Monday, 3 December 2012

க்ருஷ்ணாவதாரம்-6

கம்ஸனுக்கு அந்த யோசனை வந்தது..

"வ்ருஷ்ணி வம்சத்திலே அக்ரூரன் இருக்கிறானே அவனை அழைத்து வாருங்கள்.. இந்த நேரம் போக வேண்டாம்.. நாளை சூரியோதயத்துக்குப் போனால் போதும்.. மிகவும் கவனம்.. அவனிடம் யாரும் சினம் கொண்டு பேசிவிட வேண்டாம். பக்குவமாகப் பேசிட வேண்டும்"

காலையில் கம்ஸனை சந்திக்க அக்ரூரன் வந்தான்.

"மன்னா தாங்கள் என்னை அழைத்ததாக ராஜாங்க சேவகர்கள் வந்து செய்தி சொன்னார்கள்"

"ஆம் ஆம் நான் தான் உன்னை அழைத்து வரும்படி சொன்னேன்.. நீ சௌக்கியம் தானே"

"நான் நன்றாக இருக்கிறேன் மஹாராஜா.. விஷயத்தைச் சொல்லுங்கள்.."

" முனிசிரேஷ்டரான வியாஸர் வரவிருக்கின்றாராமே .. அது குறித்து ஏதும் உனக்குத் தெரியுமா.. அதுவுமில்லாமல் நேற்றைக்கு ஹஸ்தினாபுரத்திலிருந்து பீஷ்மரிடம் இருந்து வசுதேவரை அனுப்பி வைக்கும்படி ஓலை வந்திருக்கிறது"

"மஹாராஜா இதெல்லாம் ராஜாங்க காரியம் எனக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்"

"ஹா ... ஹா.. இதை என்னை நம்பச் சொல்கிறாயா அக்ரூரா.. உனக்கும் வசுதேவருக்கும் இருக்கும் சிநேகிதமும் நெருக்கமும் எனக்குத் தெரியும்.. அதுவுமில்லாமல்.. நீ போன மாசம் தானே ஹஸ்தினாபுரம் போனாய்"

"பிரபு நீங்கள் வசுதேவரை சிறைபிடித்து வைத்த பின்பு நான் போயிருக்கிறேன்.. இந்த சிறை விவகாரம் எல்லா தேசத்துக்கும் தெரிந்து விட்டது.. இதில் என்ன ஒளிவு மறைவு ரகசியம் இருக்க முடியும் என எனக்குத் தெரியவில்லை"

"அதிருக்கட்டும், அங்கே ஹஸ்தினாபுரத்திலே மூத்தவன் திருதராஷ்டிரனுக்கு கண் தெரியாது,, பாண்டுவோ பரம் சாது.. அவனும் நோய் பீடிக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன்.. அந்த ராஜ்ஜியம் என்ன ஆகும் அக்ரூரா"

"மன்னாதி மன்னா.. அங்கே தான் பீஷ்மர் இருக்கிறாரே.. அவர் இருக்கும் போது அந்த ராஜ்ஜியத்துக்கு ஒரு கெடுதலும் வந்துவிடமுடியாது.. அவரிடம் யுத்தம் செய்ய அந்த எமதர்மனுக்கும் யோசனை வராது"

"அது தானப்பா கவலை.. அந்த பீஷ்மன் வசுதேவரைக் கூட்டிக் கொண்டு போக வேணும் என்கிறான்.."

"அனுப்பிவிட்ட்டால் என்ன மஹாராஜா"

"எப்படி எப்படி அவர்களது மகன் என்னைக் கொல்லுவான் என தேவரிஷி சொல்லியிருக்கிறாரே"

"அதனாலென்ன தேவகி இங்கே இருக்கட்டும். வசுதேவரை மட்டும் அனுப்புங்கள்.. தீர்ந்தது காரியம்"

"ஆ ..அதெல்லாம் நான் ஆலோசித்துப் பார்க்காமல் இருப்பேனா.. தேவகியை என்னிடத்திலே விட்டுவிட்டு தான் மட்டும் ஹஸ்தினாபுரம் போக வசுதேவர் சம்மதிக்க மாட்டார்

"அப்போது இருவரையும் அனுப்புங்கள்"

"அக்ரூரா.. நீ தான் எனக்கு உதவ வேண்டும்"

"எப்படி"

"வசு தேவரை சந்திக்க வேண்டும்.. அதன்பின்னே பீஷ்மருடன் செல்ல வசுதேவருக்கு விருப்பமில்லை என்பதாக அவரே மனமுவந்து சொல்வது போல செய்ய வேண்டும்"

"அதாவது சிறைப்பட்டிருக்கும் ஒருவர் அந்த சிறையிலிருந்து வெளியே ஸ்வந்தந்திரமாக வருவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் தருணத்திலே அதை தானே வேண்டாம் என சொல்லனும்.. எப்படி மஹாராஜா நீங்கள் இப்படியெல்லாம் யோசிக்கின்றீர்கள்.. உங்களோடு வசுதேவரை அனுப்ப முடியாது என பீஷ்மரிடம் சொல்லிவிட வேண்டியது தானே"

" என் பலம் சினம் இதெல்லாம் தெரிந்து தான் பேசுகின்றாயா அக்ருரா.."
..
"எனக்கென்ன மஹாராஜா.. இந்தக் காரியத்தை நான் செய்யப் போவதில்லை.. மரணம் என்பது பகவான் கையில் இருக்கிறது.. நான் வருகிறேன்"


"போங்கள் யாரும் எனக்குத் தேவையில்லை.. நான் பீஷ்மனுக்கு பதில் சொல்லப் போவதுமில்லை.. அந்த க்ருஷ்ண த்வைபாயன வியாசனை நான் பார்க்கப்போவதுமில்லை.. யாரங்கே !!!!!.. நான் நாளை வேட்டைக்கு கானகம் போக முடிவு செய்து விட்டேன்.. வேண்டியதைச் செய்யுங்கள்"


நதிக்கரையிலே அலங்கரிக்கப்பட்ட ரதம் நின்று கொண்டிருக்கிறது.. வியாச முனிவர் வருவதால் அவரை சம்பிரதாயமாக வரவேற்க படை பரிவாரங்களுடன், உக்கிரசேனன் வந்திருந்தான்.. கம்சனின் மாமன் தேவகன், அக்ரூரன் இன்னும் பிரதானிகள் அங்கே நின்று கொண்டிருந்தனர். கம்ஸன் வரவில்லை..

தூரத்திலே படகு நதிப் பிரவாகத்திலே முந்திக் கொண்டு வருவது தெரிகிறது.. உக்கிரசேனன் இப்போது வாத்தியம் வாசிப்பவர்களைப் பார்த்து தலையசைக்கிறான்.. அவர்கள் மங்களமானதொரு இசையினை வாசிக்கின்றார்கள்.. அந்த படகு இப்போது கண்ணுக்குத் தெரிகின்ற தூரத்துக்கு வந்துவிட்டது

இரண்டு படகுகள்.. முதல் படகிலே தான் வியாஸர் இருக்கிறார்.. பராசர மஹாரிஷியின் புதல்வர்.. குருவம்சத்தின் மூத்தவர்.. சில வருஷங்களுக்கு முன்பு அவர் மதுராவுக்கு விஜ்யம் செய்த போது மதுரா நகரமே கோலாகலமாக இருந்தது.

ஆடி ஆடி படகு கரைக்கு சமீபித்தது.. சேவகர்கல் விரைந்து சென்று படகைப் பிடித்த ஒரு மரத்திலே கயிறு கொண்டு கட்டினார்கள்.

வியாஸர் மெதுவாக இறங்கினார்

"என்ன அக்ரூரா.. சௌக்கியமா"

அக்ரூரன்.. ரிஷியை நமஸ்கரித்து அவரிடம் இருந்து ஆசிர்வாதம் வாங்கினபின்னாலே அவருக்குப் பக்கத்திலே மாஹா தேஜசுடன் நின்று கொண்டிருந்தவரைக் கவனித்தான்.

"என்ன பார்க்கிறாய் அக்ரூரா.. இது விதுரன்.. விசித்திரவீரியரின் புதல்வன்.. மஹா ஞானி.."

அக்ரூரன், விதுரரை நமஸ்கரித்தான்

'அக்ரூரா.. நாம் இப்போது நேராக. தேவகியைக் காணப் போகலாமா"

'அவர்கள் இருவர் படும் துன்பமும் சொல்லி மாளாது ஸ்வாமி.. உங்கள் தரிசனம் அவர்களுக்கு ஆறுதல் தரும்.. அங்கே போவதற்கு முன்பு தாங்கள் என் இல்லத்துக்கு வந்து செல்ல வேண்டும் என்பது ப்ரார்தனை"

'அக்ரூரா இதென்ன உன் இல்லத்துக்கு சும்மா அழைக்கிறாய் என பார்த்தால்,, தின்பதற்கு இத்தனை வைத்திருக்கிறாய்"

"ஸ்வாமி பழம் மற்றும் பால் தானே வைத்திருக்கிறேன்.. நீங்கள் பசியாறும் தருணத்திலே நானும் வசுதேவர் , ,தேவகியின் கஷ்டங்களை உங்களுக்கு தனித்து சொல்ல வாய்ப்பிருக்குமே அது தான்"

வியாசர் பயணித்த ரதம், கஜராஜ அரண்மனை வாசலுக்கு வந்தது

வசுதேவரும், தேவகியும் வியாஸரைக் கண்டதும், மிகவும் ஆறுதலானார்கள்.. ஆனால் அவர்கள் அழுகை நிற்கவில்லை

"ஸ்வாமி.. தேவ வாக்கு மஹரிஷி நாரதர் சொன்னார் என்பதனால் என் அண்ணா கம்ஸன், என் குழந்தைகளைக் கொன்று வருகிறார்.. குழந்தைகளை இழந்த தாயின் வேதனை எப்படி என்பது உங்களுக்குத் தெரியும்.. என்னாலும் எதுவும் செய்ய முடியவில்லை.. விதிக்கு இசைந்து,, கையாலாகதவளாக அப்படியே இருக்கிறேன்.. எனக்கென்னவோ நாரதரின் வாக்கிலே நம்பிக்கை இல்லை.. என் அண்ணா எல்லாக் குழந்தைகளையும் எமனுலகு அனுப்பி விட்டு நான் சோகம் அதிகமாகப் போய் சித்த ஸ்வாதீனம் இல்லாதவளாக ஆகலாம்"

இந்த இடத்திலே வசுதேவர் தேவகியை முறைத்துப் பார்த்தபடி, " தேவகி,, என்ன பேசுகிறாய்.. தேவ ரிஷியின் வாக்கிலே உனக்கு நம்பிக்கை இல்லையா.. அதனை வியாசரிடமே சொல்லுகிறாய்.. என்ன இது இப்படிப் பேசலாமா"

வசுதேவரின் கரத்தினைப் பற்றியபடி, வியாசர் பேசலானார், " மகளே தேவகி.. உன் துன்பம் எனக்கு புரிகிறதம்மா.. இது தெய்வ காரியம்.. நாரதனின் வாக்கு பலிக்கும்.. அந்த எட்டாவது சிசு உன் கர்ப்பத்தில் தானம்மா வர இருக்கிறது.. வசுதேவா கிட்டே வா.. இது தேவரகசியம்.. உங்கள் இருவருக்கும் சொல்கிறேன்"

இருவரும் முனிவருக்கு அருக்கே போனார்கள்..

சில விநாடிகள் கழித்து தேவகியின் கண்களில் கோடி மின்னல் ப்ரகாசம்

"ஸ்வாமி நீங்கள் சொல்வது வேடிக்கை இல்லையே.. இந்த அபலையிடம் உங்களைப் போன்ற முனிவர்கள் பரிகாசம் செய்யமாட்டார்கள் என்று திட்டவட்ட்டமாக நம்புகிறேன்.. ஆனால் நீங்கள் சொல்லுவது போல் நடக்க நான் என்ன பாக்கியம் செய்தேன்"

இந்த நேரம் மஹாவிஷ்ணு வைகுண்டத்தில் ஆதிசேஷனுடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்தார்

(தொடரும்)

Monday, 26 November 2012

க்ருஷ்ணாவதாரம்-5

கம்ஸன் இப்போது மிகவும் ஆவேசம் கொண்டவனாகவும், அடுத்து நடக்க வேண்டியதான காரியங்களை மள மள என்று செய்து கொண்டிருப்பவனாகவும் இருக்கிறான்

"யாரங்கே "

சேவகன் ஒருவன் ஓடி வந்து தண்டனிட்டு நின்றான்

" வாயிலில் காத்திருக்கும் ரதங்கள் எல்லாம் அரண்மனையின் பின் புறம் செல்லச் சொல்லு.. ஒரே ஒரு ரதம் மட்டும் நிற்கட்டும். சேனாதிபதி... எங்கே போனாய்...."

கம்சனின் ஆத்திரம் கொப்பளித்து எழும்பி, வார்த்தைகளாக ஆணைகளாக அந்த சபா மண்டபத்தினை நிறைத்தது..

"இதோ என் தங்கை தேவகியை கொலைக் களத்துக்கு அழைத்துப் போய், சிரச்சேதம் செய்து விடுங்கள்.. எப்படி குழந்தை பிறந்து வந்து என்னைக் கொல்வதென்பதைப் பார்த்து விடுகிறேன்"

கம்ஸனின் தகப்பனார் உக்கிரசேனன் அவனை நெருங்கி," கைகளைப் பிடித்துக் கொண்டு, மகனே.. இதென்ன கோரம்.. உன் நாவிலிருந்தா இப்படி வார்த்தைகள் வருகின்றன.. என்னால் நம்ப முடியவில்லை.. இதெல்லாம் கனவாகத்தான் இருக்க வேண்டும்"

"அப்பா இது கனவல்ல.. நிஜம்.. நிஜமே.. என்ன தயக்கம் .. இழுத்துப் போ தேவகியை"

அந்தக் காவல் வீரன் தேவகியை சமீபித்து செல்லும் போது வசுதேவர் , சற்றே மறிப்பது போல நின்று கொண்டு, கம்சனை நோக்கி இரண்டு கரங்களையும் யாசிக்கும் பாவனையில் நீட்டிக் கொண்டு,

" மன்னர்க்கெல்லாம் மன்னா .. எங்களுக்குப் பிறக்கும் குழந்தை எப்படி உங்களைக் கொல்லும் அது .. உங்களுக்கு மருமகளாகவோ மருமகனாகவோ அல்லவா ஆகிறது.. நீங்கள் தூக்கி கொஞ்சி மகிழும் குழந்தை.. அதெப்படி கொல்லும்.."

" இதோ பார்.. உன் கோரிக்கையெல்லாம் என்னிடம் எடுபடாது.. கொண்டு செல். வீரனே.. இன்னும் ஒரு விநாடி தாமதம் செய்தாயானால் என்ன செய்வேன் என எனக்குத் தெரியாது"

இப்போது வசுதேவர் இன்னும் கெஞ்சும் குரலில், " மன்னருக்கு இன்னும் மனமிரங்கவில்லையா.. எங்களுக்கு பிறக்கும் குழந்தைகளை நானே கொண்டு வந்து உங்கள் காலடியில் போடுகிறேன்.. தேவகி ஒரு பாவம் அறியாதவள்.. அவளை விட்டு விடுங்கள்" 

கம்சன் இப்போது முன்னும் பின்னும் நடக்கலானான்.

" சரி.. உங்கள் இருவருக்கும் உயிர் பிச்சை தருகிறேன்.. ஆனால் ஒரு நிபந்தனையுடன்.. நீங்கள் இருவரும் கைதிகளாக கஜராஜ அரண்மனையில் மிகவும் கடும் காவலுடன் சிறை வைக்கப்படுகின்றீர்கள்.. அங்கே தான் உங்களுக்கு எல்லாம்.. .. வசுதேவரே.. நீர் இப்போது சொன்னீர்கள் அல்லவா.. அது போல உங்கள் குழந்தை பிறந்த மறு கணம் அது என்னிடம் வர வேண்டும்.. அது பிறந்த நேரம் தொடங்கி, என் பார்வைக்கு வரும் நேரம் வரை தான் அதன் ஆயுள்.. என் கைக்கு வந்ததும் அதனை எமனுலகம் அனுப்புவேன்.. அக்ரூரா... கஜராஜ அரண்மனையில் காவல் அதிகம் செய்ய வேண்டும்"

சில வருஷங்கள் கடந்து போயிருந்தன.. தேவகியின் இரண்டு குழந்தைகளை அதன் மாமன் கம்சன் எமனுலகம் அனுப்பியிருந்தான்.. யதுகுலத்தினரிடையே உண்டான போரட்டத்தையும் அடக்கியிருந்தான்.. எட்டாவது குழந்தைக்கு அவனது வெறி அடங்கா மனது காத்திருந்தது

அன்றைக்கு அரண்மனையிலே, சபா மண்டபத்திலே முக்கியமானதொரு ராஜ்ஜிய ஆலோசனையில் இருந்தான்.. இரண்டு மந்திரிகள் அவனிடம் சம்பாஷித்துக் கொண்டிருந்த சமயம்.. மண்டப வாயிலில் சேவகன் ஒருவன் மணடியிட்டு மன்னனின் கவனத்தைக் கவர்ந்தான்.


கம்சன் கம்பீரமாக தலை அசைத்து அவனை அருகே அழைத்தான்..

சேவகன் தாள் பணிந்து , "ராஜாதி ராஜ சமூகத்தினை நாடி ஹஸ்தினாபுரத்திலிருந்து தூதுவன் ஒருவன் வந்திருக்கிறான்'

"வரச் சொல்"

தூதன் வணங்கிவிட்டு, "மன்னா நான் கங்கை மைந்தர். மஹா வீரர் பீஷ்மரின் சொற்களைத் தாங்கி வந்திருக்கிறேன்.."

"விஷயத்தைச் சொல்"

" தங்கள் தங்கையையும் மாப்பிள்ளை வசுதேவரையும் , பீஷ்மர் தனது விருந்தினராக அழைத்துப் போக பிரியப்படுகிறார்.. அதன் பொருட்டு என்னை இங்கே தூது அனுப்பியிருக்கிறார்"

கம்சனின் கோபம் தலைக்கு ஏறியது..

சிம்மாசனத்தினைப் பின்னுக்குத் தள்ளி எழுந்தான்.. ஆனால் அவனது மந்திரிமார்கள் அவனை சைகயால் அமைதி செய்து விட்டு அவனிடத்திலே வந்து, "பிரபோ இது மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய சங்கதி.. இதிலே சினம் கொண்டால் பின்னர் நமக்கே இடைஞ்சல் வரலாம்.. பீஷ்மர் மஹா வீரர்.. அவரது பகை நம்மை அழித்து விடும்.. இந்த தூதுவனுக்கு நாளை பதில் சொல்வதாக சொல்லி, விருந்தினர் அரண்மனைக்குப் போய் ஓய்வெடுக்கச் சொல்லுங்கள்..

நாளை சூரியோதத்திற்குள் இந்த தூதுவனுக்கு நல்ல பதில் சொல்வதற்கு என்ன உபாயம் என்பதை யோசித்து விடலாம்"

அரண்மனை மேன்மாடத்திலே அந்தரங்கமானவர்களுடன் கம்சன் ஆலோசனை தொடங்கினான்.. அடிவானத்திலே நிலவு வந்திருந்த நேரம் தொடங்கின சம்பாஷணை.. நிலவு சற்றேறக்குறைய நடுவானத்திற்கு வந்திருந்தது.. கருமை நிறைந்த இரவானபடியால் நஷத்திரங்கள் அதிகம் காட்சிக்குத் தெரிந்தன.. 

கம்சனின் மனதிலே அந்த திட்டத்தின் முதல் வித்து உதித்தது.. அதனால் என்னவோ நிலவு அந்த சமயம் .மிகவும் கறுத்திருந்த மேகத்தின் பின்னே பயந்து ஒளிந்து கொண்டது போலிருந்தது

(தொடரும்)


Sunday, 18 November 2012

க்ருஷ்ணாவதாரம்-4

"நாராயண நாராயண.. ஸ்வாமி இன்றைக்கு நான் தங்கள் தரிசனத்துக்கு காத்திருக்கும்படியாகிவிட்டது"

"அதிருக்கட்டும் நாரதா.. கம்ஸனிடம் அவன் முடிவு பற்றி சொல்லியாகிவிட்டதா"

"ஆமாம் ப்ரபோ.. நீங்கள் ஆணையிட்டபடி ஒரு வார்த்தை சொல்லிவிட்டு அங்கிருந்து இங்குதான் வந்தேன்"

"ஸ்வாமி.. நாரதன் வந்தால், அவனைக் கொண்டு சேஷன் தான் காரணமென்று சொல்ல வைப்பதாக சொன்னீர்கள்.. நானும் சேஷனும் அதற்கே காத்திருக்கிறோம்.. இதோ நாரதனும் வந்தாயிற்று"

"லஷ்மி.. ஏன் இந்தப் பதற்றம்.. பொறுமை.. எல்லா விளக்கமும் கிடைக்கத்தானே போகிறது"

"நாராயண நாராயண.. ஓ ஏற்கனவே என் பெயர் இங்கே பிரஸ்தாபமாகியிருக்கிறது.. என்ன சங்கதி என்று தான் தெரியவில்லை.. ஆதி சேஷா நீயாவது சொல்லக் கூடாதா"

"தேவரிஷி.. நடப்பதெல்லாம் பெருமாளின் லீலை.. ஆனால் பகவானோ நானே காரணமெனச் சொல்லுகின்றார்"

"லஷ்மி, சேஷா, நாரதா.. இப்போது நான் பேசலாமா"

" ஸ்வாமி.. அடியாள் இதைத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்"

"சொல்கிறேன்.. சில தினங்களுக்கு முன்பு நான் பூலோகத்தில் அவதரிக்க வேண்டியதொரு அவசியம் வந்திருப்பதாக சேஷன் என்னிடம் சொன்னான்.. அதெப்படி சொல்கிறாய் எனக் கேட்டேன் - பஞ்சவித ஜோதிர் ஸிந்தாந்த பவர்த்த கத்வேன ஞான ப்ரகாச ஷோஸ்ய ப்ரஸித்தம் என்றும் சொன்னானப்பா அதையே சொல்லிக் கொண்டிருந்தேன்"

"நாராயண நாராயண.. சேஷா இது தான் சங்கதியா.. மனம் , வாக்கு , காயம் இதனை சுத்தி செய்ய வல்வனாயிற்றே நமது சேஷன்.. நஷத்திரம், அதனோடு கிரஹங்களுக்கு இருக்கும் சம்பந்தம், நமது சேஷனுக்கு தெரிந்த அளவுக்கு இங்கே யாருக்குத் தெரியும்.. அதிருக்கட்டும் ப்ரபோ.. எனக்கொரு ஐயம்"

"சொல் நாரதா..."

"தேவகி, வசுதேவருக்கு பிறக்க இருக்கும் எட்டாவது குழந்தையால் கம்சனுக்கு மரணம் சம்பவிக்கும் என்று மட்டும் சொல்லச் சொன்னீர்கள்.. ஆனால் தாங்கள் தான் அந்த எட்டாவது குழந்தையாக அவதரிக்க இருப்பதாக சொல்ல வேண்டாம் என சொல்லிவிட்டீர்களே அது ஏன் "

"மூவரும் கேளுங்கள்.. இந்த அவதாரம், கம்ஸனை வதைப்பதற்கானது மட்டுமல்ல.. இதிலே நிறைய வைபவங்கள், செய்தாக வேண்டியிருக்கிறது.. அவதாரங்களில் மிகவும் மஹத்துவம் கொண்டதான இதிலே எனக்கு நிறைய கடமைகள் இருக்கின்றன.."

"ஸ்வாமி அடியாளுக்கு ஆவல் மேலோங்கியிருக்கிறது"

"என்ன அது லஷ்மி சொல் எல்லோரும் தெரிந்து கொள்வோம்"

"இந்த அவதாரத்திலே தாங்களின் திருநாமம் என்னவாக இருக்கப் போகிறது"

"உங்களுக்கு பெயர் மட்டும் தெரிந்தால் போதுமா.. இல்லை எப்படி இருக்கப் போகிறேன் என்றும் தெரிய வேண்டுமா"

"ப்ரபோ இதென்ன கேள்வி.. ஆவலைத் தூண்டி விட்டு, பின் ஏமாற்றம் தரும் வகைக்கு இஃது என் மாயை எனச் சொல்ல மாட்டீர்கள் தானே"

"சரி மூவரும் கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.. நான் சொன்ன பிறகு கண்ணைத் திறக்கலாம்"

'நாராயண நாராயண.. ப்ரபோ.. ஆவல் தாங்க முடியவில்லை... கண்ணைத் திறக்கலாமா"


'கொஞ்சம் பொறுங்கள்... இப்போது திறக்கலாம்"

ப்ரும்மாண்ட உருவமில்லை.. கையிலே சார்ங்கமில்லை, சுதர்சனமில்லை. பாஞ்சஜன்யம் இல்லை, கௌமேதகம் இல்லை.. பத்மம் இல்லை.. ஏன் திருமார்பை அலங்கரிக்கும் துளசியுமில்லை.

ஆனாலும் மூவரும் அப்படியே லயித்துப் போயிருந்தார்கள்.. 

அவர்கள் எதிரே ஒரு சின்னக் குழந்தை நின்று கொண்டிருந்தது.. கார்மேக வர்ணம்.. கையிலே குழல், தலையிலே மயிற் பீலி, பட்டுத் துணி.. ஆனாலும் மேலாடை இல்லை.மார்பிலே சின்னதாக இரண்டு முத்து மாலைகள் அத்தனை தான் அலங்காரம் 

லோகத்திலிருக்கும் ரம்மியமெல்லாம் ஒன்று சேர்த்து ஒரு சின்னக் குழந்தையாக மாறியிருந்தால் எப்படி இருக்கும் என்று கேட்டால் இப்படி இருக்கும் என்று மாஹால்ஷ்மி, சேஷன், நாரதன் மூவரும் கை நீட்டி சொல்லியிருப்பார்கள்

இப்போதும் கை நீட்டி மூவரும் ஒன்று சேர குரல் தந்தார்கள், " ப்ரபோ.. ப்ரபோ... ப்ரபோ.. இந்தக் குழந்தையாகவா அவதரிக்கின்றீர்கள்.. இந்த திரு அவதாரம் என்ன பெயர் பெறவிருக்கிறது"

அந்தக் குழந்தை மிகச் சிவந்த உதடுகளைக் குவித்து பழிப்புக் காட்டி விட்டு, களுக் களுக் என்று சிரித்து விட்டு , மழலைக் குரலில்,,, க்ருஷ்ணாவதாரம் ... அதிருக்கட்டும் வாருங்கள் பூலோகத்திலே கம்ஸன் என்ன செய்கிறான்  என கவனிக்கலாம்.. இனிமேல் தான் நிறைய காரியங்கள் இருக்கிறது " என்று சொல்லியது

(தொடரும்)

Friday, 16 November 2012

க்ருஷ்ணாவதாரம்-3

தன் விதியைக் குறித்து நாரதர் சொன்னதும், கம்சனுக்கு முதலில் குப்பென்று வியர்த்து தான் போனது. 

"நிறுத்துங்கள்.. இந்த ஆட்டம் கொண்டாட்டம் , சங்கீதம் எல்லாம் நிற்கட்டும்.. யாரங்கே "

கிட்டத்தட்ட முழங்கினான் என்றே தான் சொல்ல வேண்டும்.

நாரதர் வந்ததையோ, அவர் கம்சனின் மரணம் குறித்து சொன்ன செய்தியையோ , அந்த சபா மண்டபத்திலே இருந்த இன்னொருத்தரும் கேட்டிருக்கவில்லை.. எல்லோருக்கும் கம்சனின் கோபம் கொப்பளிக்கும் கண்களின் மீது கவனமாக இருந்தது.

சிலர் கம்சனை நெருங்கி, என்னவென விசாரிக்கலாம் எனத் தலைப்பட்டார்கள். அவர்களை கம்சன் நிமிர்ந்து உற்று நோக்கி பார்வையாலேயே , "நில்லுங்கள்" என்று சொல்வது போல் பார்த்தான்.

கம்சனின் தந்த உக்கிரசேனன் கம்சனை நெருங்கி, " குழந்தாய்.. கம்சா.. ஏன் இந்த பதற்றமும் , கோபமும் .. என்ன நடந்தது.."

"விபரமாகச் சொல்ல வேண்டுமா.. கையிலே தம்பூர் வைத்துக் கொண்டு, எப்போது பார்த்தாலும் நாராயண நாமம் சொல்லிக் கொண்டு லோகமெல்லாம் சுற்றிவருவாரே.. தேவரிஷி நாரதர்ர்ர்ர்ர்ர்ர்ர், அவர் என் முன்னே தோன்றி, இதோ இந்த யது குல திலகம் வசுதேவனை  மணந்து கொண்டு உல்லாசமான வாழ்க்கைக்குத் தயாராக இருக்கிறாளே உங்கள் ஆசை மகள் தேவகி, இவர்களின் எட்டாவது குழந்தை என்னைக் கொன்று விடுமாம் ... சொல்லிவிட்டு அதோ அந்த வானத்திலே கரைந்து போனார் அந்த தேவ ரிஷி"

கம்சனின் கை சென்ற திசையிலே உக்கிரசேனனின் கண் ஒரு தரம் அரண்மனை முற்றத்தின் வழியே , மிக சொற்பமாக தெரிந்த ஆகாசத்தைப் பார்த்து திரும்பியது.. 

அவரது முதுமைக்கு கம்சனின் இந்த ஆவேசம் கொஞ்சம் அதிகமானதாகத்தான் இருக்க வேண்டும்.. பக்கத்திலிருந்த தூணைப் பிடித்துக் கொண்டு, நிற்கவும் முடியாமல் தடுமாறினார்.. ஒரு சேவகன் விரைந்து வந்து, ஆசனம் ஒன்றை போட்டுவிட்டு, " பிரபோ.. அமர்ந்து கொள்ளுங்கள் " என்று சேவித்து நின்றான்.

அந்த கோலாகலமான விருந்து அப்படியே நின்று போயிருந்தது.. மீண்டும் உக்கிரசேனன் புதல்வனைப் பார்த்து கேட்டார்,

"குழந்தாய் கம்சா.. நாரதர் சொன்னது எனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது.. தேவரிஷி வேறெந்த விபரமும் சொல்லவில்லையா"

இவர்கள் இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரம் , தேவரிஷி, வைகுண்டத்தில், ஶ்ரீ ஹரியின் தரிசனத்துக்கு காத்திருந்தார்.

அக்கறையாக துவாரபாலகர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார், " என்றைக்கும் பெருமான் என்னைக் காக்க வைத்தது கிடையாது.. என்றைக்கும் இல்லாத அதிசயமாக இன்றைக்கு நீங்கள் என்னைக் காத்திருக்க வைத்திருக்கின்றீர்கள்"

"மன்னிக்க் வேண்டும் தேவரிஷி,, நாங்களாக எதுவும் சொல்வதில்லை, பரமாத்மாவின் ஆணையினை நிறைவேற்றுகின்றோம்"

'ம்ம்ம் புரிகிறது.. நான் அதோ அப்படி நிற்கின்றேன்.. ஆணை வந்ததும் சொல்லுங்கள்"

"ப்ரபோ.. இதென்ன விளையாட்டு.. நாரதன் வந்திருக்கிறான்.. உங்களைத் தரிசிக்க அவனை அழைத்து  ஆசிர்வதிக்காமல் காத்திருக்க வைத்திருக்கின்றீர்கள்"

" மஹாலஷ்மி.. இதில் என்னுடைய காரியம் எதுவுமில்லை.. இதோ நம்மிருவரையும் மெத்தை போலத் தாங்கி, குடை பிடித்துக் கொண்டிருக்கின்றானே.. சேஷன். இவன் செய்யும் வேலை இது"

"ப்ரபோ.. இதென்ன உங்கள் லீலைகளுக்கு என்னைக் காரணம் சொல்லுகின்றீர்கள்....பாருங்கள் மாதா என்னை சந்தேகமாகப் பார்க்கின்றார்கள்"

"ஆதிசேஷா.. நீ தானேயப்பா கிரஹங்கள், அவை நல்கும் பலாபலன்களை வைத்து அன்றைக்கு என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தாய்"

"ப்ரபோ.. இதென்ன.. நீங்களும் சேஷனும்.. என்னை விட்டு விட்டு நிறைய விஷயங்கள் பேசுகின்றீர்கள் போலிருக்கிறதே"

" மஹா லஷ்மி, சேஷா நீங்கள் சற்று காத்திருங்கள்.. இதற்கு நாரதன் தான் சரியான விளக்கம் சொல்லக் கூடும்.. அவனை அழைக்கிறேன்"

(தொடரும்)

Monday, 12 November 2012

க்ருஷ்ணாவதாரம் -2

அரண்மனை கோலாகலம் கொண்டிருந்தது.. மேல் மாடத்திலே அனைத்து தூண்களிலும் கதம்பமாக பூக்கள் சுற்றப்பட்டிருந்தது.. ராத்திரி நேரத்திலே அரண்மனையினைப் பார்த்தவர்கள் இது தேவேந்திரனின் அரண்மனையாகத்தான் இருக்க வேண்டும் என்பதாகப் பேசிக் கொண்டார்கள். அப்படியாக தீபங்களை வைத்து அலங்காரம் செய்திருந்தார்கள்.

வ்ருஷ்ணி தேசத்திலே இப்படி ஒரு கோலாகலக் கொண்டாட்டம் நடந்ததில்லை என்பதே எங்கும் பேச்சாக இருந்தது.. அரண்மனை மட்ட
ுமல்ல... தலைநகரமான மதுரா எங்கும் விழாக் கோலம் காணப்பட்டது..

அரண்மனையின் முன் மாடத்திலே இரண்டு குதிரைகள் பூட்டப்பட்டதொரு ரதம் த்யாராக நின்று கொண்டிருப்பதைப் பார்க்கின்ற போது, யாரோ முக்கியஸ்தர் வெளியிலே கிளம்ப் இருக்கின்றார்கள் எனத் தெரியவருகிறது..ரத சாரதி, அந்த அஸ்வங்களுக்கு போதுமான தீனியும் , குடிக்க ஜலமும் தந்து தயார் செய்திருக்க வேண்டும். அவை ரதத்திலே பூட்டப்பட்டிருப்பதனாலோ, நீண்ட பிரயாணத்திலே நில்லாமல் ஓட வேண்டும் என்ற காரியத்தினாலோ சோர்வு கொண்டதாகத் தெரியவில்லை .. மாறாக வெகு உற்சாகமாக துள்ளியபடி இருந்தன.. அந்த குதிரைகள் அரண்மனை வாசலைலைப் பார்ப்பதும் பின்னர் கொஞ்சம் ஏமாற்றம் கொள்வதும், அதன் பின்னர் சுபாவமாகத் துள்ளுவதுமாக இருந்தன..

ரதசாரதியும் வாசலைப் பார்த்தபடி இருந்தான்.. அரண்மனையின் வெளியிலேயிருந்த தோட்டத்திலே வேலை செய்து கொண்டிருந்தவர்களும், வாசலைப் பார்ப்பதாகவே இருந்தார்கள்

வருகை அற்வித்து கட்டியம் கூறுகின்றவன் கூட அந்த ப்ரம்மாண்ட கதவுகளின் பக்கத்திலே நின்று கொண்டிருக்கிறார்.. காற்று லேசாக வீசிக் கொண்டிருந்தபடியால், அந்தக் கதவுகளில் வேலைப்பாடாகக் கோர்க்கப்பட்டிருந்த சின்ன மணிகள் அசைந்து, டிங் டிங் என்று ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன.. சில சமயம் எல்லா மணிகளும் ஆடி சப்தமெழுப்புகின்ற மாதிரி காற்றானது வேலை செய்தது

இருபது குதிரை வீரர்கள் முன்னேயும், நாற்பது ரதங்களில் சீதனங்கள் பின் தொடரவும், பிரதான ரதம் நடுவிலேயுமானதாக அந்தப் பவனி அரண்மனையினை விட்டுக் கிளம்பத் தயாராக இருக்கிறது..

வாத்தியக் கோஷ்டியினர் மங்கள இசையினை வெகு ரசனையுடன் வாசித்துக் கொண்டிருக்கின்றார்கள்

அரண்மனையின் உள்ளே, விருந்து தடபுடலாக இருக்கிறது.. பக்கத்து தேசத்திலிருந்தெல்லாம், ராஜாக்கள் வந்திருந்தார்கள்..

அவர்களெல்லாம் மஹாராஜா கம்சனின் ஆப்த சிநேகிதர்கள்.. கம்சனின் தங்கை தேவகியின் திருமணத்திற்கு வாராதிருப்பார்களா.. திருமணம் நேற்றே முடிந்துவிட்டது.. இன்றைக்கு விருந்து முடிந்து தேவகி, தன் புருஷன் வீட்டுக்கு கிளம்புகிறாள்.

எந்த தேசத்து ராஜாவோ கம்சனின் காதுகளில் என்னமோ ஹாஸ்யமாகச் சொல்லியிருக்க வேண்டும்

கம்சனின் பரிகாசச் சிரிப்பு வெடித்துக் கிளம்பி காற்றிலே கலந்து கொண்டிருந்தது..

இந்தக் கணத்திலே அந்த இடத்திலே தேவ ரிஷியான நாரதர் தோன்றினார்.

"வருக வருக தேவ ரிஷி வருக.. உங்கள் வருகையால் இந்தக் கம்சன் மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாகிறான். நீங்கள் என் தங்கை தேவகியையும் மாப்பிள்ளை வசுதேவரையும் ஆசிர்வதிக்க வேண்டும்.."

"அதெற்கென்ன கம்சா.. என் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு.. நீ தான் ஜாக்கிரதையாக இருக்க வேணும்.. அதைச் சொல்லவே நான் வந்தேன்..... நாராயண நாராயண"

"எனக்கென்ன வந்தது தேவ ரிஷி அவர்களே.. என்னை நெருங்க துணிவுள்ளவுள்ளவன் பூவுலகில் இருக்கின்றானா என்ன"

" நீ இப்படி நினைத்துக் கொள்வது தான் ஆபத்து கம்சா.. இதோ புது மணப்பெண்ணாக சிரித்துக் கொண்டிருக்கின்றாளே உன் தங்கை தேவகி.. அதோ பிரமுகர்களிடம் விநயமாகப் பேசிக் கொண்டிருக்கிறாரே யது குல மன்னர் ,, உன் மாப்பிள்ளை வசுதேவர்.. இவர்களுக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை.. உன்னைக் கொல்வான்.. அவனே உனக்கு எமன்"

இந்த வாக்கியம் முடிந்து போன போது கம்சனின் பதிலுக்கு காத்திருக்காமல் நாரதர் அந்த இடத்திலிருந்து மறைந்தார்..

கம்சன் முகம் இறுகியிருந்தது...

காற்றும் அவன் என்ன செய்யப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ள கொஞ்ச நேரம் அசையாமல் நின்று போயிருந்தது

(தொடரும்)

Sunday, 11 November 2012

க்ருஷ்ணாவதாரம் -1

க்ருஷ்ணரைக் குறித்த ஏராளனமான செவி வழிக் கதைகள், குழந்தைகளுக்கு சோறூட்டும் போது சொல்லப்படும் தந்திரங்கள் நிறைந்த கதைகள். தத்துவ உலகில் பகவத் கீதை குறித்த ஆராய்ச்சிகள், விவாதங்கள், பண்டிகைக் காலங்களில், காலட்சேபங்களில் சொல்லப்படும் கதைகள்

இந்தியாவில் க்ருஷ்ணன் புராணம் கலந்த அதிசயம்.. இந்த பரந்த தேசத்திலே பல தரப்பட்ட கலாச்சாரங்களில் கலந்திருக்கும் ஆச்சரியம் க்ருஷ்ணன்..

நான் வாசிக்கின்ற பொழுதெல்லாம் புதியதும், பரவசம் தரக்கூடியதுமான க்ருஷ்ண வைபவங்களை நினைத்து நினைத்து சந்தோஷிக்கின்றேன்.

பிள்ளைப் பிராயத்து விளையாட்டு, அரசியல் நிகழ்வுகளை நடத்தி வைத்தவன், பெரும் தத்துவ உரைக்கு ஆசிரியன்.

இரிஞ்சாலக்குடா எனும் கேரள நாட்டு ஊரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கக் கூடும் ( ஐ , ஜி ஆர் மரார் எனும் போலிஸ் அதிகாரி பாத்திரம் நினைவுக்கு வரலாம்.. அந்தப் பெயரில் வரும் ஐ .. குறிக்கும் ஊர் இரிஞ்சாலக்குடா !!!!!)

இந்த இடத்திலிருக்கும் ரயிலடிக்குப் பக்கத்திலே திருக்காட்கரை எனும் திவ்ய தேசமிருக்கிறது.. அங்கே நின்ற திருக்கோலத்திலே சேவை சாதிக்கும் பெருமாள் காட்காரையப்பன்)

இந்தப் பெருமாளை பாசுரம் பாடி மகிழும் நம்மாழ்வாரைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறேன்


என்கண்ணன்கள்வம் எனக்குச் செம்மாய்நிற்கும்

அங்கண்ணனுண்ட என்னாருயிர்க்கோதிது

புன்கண்மையெதிப் புலம்பியிராப்பகல்

என்கண்ணனென்று அவன்காட்கரையேத்துமே.

ஒருவன் கள்ளத்தனம் செய்கிறான்,, சூதுவாது செய்கிறான் என்றால் அவனை விட்டு விலகி நிற்க வேண்டாமா.. ஆனால் இந்த கள்ளத்தனம் கொண்ட கண்ணனை ராப்பகலாக நினைத்து தான் கரையேற வேண்டும்

நம்மாழ்வாரை மிஞ்சி சொல்ல என்ன இருக்கப் போகிறது

இரண்டு தினங்களில் தீபாவளி இருக்க, இந்த க்ருஷ்ணாவதாரம் தொடரை தொடங்குகிறேன்

இந்த பதிவு அறிமுகம் தான்.. கதையின் முதல் பதிவு... தீபாவளி கழித்து தொடங்குகிறேன்

Monday, 3 September 2012

Uniform Civil Code-9

Uniform Civil Code-9

இந்திய அரசியல சாசனச் சட்டத்தின் தந்தை எனும் தனிப்பட்ட பெருமையினையும் அடைமொழியினையும் அம்பேத்காருக்கு மட்டும் வழங்கி, நாடு மகிழ்கிறது

ஆயினும் அரசியல் சாசனம் உருவானதில் அவருக்கு சற்றும் குறையாத பங்காற்றிய பலரின் பெயர்கள் அம்பேத்காரின் புகழ் வெளிச்சத்தின் காரணமாக அத்துனை அதிகம் தெரியாமலே போயின.

அப்படி ஒருவரே பெனகல் நரசிங் ராவ்.

நரசிங் ராவ், இந்திய அரசியல் சாசனச் சட்டம் உருவாக ஆற்றிய பங்களிப்பினை, அரசியல் சாசன சபையின் விவாதங்களின் வழி, சற்று காண்போமா

அன்றைக்கு திங்கட் கிழமை, டிசம்பர் 9 , 1946ம் வருஷம்.. புதுடில்லியில், நாடாளுமன்றக் கட்டிட  வளாகத்தில், மைய மண்டபத்தில் இந்திய அரசியல் சாசன சபையின் முதல் கூட்டம்.. மிகப் பிரசித்தியான சரித்திர நிகழ்வு.

சபையின் தற்காலிகத் தலைவராக, இருந்து வழிகாட்ட சச்சிதானந்த சின்ஹாவினை அழைத்தார்,  பெரியவர் ஆச்சார்ய க்ருபளானி அவர்கள் .

சபையின் முதல் நடவடிக்கைகள் தொடங்கின..  அமெரிக்க வெளியுறவுத் துறை, சீனாவின் தூதரகம் அனுப்பியிருந்த வாழ்த்து தந்தி வாசகங்களை அவைக்கு வாசித்துக் காட்டினார் சச்சிதானந்த சின்ஹா

அதன் பின்பு அவை நடவடிக்கைகள் தொடர்ந்தன.. இந்தியாவின் அரசியல் சாசனச் சட்டம் உருவாக்கம் எனும் சரித்திர நிகழ்வு , ஒரு சர்ச்சையுடன் தொடங்கியதென்பதை அறிந்து கொள்வதில் பலருக்கு ஆச்சரியமிருக்கும்

ப்ரிடிஷ் பலுச்சிஸ்தானம் ப்ரதேசத்தின் பிரதிநிதியாக மொகமத் கான் ஜோஹாசியைத் தேர்வு செய்தது செல்லாது என முறையீடு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார் கான் அப்துஸ் சம்த் கான். அதனை அவையின் கவனத்துக்கு கொண்டு வந்தார், தற்காலிகத் தலைவர் சின்ஹா,

பின்னர் தலைவரின் உரை .. இந்திய அரசியல் சாசன சபையின் முதல் உரை என்பதாகக் கூட சொல்லலாம்.. ஆனால் சச்சிதானந்த சின்ஹா தனது உரையின் வடிவத்தினை பெனகல் நரசிங்க ராவ் தன் சார்பாக வாசிப்பார் என்று சொல்லிவிட்டார்

பாரிஸ்டரும், சிறந்த இலக்கியவாதியுமான சச்சிதானந்த சின்ஹாவின் உரை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தினை உருவாக்கும் சரித்திர நிகழ்வுகளின் தொடக்க உரையினை வாசித்தவர் பெனகல் நரசிங் ராவ்

ஆமாம் யார் இந்த பெனகல் நரசிங் ராவ்..

(தொடரும்)


Monday, 20 August 2012

Uniform Civil Code-8

Uniform Civil Code-8


இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் வரைவு, அரசியல் சாசன நிர்ணய சபையில் விவாதங்களுக்காகவும், ஒப்புதலுக்காகவும் முன்னிறுத்தப்பட்டு , பொது சிவில் சட்டத்தின் அவசியம் , அதனை மறுப்பவர்களின் ஆதங்கம், மறுப்பதற்கான காரணம் இவற்றினை மிக சுருக்கமாக நாம் சென்ற அத்தியாயங்களில் கவனித்தோம்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பகுதி 3 ஆகிய அடிப்படை உரிமைகள் ( Fundamental Rights) , பகுதி 4 ஆகிய Directive Principles of State Policy (அரசின் கொள்கை நிர்ணயத்துக்கான வழிகாட்டி) இவை இரண்டுக்கும் இடையேயான மிக முக்கியமான வேறுபாடு, பகுதி மூன்றானது உறுதி செய்யப்பட்ட, நீதி மன்றத்தின் வழியாக உரிமையாக கோரிப் பெற உத்திரவாதம் அளிக்கப்பட்ட ஷரத்துகள்.. ஆயின் பகுதி நான்கானது அப்படியானது அல்ல.

இதனாலேயே பொது சிவில் சட்டம் என்பதை ஓர் அடிப்படை உரிமை ஷரத்தாக உறுதி செய்து விட வேண்டும் என அம்பேத்கார் விரும்பினார். அவருடைய கருத்தை மிகவும் வலுவாக ஆதரித்தவர்க்ள் மஸானி, ராஜ்குமாரி அம்ரித் கௌர், ஹன்சா மேத்தா.

இந்த தொடரை வாசிக்கின்றவர்கள் இந்த மூவரைக் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

மஸானி என சுருக்கமான பெயரால் அழைக்கப்பட்ட மினோசெர் ருஸ்தும் மஸானி , லண்டனில் சட்டக் கல்வி பயின்ற பாரிஸ்டர், இந்திய அரசியல் சாசன நிர்ணய சபையின் உறுப்பினரில் ஒருவர்.. ராஜாஜி, என்.ஜி ரங்கா இருவருடன் இணைந்து ஸ்வதந்திரா கட்சியை ஸ்தாபிதம் செய்தவர்

ராஜ்குமாரி அம்ரித் கௌர்... ராஜ்குமாரி என்பது அடைமொழி.. பஞ்சாப் பிரதேசத்தின் கபூர்தலா ராஜவம்சத்தினை சேர்ந்தவர் என்பதால் அவர் ராஜகுமார். பள்ளி, கல்லூரிக் கல்வி லண்டனில் கொண்டவர். சுமார் பதினைந்து வருஷங்கள், மஹாத்மா காந்தியாரின் காரியதரிசியாக பணி புரிந்தவர். நாட்டின் விடுதலைக்குப் பின் நேருவின் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக பணி செய்தவர். இந்தியாவில் மத்திய மந்திரி சபையில் காபினெட் அமைச்சர் அந்தஸ்து கொண்ட முதல் பெண் அமைச்சர்.. All India Institute of Medical Science எனும் மிகப் பிரசித்தியான மருத்துவ அமைப்பு தொடங்கிட இவரும் ஒரு காரணம்.. சென்னையில் இயங்கும் மத்திய தொழு நோய் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட இவர் ஒரு காரணம்.

ஹன்சா ஜீவராஜ் மேத்தா. புகழ்பெற்ற மனுபாஹ்ய் மேத்தாவின் புதல்வி. பெண் உரிமைகளுக்கான போராட்டத்தில் மிக முக்கியமானவர்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தினை வரைவு செய்யும் குழுவின் தலைவராக அம்பேத்கார் இருந்தார்.. அந்த வரைவுக்கு குழுவுக்கு துணைக் குழுவும் இருந்தது.. அதன்றி, இந்திய அரசியல் சாசன வரைவுக்கென வெளியிலிருந்தும், நிபுணர்களின் கருத்துகளும் பெறப்பட்டு, துணைக்குழு பிரதானக் குழு இவற்றில் விவாதிக்கப்பட்டன.

இப்படியான நிபுணர்களின் பெனகல் நரசிங் ராவ் மிகவும் முக்கியமானவர்.

இந்திய அரசியல் அமைபுச் சட்டத்தின் வரைவின் முதல் வடிவத்தினைத் தந்தவர் பெனகல் நரசிங் ராவ் தான்.. அவருக்குத் துணையாக எஸ் என் முகர்ஜி..

(தொடரும்)

Thursday, 16 August 2012

Uniform Civil Code-7

Uniform Civil Code-7

இந்திய அரசியல் சாசன சட்டத்தினை வடிவமைத்து நிறைவேற்றும் பெரும் பொறுப்புடன் அரசியல் சாசன நிர்ணய சபையின் கூட்டங்கள் நிகழ்ந்தன

1948 ம் வருஷம் டிசம்பர் மாசத்தின் இரண்டாம் நாள்.. வியாழக்கிழமை.. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவை காலை ஒன்பதரை மணிக்குக் கூடியது..

அன்றைக்கு அடிப்படை உரிமைகளில், "பொது இடங்களில், பொது அமைதிக்கு பாதகம் வராத வகையில் ஆயுதம் தாங்காமல் கூடுவது" எனும் ஷரத்தினைக் குறித்த விவாதம் நிகழ்ந்தது..

இந்த விவாதத்தின் போது, அம்பேத்காரின் பெயர் விமர்சிக்கப்பட்ட போதெல்லாம், அரசியல் சாசன சபையின் துணைத்தலைவர் ஹெச் சி முகர்ஜி குறுக்கிட்டு, "அரசியல் சாசன வரைவு கமிட்டியின் உறுப்பினர்கள் அனைவருமே இங்கே முன்னிறுத்தப்படும் ஷரத்துகளுக்குப் பொறுப்பானவர்கள்.. அதன்றி ஒவ்வொரு முறையும், வரைவு கமிட்டியின் தலைவரான நண்பர் அம்பேத்காரை மட்டும் விளித்து உறுப்பினர்கள் விமர்சிப்பது அத்தனை நல்லதாகத் தெரியவில்லை" என்று சொன்னார்

தனது பெயர் விமர்சிக்கப்பட்ட போதெல்லாம்.. அம்பேத்கார் அமைதியாகவே இருந்தார்.. ஆயுதம் தாங்காமல் எனும் கட்டுப்பாட்டுக்கான காரணத்தினை விளக்கிச் சொல்லிவிட்டு அமர்ந்தார்.. சில சமயம் உறுப்பினர்கள் குறிப்பிட்ட் தகவல் பிழைகளை சுட்டிக் காட்டினார்

ஆனால் ஆயுதம் தாங்காமல் என்பது மதங்களின் பெர்சனல் சட்டங்களைப் பாதிக்கும் எனும் கருத்து அவைக்கு வந்த போது, அம்பேத்கார் பேச எழுந்தார்

"துணைத் தலைவர் அவர்களுக்கு வணக்கம்.. இந்த பெர்சனல் சட்டங்கள் எனும் விவாதம் மீண்டும் ஒலிப்பது ஆச்சரியம். நாம் அரசின் வழிகாட்டும் நெறிகளை வரைவு செய்யும் போது, பொது சிவில் சட்டத்தின் அவசியம் குறித்து மிகவும் விரிவாகப் பேசி விவாதித்திருக்கிறோம்.. அப்போதும் உறுப்பினர்கள் பொது சிவில் சட்டம் எப்படி அவரவர் மதங்களின் பெர்சனல் சட்டங்களைப் பாதிக்கும் என்று சொன்னார்கள்.. அதற்கு போதுமான விளக்கங்களை நானும், முன்ஷி, நண்பர் அல்லாடி தந்து விட்டோம்.. இப்போது அடிப்படை உரிமைகளைக் குறித்து விவாதிக்கும் இந்த தருணத்தில் ,"மதங்களுக்கான பெர்சனல் சட்டங்கள்" எனும் விவாதம் மீண்டும் தலைகாட்டுகிறது

இப்படி நாம் மதங்களின் பெர்சனல் சட்டங்களைப் பாதுகாக்க முனைந்து அதற்கென நமது அரசமைப்புச் சட்டத்தில், விலக்களித்து ஷரத்துகளைச் சேர்த்துக் கொண்டே போவோமானால் அது அரசமைப்புச் சட்டத்தினையே நீர்த்துப் போக வைக்கும் செயலன்றி வேறேதும் இல்லை. அது மட்டுமல்ல இந்தியாவில் நாடாளுமன்றம் மட்டுமல்ல மாநில சட்டமியற்றும் மன்றங்களும் எந்த சமூக முன்னேற்றம் சார்ந்த சட்டங்களும் நிறைவேற்றி செயல்படுத்த இயலாதன ஆகிவிடும் அபாயமும் உண்டு

பலவிதமான மதங்கள், இனங்கள் , பிரிவுகள் கொண்ட நமது பெரிய தேசத்தில் ஒவ்வொரு மனிதனும் பிறப்பது தொடங்கி, இறப்பது வரைக்கும் கணக்கில் அடங்காத வகைக்கு மதங்களுக்கு ஏற்ப நியதிகளும் சம்பிரதாயங்களும் இருக்கின்றன.. இதையெல்லாம் கணக்கில் வைத்துக் கொண்டு, நாமும் ஒவ்வொரு மதம் அதற்கான பெர்சனல் சட்டங்கள் நியதிகளைப் பாதுகாக்க தொடங்கி, அரசமைப்புச் சட்டத்திலும் ஏனைய சட்டங்களிலும் விதி விலக்குகளும் சலுகைகளும் அமைத்துக் கொண்டே போனோமானல் அது பிற்காலத்தில் சமூக முன்னேற்றத்தினை முட்டுக்கட்டை போடும் என நான் தீர்மானமாக நம்புகிறேன்

நாடு சுதந்திரம் பெற்று, நாம் நமக்கென அரசமைப்பு அமைத்துக் கொள்ள ஒருங்கிணைந்து கூடி விவாதிக்கும் இந்தத் தருணத்தில் நாம் நம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டாமா ?

மதம், அதன் நியதிகளுக்கு என ஓர் எல்லையினை நாமே நியமித்துக் கொள்ள வேண்டாமா.. அப்படி நாம் நம்மை ஒருங்கிணைத்துக் கொள்வது ஒன்றும் அசாதாரணமானது அல்ல

ஒன்று மட்டும் எனக்கு நிச்சயமாகப் புரியவில்லை,, நாம் நமக்கான அரசமைப்பினை வடிவமைத்துக் கொள்ள கூடி விவாதிக்கும் இந்த தருணத்தில் ஏன் மதம் எனும் பொருளுக்கு அங்கீகாரமும்,, அதற்கென அதிகார வரம்புகளும் கோருகின்றார்கள்

நாம் போராடி அடைந்திருக்கும் சுதந்திரம்.. இப்படி நாம் வேறுபட்டே நிற்போம் என்று கூடி சொல்வதற்காகவா.. நாம் அடைந்த் சுதந்திரம் இப்படியான சமூக சூழலை உருவாக்கிக் கொள்ளவா...

மதங்களும் அதன் பெர்சனல் சட்டங்ளும் மிகவும் முக்கியமெனில், இந்த சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட மக்கள் சபைகள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள்

குடியரசு என்பது மக்கள் தாங்களாகவே முன் வந்து தங்களுக்கான அரசு அமைத்து , அதற்கென சட்டங்களும் , விதிகளும் ஏற்படுத்திக் கொள்வது.. அதனால் உருவாகும் சட்டங்கள் மக்கள் மீது அரசு தனது கட்டுப்பாட்டினை செலுத்தும் அதிகாரம் மட்டும் கொண்டவை என்பது பொருளாகாது.. இதனை உறுப்பினர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.. ஒரு சட்டம் பொதுவானது என செயல்வடிவம் பெறுவது பொது நன்மை எனும் அடிப்படையிலன்றி, எந்த ஒரு குறிப்பிட்ட சமூகம், இனம், மதம் இவற்றின் உணர்வுகளை, சம்பிரதாயங்களை பாதிக்கும் எண்ணத்தில் கொண்டு வரப்படுவதில்லை.. மதங்களின் பெர்சனல் சட்டங்கள், இந்தக் குடியரசின் சட்டமியற்றும் அதிகார வரம்பிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் எனும் கருத்து உதயமாவதை நான் எதிர்க்கிறேன்"

இந்தக் கருத்துகளுடன் வேறுபல உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு அம்பேத்கார் பதிலளித்தார்..


இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு நான்கானது Directive Principles of State Policy அதாவது, அரசு தனது கொள்கைகளை வகுக்கும் போது பின்பற்ற தேவையான நெறிமுறைகள் எனும் அளவில் கொள்ளலாம்.. இந்த பிரிவில் ஷரத்து எண் 44 பொது சிவில் சட்டத்தினை கொண்டு வர அரசு தேவையான முயற்சிகளை செய்யும் என்பதாக அரசமைப்புச் சட்டம் நிறைவேறியது
இந்தப் பகுதி நான்கானது அடிப்படை உரிமைகள் போல Enforceable கிடையாது.. ஒரு வேளை நமது அரசமைப்பின் அடிப்படை உரிமையாக பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்குமேயாயின் பல நீதி மன்ற வழக்குகளில் அந்த ஷரத்து பெருமளவு பேசப்பட்டிருக்கும்

பொது சிவில் சட்டத்தினை ஓர் அடிப்படை உரிமையாக, அடிப்படை உரிமையின் ஷரத்தாக கொண்டுவர அரசமைப்பு வரைவுக்கான துணைக்கமிட்டியின் ஆரம்ப கட்ட முயற்சிகளைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது

அப்படியான முயற்சியில் அம்பேத்கார் முன்னிலை வகித்தார்.. அவருக்கு துணை நின்றவர்கள்...யாரெல்லாம் தெரியுமா

(தொடரும்)



Monday, 13 August 2012

மீண்டும் சுஜாதா ( திருவள்ளுவர் சந்திப்பு)

மீண்டும் சுஜாதா தொடரினை பல காரணங்களினால் என்னால் தொடர இயலாது போனது

ஆனால் மீண்டும் தொடராக தொடர்ந்து எழுதிட தீர்மானிக்கிறேன்


எனது ப்ளாக்கில் "மீண்டும் சுஜாதா" எனும் லேபிளில் இந்த தொடரினை தொடரலாம். தொடரின் பழைய பதிவுகளை அங்கே படிக்கலாம்

----

மீண்டும் சுஜாதா ( திருவள்ளுவர் சந்திப்பு)

"வாருங்கள் ரங்கராஜன்.. நலமாக இருக்கின்றீர்களா"

சுஜாதாவுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது..

"என்னை ஞாபகம் வச்சு கூப்பிடறீங்களே அதெப்படி"

"நீங்கள் தானே என்னை சந்திக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருப்பதாக இங்கிருக்கும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்"

"ஆமாம் எனக்கு கொஞ்சம் சந்தேகமெல்லாம் இருந்தது.. அதையெல்லாம் மனசிலே வச்சிக்கிட்டே தான் திருக்குறளுக்கு உரை எழுதினேன்"

"அப்படியா.. நீங்களும் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கின்றீர்களா"

"இந்தியாவிலே ஒன்னு நீங்க கவனிக்கனும் வள்ளுவர் அய்யா"

"வசந்த் சும்மாரு.. டிஸ்டர்ப் பண்ணாத"

"அதென்ன பாஸ் .. நான் பேசினாலே எனக்கு தடை போடறீங்க"

"அவர் சொல்ல வந்ததை சொல்லட்டுமே"

"பார்த்தீங்களா பாஸ் வள்ளுவரே சொல்லிட்டார்.. நான் சொல்ல வந்தது என்னான்னா .. இந்தியாவிலே வக்கீல் உத்தியோகத்திலே பெரிசா பேர் எடுக்கனும்னா.. இன்டியன் கான்ஸ்டிட்யூஷன் பத்தி தடிமனா பொஸ்தகம் போட்டு கொறஞ்சது தொளாயிரம் ரூபாய்க்கு விலை வச்சு விக்கனும்.. அது மாதிரியே தமிழிலே எழுதிப் பேர் வாங்கனும்னா.. அவசியம் திருக்குறளுக்கு விளக்கம் எழுதனும்.. அப்படி ஒரு சம்பிரதாயம்"

"ஆனால் நான் வார்த்தைக்கு வார்த்தை விளக்கி அர்த்தம் எழுதல தெரியுமா .. வசந்த்.. ஓரளவுக்கு ரிசர்ச் பண்ணிதான் எழுதிருக்கன்னு நினைக்கிறேன்"

"உங்களுக்குள் இப்படி விவாதம் வேண்டாம் என நினைக்கிறேன்.. ரங்கராஜன் நீங்கள் உங்கள் ஐயங்களைச் சொல்லலாமே.. "

" என்னோட ஆரம்ப சந்தேகம்.. உங்களுக்கு இப்படி ஒரு மாரல் கான்டெக்ஸ்ட் கொண்டு வரணும்னு எப்படி தோணிச்சு.. உங்களுக்கு எதைப் பார்த்து எதைப் படிச்சு இப்படி எழுதனும்னு ஆர்வம் வந்தது"

"எந்த மனிதனுக்கும் அவனுடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும்.. அப்படித்தானே.."

"ஆமாம் அய்யா .. அதிலே எந்த சந்தேகமும் இல்லை"

"ஆனால் ஒவ்வொருவருக்கும் அர்த்தம் மாறுபடும்.. அது இயற்கை.. இதையும் ஒப்புக் கொள்வீர்கள் என நினைக்கின்றேன்"

"ஒப்புக் கொள்கிறேன் .. அப்படி மாறுவது இயற்கை தான்"

"ஆனால் மனிதன் தனிப்பட்டவனில்லையே.. அவன் பிறரோடு இணைந்தும், உறவாடியும் வாழ்வு நடத்த அவசியம் இருக்கிறது. அப்போது தான் அவர்களுக்கு நீதி போதனைகள் தேவைப்படுகின்றன.. இதோ இந்த இரண்டு வழக்குறைஞர்களிடம் கேட்டால்.. குற்றவியல் சட்டங்களின் தொடக்கமும் நோக்கமும் சொல்வார்களே.. அவையும் அப்படித்தானே இருக்கும்.. சரி தானே கணேஷ், வசந்து"

"என்னைப் பேர் சொல்லி நீங்களே அழைச்சது எனக்கு புல்லரிக்கிறது.. ஆனால் வசந்துனு சொல்லாதீங்க. ப்ளீஸ் வசந்த்... அத்தினிதான்.. து வெல்லாம் இல்லை.. அது என்னமோ வயசான மாமி கூப்பிடற மாதிரி இருக்கு'

"அய்யா நான் உங்களைக் ஒன்று கேட்கலாமா.. "

"தாராளமாகக் கேளுங்கள் கணேஷ்.. "

"சந்தோஷம் அய்யா.. இப்ப கிரிமினல் சட்டங்களைக் கவனிச்சீங்கன்னா IPC 511 செக்‌ஷன் தான்

1860 ம் வருடம் இந்தியன் பீனல் கோட் ( Indian Penal Code) அமுலுக்கு வந்தது. அவ்வப்போது கால சூழலுக்கு ஏற்ற மாற்றங்களுடன் இன்னும் அது இந்திய கிரிமினல் சட்ட நடைமுறைகளில் ஒரு முக்கியமான சட்டம்.


மஹாபாரத யுத்தம் முடிந்த பின் இருதரப்பிலும் இறந்துபட்ட குருவம்சத்தாரின் உடல்களின் அடக்கம் அவர்களுக்கு செய்ய வேண்டிய ஈமக்கடன்களை மஹரிஷி தௌம்மியரைக் கொண்டு தர்மன் செய்கிறான். ஈமக் கடன்கள் செய்து முடித்த நிலையிலே அவன் மிகுந்த சோகத்திலே இருக்கிறான், இத்தனை மரணங்களா என்ற எண்ணம் அவனை மிகவும் துயரப்படுத்துகிறது

இந்நிலையில் தான் அரசனாகப் பொறுப்பும் ஏற்க வேண்டும். உறவினர்களின் மரணம் என்ற கவலை ராஜ்யப் பொறுப்பேற்க்க வேண்டிய கடமைமையினையும் தாண்டி அவனை வாட்டுகிறது.

தனக்கு அரசப் பதவி வேண்டாம். காட்டுக்குப் போய் தவ வாழ்க்கை மேற்கொண்டு அங்கேயே மடிகிறேன் என்ற நிலைக்கு வருகிறான்

அவனை திருதராஷ்டிரன், தௌம்மியர், வியாசர், கிருஷ்ணர், அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன், திரௌபதி எல்லோரும் தேற்றுகின்றனர்

இதிலே மற்றெல்லோரது அறிவுரைகளைவிட அர்ஜுனனது அறிவுரை முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது (கிருஷ்ணனிடம் கீதை கேட்ட Effect போலும் !!!!)

அர்ஜுனனின் பேச்சு அரசனின் தண்டனை அதிகாரங்களைப் பற்றிய அறிவுரையாகவும் அற உரையாகவும் இருக்கிறது

இந்த இடத்திலே க்ருத யுகத்திலே ஆக்கப்பட்ட ஒரு லட்சம் ஸ்லோகங்களால் ஆன வைசலாட்சகம் என்ற தண்டனை சாஸ்திரம் குறித்தும் அது பின்னர் எப்படி படிப்படியாக Concise ஆக்கப்பட்டது என்பதைப் பற்றியும் வியாசர் சொல்கிறார்

வைசலாட்சகம் பிரம்மாவால் 1,00,000 ஸ்லோகங்கள் கொண்டதாக முதலில் சமைக்கப்பட்டது. இது என்ன இத்தனை ஜாஸ்தியாக இருந்தால் எப்படி எல்லோரும் இதை படித்து பின்பற்ற சிரமமாக இருக்குமே என சிவபெருமான் அதை 10,000 ஸ்லோகங்களாக சுருக்கினார்.பின்னர் இந்திரன் அதை 5,000 ஸ்லோகங்களாகவும், அதன் பின்னர் பிரஹஸ்பதி 3,000 ஸ்லோகங்களாகவும் அதன்பின் அசுர குருவான சுக்கிராச்சாரியார் 1,000 ஸ்லோகங்களாகவும் சுருக்கியதாகவும் வியாசர் குறிப்பு தருகிறார்.

நீங்களும் இப்படி பெரிய நம்பரில் தொடங்கி யோசிச்சு குறைச்சதுண்டா"

(தொடரும்)

Uniform Civil Code-6

Uniform Civil Code-6

அரசியல் சாசன நிர்ணய சபையில் டிசம்பர் 1, 1948ம் தேதி பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதம் மீண்டும் தொடங்கியது. அன்றைக்கும் துணைத் தலைவர் ஹெச். சி முகர்ஜியின் தலைமயில் தான் நடவடிக்கைகள் நடந்தேறின

அடிப்படை உரிமைகளுக்கான ஷரத்துகளின் விவாதத்தின் போது மீண்டும், முகமத் இஸ்மாயில் சாஹிப், ஒவ்வொரு மதத்தினரின் பெர்சனல் சட்டங்களுக்கு பாதகம் வராத வகைக்கு எனும் திருத்தம் ஒன்றினை முன் மொழிந்தார்

அதனை ஏற்க தேவை இன்னும் வரவில்லை என்பதை குறித்து கவனத்தில் வைக்க வேண்டும் என்பதாக சி. சுப்ரமணியம் தனது கருத்தினை முன் மொழிந்தார்


முகமது இஸ்மாயில் சாஹிப் தனது கருத்தினைச் சொல்லுமாறு துணைத் தலைவரால் கேட்டுக் கொள்ளப்பட்டார்

இஸ்மாயில் சாஹிப் பேசினாதாவது :

இதற்கு முன்பு நாம் , இந்த அவையில் விவாதித்த போது, அரசின் வழி காட்டும் நெறிகள் அத்தியாயத்தினைக் குறித்துப் பேசும் சந்தர்ப்பமாக அமைந்தது.. அப்போது நாம் அடிப்படை உரிமைகள் குறித்தும் விவாதிக்க அவசியமானது.. ஆனால் இன்றைக்கு விவாதம் முழுக்க முழுக்க அடிப்படை உரிமைகள் குறித்தது என்பதை மறக்க வேண்டாம்.. இந்த சூழலில் தான் நாம் அந்த அந்த மதங்களுக்கான பெர்சனல் சட்டங்களைப் பாதுகாப்பது எத்தனை அவசியம் என்பதை விவாதிக்க வேண்டும்.

அன்றைய நாள் விவாதத்தில் பேசிய முன்ஷி அவர்கள் சிறந்த வக்கீல். அதனால் அப்படிப் பேசினார். பெர்சனல் சட்டங்கள் என்பவை மதம் சார்ந்தவை என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை என்று தான் நினைக்கிறேன்.. அதே போல் அம்பேத்காரும் அதே போலவே பேசினார் என்று தான் சொல்ல வேண்டும். பொது சிவில் சட்டத்தின் பல அம்சங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு அனுகூலமாகவும் அவர்கள் மதத்தின் பெர்சனல் சட்டங்களைக் கைக் கொள்வதில் எந்த தடங்கலும் வராதிருக்கும் வண்ணமும் இருக்கும் போது, அப்படி ஒரு அனுகூலம் இல்லாத மதத்தினரின் மன உணர்வுகளை அம்பேத்கார் புரிந்து கொள்ளவில்லை என்று தான் நினைக்கிறேன்

நானும் ஒரு உதாரணத்தினை சொல்ல ஆசைப்படுகின்றேன்.. பசுக்களை கொல்வது என்பது சில சமூகத்தினருக்கு அவர்கள் மதம் சார்ந்து புனிதமில்லாத செயல்.. பாவமான செயல்.. ஆனால் சில சமூகத்தில் பசுக்களை கொல்வதும் அதன் மாமிசத்தைப் புசிப்பதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.. ஆனாலும் அப்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதிகளைக் கூட அந்த சமூகத்தினர் உரிமை கோரவில்லை


இந்த நிலையில் கிழக்கு பஞ்சாப் பகுதியின் உறுப்பினர் பண்டிட் தாக்கூர் தாஸ் பார்க்கவா குறுக்கிட்டார் : " நண்பருக்கு பாகிஸ்தானில் பசு வதை தடை செய்யப்பட்டுள்ளது தெரியுமா"

தாக்கூர் தாஸ் பார்க்கவா குறுக்கிட வேண்டாம் என துணைத் தலைவர் கேட்டுக் கொள்ள முகமது இஸ்மாயில் சாஹிப் பேசலாம் என யத்தனித்தார்

ஆனாலும் தாக்கூர் தாஸ் பார்க்கவா சளைக்கவில்லை : " இந்த அவை என் குறுக்கீட்டிற்காக என்னை மன்னிக்க வேண்டும்.. ஆனாலும் பசு வதை என்பது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.. ஏன் இந்தியாவில் ஆட்சி செய்த பல முகமதிய அரசர்கள் பசு வதை செய்வதனை தடுத்திருக்கின்றனர் என்ற கருத்தினை அவையில் பதிவு செய்ய விழைகின்றேன்"

முகமது இஸ்மாயில் சாஹிப் தனது கருத்துகளை வலியுறுத்திப் பேசிய போது மீண்டும் சி .சுப்பிரமணியம் குறுக்கிட்டார் : " நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.. அடிப்படை உரிமைகளில் நாம் ஒருவர் சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்படலாகாது என்பதை விவாதிக்கும் போது, இது போல மதம் சார்ந்த பெர்சனல் சட்டங்கள் குறுக்கிட்டால், நம்மால் நம் கிரிமினல் சட்டங்களை நிர்வாகம் செய்யவே முடியாது"

இஸ்மாயில் சாஹிப் தான் கொண்டு வந்த தீர்மானங்களை வலியுறுத்தினார்.. ஆனால் அவை அன்றைக்கு அந்தப் பொருளில் மேலும் எந்த விவாதத்தினையும் காணவில்லை..

அன்றைக்கு மறு நாள் டிசம்பர் 2 அன்று அவையில் அம்பேத்கார் இந்தப் பொருளில் ஆற்றிய உரை மிகவும் குறிப்பிடத் தகுந்தது

(தொடரும்)


Monday, 6 August 2012

Uniform Civil Code-5

Uniform Civil Code-5

பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாகத்தான் அம்பேத்காரின் கருத்து இருந்தது

" தலைவர் அவர்களே. பொது சிவில் சட்டத்தினை அமுல்படுத்துவதில் அந்தந்த மதத்தின் பெர்சனல் சட்டங்களுக்கு பாதகம் வராமல் செய்ய வேண்டும், என இங்கே உறுப்பினர்கள் முன் மொழிந்த எந்தக் கருத்தையும் என்னால் ஏற்க இயலாது.

நண்பர்கள் கே எம் முன்ஷி அவர்களும், அல்லாடி அவர்களும் நான் பேச விழைந்ததை பேசியுள்ளார்கள்

நண்பர் ஹுசைன் இமாம் கேட்கிறார், இத்தனை பெரிய நாட்டில் எப்படி ஒரே பொது சிவில் சட்டம் சாத்தியமாகும் என .. அவரது வினா எனக்கு ஆச்சரியம் தான் அளிக்கிறது

இத்தனை பெரிய நாட்டில் நம்மால் பொது கிரிமினல் சட்டம் வைத்துக் கொள்ள முடிகிறது, சொத்து பரிமாற்றத்துக்கு பொது சட்டம் வைத்துக் கொள்ள முடிகிறது

இங்கே பேசிய இஸ்லாமிய நண்பர்கள் எல்லோரும் ஓர் உண்மையினை மறந்து விட்டார்கள் என நினைக்கிறேன்.. அதனை அவர்களுக்கு நினைவுக்கு கொண்டு வருவது என் கடமை என நினைக்கிறேன்
1935 ம் ஆண்டு வட மேற்கு எல்லை மாஹாணங்களில் இஸ்லாமியர் அவர்கள் மதம் சார்ந்த சட்டங்களை கைக் கொள்ளவில்லை. அந்த வட்டாரம் முழுமைக்கும் ஹிந்து மதச் சட்டங்களைத்தான் பின்பற்றினர்.. இஸ்லாமியர் உட்பட‌

அந்த பிரதேசம் மட்டுமென உறுப்பினர்கள் நினைத்துவிட வேண்டாம்.. 1937 ம் ஆண்டு வரைக்கும் ஒருங்கிணைந்த மாஹாணம், மும்பை மாஹாணப் பகுதிகளிலும் இஸ்லாமியர்களும் ஹிந்து மதச் சட்டங்களையே பின் பற்றி வந்தனர்.. இது நம் வரலாறு.

என்னுடைய நண்பர் கருணாகர மேனன் சொன்ன தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள்கிறேன்.. அது என்னவெனில் வடக்கு மலபார் பிரதேசத்தில் மறுமகத்திய சட்டம் ஹிந்துக்களுக்கு மட்டுமானது அல்ல.. இஸ்லாமியர்களுக்கானதும் தான்.

ஒன்றை இந்த அவையில் சொல்லிக் கொள்ள விழைகின்றேன்.. இன்று பொது சிவில் சட்டம் என நாம் முன்னிறுத்தும் சட்டம், ஹிந்துக்களுக்கோ வேறு மதத்தினருக்கோ சாதகமாக இருக்கிறதெனவும், இஸ்லாமியருக்கு விரோதமாக இருக்கிறதாகவும் நினைக்க வேண்டாம்.

முன்னிறுத்தப்படும் பொது சிவில் சட்டம் பொருந்தி வரும் தன்மையால் மட்டுமே முன்னிறுத்தப் படுகிறது

பொது சிவில் சட்டத்தினை முன் மொழிபவர்களோ அதனை உருவாக்கியவர்களோ இஸ்லாமியர்ளுக்கு பெரும் தீங்கிழைத்து விட்டார்கள் என கருதுவது சரியில்லாத செய்கை.. அதிலே நியாயமும் இல்லை

பொது சிவில் சட்டத்தை நான் ஆதரிக்கிறேன்.. அந்தந்த மதத்தினரின் பெர்சனல் சட்டங்களுக்கு ஏற்ப அதனை மாற்ற வேண்டும் எனும் கருத்துகளை நான் எதிர்க்கிறேன் என சொல்லி அமர்கிறேன்

இப்படியாக , பொது சிவில் சட்டத்தினை அமுல் படுத்துவதெனில் அதனை அந்தந்த மதத்தினரின் பெர்சனல் சட்டங்களுக்கு பாதகம் வராத வகையில் நிறைவேற்றலாம் எனும் மாற்றங்களை அரசியல் நிர்ணய சபை அன்றை தினத்தில் ஏற்க மறுத்தது.

(தொடரும்)

Saturday, 4 August 2012

Uniform Civil Code-4

Uniform Civil Code-4

மதிப்பிற்குரிய துணைத் தலைவர் அவர்களே, எனும் கம்பீரமான குரல் கேட்டவுடன் அந்த மாபெரும் அவை அமைதியானது.. அனைவரின் கவனமும் அந்த குரலினால் ஈர்க்கப்பட்டது

பெரியவர் கே. எம் முன்ஷியின் குரல் அது..

நாமும் அவர் என்ன பேசுகிறார் எனக் கேட்போம்

நான் இந்த அவையின் முன்பு சில கருத்துகளை முன் வைக்க விரும்புகிறேன்.. இந்திய அரசியல சாசனத்தின் மிக முக்கிய அம்சமான அடிப்படை உரிமைகள் குறித்து ஷரத்துகளை நாம் விவாதிக்கும் மிக முக்கிய தருணம் இது.. நாம் ஏற்கனவே சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் எனும் ஷரத்தினை ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்.. இதே அவையில் .. நாம் எல்லோரும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டோம்..

இப்போது பொது சிவில் சட்டம் கொண்டு வருவதினால், என்ன இடர் என்பதைக் குறித்து இங்கே சக உறுப்பினர்கள் கருத்துகள் சொன்னார்கள்..

அப்படியாக ஒரு பொது சிவில் சட்டம் கொண்டு வரும் நிலையிலும், சிறுபான்மையினரின் நலனைப் பாதுகாக்க அரசுக்கு உரிமை இருக்கிறது அதனால் அதற்கென சில சலுகைகளை செய்வதில் தடையில்லை எனவும் அரசியல் சாசனத்தின் ஒரு ஷரத்தில் உப பிரிவு ஒன்றினை நாமே இங்கே இதே அவையில் அங்கீகரித்திருக்கின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

பொது சிவில் சட்டமானது சிறுபான்மையினரின் நலனை முடக்குவதாக அமைந்துவிடும் என்பதாகவும் சில உறுப்பினர்கள் சொன்னார்கள்.. உலகில் எந்த இஸ்லாமிய தேசத்தில் அங்கே சிறுபான்மையினராக இருக்கும் மதத்தினரின் உரிமைகள் மதிக்கப்பட்டு, இந்தியாவில் நடத்தப்படுவது போல் நடத்தப்படுகின்றார்கள் என கவனிக்க வேண்டும்

உதாரணத்திற்கு நாம் எகிப்தையும் துருக்கியையும் எடுத்துக் கொள்ளலாம்.. அங்கே இஸ்லாமியரல்லாத சிறுபான்மையினருக்கு இப்படியெல்லாம் அவரவர் மதம் சார்ந்த பெர்சனல் சட்டங்களைக் கை கொள்ள உரிமை இருக்கிறதா

நான் இன்னமும் ஒன்று சொல்ல விழைகின்றேன்.. மத்திய சட்ட சபையிலே ஷரியத் சட்டங்களும் இன்ன பிற சட்டங்களும் அங்கீகரிக்கப்பட்டு அமுலுக்கு வந்த போது ஷியா பிரிவின் உப பிரிவான கோஜா பிரிவினரும் Cutchi Memons பிரிவினரும் அதனால் மிகவும் அதிருப்தியும் வருத்தமும் கொண்டார்கள்..

அப்போது முகமதியர்கள் அவர்களுக்கு மட்டுமல்ல எல்லாப் பிரிவினருக்கும் ஷரியத் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என வாதாடினர்.. அதனை இந்த இரண்டு பிரிவைச் சார்ந்த இஸ்லாமியர்களாலேயே ஏற்க இயலவில்லை.. மறுத்தனர்..

அவர்களுக்குள்ளே இருக்கும் இப்படியான வேறுபாட்டை வைத்துக் கொண்டு எப்படி சிறுபான்மையினர் நலனுக்காக ஒவ்வொரு தனி சட்டங்களை வைத்துக் கொள்ளலாம் என சொல்வது

நான் இஸ்லாமியர்களை மட்டும் சொல்வதாக நினைக்க வேண்டாம்..

ஹிந்துக்களுக்காக மனு, யாஞ்யவல்யர் போன்றோரின் கருத்துகளை வைத்துக் கொண்டு ஹிந்து சட்டங்களை வைத்தீர்களேயானால் அதனை மறுத்து சொல்ல, பல பிரிவுகள் ஹிந்து மதத்திலேயும் இருக்கிறது

மயூக்கர்களுக்கு, மிதாக்சரர்களுக்கு, பெங்கால் பகுதியின் தயாபாகர்களுக்கு என இப்படி வட்டாரக் கணக்கில் ஹிந்துக்களுக்கென பெர்சனல் சட்டங்கள் இருக்கிறது.. இதையெல்லாம் அங்கீகரித்து.. ஒவ்வொரு மதம் அதன் பல உட்பிரிவுகள்.. அந்த உட்பிரிவுகளுக்குள்ளே இருக்கும் ஏனைய பிரிவுகள் அந்தந்த பிரிவுகளுக்கெல்லாம் தனித்தனியாக பெர்சனல் சட்டங்கள் என வைத்துக் கொள்ளப் போகின்றோமோ நாம் ????

வெளியிலிருந்து வந்து இத்தனை நாட்கள் இங்கே அரசு செலுத்திய ப்ரிட்டிஷாருக்கு இப்படி ஒவ்வொரு பெர்சனல் சட்டங்களும் மதத்தின் அங்கமாகத் தெரிந்திருக்கலாம்.. ஆனால் தேசிய ஒருமைப்பாடு என்பது நமக்கு எத்தனை முக்கியம் என்பது நாம் தான் உணர்ந்து கொள்ள வேணும்..

இப்படி பிரிவுக்கு ஒன்றாக பெர்சனல் சட்டம் வைத்துக் கொள்வது செக்யூலரும் ஆகாது.. நல்லதுமல்ல

நாமெல்லாம் இந்த தேசத்தின் சரித்திரத்தை நன்கு அறிந்தவர்கள்..

அலாவுதீன் கில்ஜி.. பாரத தேசத்தில் முதல் சுல்தானிய சர்க்காரை அமைத்தவர்.. அவர் ஷரியத்தின் ஷரத்துகளில் திருத்தம் செய்து அதனை அமுல்படுத்திய போது, டெல்லியின் காஜியார் அதனை எதிர்த்தார்.. அப்போது அலாவுதீன் கில்ஜி சொன்ன பதில்

‍‍... நான் அறிவில்லாதவன்.. ஆனால் இந்த நாட்டின் மீதும் இதன் வளர்ச்சியின் மீதும் கொண்ட நல்லெண்ணம் அக்கறையினை மட்டும் வைத்துக் கொண்டு அரசாட்சி செய்கிறேன் .. என்னுடைய அறியாமையினையும், நல்லெண்ணத்தினையும் ஒருங்கே நோக்கும், கடவுள் , நான் ஷரியத்தின் படி நடக்கவில்லை என்பதை கருதி கோபமுறமாட்டார்.. எனது நல்லெண்ணத்தினை கருதி என்னை மன்னித்து அருள் செய்வார்

உறுப்பினர்கள் நன்றாக கவனிக்க வேண்டும்..

பண்டை மன்னனுக்கே இப்படி எண்ணமும் அதனை செயல்படுத்தும் துணிவும், முதிர்ச்சியும் இருந்திருக்குமேயானால், நம்மைப் போன்றவர்களுக்கு , இப்படியான மதம், அதன் பிரிவுகள் அதன் உப பிரிவுகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெர்சனல் சட்டம் என்பதெல்லாம், அப்படியான மதத்தின் அங்கம் எனும் கருத்து பிழையாக நமக்கு பயிற்றுவிக்கப்பட்ட கருத்து என்பதைக் உணரத் தெரிந்திருக்க வேணூம்

அவை மீண்டும் அமைதியானது.. பெரியவர் முன்ஷி தனது உரையினை நிறைவு செய்து அமர்ந்துவிட்டார்..

சுமார் ஒரு நிமிஷம் ஆனது

அவையின் கவனத்தைக் கவர்ந்த குரலுடன் அல்லாடி க்ருஷ்ணசாமி அய்யர் பேசலானார்

நான் பெரியவர் முன்ஷி அவர்களுக்கு மிகவும் நன்றியுடையவனானேன்.. நான் பேச நினைத்திருந்ததில் பெரும்பான்மையை அவரே சொல்லிவிட்டார்.. ஆயினும் அவரது கருத்துகளை வலியுறுத்துவதுமாகவும் இன்னமும் சில கருத்துகளை சொல்லவும் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்கிறேன்

ப்ரிட்டிஷ் சர்க்காரில் தங்கள் மதங்களுக்கான தனி தனித் பெர்சனல் சட்டங்கள் இருந்தன என்பதையும் அந்த ஆயிரம் வருஷ அந்நியர் அரசாங்கத்தினை மெச்சியவர்கள் இன்டியன் பீனல் கோட் கொண்டு வரும் போது ஏன் எங்கள் மதத்தின் படி எங்களுக்கு தனியே கிரிமினல் சட்டங்கள் இருக்கிறது .. அதனை நாங்கள் கை கொள்ளுகிறோம் என சொல்லவில்லை.. ஏன் ஐ பி சிக்கு ஆட்சேபணையே தெரிவிக்கவில்லை

இன்னுமொரு வருத்தம் என்னவெனில்,, அம்பேத்கார் தலைமையில் இயங்கும் அரசியல் சாசன வடிவமைப்பு குழு தனது வேலையினை சரிவர செய்யவில்லை என்பதாகக் கூட இங்கே ஓர் உறுப்பினர் சொன்னார்

அவர்களுக்கு அந்நிய ஆட்சியிலே சந்தோஷமிருந்தது நமக்கு நாமே அமைத்துக் கொள்ளவிருக்கும் குடியரசில் அவருக்கு சந்தோஷமில்லை போலும்

நம் முன்னே இருப்பது இரண்டு சங்கதிகள்

முதலாவது

"The State shall endeavour to secure for citizens a uniform civil code throughout the territory of India."

என்பதாக முன் மொழியப்பட்ட பொது சிவில் சட்ட தேவை அவசியம் ஆகவே அதை உறுதி செய்யும் ஷரத்து

இரண்டாவது..

'Provided that the personal law of any community which has been guaranteed by the statue shall not be changed except with the previous approval of the community ascertained in such manner as the Union Legislature may determine by law'."

"Provided that nothing in this article shall affect the personal law of the citizen."

"Provide that any group, section or community of people shall not be obliged to give up its own personal law in case it has such a law."

என்பதாக பலவித வடிவங்களில் உறுப்பினர்களால்,, அந்தந்த மதத்தின் பெர்சனல் சட்டங்களுக்கு பாதகம் வராத வகையில் ஒரு பொது சிவில் சட்டம் என முன் மொழியப்பட்ட திருத்தங்கள்

பெர்சனல் சட்டங்களைக் கருத்தில் கொள்ளாது அனைவருக்கும் பொதுவானதொரு சிவில் சட்டம் தேவையெனும் ஷரத்தினை நாமெல்லோரும் ஏற்க வேணும் என்பதே என் கருத்து

அல்லாடி க்ருஷ்ணசாமி அய்யர் தனது உரையினை முடித்து உட்கார்ந்தார்

தன் முன்னே இருந்த குறிப்புதவிக் காகிதங்களை ஒருதரம் பார்த்துவிட்டு, தனது கருத்துகளை சொல்ல விழைந்து அம்பேத்கார் எழுந்து நின்று பேசலானார்

(தொடரும்)

Thursday, 2 August 2012

Uniform Civil Code-3

Uniform Civil Code-3

மேற்கண்ட அலி பெய்க் சாஹிப் பகதூரின் உரை நிறைவுக்கு அனந்த சயனம் அய்யங்கார் : It is a matter of Contract என்பதாக ஒரு கருத்தை சொல்லி இடை மறித்தார்

இதனை அலிபெய்க் சாஹிப் பகதூர் எதிர்பார்த்திருந்தார் போலும்

"எனக்கு நன்றாகத் தெரியும், நமது அனந்தசயனம் அய்யங்கார் அவர்களுக்கு பிற மதத்தினரின் சட்டங்களைப் பொறுத்தவரை எப்போதுமே queer ideas வைத்திருக்கிறார்.. ஹிந்துக்களையும் ஐரோப்பியர்களையும் பொறுத்தவரை, சம்சார பந்தம் என்பது ஒரு ஸ்டேட்டஸ் அதாவது ஒரு நிலை.. ஆனால் ஆனால் கான்ட்ராக்ட் என அனந்தசயனம் அய்யங்காரால் வருணிக்கப்பட்ட சம்சார பந்தம் என்பது இஸ்லாமியருக்கு குரான் வழியிலானது.. அதனை நிறைவேற்றாத நிலையில் அது செல்லாததாகிவிடுகிறது

1350 வருடங்களாக முஸ்லிம்கள் ஒரு சட்டத்தினை கைக்கொண்டு வருகின்றார்கள்.. அதனை அந்த அந்த நிலையில் சர்க்கார்கள் ஒப்புக் கொண்டிருந்திருக்கின்றனர்.. இன்றைக்கு வந்து அனந்தசயனம் அய்யங்கார் , நாங்கள் எல்லோரும் ஒப்புக் கொள்கின்ற மாதிரி திருமணம் போன்றவற்றிற்கு பொதுவானதொரு சட்டம் கொண்டு வருகிறேன் என்று சொல்வாரேயானால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.. இது மிகச் சாதாரணமான சங்கதி இல்லை. இஸ்லாம் என்று மட்டும் இல்லை.. இன்னும் சில மதங்களில் கூட personal Law என்பது அவர்களின் மத நம்பிக்கைகள் சார்ந்ததாகவே இருக்கிறது.. அப்படியான மத நம்பிக்கைகளைக் பின்பற்ற இந்த பொது சிவில் சட்டம் இடைஞ்சலாகி விடக் கூடாது

இந்த நிலையில் மற்றொரு உறுப்பினர் க்ருஷ்ணசாமி பாரதி குறுக்கிட்டு, இப்படி ஒரு பொது சிவில் சட்டம், எல்லாருடைய ஒப்புதலுடன் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்

அன்றைய தினம் அவை அரசியல் சாசன நிர்ணய சபையின் துணைத் தலைவர் ஹெச் சி முகர்ஜி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது

அவர் , " மிஸ்டர் க்ருஷ்ணசாமி பாரதி.. என்னுடைய ஆசை. இது தான்.. பெரும்பான்மை சமூகத்தினர் கருத்துகளை சொல்ல்லுமிடத்து.. சிறுபான்மை சமூகத்தினர் தங்கள் கருத்துகளையும் சொல்ல வேண்டும்.. இந்த அவையில் நமது இஸ்லாமிய சகோகதரர்கள் மனம் திறந்து கருத்துகளை சொல்ல வேண்டும்"

க்ருஷ்ணசாமி பாரதி , " அவைத் தலைவருக்கு என் வணக்கம்.. நான் சொல்ல வந்தது என்னவெனில் இந்த அவையில் நிறைவேற்றம் காணப்படும் எதுவும் எல்லோருக்கும் சம்மதமானதாக இருக்க வேண்டும் " என்பதே

மீண்டும் அலிபெய்க் சாஹிப் பகதூர் தொடர்ந்தார், " அவைத் தலைவர் அவர்களே, நான் சிலரிடம் கவனிக்கிறேன்.. அவர்கள் செக்யூலர் அரசாங்கம் என்பது எல்லா மதத்தினரும் ஒரே சிவில் சட்டத்தைக் கைக்கொள்வது என நினைக்கின்றனர்.. அதாவது எல்லா மதத்தினரும் அவரவர் தினசரி வாழ்க்கை , மொழி, கலாச்சாரம் , பெர்சனல் சட்டங்கள் இதெல்லாம் அந்த "பொது சிவில் சட்டம்" மூலமாகவே நடைபெற வேண்டும் என நினைக்கின்றனர்.. ஆனால் அதல்ல செக்யூலர் சர்க்கார்

ஆனால் அந்தந்த மதத்தினருக்கு அவரவர் மதத்தினரின் நம்பிக்கைகளுக்கு ஏற்ப வாழ்வு நடத்திட ஏதுவானதே நிஜமான செக்யூலர் சர்க்கார்.. அதைச் செய்வதே சிறந்த பொது சிவில் சட்டம் "

இன்னும் சில இஸ்லாமிய உறுப்பினர்கள் அலிபெய்க் சாஹிப் பகதூர் சொல்வதை சபை ஏற்க வேணும் என குரல் தந்தனர்


பிஹார் பகுதியின் உறுப்பினர் ஹுசைன் இமாம் குறுக்கிட்டு , " இந்த பெரிய நாட்டிலே ஒரு பகுதியிலே மழை கொட்டியபடி இருக்கிறது.. இன்னொரு பகுதியில் வறட்சி .. இப்படியான வேறுபாடுகள் கொண்ட தேசத்திலே பொது சிவில் சட்டம் எப்படி சாத்தியம்"

என்பதான கேள்வியையும் கேட்டு வைத்தார்

அதுமட்டுமல்ல சபையில் வேண்டுகோள் ஒன்றினையும் வைத்தார்

"இந்த சூழல் மிகவும் சோதனையானது தான்.. பல்வேறு மதம், பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள், இன்னும் எவ்வள்வோ வேறுபாடுகள் கொண்ட சமூகச் சூழல்கள் கொண்ட நம் நாட்டில், அனைவரும் மனமுவந்து ஒரு பொது சிவில் சட்டத்தினை ஏற்பது மிகவும் கடினம்.. ஆனால் இந்த சூழலில் நமது அரசமைப்புச் சட்டத்தினை வரைவு செய்யும் நமது உறுப்பினர்கள் இதற்கு தக்கதொரு தீர்வினைத் தர இயலும் என்று நான் நினைக்கிறேன்.. மிகக் குறிப்பாக வரைவு கமிட்டியின் தலைவரான சகோதரர் அம்பேத்கார் அவர்கள் இதற்கு நல்ல தீர்வு தர வல்லவர் என்று நம்புகிறேன்

ஹுசைன் இமாம் பேசி அமர்ந்த பின் சபையில் சில நிமிஷங்கள் ஆழ்ந்த நிசப்தம்.. எல்லோரும் அம்பேத்கர் என்ன சொல்லவிருக்கிறார் எனத் தெரிந்து கொள்ள ஆர்வமானர்கள்..

இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என வரும் நாட்களில் உலகம் அழைத்து மகிழ்ந்த அண்ணல் அம்பேத்கார் அவையில் இருக்கின்றாரா எனத் தெரிந்து கொள்ள் சில உறுப்பினர்கள் எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தார்கள்.

அவர் அவையிலே தான் இருந்தார்.. எப்போதும் போல அமைதியாக இருந்தார்..

அவர் பக்கத்திலே அமர்ந்திருந்த உறுப்பினர்கள் அவரை கூடுதல் ஆர்வத்துடன் , "ம் எழுந்திருங்கள் .. நான் உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன்" என்ற கருத்தினை தங்கள் பார்வையாலே அவர்பால் செலுத்திப் பார்த்தார்கள்
..
அந்த மிக விசாலமான பெரும் அரங்கிலே ஆங்காங்கே உறுப்பினர்கள் தங்கள் குறிப்புதவிக் காகிதங்களை புரட்டும் போது உண்டான சின்ன சப்தம், மின் விசிறிகள் வேகமாக ஒடும் போது உண்டாகும் காற்றின் சப்தம் இவை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது

மொத்த சபையும் அம்பேத்காரின் பேச்சுக்காகக் காத்திருந்தது.

(தொடரும்)

Wednesday, 1 August 2012

Uniform Civil Code-2

Uniform Civil Code இந்த பொருளில் நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கு முன்பே ,, அரசமைப்புச் சட்டம் உருவாகும் நிலையிலேயே விவாதம் நடைபெற்றதைக் கவனிக்க வேண்டும்..

அடிப்படை உரிமைகளை அரசமைப்புச் சட்டத்தின் மூலம் உறுதி செய்திட வேண்டுமெனும் எண்ணத்தில் நமது அரசியல் சாசன நிர்ணய சபையில் கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 30 ஆகஸ்ட் 1947 நடைபெற்ற விவாதத்தில் கருத்துகள் விவாதிக்கப்பட்டன

23 நவம்பர் 1948 அன்று அரசியல் சாசன நிர்ணய சபையில், மதராஸ் மாஹாணத்திலிருந்து உறுப்பினரான முகமது இஸ்மாயில் சாஹிப், Uniform Civil Code கொண்டு வருவனை எதிர்த்து ஒரு சட்ட முன் வடிவினை முன் மொழிந்தார். மேற்கு வங்கத்திலிருந்து உறுப்பினரான சுரேஷ் சந்திர மஜும்தார் இந்த முன் மொழிவினை எதிர்த்தார்

ஆனால் இஸ்மாயில் சாஹிப் சொல்வதனை ஏற்க வேண்டும் என இன்னுமொரு உறுப்பினர் நஸ்ரூதின் அகமது வலியுறுத்தினார்

இந்த நிலையில் உறுப்பினர் மொஹபூப் அலி பெய்க் ஷாகிப் பகதூர், சபையின் கவனத்தினை ஈர்க்கும் வண்னம் சில கருத்துகளை முன் வைத்து பேசினார். , ஏற்கனவே ப்ரிட்டிஷார் ஆட்சியில் Civil Procedure Code தனி மனிதனின் மதம் சார்ந்த நம்பிக்கைகளிலே தலையிட்டு அதனால் மத நம்பிக்கைகளுக்கு இடர் வந்திருப்பதாகவும் இப்போது இப்படி பொதுவான சிவில் சட்டம் கொண்டு வந்தால் மத நம்பிக்கைகள் அதனைக் கைக்கொள்வதிலும் இடர் தொடரவே செய்யும் என உரை செய்தார்

As far as the Mussalmans are concerned, their laws of succession, inheritance, marriage and divorce are completely dependent upon their religion

என்பதாக அவர் உரையினை நிறைவு செய்யும் போது உறுப்பினர் அனந்தசயனம் அய்யங்கார் குறுக்கிட்டு ஒரு கருத்தை சொன்னார்

(தொடரும்)