர் உளறுகிறார்.. கேள்விக்கு சரியாக பதில் சொல்லவில்லை என ராமசந்திரன் சுட்டிக் காட்ட ஏக ரகளையானது.

இந்த ரயில் பயணத்தினை அந்த வாத்திய கோஷ்டிக்கு அமைத்துத் தந்த புரவலரான ரங்கசாமியும் அங்கே இருந்தார். அவருக்கு மோகன சுந்தரம் இப்படி, சிக்கிக் கொண்டதில் ஏக வருத்தம். ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து ராமசந்திரனைப் பார்த்து, “இவ்வளவு பேசுகின்றீரே.. உமக்கு வாத்தியம் வாசிக்கத் தெரியுமோ.. அதுவும் எமது மோகன சுந்தரத்தின் வாசிப்புக்கு பதில் வாசிப்பு செய்யணும்.. ரெடியா” எனக் கேள்வி போட்டு, மோகன சுந்தரத்தை கர்வமாகப் பார்த்தார்.

மோகன சுந்தரம், தனது குல தெய்வம் , எப்படியாகினும் ராமசந்திரன் நாவில் இறங்கி போட்டிக்கு தயாரில்லை எனச் சொல்ல வைக்கனும் என வேண்டிக் கொண்டார். குலதெய்வம் அவருக்கு ஒத்தாசை செய்யவில்லை.

தனக்கு முறையான வாத்தியப் பயிற்சி உண்டெனவும், ஆகவே போட்டிக்கு தயார் எனவும் சொல்லி, ரங்கசாமியே போட்டியினை ஏற்பாடு செய்யலாம் எனவும் சொல்லி, ராமசந்திரன் அந்த சம்பாஷணைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்,

“நான் போட்டி ஏற்பாடு செய்துவிட்டு உங்களுக்கு தகவல் தருகிறேன்” எனச் சொல்லி ரங்கசாமி நிறுத்திக் கொண்டார்.. ஆனால் அந்தரங்கத்தில் தானே இந்தப் போட்டிக்கு நடுவராக இருக்கலாகும் என நினைத்துக் கொண்டார்.

இப்படியாக இந்த சங்கீத வாத்திய யுத்தம் நிச்சயமாகி, அதற்கு ரங்கசாமி தன்னையே நடுவராக நியமித்துக் கொண்ட பூர்வ கதை இதுவே.

போட்டி வெகு விமரிசையாக நடந்தது. முறையான சங்கீத அப்பியாசம் உள்ளபடியால், ராமசந்திரன் எந்த ராகம் சொன்னாலும் அவரது வாத்தியம் அவர் சொல்படி கேட்டது. தினசரி சாதகம் இருப்பதால், ராகத்தின் லஷணங்களை கேட்போருக்கு புரியும்படி வாசித்துக் காண்பிக்க அவருக்கு சாத்தியமானது.

மோகன சுந்தரம், தனது வேர்வையினைத் துடைத்துக் கொள்ளவே நேரம் போனது.. எதிரே வாசிப்பவரின் சாயலைப் பிடித்து வாசித்து விடலாம் என ரொம்பவும் பிரயத்தனப்பட்டார். சாத்தியமாகவில்லை. எந்த ராகத்துக்கு என்ன ஆரோகணம், அவரோகணம் என ஸ்வர வரிசை தெரியாததால் காப்பியடித்து வாசித்தாலும் அவரது வாசிப்பு அபஸ்வரமாகவே தொனித்தது.. பார்த்தார் மோகன சுந்தரம்.. தனக்கு மிகவும் கைவந்ததும், பரிச்சயமானதுமான ஒத்து ஊதுவதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். வாயிலே வைத்த வாத்தியத்தை நெடு நேரம் எடுக்காது, தொடர்ந்து ’ஹொய்ங்” என்பதான சப்தம் கூட்டி ஊதத் தொடங்கினார். அவருக்கு எப்போது இன்னும் மூச்சுக் கட்டுவது பிராண அபாயத்தில் கொண்டு விடும் என்றாகிறதோ அது வரை ‘ஹொய்ங்” கை நிறுத்தவில்லை.. அவர் அப்படி ஒரு கட்டத்தில் அதை நிறுத்தினது தான் தாமதம், ரங்கசாமி தனது தீர்ப்பைச் சொல்லிவிட்டார்..

“சபையோரே.. இதுவரை இந்த இரண்டு வித்வான்களும் வாசித்ததனைக் கேட்டீர்கள்.. ஆனால் ராமசந்திரன். இந்த ராகம் அந்த நடை என சொல்லி வாசித்தாலும். அவரால் நமது மோகனசுந்தரம் இப்போது வழங்கியது போல நிறுத்தாமல் இசை வழங்க இயலவில்லை. ராமசந்திரன் வாசிப்பிலே ஆங்காங்கே இடைவெளி விட்டு வாசித்தார் அது இசையாகாது ஆகவே இந்த போட்டியில் நமது மோகன சுந்தரமே வென்றவராகிறார்”

ராமசந்திரன் தனது உத்யோகத்தை ராஜினாமா செய்துவிட்டு.. வட தேசத்தில் காவி உடை தரித்து இலக்கில்லாமல் திரியும் தேசாந்திரியாக மாறக் கூடும் என யூகமாகிறது


4 comments:

ஷைலஜா said...

நன்றாக இருக்கு நிஜமாவே போட்டிக்கதையா இது?

Yaathoramani.blogspot.com said...

ஆஹா பிரமாதம்
நிச்சயமாக அந்த வித்வான்
சன்னியாசம் வாங்கிக்கொண்டதுதான் நல்லது
அருமையான கதை வாழ்த்துக்கள்

cheena (சீனா) said...

அன்பின் மௌளி - அருமை அருமை - கதை அருமை - நகைச்சுவை கதை முழுவதும் பரவிக்கிகிடக்கிறது. என்னடா திடீரென எங்கோ வரவேண்டிய வரி முதலில் வந்து விட்டதே எனப் பார்த்தால் அற்புதமாகக் கதை துவங்குகிறது.

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Amirthanandan said...

எள்ளல் நடை அருமை அண்ணா.- இப்படிக்கு உள்ளூர் மோகன சுந்தரம்.