Tuesday 1 November 2011

ஸப்த கன்னியர்


இதனை நவராத்திரி சமயத்தில் எழுதியிருக்க வேண்டும். கொஞ்சம் லேட்டாகி விட்டது. அத்தனை துக்கத்தில் இருந்தேனாகையால் எழுதவில்லை.

இதன் தொடக்கம் எனது இளம் பிராயத்தில், முதல் டில்லி பயணத்தில் என வைத்துக் கொள்ளலாம்

டில்லிக்கு முதன் முறை பயணிக்கின்ற எல்லோரையும் போல், அந்த ஊரைச் சுற்றிப் பார்க்கும் அம்சம் பின்னர் ஆக்ரா வரை ஒரு நடை சென்று தாஜ்மஹாலைப் பார்த்து விட்டு வரலாம் எனும் இன்னொரு அம்சமாக எனக்கும் வாய்த்தது.

பணிக்கர் டிராவல்ஸ் பஸ்ஸில் விடிகாலையிலேயே ஓல்ட் ராஜீந்திரா நகரில் ஏதோ ஒரு ஒடுக்கமான வீதியில் எப்படி அத்தனை பெரிய பஸ் நுழைகிறது என வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே, என் பக்கத்தில் வந்து நின்று என்னை ஏற்றிக் கொண்டார்கள்..

ஃபதேபூர் சிக்ரி, ஆக்ரா கோட்டை, தாஜ்மஹால் என சென்று டெல்லிக்குத் திரும்பும் போது தான் அது நிகழ்ந்தது..

டீ குடிப்பதற்காக சாலையோரமாக நிறுத்தினார்கள்.. இறங்கி சாலையின் எதிர்ப்புறம் பார்த்தேன். எனக்கு அசாத்திய கோபம் வந்தது.. இந்த இடத்தை அந்த பணிக்கர் பஸ் ஆசாமி வெறுமனே டீ குடிக்க மட்டும் தேர்ந்தெடுத்திருந்த அநியாயாத்தினால் எனக்கு கோபம் வந்தது.

சிக்கந்த்ரா.. அக்பரின்.. நினைவிடம் எதிரே இருக்கும் டூரிஸ்ட் வசீகர டீ கடையில் ,'வண்டி 10 நிமிடம் நிற்கும்.. டீ காபி... ' என ஹிந்தி அறிவிப்பு செய்யும் இடமா அது..

பள்ளிப் படிப்பின் சரித்திர பாடங்களில் மொகலாய ராஜாக்களில், மிகவும் ஃப்ரென்டிலியான ராஜாவாக அறியப்பட்ட அக்பர் பாதுஷாவின் கல்லறை எதிரே இருக்கிறது.. அதை சுற்றிக் காட்டாமல், அதற்கு எதிரே இருக்கும் டீ கடைக்கு முக்கியத்துவம் தந்திருக்கும் அநியாயம்.

பஸ் டிரைவரை விசாரித்தேன்.. இந்த ட்ரிப்பிற்கு இது வரை காண்பித்த இடங்கள் தானாம். அக்பர் லிஸ்டில் இல்லை என கராறாகச் சொல்லிவிட்டான். அதுவுமில்லாமல் அக்பரையும் சேர்த்துக் கொண்டிருந்த பயணத்துக்கு துட்டு அதிகம் தர வேண்டுமாம். இது மஹா அநியாயம் அல்லவா

கூட வந்த எல்லா பயணிகளையும் அழைத்து விபரம் சொன்னேன்,' பாருங்கள் நாமெல்லாம் இதோ எதிரே இருக்கும் அக்பர் பாதுஷாவின் கல்லறையினைச் சுற்றிப் பார்த்துவிட்டு வர அதிகபட்சம் 45 நிமிடங்கள் ஆகலாம்.. ஆனால் இந்த இடம் அவர்கள் லிஸ்டில் இல்லை என டிரைவர் சொல்வது நியாயமில்லை.. இந்த இடத்தில் டீ குடிக்க நிறுத்துவார்களாம்.. ஆனால் அக்பரை பார்க்க நிறுத்த மாட்டார்களாம'

இந்த பிரசங்கம் நன்றாக வேலை செய்தது எனத் தெரியவந்தது.. என்னைக் காட்டிலும் ஹிந்தியில் பிரவாகமாகப் பேசக் கூடிய வட தேசத்து அன்பர்கள் சிலர் டிரைவரை உலுப்பி எடுத்தனர்.. ஏகதேசம் வண்டியில் இருப்பவர் எல்லோரும் அக்பரை தரிசிக்காமல் விடப்போவதில்லை என்பது டிரைவருக்கு ஒருவழியாகப் புரிந்தது

தான் செத்துப் போய் சுமாராக முந்நூற்றி என்பத்தி ஏழு வருஷம் கழித்து தன் சமாதி முன்பு, தீன் இலாஹிக்க்காக இப்படி ஒரு இந்தியக் குடிமகன், தனது சமாதிக்கு முன்பு அமைதியாக கை கூப்பி சேவிப்பான் என பாதுஷா நினைத்திருக்கவே மாட்டார்

ரோடு கிராஸ் செய்யும் போது தான் அந்த பொம்மைக் கடையினைக் கவனித்தேன்

வழக்கமான சாலையோர பொம்மைக் கடைதான் என்றாலும், ஒரு மாதிரியாக என்னை இழுத்தது..

எத்தனையோ வசீகரமான பொம்மைகளில் அந்த ஸப்த கன்னிகைகள் பொம்மை செட் என்னை ரொம்பவே கவர்ந்தது. ஆச்சரியமென்ன 24 பிராயமே நிறைந்து, கலியாணமாக பிரம்மச்சாரி பிள்ளைக்கு, மொழுக்கென்று செய்யப்பட்ட கன்னிகைகள் பொம்மைகள் பிடிக்காது போகுமா என்ன?. உபரியாக அந்த பொம்மைக் கலைஞன், மிக ஜாக்கிரதையாக எந்தப் பொம்மைக்கும் வஸ்திரம் இல்லாது செய்திருந்தான் என்பதையும் கவனித்தேன்.. வழக்கமாகவே கடைகளில் நான் பேரம் பேசுவதில்லை. சொன்ன விலையினைக் கொடுத்து வாங்கி விடுவேன்.. இந்த பொம்மைகளுக்கா பேரம் பேசப் போகின்றேன்.. ஏழு பொம்மைகளையும் கவர்ந்து கொண்டு டெல்லி வந்து சேர்ந்தேன்.

அக்கா , அத்திம்பேர், அப்பா, அம்மா எல்லோருக்கும் அந்த ஸப்த கன்னிகைகளை ரொம்ப பிடித்திருந்தது.. அந்த ஏழு பேரும் , நான் எந்த ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆனாலும் என் சாமான் செட்டுகளோடு கூடவே வந்தார்கள்.. என் அறைகளில் பிரதான இடத்தினை வகித்தார்கள்

இது கலியாணம் ஆகும் வரை நீடித்தது. கலியாணம் ஆகி, புது மனைவியுடன், ஆரத்தி தட்டில் காசு போட்டு வீட்டுக்குள் வந்த முதல் காரியமாக, மனைவியாகப் பட்டவள் என் ரீடிங் ரூமைப் பார்க்க வேண்டும் என்றாள். பெருமையாக அழைத்துச் சென்றேன்.

மிகவும் பிரதான இடத்தில் வஸ்திரம் தரிக்காத இந்த ஸப்த கன்னியர் இருப்பதை கவனித்து முகம் சுளித்தாள். இந்த சிலைகளின் மீதான் எனது ரசனை, என் மனைவியின் மனதில் எனக்கு வழங்கப்பட்டிருந்த மரியாதை (!!! ) என்பதாக , புது மனைவி மனதில் ஒரு போராட்டம் நடந்திருக்க வேண்டும் என யூகிக்க முடிந்தது.. கராறாகச் சொல்லிவிட்டாள். இந்த ஸப்த கன்னியர்கள் சிலைகளை சின்னதாக ஒரு அட்டைப் பெட்டியில் அடைத்து, பரணில் ஏற்றி வைக்க வேண்டும் என..

எனது மறுப்புகள் மெல்ல மெல்ல வலுவிழந்தன. ஸப்த கன்னியர்கள் பெட்டிக்குள் பேக்காகி, பரணை அடைந்தனர்.

என்னிடம் வந்ததிலிருந்து 6 வருடங்கள் அலங்காரமாக இருந்து பின்னர் பரணில் தஞ்சமான அந்த ஸ்ப்த கன்னியரையும் , ஒவ்வொரு நவராத்திரி சமயத்தில், கொலுவில் வைத்து விடலாம் என செய்த எந்த பிரார்த்தனைக்கும் என் மனைவி செவி சாய்க்கவில்லை.. ஏன் கலியாணம் ஆனபின்பு 13 வருடம் , அந்த அட்டைப் பெட்டி கூட என் கண்ணில் காட்டப்படவில்லை.

இந்த வருடம் எப்படியோ , அந்த அட்டைப் பெட்டி கண்ணில் பட்டுவிட்டது.. கொலு பொம்மைகளை இறக்கி வைக்க தனியாக ஒரு வேலையாளை அமர்த்தியிருந்தேன்.

அவர் பரணிலிருக்கும் பெட்டிகளை இறக்கி வைக்கலாம் என வந்த தருணம், என் மனைவி வீட்டில் இல்லாத தருணம்.. அது

ஆனாலும் அந்த கன்னிகைகளுக்கு இந்த வருடம் கொலுவில் கொலுவிருக்க சான்ஸ் தரப்படவில்லை.

" என்ன கண்றாவி இது ..என் ப்ரென்ட்ஸ் எல்லாம் இன்வைட் பண்ணுவேன்.. அவங்க கிட்டயெல்லாம்.. என்ன சொல்லுவேன். என் ஹஸ்பென்ட் இதை பல வருஷம் முந்தி வாங்கிட்டு வந்தார்.. ரொம்ப வருஷம் பொத்தி பொத்திப் பாதுகாத்தார்.. இப்படி சொல்லனுமா"

"ஏன் சொன்னா என்னவாம்"

"வரவங்க எல்லாம் .. ஷேம் ஷேம் பப்பி ஷேம்னு சொல்லப் போறாங்க " இது என் மகள்.

ஸப்த கன்னியர் மறுபடியும் பரண் வாசம் தொடங்கினர்

நவராத்திரி கடந்து இத்தனை நாளான பின்பு இப்ப என்ன திடீரென ஸப்த கன்னியர் ஸ்டோரி என்பவர்களுக்கு உபரியாக நானும் என் மனைவியும் நேற்று இரவு நிகழ்த்திய இந்த உரையாடல் தெளிவைத் தருவதாக‌

" அது என்ன புது புக் வாங்கிருக்கீங்களா"

ஆமாம். Akbar the Emperor of India அப்படினு Dr. Richard Von Garbe என்பவர் எழுதின பொஸ்கம்

இந்த புஸ்தகத்தையும் என்னிடம் இருந்து பறித்து ஒளித்து வைத்து விட்டாள்..

5 comments:

அமிர்தன். said...

இவ்விசயத்தில்(லும்)அண்ணியார் வெற்றி பெற்றதன் மூலம், இல்லறத்தில் அண்ணன் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுகிறார்.
பனிக்கர் ட்ராவல்ஸார் கொடுத்த ஒரு சாவிக்கொத்து இன்று மட்டும் என்னிடன் இருக்கிறது(12 வருடங்களாகின்றன)

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் said...

ஸப்த கன்னியருக்கு பரணில் இடம் கிடைத்தமைக்கு நானும் ஒரு காரணம்.. சுவாரசியமாக இருக்கட்டுமே என, ராம சீதா முதலிரவுக் காட்சியினை எனது முதலிரவில் மனைவியிடம் சொன்னேன்

சீதை அணிந்திருந்த விலை மதிப்பிலா நகைகளைத் தொட்டுப் பார்க்கிறான் ராமன். சீதை மெதுவாக ராமனின் கையினை விலக்குகின்றாள். ஏன் எனக் கேட்டான் இராமன்.


” கல்லாக இருந்த ஒரு பெண் உங்கள் கால் பட்டு சாபம் நீங்கிப் பெண்ணானாள்.. இப்போது இவையோ ரத்தினக் கற்கள். படுவதோ உங்கள் கரம்.. எல்லாமே இப்போது பெண்ணாகிவிட்டாள் என அச்சமாக இருக்கிற’ தென்றாளாம் ஜானகி

என் கைக்கு இப்படியாக ஜீனி வேலை செய்யும் சாகசம் இருக்கும் என என் மனைவி சந்தேகிக்கின்றாளாம்

Anonymous said...

அருமை.. படிக்கும்பொழுது கவனம் சிதறாமல் இதை படித்து விட வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறதே அதுவே உங்களுடைய எழுத்தின் வெற்றி.. - Rajagopalan.

Ganpat said...

இந்த பதிவில் உள்ள படம் அந்த
ஸப்தகன்னிகைகளில் ஒருத்தி என்றால் எந்த வீட்டு கன்னிகையும் "சப்த" கன்னிகை ஆகிவிடுவாள்!உங்க வீட்டம்மாவிற்கு பெரிய மனசு.எங்க வீட்டிலே இவைகளுக்கு பரணில் கூட berth கிடைத்திருக்காது!

பாரதி மணி said...

சமீபகாலமாகத்தான் உங்கள் எழுத்தை வாசிக்கும் பாக்கியம் கிடைத்தது. உங்கள் பார்வையும், பரந்துபட்ட வாசிப்பனுபவமும், உங்கள் எழுத்தை ஆழமாகவும் அகலமாகவும் ஆக்கி, ஒரு சுகானுபவத்தைத்தருகிறது. இது வெறும் புகழ்ச்சியல்ல.

நீங்கள் நிறைய எழுதவேண்டும்.

அன்புடன்,
பாரதி மணி