Friday, 11 April 2008

முதல் பெருமாள்


என் பெரியப்பாவிற்கு என் மீது மகா கோபம்.

“இதோ பாரு சந்துரு.. ஆத்துல நடக்கிற விஷேசத்துக்கு முதல்ல குல தெய்வத்துக்கு கைல எழுதி பத்திரிக்கை அனுப்பி, அங்கேர்ந்து ஆசிர்வாதம் வந்த பின்னாடி தான் பிரிண்ட் அடிக்கிறது வழக்கம்.. நீ சொல்ற மாதிரியெல்லாம் செய்ய முடியாது”

விஷயம் இது தான்..

என் மகளுக்கு ஆயுஷ ஹோமம்.. பெருமாளுக்கு கைல எழுதற பத்திரிக்கை ஒரு காப்பி எக்ஸ்ட்ரா எழுதி பெஞ்சமினுக்கு அனுப்பனும்னு நான் சொல்றேன். காரணம் என் அம்மா ஒரு தடவை ரொம்ப சீரியஸா இருந்தப்ப ரத்தம் கொடுத்து காப்பாத்தினது பெஞ்சமின். என் அப்பாவின் ஸ்டுடண்ட். அவருக்கு முதல் மரியாதை பண்ண நெனச்சேன். அவர் இப்போ திண்டுக்கல்ல இருக்கார்

“பெரியவா என்ன சொல்றாளோ அப்டியே பண்ணேண்டா” .. அம்மாவும் இப்படி சொன்னதால அப்பாவைக் கேட்டேன்.

“நீ சொல்றது நன்னா தான் இருக்கு. ஆனா அண்ணா ஆத்துல பெரியவர் அவர் பேர் போட்டு பத்திரிக்கை அடிக்கணும்.. அவர்ட்ட எதிர் வாதம் பண்ண வேண்டாம்”
மீண்டும் பெரியப்பா, “இதோ பார் இப்ப சாஸ்திரிகள் ஆத்துக்கு போய் பத்திரிகை எழுதி வாங்கிண்டு வந்து அதை திருப்பதி பெருமாளுக்கு கூரியர்ல அனுப்ப போறேன்”

“ஏம் பெரியப்பா.. பாலாஜி கையெழுத்து போட்டு வாங்குவாரா “

“பல்லுல போடறேன் பாரு... நாஸ்திகம் பேசிண்டு.. கலெக்டருக்கு லெட்டர் ரிஜிஸ்டர் தபால் அனுப்பினால் கலெக்டரேவா கையெழுத்து போட்டு வாங்குவார்.. யாரவது ஆபிஸ் ஆள் வாங்றதில்லையா.. அது மாதிரி..”

“வைகுண்டதுல துவார பாலகர் வாங்குவாளா”..

”உனக்கெல்லாம் சொன்னா புரியாது. தேவஸ்தானத்திலிருந்து ஆசிர்வாதம் பண்ணி பிரசாதம் அனுப்புவா. அப்புறம் பிரிண்ட் அடித்து ஆத்து பெரியவா எல்லாருக்கும் கொடுத்த பின்னால சிநேகிதாளுக்கெல்லாம் அனுப்பலாம்” பெரியப்பா பத்திரிகை எழுதி வாங்கி வர புறப்பட்டார்.

பத்திரிக்கையுடன் வந்து அப்பாவிடம், “விச்சு.. இன்னிக்கே நாள் நன்னா இருக்காம். கூரியர் பண்னிடலாம்” என்று சொல்லி எழுதி வந்த அந்த முதல் பத்திரிக்கையை காண்பித்தார்.

நான் கை நீட்டினேன். தட்டிவிட்டு சொன்னார், “ உனக்கு இதுல வேலை இல்லை”

”சும்மா பார்த்துட்டு தரேன் பெரியப்பா”

“உன்னை நம்ப முடியாது.. இந்தா இப்படியே பாரு.. “ தன் கையிலேயே வைத்து காண்பித்துவிட்டு ,” நானே போய் கூரியர் பண்றேன்”..

என் அம்மாவுக்கு இக்கட்டான நேரத்தில் ரத்தம் கொடுத்து உயிர் காப்பாற்றி.. இன்று அவள் இருப்பதற்கு காரணமான ஒரு ஜீவனுடன், கையால் எழுதிய ஒரு பேப்பர் பத்திரிகைக்கு போட்டி போடுவாரா பெருமாள்.

ஹாலில் மாட்டியுள்ள அந்த சிரித்த வேங்கடவனைப் பார்தேன். அதே சிரிப்பு
ஒரு முடிவுக்கு வந்தேன். பெரியப்பா நீட்டி காட்டிய பத்திரிக்கை வரிகளை ஞாபகப்படுதினேன். ரூமுக்குள் போய் அதே மாதிரி ஒண்ணு ஆனா பெருமாளுக்கு எழுதற மாதிரியில்லாம பெஞ்சமினுக்கு எழுதினேன். யாருக்கும் தெரியாம கூரியர் பண்ணிட்டு ஆத்துக்கு வந்துட்டேன்.

மனசு பரபரப்பா இருந்தது.. திருப்பதி பக்கமா.. திண்டுக்கல் பக்கமா.. ஐயோ.. திருப்பதி தான் பக்கம். இன்னி சாய்ங்காலமே கூரியர் போய்டும்.. எதுக்கும் பார்க்கலாம்.. பெஞ்சமின் இதைப் பார்துவிட்டு அப்பாவுக்கு போன் செய்து விசாரிப்பார். அப்போது பெரும் பூகம்பம் நிச்சயம். இனி அது பத்தி யோசிச்சு பலனில்லை என்ன நடந்தாலும் நடக்கட்டும். ஒரு கலவரமாய்த்தான் அன்று தூங்கினேன்.

மறு நாள் காலை 11 மணி இருக்கும். பெரியப்பாவை கேட்டபடி ஒரு பையன் வந்தான்..

“சார் கூரியர்லேருந்து வரேன்.. நேத்து திருப்பதிக்கு ஒரு கூரியர் அனுப்பிச்சீங்கல்ல சார். ராத்திரி அதை பேக் பண்ண மூட்டை தண்ணில நனஞ்சிடுச்சி சார். ஃப்ரம் அட்ரஸ் அப்படியே இருக்கு. டூ அட்ரஸ் அழிஞ்சிடிச்சி.. ரொம்ப சாரி சார்.. இப்ப புது கவர் போட்டு அட்ரஸ் எழுதி தந்தா இன்னிக்கி சாய்ங்காலாம் டெலிவரி பண்ணிடலாம்னு ஒனர் சொன்னார் சார்.. தப்பாயிடுச்சி மன்னிச்சிருங்க சார்“

பையன் நீட்டிய கவரில், பெரியப்பா எழுதியிருந்த உலகப் பிரசித்த பெற்ற அந்த வேங்கட மலை விலாசம்.. நீல நீல திட்டுகளாய்.. கரைந்து..
நான் அந்த பையனை பேர் கேட்டேன்.

“கோவிந்தன் சார்”.

ஹாலில் மாட்டியுள்ள அந்த சிரித்த வேங்கடவனைப் பார்தேன். இப்போதும் அதே சிரிப்பு.. இல்லை அவன் கொஞ்சம் ஜாஸ்தி சிரித்த மாதிரி இருந்தது
==
அவரவர் தாம்தாம் அறிந்தவாரேத்தி
இவர் இவர் என் பெருமான் என்று - சுவர்மிசை
சார்த்தியும் வைத்தும தொழுவார் உலகளந்த
மூர்த்தி உருவே முதல்''
- பொய்கையாழ்வார்

No comments: