Saturday 10 May 2008

பாம்பு ஜாதகம்


துபாயில் இருக்கும் எனது சகா திருமதி. சித்ரா ராம்பிரசாத் சில அழகான படங்கள் அனுப்பியிருந்தார். எல்லாம் விளம்பரம் சம்பந்தமானது. முதல் படம் இங்கே

இந்தப் படத்தைப் பார்த்தவுடன் என்னிடம் இருக்கும் SNAKES OF INDIA என்ற புத்தகம் ஞாபகம் வந்தது. P.J DEORAS என்பவர் எழுதியது.. NATIONAL BOOK TRUST வெளியீடு 1992 ல் சல்லிசாக 36 ரூபாய்க்கு கிடைத்ததே என்று வாங்கி வந்தேன். இதைப் படித்த பெரும்பாலன நாட்களில் ராத்திரி கனவில் “தொப்பு தொப்பு “ என்று என் மீது பாம்புகளாய் வந்து விழுந்தது. யாரோ சொன்னார்கள் என ஒரு கழுகு படத்தை படுக்கைக்கடியில் வைத்துப் பார்த்தேன். கழுகு “நங்” என்று தலையில் கொத்துவதாய் புதுசாய் கனவு வந்தது. ஒரே சமயம் கழுகையும் பாம்பையும் சமாளிப்பது கஷ்டம்.

P.J DEORAS இந்தியாவில் முதல் பாம்பு பண்ணையை 1952 ல் ஸ்தாபித்தவர்

இந்த புத்தகத்தின் ஆரம்பமே விஷப் பாம்பு விஷமில்லாப் பாம்பு என ஒரு பட்டியலுடன் …

TYPHLOPS BRAMINUS, UROPELTIS, PYTHON MOLURUS என்ற ஜூவாலஜிகல் நாமகரணமாய்ப் பாம்பு LIST இருக்கிறது.

பாம்பு கடித்தால் என்ன மந்திரம் சொன்னால் விஷம் ஏறாது என்ற சில அதிசய பக்கங்கள் இருக்கிறது. ஆனால் அதிலும் தமிழ் இல்லை. சமஸ்கிருதம் , ஹிந்தி, கன்னடம், மலையாளம். மராத்தி.. இப்படி இருக்கிறது. ரொம்ப விஷேஷம் என்னவென்றால் சில முயல்களை பாம்பைவிட்டு கடிக்க வைத்து இந்த மந்திரங்கள் வேலை செய்கிறதா என பார்த்திருக்கிறார்கள். பாவம் முயல்கள். மந்திரம் வேலை செய்யவில்லை என்ற மஹா முக்கியமான தகவலை பொடி எழுத்தில் FOOT NOTE ல் போட்டிருக்கிறார்கள்.

பாம்பு விஷத்தைப் பற்றி பல மங்களகரமான சங்கதிகள் தெரிய வருகிறது

இந்திய சினிமாக்கள் பாம்பு என பொதுமைப்படுத்திய நல்ல பாம்பின் விஷம் 12 கிராம் இருந்தால் போதும். ஆரோக்கியமான ஆசாமியை காலி செய்ய.

பலவித புரோட்டின்களின் சங்கமம் நல்ல பாம்பு விஷம். இதில் Neurotoxin என்பது பிரதான புரோட்டின். இதில் 71 அமினோ அமிலங்கள் உள்ளது. இந்த சக்திவாய்ந்த புரோட்டின் தான் ரத்தத்தில் க்லந்த உடன் எட்டே நிமிஷத்தில் வேலையைக் காட்டத் தொடங்குகிறது. சுமார் 50 நிமிஷத்தில் ஆள் காலி. Anti Snake Venom என்ற மருந்துகள் பாம்புக் கடி சாத்தியங்கள் ஜாஸ்தி உள்ள இடங்களில் அரசாங்க ஆஸ்பத்திரியில் தயார் நிலையில் இருக்கும்- திருத்துறைப்பூண்டி என்ற ஊரில் தினம் ஒரு”நல்ல பாம்பு கொத்து” கேஸ் ஆஸ்பத்திரிக்கு தூக்கி வருவதைப் பார்த்திருக்கிறேன்.

நல்ல பாம்பு விஷம் 1/ 50000 பங்கு நீர்த்துப் போன நிலையிலும் ஒரு தவளைக்கு மஹா விஷம்

புளோரிடாவில் ஆராய்ச்சிக்காக ஒரு ஆசாமிக்கு நல்ல பாம்பு விஷம் தினம் கொஞ்சூண்டு “இந்தாப்பா பிரட்டுக்கு தொட்டுண்டு சாப்பிடு” என்று சில வருஷங்கள் கொடுத்துவிட்டு, அப்புறமாய் பாம்பை கொத்தவிட்டு விஷம் ஏறுகிறதா என்று பார்த்திருக்கிறார்கள். எத்தனை தடவை !!! 123 !!! தடவை. அந்த ஆசாமி அத்தனையும் தாங்கி உசிருடன் இருந்திருக்கிறார்.

பாம்பு விஷம் தினம் சாப்பிட்டதால் இம்யூனிட்டி ஜாஸ்தியாகி அவர் ஒரு மாதிரி நாகலோக வாசி அந்தஸ்த்தைப் பெற்றுவிட்டார். இதே மாதிரி தமிழில் “ பௌர்ணமி அலைகள்” என்று ஒரு படம் வந்தது ஞாபகம் இருக்கலாம்.

ஒரு கெமிஸ்டிரி பேராசிரியரிடம் இது சம்மந்தமாக கேட்டேன். பெயிண்டிங் வேலையில் ரொமப வருஷம் இருப்பவர்களுக்கு பெயிண்டில் இருக்கும் ஒரு வித அமிலம் நக இடுக்கு வழியே தினம் உடலில் கலந்து அவர்களுக்கு விஷ எதிர்ப்பு சக்தி ஜாஸ்தியாகிவிடும் என்று சொன்னார். இனிமேல் பெயிண்டர்களிடம் சகஜாமாக பழகவும். ”சதுர அடிக்கு இத்தனை தானேப்பா “ என்று கறார் பேசி அவரை உசுப்தேத்த வேண்டாம்.


இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள ஒரு சங்கதியை ரகசியாமாக வைத்திருக்க ஆண் சமுதாயத்தை கேட்டுக் கொள்கிறேன்.

“பெண் நல்ல பாம்பை விட ஆண் நல்ல பாம்பே அதிக விஷம் கக்கும்”

அகஸ்மாத்தாய் இதை தெரிந்து கொண்ட பெண்மணிகள் கணவனிடம் சண்டை போடும் போது சமயம் பார்த்து Quote செய்யவும்

2 comments:

cheena (சீனா) said...

பாம்பினைப் பற்றிய ஆராய்ச்சி - நன்று நன்று

ஆண்பாம்பு பெண்பாம்பு - ம்ம்ம் பெண் வாசகர்கள் படிக்க வேண்டாம்

மங்களூர் சிவா said...

/


இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள ஒரு சங்கதியை ரகசியாமாக வைத்திருக்க ஆண் சமுதாயத்தை கேட்டுக் கொள்கிறேன்.

“பெண் நல்ல பாம்பை விட ஆண் நல்ல பாம்பே அதிக விஷம் கக்கும்”

அகஸ்மாத்தாய் இதை தெரிந்து கொண்ட பெண்மணிகள் கணவனிடம் சண்டை போடும் போது சமயம் பார்த்து Quote செய்யவும்
/

ஹா ஹா
நல்லா குடுக்கறீங்கப்பா டீட்டெய்லு சொல்லலைன்னாலும் அதத்தானே செய்வாங்க!!

:))))