Wednesday, 30 April 2008

ஏற்காடு


போனவாரக் கடைசியில் ஏற்காடு போயிருந்தேன். உபயம் நான் வேலை பார்க்கும் கம்பெனி.

நாங்கள் ”பாலா” என்று கூப்பிடும் எங்கள் கம்பெனி டைரக்டர் திரு. பாலமுருகன் இப்படி எங்களை சந்தோஷப்படுத்தி சந்தோஷப்படுவார். அவரும் எங்களுடன் வந்திருந்தார்

இந்த மாதிரி பயணம் கிளம்பும் போது பஸ் டிரைவர் பற்றி கொஞ்சம் புலன்விசாரணை செய்ய வேண்டும் போலும். நாங்கள் போன பஸ் டிரைவர் முன்னால் போகிற வண்டிகளின் பின்புறத்தை தரிசனம் செய்வதில் அபார பிரேமை கொண்டவர் போலும். அந்த வண்டிகாரர்கள், “இந்தாப்பா ஓவர் டேக் செஞ்சுக்கோ “என்று பெரிய மனசாய் கைகாட்டினாலும் எங்கள் டிரவைர் “ ஊஹூம் மாத்தேன் போ “ என்று குழந்தையாக பவ்யமாய் பின் தொடர்ந்தார். பயணத்தின் பெரும்பால நேரம் தார்ப்பாய் மூடிய லாரிகளின் பின்னால் தான்.

ராத்திரிக்குள் போய் சேர்ந்துவிடுவோமா என்ற சந்தேகம்.. ஒருவழியாய் நடு ராத்திரி கொண்டு போய்ச்சேர்த்தார். அந்த நடுநிசியிலும் எங்களுக்காக நிலா, நட்சத்திரம், அடர்த்தியான பனி, நாங்கள் தங்க இருந்த காட்டேஜ் சிப்பந்திகள் எல்லாரும் ஓவர் டைம் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

மறுநாள் காலையில் காட்டேஜுக்குள் “கிறீச் கிலுங்”என தொடர் சப்தத்தில் என் தூக்கம் கலைந்தது. சத்தம் வெளியில் இருந்து. ஒரு ஜன்னலை திறந்து பார்த்தேன். அபாரம். காபி தோட்டத்தின் மிக சமீபம். வகை வகையாய் சின்னச் சின்ன பறவைகள். இத்தனை ரகமா !!


”கழனி செந்நெல் கரும்புசூழ் மருங்கில்
பழனத் தாமரை கைம்பூங் கானத்துக்
கம்புட் கோழியும் கனிகுரல் நாரையும்
செங்கால் அன்னமும் பைங்காற் கொக்கும்
கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழுஉக்குரல் பரந்த ஓதையும் “

என கொஞ்சம் சிலப்பதிகாரம் ஞாபகம் வந்தது

நாங்கள் தங்கியிருந்த MM Holiday Inn ஊர்க் கோடியில் . ஜன சந்தடியில்லாத இடம். மேகங்கள் அவ்வப்போது பக்கத்து பள்ளத்தாக்கிலிருந்து புறப்பட்டு போயின

காதலர்கள், புதுசாய் கல்யாணம் ஆனவர்களுக்கு ஏற்காடு ஏரி படகு சவாரி அவ்வளவு உசிதமில்லை. அந்தரங்கமாய் ஒரு இடத்துக்கு படகை அவசரமாய் மிதித்துக் கொண்டுபோய் ஜோடியை வாத்சாயனமாய் வாசனை பார்க்கும் சாத்தியக் கூறுகள் கிஞ்சித்தும் இல்லை. மறைவிடம் என்பதே கிடையாது

ஏற்காடு ஏரி சின்னதுதான். ஊட்டி, கொடைக்கானல் போல அவ்வளவு விஸ்தீரணமில்லை. காக்காய் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் தலையை அசைக்குமே அது மாதிரி தலையை திருப்பினால் போதும். ஏரி முழுக்க பார்வையில் பதிவாகிவிடும். கொஞ்சம் நீட்டி விட்ட டபிள்யூ மாதிரி சைசில் இருக்கிறது.

கரைநெடுக திண்பண்டங்கள் கடை அணிவகுப்பு . அதன் முன் ஜனக் கூட்டம். ஒரு அலுமினியப் பாத்திரக் கடை கூடப் பார்த்தேன். அதன் முன்பும் கூட்டம். ஏற்காடு வந்து அலுமினியப் பாத்திரம் வாங்க வேண்டும் என்று சங்கல்ப்பம் போலும்.

ஏற்காடு ஏரியை உள்ளூர் நிர்வாகத்துடன் சேர்ந்து மதராஸ் அலுமினியம் லிமிடெட் என்ற கம்பெனியும் பராமரிப்பு செய்கிறது. இவர்கள் ஏரிக்கு நடு நாயகமாக ஒரு பவுண்டன் வைத்திருக்கிறார்கள்

பகோடா பாயிண்ட் என்ற ஸ்தலம் ஏற்காட்டில் பிரபலம். இப்படி ஒரு பட்சண லட்சணமாய் காரணப் பெயர் எப்படி வந்தது.

பகோடா என்றால் அடுக்கடுக்கான கட்டட அமைப்பு. ஸ்தூபி மாதிரி. கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் புத்தவிகார கட்டடங்கள் பகோடா வகை. உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆர் ” லில்லி மலருக்கு கொண்டாட்டம் “என்று மஞ்சுளாவுடன் பாடிக்கொண்டிருக்கும் போது பாட்டின் கடைசியில் குண்டடிபட்டு ஒரு கட்டடத்தின் மாடியில் இருந்து விழுவார் . அந்த கட்டடமும் பகோடா வகை.. இதே மாதிரி பிரமிடு அமைப்பு கற்கள் நாலு இங்கு பழங்குடி மக்களால் செய்யப்பட்டு உள்ளதால் இந்தப் பெயர் இங்கே ராமர் கோவில் ஒன்றும் இருக்கிறது.

இங்கிருந்து பார்க்கையில் பள்ளத்தாக்கு பரவசம் கண்ணிலும் பயம் அட்ரினிலாய் வயிற்றிலும். கம்பிக் கட்டையை விட்டு கொஞ்சம் தள்ளியே நிற்கணும். பக்கம் போனால் அடிவயிறும் காலும் கூசும். ”எனக்கு அப்படியெல்லாம் இல்லை” என்று யாராவது சொன்னால் , அவர் முந்தின ராத்திரி கொஞ்சம் ஜாஸ்தி ஜல போஜனம் பண்ணியிருக்கணும். அப்படியும் இல்லை என்றால் அவரை சீக்கிரம் டாக்டரிடம் கூட்டிப் போகவும்

மலை வாசஸ்தலங்களின் இலக்கணமாய் சில கோவில்கள், அருவி, சீட்டர்கள் இங்கும்.

Sound Sleep by night; study and ease,
Together mixt, sweet recreation;
And innocence, which does most please
With meditation

Thus let me live unseen unknown

என்று அலெக்சாண்டர் போப் சொன்ன மாதிரி இரண்டு நாள் ஒய்வு

ஆர்கே நாராயணின் மிஸ்டர் சம்பத் கொஞ்சம் படித்தேன். மத்தபடி ஓய்வுதான்.
ஞாயிறு மதியம் புறப்பட்டோம். ராத்திரி 10 மணிக்கு வந்த என்னை கரண்ட் போயிருந்த மாம்பலம் வரவேற்றது.

ஏற்காட்டில் காட்டேஜ் சிப்பந்திகள் , “இப்ப கிளைமேட் சூப்பர் சார் !! வேர்வையே இருக்காது “ என அடிக்கடி சொன்னது ஞாபகம் வந்தது.

Friday, 25 April 2008

கிராமர் கிருஷ்ணமூர்த்தி-1


CALL ME PLEASE என்று கிராமர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து எஸ். எம். எஸ். நான் ரொம்ப மரியாதையாக I AM GOING TO COME THERE IN THE EVENING என்று பதில் அனுப்பினேன். உடனே கூப்பிட்டு ஒரு பிடி பிடித்தார்.

”அதென்ன I AM GOING TO COME ; தமிழில் வரப்போகிறேன் அப்படினு சொல்லலாம். காரணம் “றேன்” அப்படிங்க்றது ப்யூச்சர் டென்ஸ். அதையே இங்கிலீஷில் I AM GOING TO COME சொல்றது தப்பு. I WILL BE COMING இப்படி சொல்லு“

”அதில்ல சார் விஷயம் அர்த்தமாயிடுத்தில்ல”

”நீ சொன்னா கேட்க மாட்டியே. இப்ப நான் ஒன்னு சொல்றேன். WHAT IS YOUR NAME இதை தமிழில் எப்படி சொல்வே “

“ உங்கள் பெயர் என்ன”

“பார்க்கப்போனா WHAT IS YOUR NAME இதை தமிழில் அட்சரமா மொழிபெயர்த்தால் உங்கள் பெயர் என்னவாக இருக்கிறது – இப்படித்தானே வரணும்- இப்ப புரியுதா. ஒவ்வொரு பாஷைக்கும் ஒரு வழக்கு இருக்கு”

“சரி தான் சார்”

“ சந்தோஷம். ஆமாம் என்னைப் பத்தி எழுதறேன்னு சொல்லிட்டு என்னையே அச்சு அசலா வரைஞ்சு போட்டிருக்கே”

” அது என் அண்ணா கண்ணன் வரைஞ்சது சார்”

”என்னை உன்னோட செல் போன்லே போட்டோ பிடிச்சு அனுப்பினியா”

“இல்லை சார் உங்களைப் பத்தி சொன்னேன். கொஞ்சம் அடையாளங்களும் சொன்னேன். அதை வச்சிண்டு வரைஞ்சார்”

அப்படியே என்னை மாதிரியா இருக்கு. நான் ரொம்ப சந்தோஷம்னு சொன்னேன்னு உன் அண்ணாகிட்டே சொல்லு. அப்புறம் என்ன பார்க்க வரச்சே உன் கல்யாணப் பத்திரிக்கை கொண்டு வா”

“சார் எனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கு. இப்ப போய் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்றேளே”

“போனை உன் பொண்டாட்டிக்கிட்ட குடு.. அப்ளக் குழவியால தலையில நங்னு போடச் சொல்றேன். உன் கல்யாணப் பத்திரிக்கை கொண்டு வா. சொல்றேன்.”

போனை வைத்துவிட்டார்.

என் கல்யாணப் பத்திரிக்கையில் இவர் என்ன செய்யப் போகிறார். ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. அதனால இந்த கல்யாணமே செல்லாது என்று சொல்லிவிடுவாரோ. போய்த்தான் பார்க்கலாம்

Thursday, 24 April 2008

பூமி ரொம்பப் பெரிசு


பூமிக்கு வெளியே ஒரு இடம் தாருங்கள்.. பூமியை கொஞ்சம் நகர்த்திக் காட்டுகிறேன் என ஆர்க்கிமிடிஸ் சொன்னதை படித்திருப்பீர்கள். நெம்பு கோல் தத்துவத்தை கண்டுபிடித்த ஆர்வத்தில் கொஞ்சம் அதிகமாய்ச் சொல்லிவிட்டார். பூமிக்கு வெளியே இடம் தர முடியாது. அப்படி வந்தால் பார்துக்கலாம் என நினைத்திருப்பார்.

இதைக் கொஞம் விவரமாகப் பார்க்கலாம்

60 கிலோ எடை உள்ள ஒரு பாறாங்கல்லை ஒரு மீட்டர் அந்தண்டை தள்ளி வைக்க சுமார் ஒரு குதிரை சக்தி எனர்ஜி வேண்டும் வேண்டும். சுமார் ஒன்றரை மீட்டர் நீளமான நல்ல கடப்பாரை வேண்டும். இந்த ரீதியில் கணக்கு செய்தால் 6000000000000000000000 டன் எடையுள்ள பூமியை ஒரு செண்டிமீட்டர் நகர்த்தவே அவருக்கு 1000000000000000000 கிலோ மீட்டர் நீளமான கடப்பாரை வேண்டும். இப்படி கின்னஸ் சைஸ் கடப்பாரை செய்யத பின் பூமியில் இரும்பே இருக்காது. சரி இதெல்லாம் செய்து கொடுத்துவிடுவதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும். இந்த ராட்சச காரியம் செய்து முடிக்க அவர் எவ்வளவு நேரம் ம் .... ம் ...... ம்.... ம் ..........ம்... னு தம் கட்டணும் தெரியுமா 1000000000000000000000 விநாடிகள் அதாவது 30 மில்லியன் மில்லியன் வருஷங்கள். ஆர்க்கிமிடிஸ் ஒரு வேளை ஒளி வேகத்தில் அதாவது ஒரு செகண்டுக்கு 30000 கிலோமீட்டர் வேகத்தில் முக்கினால் கூட பத்து மில்லியன் வருஷம் முக்கினால்தான் பூமி சும்மா ஒரு செண்டி மீட்டர் நகர்ந்து கொடுக்கும்

இந்த மாதிரி பூமியை அநாயசமாக நகர்த்துவது இல்லை சும்மா மூக்கிலே வைத்து தூக்கிண்டு வரதெல்லாம் பெருமாளாலதான் முடியும்.

திருமங்கையாழ்வார் சொல்வதைக் கேளுங்கள்

சிலம்பினிடைச் சிறுபரல்போல்
பெரிய மேரு
திருக்குளம்பில் கணகணப்பத்
திருவா காரம்
குலுங்க, நில மடந்தைதனை
யிடந்து புல்கிக்
கோட்டிடைவைத் தருளியவெங்
கோமான் கண்டீர்,

Tuesday, 22 April 2008

கிராமர் கிருஷ்ணமூர்த்தி- அறிமுகம்



கிராமர் கிருஷ்ணமூர்த்தி- எனக்கு அமைந்த நண்பர்களில் ஓர் அதிசயம். நம்மை விட சுமார் 20 வயசு ஜாஸ்தியான ஒருவரை நண்பர் என சும்மா பேச்சுக்கு சொல்லலாம்.. ஆனால் கிராமர் கிருஷ்ணமூர்த்தி நிஜமான நண்பர். ” உடுக்கை இழந்தவன் கைபோல “ ரிலையபிள் ஆசாமி. என்ன தொட்டதுக்கெல்லாம் ”உன் இங்கிலீஷ் சரளமா இருக்கு ஆனா நிறைய கிராமர் மிஸ்டேக்” என்று எல்லாரையும் காலை வாரிவிடுவார். புரிந்திருக்குமே “கிராமர் “ என்ற விருதின் பின்புலம்.

நான் இந்த மாதிரி BLOG தொடங்கியுள்ளேன் என அவருக்கு ஒரு எஸ். எம். எஸ் அனுப்பி வம்பில் மாட்டினேன். மறு விநாடி அவர் போனில்,

“ஏம்பா அதென்ன BLOG டிக்‌ஷனிரியில் அப்படினு வார்த்தையே இல்லையே”

“சார் அது ஒருவெப்சைட் மாதிரி. படிச்சு பாருங்கோ ! எப்படி இருந்ததுனு சொல்லுங்கோ “

“ அப்படியா சாவகாசமா படிக்கிறேன்...ஆமா உன்னிடம் ஒரு வேலை சொன்னா நீ என்னப்பா இன்னொருத்தர்கிட்ட கொடுத்துட்டே.. அவர் எப்படி நல்லா பண்ணுவாரா ?”

”சார்.. எனக்கு ஆபிஸில் கொஞ்சம் வேலை டைட்டா இருக்கு அதனால என் சிநேகிதர்கிட்ட கொடுத்தேன். நல்லா பண்ணுவார். He is even better than me”

“ He is better than me னு சொல்லக் கூடாது He is better than I அப்படினு தான் சொல்லனும். நாம சாதாரணமா ME னு சொல்லுமபோது நான் அப்படினு என்னுடைய எனது அப்படி அர்த்தம் பண்ணிக்கிறோம். ஆனா நம்மை மத்தாவாளோட கம்பேர் பண்ணும் போது I தான் கரெக்ட்.. “

பதினாறு பாஷை பேசவும் எழுதவும் தெரிந்த அவரிடம் மேலும் பேசி வம்பில் மாட்ட விரும்பாமல் சிரித்தேன்.

“சிரிக்காதே. இப்பவே உனக்கு இதில் நல்ல ரெபரன்சோட மெயில் அனுப்பறேன் “
சொன்ன மாதிரியே 10 நிமிஷத்தில் மெயில் இருக்கும்

இவர் பல தடவை எல்லாரையும் டீஸ் செய்தாலும், சகல பாஷைகளிலும் விஷயம் கொட்ட கொட்ட பேசுவார். என்ன பேச்சை நிறுத்தத் தெரியாது. அது தான் பிரச்சனை. அவரைப் பற்றி அவர் பெர்மிஷனுடன் எழுதப்போகிறேன்.

Monday, 21 April 2008

சுஜாதாவிடம் கற்றதும் ... பெற்றதும்-1


நாகர்கோவிலில் ஒரு கல்யாணம். அதற்காக போயிருந்தேன். எனது கல்லூரித் தோழன் சிவகுமார் கன்னியாகுமரிதான். எனவே கல்யாணம் முடிந்த கையோடு அவன் வீட்டுக்குப் போனேன்.

மீன்பிடி விசைபடகில் கடலில் ஒரு ரவுண்டு அழைத்துக் கொண்டு போனான். விவேகாநந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை இரண்டையும் ரியர் வ்யூவில் பார்த்தேன். சில போட்டோக்களும் எடுத்தேன்.

“சிவா இப்படியே. தெற்கே போனால் அண்டார்டிகா வந்துடாது “

“ வழியிலேயே கோஸ்ட் கார்ட் அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போய்டுவான்.. வேணா ஒன்னு பண்ணலாம் கொஞ்ச தூரம் தெற்கே போயிட்டு அப்படியே கிழக்கே வந்து திரும்பிடலாம். சன் செட்டிங் கடல்லேர்ந்தே பாக்கலாம்”

நானும் உற்சாகமானேன். என்னுடைய கைப்பையில் வைத்திருந்த பொடி செய்த அவோமின் எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன்.

“என்னடா அது “

”வாந்தி வந்தால் .... அதுக்குதான்.. கடல்ல ரொம்ப நேரம் பயணம் பண்ணினால் பழக்கம் இல்லாதவர்களுக்கு வாந்தி வரும்"
--
எல்லன் பொடி போலிருந்த மருந்து பொட்டலத்தை எடுத்து வைத்தாள். “எமிலி ! கடற்பிரயாணத்தில் வாந்தி வந்தால் இதை சாப்பிடு “
- சுஜாதாவின் "ரத்தம் ஒரே நிறம்"

Friday, 18 April 2008

கமல்ஹாசன் கோபித்துக் கொள்ள மாட்டார்


காதலி காதலன் உரையாடல் ஒன்று பாருங்கள.

”அங்கே என்னப்பா டிரம் சத்தம் ?”
“அது ஒண்ணுமில்லமா சிப்பாய்ங்க மார்ச் பாஸ்ட்”
“என்னெவோ ஒரு வெளிச்சம் சரக் சரக்னு கண்ணுல அடிக்குது ?”
“அவங்க கத்தி வச்சிருக்காங்கல்ல அதுல வெளிச்சம் பட்டு எதிரொளிக்குது”
”இங்க மலைக்கு அடியில என்ன பண்றாங்க”
“அதும்மா. அவங்க இப்படித்தான் டெய்லி பிராக்டிஸ் பண்ணுவாங்க”
“அங்க பாருப்பா. சடனா கிளம்பிட்டாங்க.... எங்க போவாங்க”
“ஏதாவது செய்தி வந்திருக்கும்மா... நீ ஏன் முட்டிபோட்டு எம்பி பார்க்கிற.... நேரா உக்காரு”
“வழில டாக்டர் வீட்ட தாண்டி இந்த பக்கமாதான் வராங்கப்பா”
“ அங்க ஏதாவது வேலை இருக்கும்மா”
“அய்யோ இங்க தான் வராங்க .. நீ எங்க எழுந்து போறே... என்ன விட்டு போக மாட்டேன்னு சத்தியம் பண்ணிருக்கே.... ஞாபகம் இருக்கா?”
”ஆமாம் சத்தியம் பண்ணேன்.. இப்பவும்.. சொல்றேன்.. நான் உன்னை ரொம்ப விரும்பறேன்.. ஆனா இப்ப இவங்க கூட போய் பட்டாளத்தில் சேரத்தான் வேணும்... வரேன்”

நிலம் அதிர வேகமாய் அவர்களுடம் போனான்

சரியாக 25 வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்த ஆங்கில கவிதை.

1934 ல் W. H AUDEN எழுதிய பாலட் வகைக்கவிதை- (ஒரிஜினல் கடைசியில் கொடுத்துள்ளேன்)

எனக்கு இந்த கவிதையை சொல்லிக் கொடுத்த செரியன் ஜேக்கப் ஒரு அபார ஞானஸ்தன். ஆங்கில வகுப்பு ஒரு டிராமா மாதிரி நடத்துவார். மலையாள வாசனை இல்லாமல் ஆங்கிலம் பேசும் சில அபூர்வ மலையாளிகளில் ஒருவர்.

அவர்... அவர் சொல்லிக் கொடுத்த சில ஆங்கில அபூர்வங்கள்.. பக்கத்தில் வந்தால் அவரிடமிருத்து வரும் சார்மினார் சிகரெட் வாசம் எல்லாம் ஞாபகம் இருக்கு

இந்தியன் படத்தில் கமல்ஹாசன் சுகன்யாவுக்கு பொட்டுவைத்துவிட்டு தாவிப் போய் ஐ. என் . ஏ வில் சேருவதாய் வரும் காட்சி... இந்த கவிதையிலிருந்து உண்டான இன்ஸ்பிரேஷன் என்று சொன்னால் கமல்ஹாசன் கோபித்துக் கொள்ள மாட்டார்.

இப்போதெல்லாம் மெரினாவில், ரொம்ப நெருக்காமாய் ஒருவித “பச்சக்” ஸ்திதியில் ஆலிங்கன சொரூபமாய் காட்சி தரும் காதலன்கள் தேசபக்தி காரணமாய் சடக்கென்று வெட்டிவிட்டு காதலியை பிரிந்து போவார்கள் என்று தோன்றவில்லை.
----
O what is that sound which so thrills the ear
Down in the valley drumming drumming?
Only the scarlet soldiers, dear,
The soldiers coming

O what is that light I see flashing so clear
Over the distance brightly, brightly?
Only the sun on their weapons, dear,
As they step lightly.

O what are they doing with all that gear,
What are they doing this morning, this morning?
Only their usual manoeuvres, dear.
Or perhaps a warning.

O why have they left the road down there,
Why are they suddenly wheeling, wheeling?
Perhaps a change in their orders, dear.
Why are you kneeling?

O haven't they stopped for the doctor's care,
Haven't they reined their horses, their horses?
Why, they are none of them wounded, dear.
None of these forces.

O is it the parson they want, with white hair,
Is it the parson, is it, is it?
No, they are passing his gateway, dear,
Without a visit.

O it must be the farmer who lives so near.
It must be the farmer so cunning, so cunning?
They have passed the farmyard already, dear,
And now they are running.

O where are you going? Stay with me here!
Were the vows you swore deceiving, deceiving?
No, I promised to love you, dear,
But I must be leaving.

O it's broken the lock and splintered the door,
O it's the gate where they're turning, turning;
Their boots are heavy on the floor
And their eyes are burning.

Thursday, 17 April 2008

நான் மகேந்திர பல்லவனா ?


“மூணு நாள் லீவு சிதம்பரம், சீர்காழி கோவில் எல்லாம் பார்த்துட்டு வரலாமா?” நண்பர் எல் ஐ சி வெங்கட்ராமன் ஆரம்பித்து வைத்தது தான்.

”வைத்தீஸ்வரன் கோவில் போய் நாடி ஜோஸ்யம் பார்ர்கலாம்” என் சகா தியாகராஜன் ஆர்வத்தை ஜாஸ்தியாக்கினான்.

“அதென்னப்பா நாடி ஜோஸ்யம் அடிக்கடி போறியே கொஞ்சம் விவரமாத்தான் சொல்லேன்” என்று நான் கேட்டது தான் தாமதம்.

”அதாவது உலகத்தில் பிறந்த, பிறக்கப் போற எல்லாரப் பத்தியும் ஓலைச் சுவடியில் எழுதி வச்சிருக்கும்”

“ லாஜிக்கலாகவே இல்லையே” வெங்கட்ராமன் எதிர் வாதம் செய்தார்

“அப்பிடி இல்லை சார். அந்த கால ரிஷிகள். எல்லா ஜீவராசிகளின் க்டந்த கால் ,நிகழ்கால எதிர் கால வாழ்க்கையை ஞான திருஷ்டியால் கணிச்சு பாட்டா பாடி வச்சிருக்காங்க”

தத்தியான தியாகராஜன் கஷ்டமான எங்கள் டிபார்ட்மெண்ட் டெஸ்ட் எப்படி பாஸ் பண்ணுகிறான் என ஒரு மாதிரியாய் விளங்கியது.

“ஏம்பா தியாகு ஒரு பர்டிகுலர் பெர்சனைப் பத்தின பாட்டுனு எப்படி தெரியும்” விடாமல் கேட்டேன்.

“ அதுக்கெல்லாம் முறை இருக்கு. நீ போன ஜன்மங்களில் என்னவாய் இருந்தாய் என்பது கூட சொல்லாம்”

என்னுடைய ஆர்வம் கன்னாபின்னா என்று எகிறியது

தியாகராஜன் மேலும் காகபுசுண்டர் நாடி, கெளசிக நாடி, சப்தரிஷி நாடி என வெரையிட்டியாக தாக்கினான்.

நான் போன ஜன்மத்தில் யாராக இருந்திருப்பேன் என்று தெரிந்து கொள்வதில் அலாதி ப்ரீதி வந்த்துவிட்டது. காலையில் ரொம்ப சீக்கிரம் 3 மணி வாக்கில் கிளம்பி நேரே சிதம்பரம் போய் கோவில் பார்த்துவிட்டு திரும்ப தஞ்சாவூர் வரும் வழியில் வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோஸ்யம் பார்ப்பதாய் தீர்மானம் ஆனது.

போன ஜன்மம் பத்தின என் ஆசை தூக்கம் வராமல் செய்தது

யாராக இருந்திருப்பேன்.

சட்டென்று ஞாபகம் வந்தது காந்தி.. ஹூஹூம். ரொம்ப நல்லவராய் அடிப்பவனை திருப்பி அடிக்காத அசடாய்- எல்லா காரியமும் செய்து கொடுத்து விட்டு எந்த பதவியும் இல்லாமல் பொசுக்குனு குண்டடி பட்டு.....நிராகரித்தேன்

பாரதியார்.... கம்பீரம், கவிதை மிடுக்கு எல்லாம் ஒகேதான். ஆனால் போகாதே போகாதே என்றால் யானையிடம் போய்... இப்படி அழிச்சாட்டியம் பண்ண ஒருத்தராய் இருந்திருப்பேனா.. ரிஜக்டட்

சர். சிவி. ராமன், நேரு, கர்ணன், ... வேகமாய் பல Resume களை நிராகரித்தேன்.

மகேந்திர பல்லவன்... ம்ம்ம் இருக்கலாமோ.. ராஜா..... நடனம்.. நாட்டியம் கலைகளில் அபார பிரேமை.. ரொம்ப தந்திரசாலி.. ஆனாலும் காதலைப் பிரிச்சதாவும் புலிகேசிகிட்ட தோத்ததாகவும் பிளாக் மார்க்..குறிப்பா பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி என்று எந்த குறிப்பும் இல்லை. இப்படி குணம் நாடி குற்றமும் நாடி குணமே மிகுதி என்று முடிவு செய்தேன். போன ஜன்மத்தில் நான் ம்கேந்திர பல்லவனாய் இருந்த்திருக்க ஆசைப் பட்டேன். கால சாத்தியம் இல்லாத அபத்தமாய் இருந்தாலும் நான் போன ஜன்மத்தில் மகேந்திர பல்லவன் தான் என்று நாடி ஜோஸ்யத்தில் சொன்னால் _____ செய்கிறேன் என்று பிள்ளையாருக்கு வேண்டிக் கொள்ள வேறு செய்தேன்.

காலையில் பட்டு பீதாம்பரம் சகிதம் கிளம்பி நின்ற என்னை பார்த்து கிச்சா கேட்டான் ,”என்னடா இதெல்லாம்.. கல்யாணத்துக்க்கா போறோம். சீ போய் டிரெஸ் மாத்திட்டு வா” என்று விரட்டி பாண்ட் போட வைத்தான்

பஸ்சில் போகிற வழியெல்லாம் எனது பல்லவ அபிப்ராயம் ரொம்ப ஸ்டிராங்காகி விட்டது. வழியில் பார்த்த கடை போர்டில் தெரிந்த அம்பிகா, ராதா எல்லார் மாதிரியும் காற்றில் வரைந்து கொண்டே வந்தேன். போட்டிருந்த மோதிரம் ரிஷப இலட்சினை பொறித்த அடையாள முத்திரையாக மாறிவிட்டதா என்று வேறு அடிக்கடி பார்த்துக் கொண்டே வந்தேன்.

பக்கத்தில் உட்கார்த்திருந்த கணபதி சுப்பிரமணியன், “ என்ன சந்துரு உடம்பு சரியில்லையா” என்று கேட்டதற்கு

“இல்லையப்பா நான் நலமாகவே இருக்கிறேன்” என்று மறு மொழி பகன்று விட்டு ஒரு ராஜா பார்வை வேறு பார்த்தேன். அவன் அவசரமாக என்னை விட்டு நாலு வரிசை தள்ளி தாவிப் போய் உட்கார்ந்து கொண்டான்

நேரே சிதம்பரம் கோவில்

சபாநாயகரை தரிசனம் செய்துவிட்டு பிரகாரம் சுற்றி வந்தோம். அங்கே மண்டபத்தில் ஜடா மகுடதாரியாய் ஒரு சிவனடியார்.

“டேய் யாரோ பிச்சைக்காரண்டா “ நண்பர்களின் எச்சரிக்கையை உதாசீனித்துவிட்டு சிவனடியாரை சமீபித்தேன். அவர் என்னை நிஜமாகவே பூர்வஜன்ம வாத்சல்யமாய்ப் பார்த்துவிட்டு ரோஜா பூவும் திருநீறும் கொடுத்தார். எங்கே என் மோதிரத்தை கழற்றி அவரிடம் கொடுத்துவிடப் போகிறேனோ என்று அங்கிருந்து என்னை பெயர்த்து மீட்டு வந்தனர்


அகஸ்தியரோ காக புண்டரோ ஏதோ பெயர் போட்ட ஒரு நாடி நிலையத்தை நாடிப் போனோம் ”நாடி ஜோஸ்ய சாகரா பூச முத்து” என்று நேம் போர்டு போட்டிருந்தது.

தியாகு ரெகுலர் கஸ்டமர். அங்கே வேலை பார்பவர்கள் எல்லாம் அவனைப் பார்த்து சிநேகமாய் சிரித்தார்கள்

ஒரு மத்திய வயசு ஆசாமி பேப்பர் எடுத்து வந்து “நாடி பாக்கணுங்றவங்க இதுல இடது கட்டை விரல் ரேகை வைங்க” என்றார்.

“என்ன தியாகு இது”

“அதில்ல சந்துரு. ஒருத்தர் ரேகை மாதிரி இன்னொருத்தர் ரேகை இருக்காதில்ல – அதனால இந்த ரேகை வச்சிதான் உனக்கு உண்டான சுவடி எடுப்பாங்க” இதனால் எனது பிரமிப்பு ஜாஸ்தியானது. ரேகை வைத்தேன்

கொஞ்ச நேர காத்திருப்புக்குப் பின் அழைக்கப்பட்டோம். பூச முத்தானவர் எனக்கு ஆசை முத்துவாக தெரிந்தார்.

என் நண்பர்கள் ஒவ்வொருவரும் இந்த பிறவி சங்கதி மட்டும் பார்த்தனர். எல்லாமே பாட்டுதான். ஒல்லியாய் நாற்பது பக்க நோட்டில் எழுதிக் கொடுத்தனர். குண்டு குண்டாய் அழகான கையெழுத்து. பூசமுத்து என்ற நடுநாயகர் சொல்ல சொல்ல இன்னொருத்தர் எழுதினார்.

”வெளியில் காத்திருக்கும் கூட்டம் இனிமேல் வரப்போகும் கூட்டம் இத்தனைக்கும் எத்தனை 40 பக்க நோட்டு வேணும். நல்ல பிசினஸ்” என் காதில் கிச்சா முணு முணுக்கும் போது என் முறை வந்தது


“சாருக்கு என்ன பார்க்கணும் .. பொதுவாப் பார்த்தா போதுமா ? இல்லை காண்டம் காண்டமா பார்க்கணுமா”

“எனக்கு போன ஜன்மத்தில் என்னவா இருந்தேன்னு தெரியனும்.. முடியுமா”

”சாதாரணமாக சொல்றதில்லை .. ஆனா அபூர்வமா கேக்றிங்க செலவாகும் பரவாயில்லையா ?”

போன ஜன்மத்தில் நான் பல்லவ சக்ரவர்த்தி என்று ஊர்ஜிதம் செய்ய இது கூடவா செலவு செய்ய முடியாது,, , “பரவாயில்லை பாருங்க.. ம்ம்ம் எவ்வளவு ஆகும்”

”____ ரூபாய் ஆகுங்க “

நண்பர்கள் “வேண்டாண்டா.. திரும்ப்பி போறது தவிர கொஞ்சம் தான் கூட காசு இருக்கு”

தஞ்சாவூருக்கு நடந்தே திரும்பி சென்றுவிடலாம் என்று அசட்டு நம்பிக்கையில் , “ஓகே” சொல்லிவிட்டேன்.

இந்த பிறவியில் நான் யார் யாருடைய பிள்ளை அக்கா, அண்ணன் பேரு எல்லாம் நாடியில் பார்த்து ஊர்ஜிதம் செய்தனர். என்னுடைய இடது கை பெருவிரல் ரேகை மட்டும் வைத்துக் கொண்டு இத்தனை சொன்னதே எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை

“பார்த்தியா அகஸ்தியர் நாடி பெர்பெக்டா இருக்கும்” தியாகு ஒருவேளை அகஸ்தியரின் பேரனாகக் கூட இருக்கலாம்.

என்னுடைய பூர்வ ஜென்ம ரெக்கார்டுகளை தேடி ஒரு சிஷய பட்டாளம் உள்ளே போயிருந்தது. நேரம் ஆகிக் கொண்டிருந்தது. பின்னே எத்தனை நூற்றாண்டு பின்னே போக வேண்டும். ஆறம் நூற்றாண்டா .. இல்லை எட்டாம் நூற்றாண்டா..

மனசுக்குள் பரிவாதினி யாழ், ருத்திராச்சாரியார் என்று மிக்சர் ஓடியது.

பரஞ்சோதி ஊர் திருவெண்காடு கூட இங்கே பக்கத்தில்தான் … ஞான சம்பந்தர் பற்றி கேட்க வேண்டும் அவரும் அப்பர் பெருமானும் இப்போது எங்கே யாராய் பிறந்திருப்பார்கள்

தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச்
சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்
பூண்டு பொறியரவங் காதிற் பெய்து
பொற்சடைக ளவைதாழப் புரிவெண் ணூலர்
நீண்டு கிடந்திலங்கு திங்கள் சூடி
நெடுந்தெருவே வந்தெனது நெஞ்சங் கொண்டார்
வேண்டு நடைநடக்கும் வெள்ளே றேறி
வெண்காடு மேவிய விகிர்த னாரே.

அப்பர் திருவெண்காட்டில் பாடிய தேவாரம் மனசில் ஒடியது

இதோ வந்து விட்டார்கள்..

கையில் ஏராளமாய் ஒலைச்சுவடிகள். இருக்காத பின்னே எத்தனை சாதனைகள்

பூச முத்து ஆரம்பித்தார்

ஒரு பாட்டை பாடிவிட்டு அதாவது உங்க போன ஜன்ம தகப்பனார் பேரில் சிங்கம் இருக்கு பெருமாளும் இருக்கு

மனசுக்குள் சபாஷ் போட்டேன். மகேந்திர பல்லவனின் தந்தை சிம்ம விஷ்ணு.

பூச முத்து தொடர்ந்தார்... அவர் சொல்ல சொல்ல என் சுவாரசியம் குறையத் தொடங்கியது.. முடிக்கும் போது அவர் மோச முத்துவாக தெரிந்தார். டக்கென்று முடித்துவிட்டார்.

அப்படியானால் போன ஜென்மத்தில் நான் ._________ வா இருந்திருக்கேனா ?

கேட்டபடி அந்த பெரிய தொகையை கொடுத்துவிட்டு பஸ்ஸுக்கு காசில்லாமல் சாயங்காலம் கள்ள ரயில் ஏறி தஞ்சாவூர் வந்தோம்.

பல வருஷம் கழித்து கணபதி சுப்பிரமணியத்துடன் குடும்ப சகிதமாக இன்னிக்கு மஹாபலிபுரம் வந்தேன். ரிசார்ட்டில் ரூம் போட்டு விட்டு ஜன்னலில் தெரியும் கடல் கோவிலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

Wednesday, 16 April 2008

MAN OF THE MATCH


எனது நண்பன் வில்லியம்ஸ் அசகாய சூரன். இப்போது நாங்களிருவரும் தினசரி எஸ். எம். எஸ் / சாட் / மெயில் எப்போதாவ்து போன் என்ற தூரத்த்தில் இருந்தாலும் சின்ன வயசில் ஒன்றாகவே இருந்தோம். என்னைவிட நாலு வயசு பெரியவன்.

கையெழுத்துப் பத்திரிக்கை; பின்னர் அதைப் பிரிண்டில் கொண்டு வந்தது என்ற எனது கல்லூரி வயசு சாதனைகளின் பின்னால் மறைவாக நிற்கும் ஆறடி ஆசாமி. இந்தக் கதை அவனைப் பற்றி அல்ல

“டேய் ஒரு கிரிக்கெட் டோர்ணமெண்ட் நடத்தி சீப் கெஸ்டா கவாஸ்கரை வரவழைத்தால் எப்படி இருக்கும்” நான் எப்போதுமே இப்படித்தான் வில்லியம்ஸை உசுப்பேத்துவேன். அந்த 17-18 வயசில் எதை செய்யணும் எது வேண்டாம் என்ற ஆராய்சியெல்லாம் கிடையாது. நண்பன் சீரியசாக எடுத்துக் கொண்டு களம் இறங்கிவிட்டான்.

கவாஸ்கர் சீப் கெஸ்ட் என்பது தவிர ஒரு நிஜ கிரிக்கெட் பந்தயத்தின் எல்லா லட்சணங்களையும் தனி ஆளாய் கொண்டு வந்தான்.

சைட் ஸ்கிரின் அளவுக்கு இருந்த ஸ்கோர் போர்ட் எனது வியப்புகளில் சாஸ்வதமாய் இருக்கிறது. டோர்ணமெண்டின் விதிமுறைகள் எல்லாம் அவனே எழுதினான்.

எனக்கு JURY – MAN OF THE MATCH AWARD என்ற கவர்ச்சியான நீதிபதி பதவி தந்தான்

புதுக்கோட்டை ராஜாஸ் காலேஜ் மைதானம். என் வாழ்நாள் முழுவதற்குமான லார்ட்ஸ் மைதானம்.

75 யார்ட் பௌண்டிரி, சின்னதாய் படபடக்கும் பவுண்டிரி கொடிகள் சின்ன மேட்சுகளுக்கு கூட யுனிபார்மில் வரும் அம்பயர்கள், அந்த நாட்களிலேயே ராட்ச்ஸ ஸைசில் சைட் ஸ்கிரின், பிரிடடிஷ் பாரம்பரிய பெவிலியன், அதன் முகப்பில் ஒரு புராதான் கடிகாரம் வசீகரமான புல் தரைக்கு நடுநாயகமாய் கிரிக்கெட் பிட்ச்...

எத்தனையோ டெஸ்ட், ஒரு நாள் பந்த்யங்களை வெவ்வேறு கிரவுண்டுகளில் பார்த்திருந்தாலும் எனது நினவுகளில் விஸ்வரூபமாய் நிற்பது அந்த மைதானமே.

டோர்ணமென்டின் எல்லா மாட்சுகளும் சகஜாமாய் போய்விட்டன. பைனல் மாட்ச். எனது வழுவாத நீதி பரிபாலனத்திற்கு ஒரு சோதனையாய் வந்தது

MAN OF THE MATCH AWARD க்கான விதிகளின் ஷரத்துகளில் இவ்வளவு சூட்சுமம் இருப்பது முன்பே தெரிந்திருந்தால் அந்த நீதிபதி பதவியை ஏற்றே இருக்கமாட்டேன். இத்தனை ரன் அடித்தால் இத்தனை பாயிண்ட், இத்தனை விக்கெட்டுக்கு இத்தனை பாயிண்ட், காட்ச் பிடித்தால் எவ்வளவு, ரன் அவுட் ஆக்கினால் எவ்வளவு என்ற உபத்திரமில்லாத ஷரத்துக்கள் தானிருந்தது. இரண்டு பேர் சமமாய் பாய்ண்ட் எடுத்தால் அந்த கோப்பையை யாருக்கு கொடுக்க வேண்டும் என்ற சிக்கலான விஷயத்துக்கு அதில் தீர்வு இல்லை.

சமமாய் பாயிண்ட் எடுத்துள்ள திருப்பதியும், சிவராமனும் எனக்கு முன்பு.

திருப்பதி எனது ஸ்கூல் மேட். சிவராமன் எனது அப்போதைய புரொபசரின் மகன். தர்ம் சங்கடம்

மாட்ச் விதிகள் எனக்கு கை கொடுக்காது என தெரிந்தபின் சொந்த லாப நஷ்டக் கணக்குகளை ஆராய்ந்தேன்.

சிவராமன் – இந்த MAN OF THE MATCH AWARD கிடைக்கவில்லை என்றால் அவன் அப்பாவிடம் போய் சொல்லுவானா? மாட்டான். அப்படியே சொன்னாலும் என் அப்பாவும் புரொபசர் தானே.. சமாளித்து விடலாம்

திருப்பதி- எனது ஸ்கூல் காலத்தோழன்.. இன்று காலையில் கூட அவன் மாமா வாங்கி வந்த ராத்மென்ஸ் சிகரெட் பிடிக்கக் கொடுத்தான். எல்லாவற்றையும்விட முக்கியம் அவன் பெயர்... எனது குல தெய்வம்..

நான் தீர்மானித்துவிட்டேன்


ஒரு CAUGHT AND BOWLED விக்கெட்டுக்கு தனக்கு இரண்டு பாயிண்ட் தர வேண்டும் என்ற சிவராமனின் நியாயமான வாதத்தை புறக்கணித்தேன். ஜூரியின் முடிவு விவாதத்திற்கு அப்பாற்பட்டது என்று ஒரு ஷரத்து விதிகளின் கடைசியில் இருந்து எனக்கு ரொம்ப சௌகர்யமாய்ப் போய்விட்ட்து. இப்படியல்லவோ ஒரு வீட்டோ பவர் இருக்க வேண்டும்

இருபது வருஷம் கழித்து ஏன் இதை சொல்லுகிறேன் என்றால் ..நேற்று திருப்பதி சிவராமன் ரெண்டு பேரையும் பார்த்தேன்.

ஒரு விருந்துக்காக ஹோட்டலுக்கு போயிருந்தேன். அங்கே ராட்சஸ திரையில் ஷார்ஜாவில் நடந்து கொண்டிருந்த கிரிக்கெட் மாட்ச். அதில் விருது வழங்கும் விழா.

MAN OF THE MATCH AWARD ஐ ஒரு வெள்ளைக்கார பிளேயருக்கு வழங்கியது ஒரு பெரிய கம்பெனி அதிகாரியாய் சிவராமன். இவன் எனது நண்பன் என்று ஆபிஸ்காரர்களிடம் பெருமையடித்துக் கொண்டேன்.

வெளியில் வரும் போது கார் பார்க்கிங்கில் திருப்பதியைப் பார்த்தேன். அட்டெண்டராய். விசில் ஊதிக் கொண்டு போகும் வரும் கார்களின் போக்குவரத்தை கவனித்துக் கொண்டு..

”திருப்பதி ”...

உடனே திரும்பினான்.. என்னைப் பார்த்ததும் ரொம்ப பரவசமானான். இத்தனை வருஷ இடைவெளியை கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு ,”நான் புறப்படறேன்”. என்றேன். பாக்கெட்டுக்குள் கைவிட்டு எடுத்து நீட்டினான். ஒரு பாக்கெட் ராத்மென்ஸ் சிகரெட்.

Sunday, 13 April 2008

சுஜாதாவுக்கு மற்றொரு இமெயில் CC TO ஆழ்வார்கள்




சுஜாதா சார்

வணக்கம்.

தங்களின் ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் பக்கம் 83 பார்க்க

“எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கரசு என்னுடை வாணாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி
அவருயிர் செகுத்தஎம் அண்ணல்
வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை
மாமணிக்கோயில் வணங்கி
நம்பிகாய் உள்ள நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்”

நாலாயிர திவ்யபிரபந்தத்தில் 953 வது பாசுரம். திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்தது


இதில் குறிப்பிடும் மாமணிக் கோயில் தஞ்சையில் எங்கிருக்கிறது என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

என்ன சார் இப்படி சொல்லிவிட்டீர்கள்

இந்த திவ்ய தேசம் தஞ்சாவூருக்குப் பக்கத்தில் சுமார் 2 கி.மீ தூரத்தில் வெண்ணாற்ற்ங்கரையில் உள்ளது

இதற்குப் பக்கத்தில் சுமார் ஒரு மைல் தூரத்தில் தஞ்சை மணிகுன்ற பெருமாள், தஞ்சை யாழி பெருமாள் என்று இரண்டு வைணவத்தலங்கள் உள்ளன.

தஞ்சை மாமணிக் கோவில், தஞ்சை மணிகுன்ற பெருமாள், தஞ்சை யாழி பெருமாள் இவை மூன்றும் சேர்ந்து ஒரு திவ்ய தேசமாக கருதப்படுகிறது

தஞ்சை மாமணிக் கோவில்

மூலவர்:கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலமாய் நீலமேகப் பெருமாள்
தாயார்: செங்கமலவல்லித் தாயார்
தீர்த்தம் :அம்ருத தீர்த்தம்

தஞ்சை மணிகுன்ற பெருமாள் கோவில்

மூலவர்: மணிகுன்ற பெருமாள்- கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
தாயார்: அம்புஜவல்லித் தாயார்
தீர்த்தம் : ஸ்ரீராம் தீர்த்தம்

தஞ்சை யாழி பெருமாள் கோவில்

மூலவர்: நரசிம்மர் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
தாயார்: தஞ்சை நாயகி
தீர்த்தம் சூர்ய புஷ்கரணி, ஸ்ரீராம் தீர்த்தம்

நீங்கள் குறிப்பிட்ட பாசுரம் 953 தவிர திருமங்கை ஆழ்வார் இந்த திவ்விய தேசத்தை கீழ்க்கண்ட இரண்டு பாசுரங்களிலும் குறிப்பிட்டுள்ளார்

உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய்
உலகுய்ய நின்றானை,அன்றுபேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து
விளையாட வல்லானை வரைமீகானில்,
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில்
தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும்,
கடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடன்fமல்லைத் தலசயனத்தே (பிரபந்தம் -1090)

என்செய் கேனடி னேனுரை யீர் இதற்
கென்று மென்மனத் தேயிருக் கும்புகழ்,
தஞ்சை யாளியைப் பொன்பெய ரோன்றன்
நெஞ்ச மன்றிடந் தவனைத்தழ லேபுரை
மிஞ்செய் வாளரக் கன்நகர் பாழ்படச்
சூழ்க டல்சிறை வைத்து இமை யோர்தொழும்,
பொன்செய் மால்வரை யைமணிக் குன்றினை
அன்றி யென்மனம் போற்றியென் னாதே (பிரபந்தம் -1576)


இது மட்டுமில்லை சார்

உங்கள் பேவரைட் நம்மாழ்வார்

மாதர்மா மண்மடந் தைபொருட் டேனமாய்,
ஆதியங் காலத் தகலிடம் கீண்டவர்,
பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே
ஓதும்மால், எய்தினள் என்தன் மடந்தையே (பிரபந்தம்- 3139)

என்று இந்த ஸ்தலத்தில் தான் பாடியுள்ளார்

பூதத்தாழ்வாரும்

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்,
தமருள்ளும் தண்பொருப்பு வேலை, - தமருள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே,
ஏவல்ல எந்தைக் கிடம் (பிரபந்தம்- 2257)

என்று பாடியுள்ளார்

கோவில் படங்கள் இத்துடன் போட்டுள்ளேன்.

Saturday, 12 April 2008

சுஜாதாவுக்கு இமெயில் CC TO ஆழ்வார்கள்


சுஜாதா சார்,

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் படித்தேன் (விசா பதிப்பகம்). அது தொடராக வரும்போதே ஒரு தடவை படித்திருக்கிறேன்

“பிரபந்தத்தில் நேரடியாக கீதையைப் பற்றிய செய்தி எங்குமே இல்லை என்று ஒரு கருத்து உண்டு. பார்த்தனுக்கு தேர் ஊர்ந்தது இருக்கிறது. ஆனால் அவனுக்கு கீதாபதேசம் செய்தது நேரடியாக நாலாயிரம் பாடல்களில் எதிலும் இல்லை. வார்த்தை என்று ஓர் இடத்தில் மட்டும் திருமங்கையாழ்வார் பாசுரத்தில் வருகிறது என்று காஞ்சிபுரத்தில் ஒரு சுவாமி சொன்னார். அதை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்”

என்ன சார் இப்படி சொல்லிவிட்டீர்கள்??

திருவரங்கமுதனார் அருளிச்செய்த ராமனுஜ நூற்றந்தாதியும் சேர்த்து தானே 4000.. அப்படியானால் அதில் 68 ம் பாடல் பாருங்கள்

ஆரெனெக்கின்று நிகர் சொல்லில்
மாயனன் றைவர் தெய்வத்
தேரினில் செப்பிய கீதையின் செம்மை.....


திருமழிசைஆழ்வார் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி பாடல் 71 ஐ ப் பாருங்கள்

"மாயன் அன்றோதிய வாக்கதனை"... என்று வருகிறதே. இது கீதையை நேரடியாகத்தான் குறிக்கிறது

நீங்கள் பிரபந்தத்தில் தேடிய அந்த ”வார்த்தை” திருமங்கையாழ்வார் பாசுரத்தில் இல்லை.

அது உங்களின் பேவரைட் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருக்கிறது

வார்த்தையறிபவர் மாயவற்காளன்றி யாவரோ (திருவாய்மொழி 7-5-10)

நம்மாழ்வார் இன்னுமொரு பாசுரத்தில் திருவாய்மொழி (4-8-6)

“அறிவினால் குறைவில்லா
அகல் ஞானத்தவரறிய
நெறியெல்லாம் எடுத்துரைத்த
நிறைஞானத்தொருமூர்த்தி ....”

இப்படி சொல்வது கீதையைப் பற்றித்தான்

திருவாய்மொழி நான்காம் பத்து எட்டாம் திருவாய் மொழியில் இது 6 வது பாசுரம்.

சார் உடனே அங்கே ஆழ்வார்களுடன் அரட்டைக்கு உட்கார வேண்டாம். இங்கே வாரம் ஒரு பாசுரம், கற்றதும் பெற்றதும், ஷங்கரின் ரோபோ என்று பல சங்கதிகள் போட்டது போட்டபடி இருக்கிறது.

நேரே பெருமாளிடம் போகவும் “இதோ பார்.. நிமோனியா.. அது இது என எதுவும் இல்லாமல் ஒரு 300 வருஷம் லைஃப் எக்ஸ்டென்ஷன் வேணும்.. நிறைய படிக்கணும் எழுதனும் “ அப்பிடினு கரறாரா சொல்லிட்டு அவரோட புஷ்பக விமானத்தை எடுத்துக் கொண்டு வந்து சேரவும்

Friday, 11 April 2008

முதல் பெருமாள்


என் பெரியப்பாவிற்கு என் மீது மகா கோபம்.

“இதோ பாரு சந்துரு.. ஆத்துல நடக்கிற விஷேசத்துக்கு முதல்ல குல தெய்வத்துக்கு கைல எழுதி பத்திரிக்கை அனுப்பி, அங்கேர்ந்து ஆசிர்வாதம் வந்த பின்னாடி தான் பிரிண்ட் அடிக்கிறது வழக்கம்.. நீ சொல்ற மாதிரியெல்லாம் செய்ய முடியாது”

விஷயம் இது தான்..

என் மகளுக்கு ஆயுஷ ஹோமம்.. பெருமாளுக்கு கைல எழுதற பத்திரிக்கை ஒரு காப்பி எக்ஸ்ட்ரா எழுதி பெஞ்சமினுக்கு அனுப்பனும்னு நான் சொல்றேன். காரணம் என் அம்மா ஒரு தடவை ரொம்ப சீரியஸா இருந்தப்ப ரத்தம் கொடுத்து காப்பாத்தினது பெஞ்சமின். என் அப்பாவின் ஸ்டுடண்ட். அவருக்கு முதல் மரியாதை பண்ண நெனச்சேன். அவர் இப்போ திண்டுக்கல்ல இருக்கார்

“பெரியவா என்ன சொல்றாளோ அப்டியே பண்ணேண்டா” .. அம்மாவும் இப்படி சொன்னதால அப்பாவைக் கேட்டேன்.

“நீ சொல்றது நன்னா தான் இருக்கு. ஆனா அண்ணா ஆத்துல பெரியவர் அவர் பேர் போட்டு பத்திரிக்கை அடிக்கணும்.. அவர்ட்ட எதிர் வாதம் பண்ண வேண்டாம்”
மீண்டும் பெரியப்பா, “இதோ பார் இப்ப சாஸ்திரிகள் ஆத்துக்கு போய் பத்திரிகை எழுதி வாங்கிண்டு வந்து அதை திருப்பதி பெருமாளுக்கு கூரியர்ல அனுப்ப போறேன்”

“ஏம் பெரியப்பா.. பாலாஜி கையெழுத்து போட்டு வாங்குவாரா “

“பல்லுல போடறேன் பாரு... நாஸ்திகம் பேசிண்டு.. கலெக்டருக்கு லெட்டர் ரிஜிஸ்டர் தபால் அனுப்பினால் கலெக்டரேவா கையெழுத்து போட்டு வாங்குவார்.. யாரவது ஆபிஸ் ஆள் வாங்றதில்லையா.. அது மாதிரி..”

“வைகுண்டதுல துவார பாலகர் வாங்குவாளா”..

”உனக்கெல்லாம் சொன்னா புரியாது. தேவஸ்தானத்திலிருந்து ஆசிர்வாதம் பண்ணி பிரசாதம் அனுப்புவா. அப்புறம் பிரிண்ட் அடித்து ஆத்து பெரியவா எல்லாருக்கும் கொடுத்த பின்னால சிநேகிதாளுக்கெல்லாம் அனுப்பலாம்” பெரியப்பா பத்திரிகை எழுதி வாங்கி வர புறப்பட்டார்.

பத்திரிக்கையுடன் வந்து அப்பாவிடம், “விச்சு.. இன்னிக்கே நாள் நன்னா இருக்காம். கூரியர் பண்னிடலாம்” என்று சொல்லி எழுதி வந்த அந்த முதல் பத்திரிக்கையை காண்பித்தார்.

நான் கை நீட்டினேன். தட்டிவிட்டு சொன்னார், “ உனக்கு இதுல வேலை இல்லை”

”சும்மா பார்த்துட்டு தரேன் பெரியப்பா”

“உன்னை நம்ப முடியாது.. இந்தா இப்படியே பாரு.. “ தன் கையிலேயே வைத்து காண்பித்துவிட்டு ,” நானே போய் கூரியர் பண்றேன்”..

என் அம்மாவுக்கு இக்கட்டான நேரத்தில் ரத்தம் கொடுத்து உயிர் காப்பாற்றி.. இன்று அவள் இருப்பதற்கு காரணமான ஒரு ஜீவனுடன், கையால் எழுதிய ஒரு பேப்பர் பத்திரிகைக்கு போட்டி போடுவாரா பெருமாள்.

ஹாலில் மாட்டியுள்ள அந்த சிரித்த வேங்கடவனைப் பார்தேன். அதே சிரிப்பு
ஒரு முடிவுக்கு வந்தேன். பெரியப்பா நீட்டி காட்டிய பத்திரிக்கை வரிகளை ஞாபகப்படுதினேன். ரூமுக்குள் போய் அதே மாதிரி ஒண்ணு ஆனா பெருமாளுக்கு எழுதற மாதிரியில்லாம பெஞ்சமினுக்கு எழுதினேன். யாருக்கும் தெரியாம கூரியர் பண்ணிட்டு ஆத்துக்கு வந்துட்டேன்.

மனசு பரபரப்பா இருந்தது.. திருப்பதி பக்கமா.. திண்டுக்கல் பக்கமா.. ஐயோ.. திருப்பதி தான் பக்கம். இன்னி சாய்ங்காலமே கூரியர் போய்டும்.. எதுக்கும் பார்க்கலாம்.. பெஞ்சமின் இதைப் பார்துவிட்டு அப்பாவுக்கு போன் செய்து விசாரிப்பார். அப்போது பெரும் பூகம்பம் நிச்சயம். இனி அது பத்தி யோசிச்சு பலனில்லை என்ன நடந்தாலும் நடக்கட்டும். ஒரு கலவரமாய்த்தான் அன்று தூங்கினேன்.

மறு நாள் காலை 11 மணி இருக்கும். பெரியப்பாவை கேட்டபடி ஒரு பையன் வந்தான்..

“சார் கூரியர்லேருந்து வரேன்.. நேத்து திருப்பதிக்கு ஒரு கூரியர் அனுப்பிச்சீங்கல்ல சார். ராத்திரி அதை பேக் பண்ண மூட்டை தண்ணில நனஞ்சிடுச்சி சார். ஃப்ரம் அட்ரஸ் அப்படியே இருக்கு. டூ அட்ரஸ் அழிஞ்சிடிச்சி.. ரொம்ப சாரி சார்.. இப்ப புது கவர் போட்டு அட்ரஸ் எழுதி தந்தா இன்னிக்கி சாய்ங்காலாம் டெலிவரி பண்ணிடலாம்னு ஒனர் சொன்னார் சார்.. தப்பாயிடுச்சி மன்னிச்சிருங்க சார்“

பையன் நீட்டிய கவரில், பெரியப்பா எழுதியிருந்த உலகப் பிரசித்த பெற்ற அந்த வேங்கட மலை விலாசம்.. நீல நீல திட்டுகளாய்.. கரைந்து..
நான் அந்த பையனை பேர் கேட்டேன்.

“கோவிந்தன் சார்”.

ஹாலில் மாட்டியுள்ள அந்த சிரித்த வேங்கடவனைப் பார்தேன். இப்போதும் அதே சிரிப்பு.. இல்லை அவன் கொஞ்சம் ஜாஸ்தி சிரித்த மாதிரி இருந்தது
==
அவரவர் தாம்தாம் அறிந்தவாரேத்தி
இவர் இவர் என் பெருமான் என்று - சுவர்மிசை
சார்த்தியும் வைத்தும தொழுவார் உலகளந்த
மூர்த்தி உருவே முதல்''
- பொய்கையாழ்வார்

குட்டிக் கதை-3 பிறவிக் குணம்


காட்டு வழியே தனியே நடந்து போவது அவனுக்கு ரொம்ப பயமாய்த்தான் இருந்த்து.

பயங்கர சப்தங்கள். திக் திக் என்றிருந்த்து. மெதுவாக நடந்தான்

போச்சு !!!

தூரத்தில் ஒரு சிங்கம் நடந்து வருவது தெரிந்த்து. இவனுக்கு சர்வ அவயங்களும் வேர்த்த்து. அவசரமாக குழப்பமாக எல்லா சொந்தக்கார முகமும் நினைவில் வந்து போனது. தொலைந்தோம். தப்பிக்க வழியே இல்லை !!. எல்லா கடவுளும் ஞாபகத்துக்கு வந்தனர்.

”சரி.. பகவான் தான் காப்பாத்தனும்... கண்ணை மூடிக் கொண்டான். பயத்தில் ஒரு ஸ்லோகமும் சரியாக வரவில்லை. .. நாம ஜெபம் செய்வோம்..
இன்னுமா சிங்கம் பக்கத்தில் வரவில்லை.. நாம ஜெபம். பலித்துவிட்ட்தா !!!”

பயத்துடன் ஒரு கண்ணை திறந்து பார்த்தான்.. ஒரே ஆச்சர்யம். சிங்கம் இவன் எதிரில் கண்மூடி எதோ முணு முணுத்துக் கொண்டிருந்த்து.

”ஆஹா... தப்பித்தோம் போலிருக்கு.. இன்னும் விடாம சொல்லுவோம்.. “ நாம ஜெபம் அழுத்தமாக தொடர்ந்தது. கொஞ்சம் பயம் குறைந்த மாதிரி இருந்த்து.

கண்ணைத் திறந்தான். சிங்கமும் கண்ணைத் திறந்த்து.

தப்பித்து விட்டோம்....

சிங்கத்திடம் சிநேகமாக கை நீட்டி, “ வந்தனம் சகோதரா.. மிக்க நன்றி “ என்றான்.


சிங்கம், “ வந்தனம்.. உணவு அருந்தும் முன்பு இறை வணக்கம் செய்வது என் வழக்கம்’ என்றது.

CBSE ம் பல் பிடுங்குதலும்


நம்மூர் கவிஞர்கள் யாராவது பல்பிடுங்குவதைப் பற்றி கவிதை எழுதியிருக்கிறார்களா தெரியவில்லை. அமெரிக்க கவிஞர் ஆக்டன் நாஷ் எங்கேயோ வசமாய் ஒரு டெண்டிஸ்டிடம் மாட்டியிருக்கிறார் போலும்

பல் பிடுங்க வைக்க நீர் யானை மாதிரி ”ஆ” என்று வாயைத் திறந்திருப்பதிலிருந்து நையாண்டியை ஆரம்பிக்கிறார் பாருங்கள்

நெஞ்சில் தாடை இடிக்க ( கொஞ்சம் பெரிய ”ஆ”) வாயை திறந்து காட்டிக் கொண்டு ரொம்ப நேரம் சமாதானமாய் இருப்பது கஷ்டம் தான்.

ரோடு ரிப்பேர் கணக்காக சில சமயம் வாய்க்குள் பள்ளம் மேடுகள் திருத்தி அமைக்க வேண்டியிருக்கும்....

பல் பிடுங்கியபின் எல்லோரும் நினைப்பது ஒரே மாதிரி தான் போலும். சாமி இனிமே இங்க வரப்படாது

CBSE பத்தாம் கிளாசில் இந்த கவிதையை வைத்திருக்கிறார்கள். ஆனால் குடலாப்பிரேஷன் கணக்காய் ,

ஆக்டன் நாஷ் காட்ட விழையும் காட்சி என்ன ?
பல் பிடுங்கும் போது ஏன் அமைதியாக இருக்க முடியாது
கவிதையில் கவிஞர் ONE என்று எதைக் குறிப்பிடுகிறார்

கேள்விகளை கேட்டு பிள்ளைகள் கவிதை சைடு தலைவைத்துக் கூட படுக்காதமாதிரி செய்திருக்கிறார்கள்... கொடுமை டா சாமி.

இந்த மாதிரி படம் வரைந்து பாகம் குறிக்கும் வகையில் கவிதையை புரிந்து கொள்ள முடியும் என்று நினைத்த அந்த மேதாவிக் குழுவில் எல்லோருக்கும் எல்லா வகை பல் வலியும் வந்து இதே மாதிரி ஒரு டாக்டரிடம் போக தகுந்த ஏற்பாடு செய்ய எல்லாம் வல்ல மதுரை சொக்கநாதனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

அந்த கவிதை வரிகளை அப்படியே தந்துள்ளேன்....

One thing I like less than most things is sitting in a dentist chair with my mouth wide open.

And that I will never have to do it again is a hope that I am against hope hopen.

Because some tortures are physical and some are mental,

But the one that is both is dental.

It is hard to be self possessed

With your jaw digging into your chest,

So hard to retain calm

When your fingernails are making serious alterations in your life line or love line or some other important line in your palm,

So hard to give your usual cheerful effect of benignity

When you know your position is one of the two or three in life most lacking in dignity

And your mouth is like a section of road that is being worked on
And it is cluttered up with stone crushers and concrete mixers and drills and steam rollers and there isn't a nerve on your head that aren't being irked on.

Oh some people are unfortunate to be worked on by thumbs,

And others have things done to their gums,

And your teeth are supposed to being polished

But you have reason to believe they are being demolished.

And the circumstances that adds to your terror

Is that it's all done with a mirror,

Because the dentist may be a bear, or as the Romans used to say, only they were referring to a feminine bear when they said it, an ursa,

But all the same how can you be sure when he takes his crowbar in one hand and mirror in the other he won't get mixed up, the way you do when try to tie a bow tie with the aid of a mirror, and forget that left is right and vice versa

And then at last he says, that will be all, but it isn't because he then coats your mouth from cellar to roof

With something I suspect is generally used to put shine a horse's hoof,

And you totter to your feet and think, well it's over now and after all it was only this once,

And he says come back in three monce.

And this O Fate, is I think the most vicious that thou ever sentest,

That Man has to go continually to the dentist to keep his teeth in good condition

When the chief reason he wants his teeth to be in good condition is so that he won't have to go the dentist.

Tuesday, 8 April 2008

ஹனி மூன்- பாகம் -1


இப்படி டைப் செய்வதை என் தோள் வழியே பார்த்த என் மனைவி " அச்சு பிச்சுனு எதையாவது எழுத வேண்டாம் " என ஒரு தடை உத்தரவு போட்டாள். அவள் தூங்கிய பின் பூனை மாதிரி எழுந்து இந்த இலக்கிய சேவையை தொடந்தேன்.


ஹனி மூனுக்கு சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் என எம்.ஜி.ஆர் கணக்காக ஒரு மெகா பிளான் வைதிருந்தேன்.( இந்த சிந்தனை உபயம் : உலகம் சுற்றும் வாலிபன் படம்) . அவர் மாதிரியே ஒரு ஓலைத் தொப்பி, பாடுவதற்கு நல்ல மெட்டுகளுடன் சில டூயட் பாடல்கள் ( கவனிக்க : இசை, லிரிக்ஸ் - அடியேனே ) என சகல ஏற்பாடுகளுடன் கல்யாணம் என்ற பதத்திற்கு நிஜமான தாத்பர்யம் தெரிந்த நாளில் இருந்து தயாரானேன்.

ஆனால் இதெல்லாம் அந்த நாடுகளுக்கு போன பின்பு தானே !!!! அங்கெல்லாம் போக என்ன என்ன செய்ய வேண்டும் என யோசித்ததில் எனக்கு விளங்கியவை

1. அங்கெல்லாம் போக என்ன செய்ய வேண்டும் என்று விசாரிப்பதற்கே என்னிடம் அப்போது இருந்த காசெல்லாம் காலியாகி, மிகுந்த அளவில் கடன் வாங்க வேண்டியிருக்கும்.

2. இதெல்லாம் நமக்கு ஒத்து வராது. லோக்கலாக ஊட்டி, கொடைக்கானல் என சமாதானம் ஆவதே உத்தமம்

இப்படி சுள் என்று உரைத்த சில வருஷங்களுக்குப் பிறகு, எனக்கு கல்யாணம் ஆகி, ஹனி மூன் என்ற அந்த மஹா சுவாரஸ்யமான சங்கதியும் நடந்தேறியது. என்னுடைய கிழக்கத்திய நாட்டு ஹனிமூன் பயண ஆசைகளுடன் ஈடு கொடுத்தது கொடைக்கானல் என்ற ஷேத்திரமே. காரணம் அங்கே ஒரு நல்ல காட்டேஜில் தங்க என் அண்ணனின் நண்பர் ஒருவர் மூலம் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது.

மதுரை போய் என் அண்ணன் வீட்டில் இரண்டு நாள் தங்கல். பின்னர் அந்த சரித்திர புகழ்பெற்ற பயணத்தை தொடங்கினோம். வத்தலகுண்டு தாண்டி பஸ் மலையேறியது. நடுவழியில் சில்வர் காஸ்கேட் என்று ஓர் அருவியருகே நிறுத்தினார்கள். "10 நிமிஷம்- பாக்றவங்க பாக்கலாம்". எனது மனசு ஓரத்த்தில் இருந்த "நயகராவில் இரண்டாவது ஹனி மூன் என்கிற கனவும் இப்படி ஒரு ஒல்லியான அருவியைப் பார்ப்பதில் சமாதானம் ஆனது.

இனிமேல் வழியில் நிறுத்தி அது இது என எதைக்காட்டினாலும் இறங்க கூடாது என ஒரு சங்கல்ப்பம் செய்து கொண்டு, பஸ்ஸில் ஏறினேன்.

கொடைக்கானல்.... கடல் மட்டத்திலிருந்து சுமார் 2 கி.மீ உயரத்திதில் இருக்கிறோம் என்பது காலை 11 மணிக்கும் தெரிந்தது.. குஷியான சில்.....

காட்டேஜ். நல்ல இடத்தில் அமைந்திருந்தது. அங்கேயே சாப்பாடு.


”எல்லா இடமும் சுத்திப் பார்க்க நாங்களே வண்டி ஏற்பாடு செஞ்சு தரோம்” என்று காட்டேஜ் நிர்வாகம் ஒரு கவர்ச்சி சங்கதி வைத்திருந்தார்கள். சிக்ஸ் சீட்டர் வேன். மூன்று ஹனி மூன் தம்பதிகள் மட்டும் என்று எக்ஸ்ட்ரா கவர்ச்சி.

மறு நாள் தான் அந்த வேனில் திக் விஜயம் போகப் போகிறோம். இன்னிக்கு நாமளே போய் சுத்திப் பார்க்கலாம் என்று நினந்த்து கிளம்பினோம்.

ஏரிக் கரையை சுற்றி நடந்தால் -- ஜாலியாக கடந்து போகும் பல முகங்கள். குதிரை சவாரி அனுபவிக்கும் மிடில் ஏஜ், தைலம் விற்கும் ஆசாமிகள். மரத்தடியில் புற உலகம் மறந்தபடி பேசிக் கொண்டிருக்கும் ஹனி மூன் ஜோடிகள்

ஏரியை இரண்டு தடவை சுற்றி வந்தோம். என் மனைவி “ இது என்ன கோவிலா சுத்தி சுத்தி வரதுக்கு இதுக்கு மேல என்னால நடக்க முடியவில்லை” என்று சொன்னதால் காட்டேஜுக்கு திரும்பினோம்.

ஒலைத் தொப்பி சகிதமாக முதல் டூயட் பாட, லொகேஷன் தேர்வு செய்யத்தான் ஏரியை இரண்டு தடவை சுத்தி வந்தோம் என்று என் மனவியிடம் சொல்லவில்லை

மறு நாள் காலையில் காட்டேஜ்காரர்கள் சரியாக 7 மணிக்கு வேனைக் கொண்டு வந்து நிறுத்தி ஹாரன் அடித்தார்கள். அந்த சத்தம் நிச்சயம் கீழே வத்தல குண்டு வரை கேட்டிருக்கும்.

நான் வண்டியை ஒரு தடவை பிரதஷணம் பின்பு அப்பிரதஷணம் எல்லாம் செய்து பார்த்ததில் 5 சீட் தான் இருந்தது. ஆறு சீட்டர் என்று சொன்னார்களே. வண்டிக்காரரை கேட்டேன். “சரியா பாருங்க சார்”

சரி தான் என்று ஒரு தடவை கண்ணை கசக்கி விட்டு எண்ணினேன். ”அஞ்சுதானேப்பா இருக்கு”

”சார் இங்க பாருங்க ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு, ஆறு” டிரைவர் சீட்டையும் சேர்த்து எண்ணினார்

எனக்கு இந்த கணக்கு புரியவில்லை. ஒருவேளை டிரைவரும் ஹனி மூன் ஜோடிகளில் அங்கத்தினரா. அப்படியானால் அவரும் புது மனவியை பக்கத்து சீட்டில் உட்காரவைத்துக் கொண்டு வருவாரோ? அவர் ம்னைவியை பார்த்துக் கொண்டே வண்டி ஓட்டினால் பத்திரமாய் இருக்குமா ? நிமிஷ நேரத்தில் கேள்விகள் கூட்ஸ் வண்டிபோல ஒன்றன் பின் ஓன்றாய்......

...........

இந்த போஸ்டிங்கின் அடுத்த பாகம் விரைவில்

Sunday, 6 April 2008

குட்டிக் கதை-2 ஊழ் (விதி)


நீதிபதி அவனை எந்த உணர்ச்சியும் இல்லாமல் பார்த்தார். “இந்தாப்பா. விசாரணை முடிஞ்சாச்சு. நீ ஏதாவது சொல்லனுமா?” அவன் இல்லை என்று தலையாட்டினான்.

செய்யாத தப்புக்கு தண்டனை என்பதை விட இரண்டு வருஷம் ஜெயிலில் இருக்கணுமா என்ற கால அவஸ்தை தான் அவனுக்கு பெரிசாய் தெரிந்த்தது. ஜெயில் முதல் இரண்டு நாளைக்குத்தான் போரடித்தது. அப்புறம் சகஜமாகி விட்டது.

அன்றைக்கு நல்ல தூக்கம். ராத்திரியின் காவல் நடை ஷூ சப்தங்கள் கூட கேட்கவில்லை. முதுகில் குறுகுறு. உதறி எழுந்தான். அந்த மெல்லிசான வெளிச்சத்திலும் த்ரையில் ஒரு கட்டெறும்பு தெரிந்தது. லேசாக மினுமினுப்புடன் ஒரு கட்டெறும்பு. இதுவரை பார்த்ததில்லை. தூக்கம் க்லைந்த ஆத்திரத்தில் அதை நசுக்க காலை நகர்த்தினான். “ஏய் என்னை கொல்லாதே” எறும்பு பேசியது !!!. தரைக்குக் குனிந்தான். ”நாந்தாம்பா பேசினேன்- கொஞ்சம் என்னை தூக்கி வச்சிக்கோ சொல்றேன்”

உள்ளங்கையில் அதை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தான்.

பிரமிப்பு நீங்காமல் கேட்டான், “ ஆமா.. நீ எப்படி பேசறே”

”அதெல்லாம் உணக்கு எதுக்கு- நான் உன்னோட இங்கேயே இருக்கேன். உணக்கு பேச்சு துணையா”

தனிமை தொலந்த சந்தோஷம் !! பேசும் எறும்பு !! அவனுக்கு தூக்கம் வரவில்லை. வெளியில் போனதும் இந்த எறும்பை வச்சே பெரிசா சம்பாதிக்கனும். யோசனை விரிவாகி மிச்சம் இருந்த நாளெல்லாம் எறும்புக்கு வித விதமாக பேச சொல்லிக் கொடுத்தான். சின்னதாய் ஒரு பாட்டு பாடும் லெவலுக்கு எறும்பு தேறி விட்டது.

விடுதலை ஆனான். முதல் வேலையாய் எறும்பு ஷோ நடத்தணும் என்ற நினைப்பில் நடந்தவனுக்கு ஒரு நல்ல ஹோட்டல் கண்ணில் பட்டது. உள்ளே நுழைந்தான். டிபன் ஆர்டர் செய்துவிட்டு பாக்கெட்டில் இருந்து அந்த எறும்பை எடுத்து டேபிளில் விட்டு ஒரு காலி டம்ளரை கவிழ்த்து அதை பத்திரமாக்கினான் சர்வர் டிபன் கொண்டு வந்து வைத்துவிட்டு, சிநேகமாய் பார்த்து சிரித்தான்.

இந்த சர்வர் தான் பேசும் எறும்பை பார்க்க போகும் முதல் ஆள் என்று நினத்து கவிழ்த்த காலி டம்ளரை திறந்து எறும்பைக் காட்டி, “லுக் அட் திஸ்” என்றான் பெருமையாக.


சர்வர் ஷண நேரம் தாமதிக்காமல் நாலு விரலையும் சேர்த்து ”டப்” என்று அந்த எறும்பை அடித்தார். அது நசுங்கி செத்துப் போனது

Saturday, 5 April 2008

குட்டிக் கதை-1 ஆசை


முனிவர் ஒருவரின் தவத்தை மெச்சி கடவுள் அவருக்கு காட்சி கொடுத்து தனது யூஷுவலான கேள்வியைக் கேட்டார்.

“உனது பக்தியை மெச்சினேன். என்ன வரம் வேண்டும்?”

“பிரபோ !! தங்கள் தரிசனமே எனது தவத்தின் நோக்கம்; வேறெதுவும் வேண்டாம்”

“நீ மாறவேயில்லை” என்று சிரித்துவிட்டு, கடவுள் , “பக்தா !! நான் உனக்கு ஒரு விருஷத்தை வரமாக தருகிறேன். கற்பக விருஷம் மாதிரி. இதனிடம் கேட்க கூட வேண்டாம். அதனடியில் நின்று கொண்டு என்ன நினத்தாலும் அது உடனே நடக்கும்” என்று அருளி கையை அசைத்தார். அந்த மாஜிக் மரம் அங்கே. கடவுள் ஆசிர்வாதம் கலந்த ”டாட்டா” காண்பித்துக் கொண்டே மறைந்தார்.

மரத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது . இது நமக்கு ஆசையை வளர்த்து நம்மை பாவம் செய்ய வைக்கும் என்ற லைனில் சிந்தித்த முனிவர் அங்கிருந்து ஓடி விட்டார்.

வரம் தரும் போது கடவுள் வார்த்தைகளில் ஒரு பிசகு செய்துவிட்டார். “அதனடியில் நின்று கொண்டு என்ன நினத்தாலும் அது உடனே நடக்கும்” என்று சொன்னாரே தவிர முனிவர் நினத்தால் என சொல்லவில்லை. அந்த மரமும் அந்த காட்டில் யாரவது தனக்கடியில் வந்து நின்று நினைப்பார்கள் என்று காத்திருந்தது.

ஒரு நாள் அந்த வழியே ஆடு மேய்த்துக் கொண்டு ஒரு இளைஞன் வந்தான். ”அந்த” மரத்து நிழலில் கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுக்கலாம் என நினத்தான்.

படுத்துக் கொண்டே யோசித்தான், “ இது என்ன பொழைப்பு; தினம் தினம் இத்தனை தூரம் இத்தனை ஆட்டையும் மேய்ச்சிட்டுக்கு வந்து பத்திரமா கொண்டு போய்- ச்சை !! ஒரு நல்ல சாப்பாடு கூட சாப்பிட்டதில்லை. இந்த ராஜா ராணியெல்லாம் அரண்மனையில் சாப்பிடற விருந்த்து மாதிரி சாப்பாடு ஒரு தடவை கிடைச்சா தேவலை”

மாஜிக் மரம் தன்னுடைய முதல் அனுக்கிரஹத்தை லேட் இல்லாமல் செய்தது. அவன் கண் முன்னே ஒரு ராஜோபசார விருந்து. அவன் பயந்தே போய் விட்டான். இது ஏதோ பிசாசு வேலை என்று அந்த மரத்தை சுற்றி சுற்றி வந்தான். பயம் தெளிந்து அந்த விருந்தை ஒரு பிடி பிடித்தான்.

மீண்டும் யோசித்தான், “ இப்படி வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு ராஜா ராணியெல்லாம் ஒசத்தியான கட்டிலில் ஆளுக விசிறிக்கிட்டே தூங்குவாங்க; நமக்கும் அப்படி கிடைச்சா நல்லாயிருக்கும்”

மரம் இந்த தடவையும் ஸ்பீடாய்.

மீண்டும் யோசித்தான், “ ஆமா ! நாம நடுக்காட்ல இப்படி படுத்திருகோமே. புலி வந்து அடிச்சா ....”. மரம் வழக்கத்தை போல ஸ்பீடாய்
-----------------
ஆசை ஒன்றைத் தொடர்ந்து ஒன்று தீயாய் எறிந்து நம்மை அழித்துவிடும் என்று சொல்லி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொன்ன கதை இது