Tuesday, 8 April 2008

ஹனி மூன்- பாகம் -1


இப்படி டைப் செய்வதை என் தோள் வழியே பார்த்த என் மனைவி " அச்சு பிச்சுனு எதையாவது எழுத வேண்டாம் " என ஒரு தடை உத்தரவு போட்டாள். அவள் தூங்கிய பின் பூனை மாதிரி எழுந்து இந்த இலக்கிய சேவையை தொடந்தேன்.


ஹனி மூனுக்கு சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் என எம்.ஜி.ஆர் கணக்காக ஒரு மெகா பிளான் வைதிருந்தேன்.( இந்த சிந்தனை உபயம் : உலகம் சுற்றும் வாலிபன் படம்) . அவர் மாதிரியே ஒரு ஓலைத் தொப்பி, பாடுவதற்கு நல்ல மெட்டுகளுடன் சில டூயட் பாடல்கள் ( கவனிக்க : இசை, லிரிக்ஸ் - அடியேனே ) என சகல ஏற்பாடுகளுடன் கல்யாணம் என்ற பதத்திற்கு நிஜமான தாத்பர்யம் தெரிந்த நாளில் இருந்து தயாரானேன்.

ஆனால் இதெல்லாம் அந்த நாடுகளுக்கு போன பின்பு தானே !!!! அங்கெல்லாம் போக என்ன என்ன செய்ய வேண்டும் என யோசித்ததில் எனக்கு விளங்கியவை

1. அங்கெல்லாம் போக என்ன செய்ய வேண்டும் என்று விசாரிப்பதற்கே என்னிடம் அப்போது இருந்த காசெல்லாம் காலியாகி, மிகுந்த அளவில் கடன் வாங்க வேண்டியிருக்கும்.

2. இதெல்லாம் நமக்கு ஒத்து வராது. லோக்கலாக ஊட்டி, கொடைக்கானல் என சமாதானம் ஆவதே உத்தமம்

இப்படி சுள் என்று உரைத்த சில வருஷங்களுக்குப் பிறகு, எனக்கு கல்யாணம் ஆகி, ஹனி மூன் என்ற அந்த மஹா சுவாரஸ்யமான சங்கதியும் நடந்தேறியது. என்னுடைய கிழக்கத்திய நாட்டு ஹனிமூன் பயண ஆசைகளுடன் ஈடு கொடுத்தது கொடைக்கானல் என்ற ஷேத்திரமே. காரணம் அங்கே ஒரு நல்ல காட்டேஜில் தங்க என் அண்ணனின் நண்பர் ஒருவர் மூலம் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது.

மதுரை போய் என் அண்ணன் வீட்டில் இரண்டு நாள் தங்கல். பின்னர் அந்த சரித்திர புகழ்பெற்ற பயணத்தை தொடங்கினோம். வத்தலகுண்டு தாண்டி பஸ் மலையேறியது. நடுவழியில் சில்வர் காஸ்கேட் என்று ஓர் அருவியருகே நிறுத்தினார்கள். "10 நிமிஷம்- பாக்றவங்க பாக்கலாம்". எனது மனசு ஓரத்த்தில் இருந்த "நயகராவில் இரண்டாவது ஹனி மூன் என்கிற கனவும் இப்படி ஒரு ஒல்லியான அருவியைப் பார்ப்பதில் சமாதானம் ஆனது.

இனிமேல் வழியில் நிறுத்தி அது இது என எதைக்காட்டினாலும் இறங்க கூடாது என ஒரு சங்கல்ப்பம் செய்து கொண்டு, பஸ்ஸில் ஏறினேன்.

கொடைக்கானல்.... கடல் மட்டத்திலிருந்து சுமார் 2 கி.மீ உயரத்திதில் இருக்கிறோம் என்பது காலை 11 மணிக்கும் தெரிந்தது.. குஷியான சில்.....

காட்டேஜ். நல்ல இடத்தில் அமைந்திருந்தது. அங்கேயே சாப்பாடு.


”எல்லா இடமும் சுத்திப் பார்க்க நாங்களே வண்டி ஏற்பாடு செஞ்சு தரோம்” என்று காட்டேஜ் நிர்வாகம் ஒரு கவர்ச்சி சங்கதி வைத்திருந்தார்கள். சிக்ஸ் சீட்டர் வேன். மூன்று ஹனி மூன் தம்பதிகள் மட்டும் என்று எக்ஸ்ட்ரா கவர்ச்சி.

மறு நாள் தான் அந்த வேனில் திக் விஜயம் போகப் போகிறோம். இன்னிக்கு நாமளே போய் சுத்திப் பார்க்கலாம் என்று நினந்த்து கிளம்பினோம்.

ஏரிக் கரையை சுற்றி நடந்தால் -- ஜாலியாக கடந்து போகும் பல முகங்கள். குதிரை சவாரி அனுபவிக்கும் மிடில் ஏஜ், தைலம் விற்கும் ஆசாமிகள். மரத்தடியில் புற உலகம் மறந்தபடி பேசிக் கொண்டிருக்கும் ஹனி மூன் ஜோடிகள்

ஏரியை இரண்டு தடவை சுற்றி வந்தோம். என் மனைவி “ இது என்ன கோவிலா சுத்தி சுத்தி வரதுக்கு இதுக்கு மேல என்னால நடக்க முடியவில்லை” என்று சொன்னதால் காட்டேஜுக்கு திரும்பினோம்.

ஒலைத் தொப்பி சகிதமாக முதல் டூயட் பாட, லொகேஷன் தேர்வு செய்யத்தான் ஏரியை இரண்டு தடவை சுத்தி வந்தோம் என்று என் மனவியிடம் சொல்லவில்லை

மறு நாள் காலையில் காட்டேஜ்காரர்கள் சரியாக 7 மணிக்கு வேனைக் கொண்டு வந்து நிறுத்தி ஹாரன் அடித்தார்கள். அந்த சத்தம் நிச்சயம் கீழே வத்தல குண்டு வரை கேட்டிருக்கும்.

நான் வண்டியை ஒரு தடவை பிரதஷணம் பின்பு அப்பிரதஷணம் எல்லாம் செய்து பார்த்ததில் 5 சீட் தான் இருந்தது. ஆறு சீட்டர் என்று சொன்னார்களே. வண்டிக்காரரை கேட்டேன். “சரியா பாருங்க சார்”

சரி தான் என்று ஒரு தடவை கண்ணை கசக்கி விட்டு எண்ணினேன். ”அஞ்சுதானேப்பா இருக்கு”

”சார் இங்க பாருங்க ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு, ஆறு” டிரைவர் சீட்டையும் சேர்த்து எண்ணினார்

எனக்கு இந்த கணக்கு புரியவில்லை. ஒருவேளை டிரைவரும் ஹனி மூன் ஜோடிகளில் அங்கத்தினரா. அப்படியானால் அவரும் புது மனவியை பக்கத்து சீட்டில் உட்காரவைத்துக் கொண்டு வருவாரோ? அவர் ம்னைவியை பார்த்துக் கொண்டே வண்டி ஓட்டினால் பத்திரமாய் இருக்குமா ? நிமிஷ நேரத்தில் கேள்விகள் கூட்ஸ் வண்டிபோல ஒன்றன் பின் ஓன்றாய்......

...........

இந்த போஸ்டிங்கின் அடுத்த பாகம் விரைவில்

No comments: