Sunday, 13 April 2008

சுஜாதாவுக்கு மற்றொரு இமெயில் CC TO ஆழ்வார்கள்
சுஜாதா சார்

வணக்கம்.

தங்களின் ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் பக்கம் 83 பார்க்க

“எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கரசு என்னுடை வாணாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி
அவருயிர் செகுத்தஎம் அண்ணல்
வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சை
மாமணிக்கோயில் வணங்கி
நம்பிகாய் உள்ள நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்”

நாலாயிர திவ்யபிரபந்தத்தில் 953 வது பாசுரம். திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்தது


இதில் குறிப்பிடும் மாமணிக் கோயில் தஞ்சையில் எங்கிருக்கிறது என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

என்ன சார் இப்படி சொல்லிவிட்டீர்கள்

இந்த திவ்ய தேசம் தஞ்சாவூருக்குப் பக்கத்தில் சுமார் 2 கி.மீ தூரத்தில் வெண்ணாற்ற்ங்கரையில் உள்ளது

இதற்குப் பக்கத்தில் சுமார் ஒரு மைல் தூரத்தில் தஞ்சை மணிகுன்ற பெருமாள், தஞ்சை யாழி பெருமாள் என்று இரண்டு வைணவத்தலங்கள் உள்ளன.

தஞ்சை மாமணிக் கோவில், தஞ்சை மணிகுன்ற பெருமாள், தஞ்சை யாழி பெருமாள் இவை மூன்றும் சேர்ந்து ஒரு திவ்ய தேசமாக கருதப்படுகிறது

தஞ்சை மாமணிக் கோவில்

மூலவர்:கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலமாய் நீலமேகப் பெருமாள்
தாயார்: செங்கமலவல்லித் தாயார்
தீர்த்தம் :அம்ருத தீர்த்தம்

தஞ்சை மணிகுன்ற பெருமாள் கோவில்

மூலவர்: மணிகுன்ற பெருமாள்- கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
தாயார்: அம்புஜவல்லித் தாயார்
தீர்த்தம் : ஸ்ரீராம் தீர்த்தம்

தஞ்சை யாழி பெருமாள் கோவில்

மூலவர்: நரசிம்மர் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்
தாயார்: தஞ்சை நாயகி
தீர்த்தம் சூர்ய புஷ்கரணி, ஸ்ரீராம் தீர்த்தம்

நீங்கள் குறிப்பிட்ட பாசுரம் 953 தவிர திருமங்கை ஆழ்வார் இந்த திவ்விய தேசத்தை கீழ்க்கண்ட இரண்டு பாசுரங்களிலும் குறிப்பிட்டுள்ளார்

உடம்புருவில் மூன்றொறாய் மூர்த்திவேறாய்
உலகுய்ய நின்றானை,அன்றுபேய்ச்சி
விடம்பருகு வித்தகனைக் கன்றுமேய்த்து
விளையாட வல்லானை வரைமீகானில்,
தடம்பருகு கருமுகிலைத் தஞ்சைக்கோயில்
தவநெறிக்கோர் பெருநெறியை வையங்காக்கும்,
கடும்பரிமேல் கற்கியைநான்கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ் கடன்fமல்லைத் தலசயனத்தே (பிரபந்தம் -1090)

என்செய் கேனடி னேனுரை யீர் இதற்
கென்று மென்மனத் தேயிருக் கும்புகழ்,
தஞ்சை யாளியைப் பொன்பெய ரோன்றன்
நெஞ்ச மன்றிடந் தவனைத்தழ லேபுரை
மிஞ்செய் வாளரக் கன்நகர் பாழ்படச்
சூழ்க டல்சிறை வைத்து இமை யோர்தொழும்,
பொன்செய் மால்வரை யைமணிக் குன்றினை
அன்றி யென்மனம் போற்றியென் னாதே (பிரபந்தம் -1576)


இது மட்டுமில்லை சார்

உங்கள் பேவரைட் நம்மாழ்வார்

மாதர்மா மண்மடந் தைபொருட் டேனமாய்,
ஆதியங் காலத் தகலிடம் கீண்டவர்,
பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே
ஓதும்மால், எய்தினள் என்தன் மடந்தையே (பிரபந்தம்- 3139)

என்று இந்த ஸ்தலத்தில் தான் பாடியுள்ளார்

பூதத்தாழ்வாரும்

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்,
தமருள்ளும் தண்பொருப்பு வேலை, - தமருள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே,
ஏவல்ல எந்தைக் கிடம் (பிரபந்தம்- 2257)

என்று பாடியுள்ளார்

கோவில் படங்கள் இத்துடன் போட்டுள்ளேன்.

2 comments:

dondu(#11168674346665545885) said...

இவ்வளவு காலம் உங்கள் பதிவுகளை படிக்காது தவற விட்டுள்ளேன். சக சுஜாதா விசிறியை படிக்க முடிந்ததில் சந்தோஷம்.

சுஜாதா பற்றி எனது மூன்று பதிவுகள்:

http://dondu.blogspot.com/2008/03/blog-post_03.html

http://dondu.blogspot.com/2008/02/have-nice-time-sujatha-sir.html

http://dondu.blogspot.com/2008/02/blog-post_28.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

cheena (சீனா) said...

பதிவில் உள்ள செய்தி பற்றி அதிகம் அறிந்திலேன். இப்பதிவும் சுஜாதாவிற்கு - அவரது படைப்பின் தொடர்பாக எழுதப்பட்ட பதிவானதால் மறுமொழி இடுகிறேன்.

சுஜாதாவின் விசிறி நான். அவரது பல கதைகள் படித்துள்ளேன் - ரசித்துள்ளேன்

நல்ல ஜனரஞ்சக எழுத்தாளர் - பல்கலை விற்பன்னர். நைலான் கயிறு தொடங்கிய காலம் தொட்டு வரைப் படிக்கிறேன்.