Saturday, 29 March 2008

அலெக்ஸாண்டரின் குதிரை


நான் தஞ்சாவூரில் இருந்தபோது எனது நண்பர் Dr. RSA. Alexander அப்போது பிரசித்தமாய் இருந்த சுசூகி மோட்டடார் பைக் வாங்கினார். அதெல்லாம் பிசகில்லை. அந்த பைக்குக்கு மாவீரன் அலெக்ஸாண்டரின் குதிரை பெயரை வைக்க வேண்டி ஆசைப்பட்டார். எனக்கு தெரிந்து மோட்டார் பைக்குக்கு நாமகரணம் செய்ய ஆசைப்பட்டவர் அவர் ஒருவராகத்தான் இருக்கும். இதில் சங்கடம் என்னவென்றால் அந்த குதிரையின் பெயரை கண்டுபிடித்துச் சொல்லும் அந்த கஷ்டமான வேலை என்னுடையது. இப்போது மாதிரி அலெக்ஸாண்டரின் + குதிரை என்று தட்டினால் குதிரை பெயர் என்ன அது ருதுவான நாள் நட்சத்திரம் எல்லாம் நொடியில் தரும் இன்டர்நெட் இல்லாத காலம். (1989 ம் வருஷம்)

அலெக்ஸாண்டரின் தந்தை மன்னர் பிலிப் ஒரு குதிரை வாங்கியதாகவும் அது மஹா சண்டித்தனம் செய்து யாரையுமே தன் மீது ஆரோகணிக்க விடாமல் இருந்த போது அலெக்ஸாண்டர் அந்த குதிரை தனது நிழலைக் கண்டுதான் மிரள்கிறது என உணர்ந்து அதன் நிழல் அது கண்ணில் படாத மாதிரி அதை நிறுத்தி அதன் மீது லாவகமாக ஏறி பின்னர் சவாரி செய்தார்

அந்த பொல்லத குதிரரையைப் பற்றி பள்ளி பாடத்தில் படித்திருக்கிறேன். பெயர் எல்லாம் பாட புஸ்தகத்தில் வந்த ஞாபகம் இல்லை.


தஞ்சாவூர் லைப்ரரிகள் சமயல் குறிப்புகள், பெண்களை கொடுமைப் படுத்தும் கணவர்களை தோலுரிக்கும் நாவல்கள் என்ற சமூக அக்கறையில் இருந்தன. எனது குதிரை பெயர் கேள்வி அந்த லைப்ரரியன்களை " அய்யோ யார் பெத்த பிள்ளையோ பாவம் புத்தி சரியில்லை" என்று என்னை ஒரு பட்சாதாபத்துடன் பார்க்க வைத்தது..


நான் விக்கிரமாதித்தியன் மாதிரி. சளைக்கவில்லை. இந்த ஒரு குதிரையின் பெயரை அறிந்து கொள்ளும் வெறியுடன் சென்னைக்கு ரயிலேறினேன்.

கன்னிமரா நூலகத்தில் நான் தேடிய சங்கதி கிடைத்ததது. அந்த குதிரையின் பெயர் Bucephalus.


கிரேக்க நாட்டு இந்த கி.மு வரலாறு என்னை ரொம்ப வசீகரம் செய்தது. குதிரை பெயர் தெரிந்தவுடன் அத்துடன் நிற்காமால் மேலும் கொஞ்சம் நோண்டினேன். இந்த குதிரை அலெக்ஸாண்டரின் 12 வயதிலிருந்து அவரது கடைசி யுத்தம் (கி.மு 326) வரை அவருடனே இருந்திருக்கிறது. யுத்தத்தில் காயமாகி அலெக்ஸாண்டருக்கு முன்பே பரமபதம் அடைந்த்தது. இதன் நினைவாக Bucephala என்ற ஒரு நகரை உண்டாக்கினார் என்ற சொற்ப தகவலை உபரியாகவும் கிரேக்க சரித்திரம் சம்மந்தமாக ஹிக்கின்பாத்தம்ஸில் சில புத்தகங்களும் வாங்கிக் கொண்டு தஞ்சாவூர் திரும்பினேன்.


டாக்டர் நண்பருக்கு ஒரே சந்தோஷம். பைக் பெயர் சூட்டு விழாவில் நான் தான் தலைவர். நான் தான் அந்த பைக்குக்கு பெயர் சூட்டினேன். டாக்டர் தனது நன்றியின் அடையாளமாக தானே த்யாரித்த ஒரு காலண்டரை எனக்கு பரிசாக தந்தார். பைபிளில் 365 தடவை "பயப்படாதே" என்று வருகிறதாயும் அதை நாளுக்கு ஒன்று வீதம் எழுதி ஒரு காலண்டர் அது.


இன்னும் அந்த காலண்டர் என்னிடம் இருக்கிறது. நான் தொடர்ச்சியாக கிரேக்க நாட்டு சரித்திரம் சம்பந்தமாக வாங்கிய பல புஸ்தகங்களும் இருக்கின்றன. எனது டாக்டர் நண்பர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. அவருக்கு மாற்றலாகி திருச்சிக்குப் பக்கத்தில் எங்கோ புலம் பெயர்ந்தார். நானும் எங்கெங்கோ சுற்றி இப்போது சென்னையில். எங்காவது எப்போதாவது அகஸ்மாத்தாய் குதிரையைப் பார்த்தால் டாக்டர் ஞாபகம் வரும்

2 comments:

ஜோசப் பால்ராஜ் said...

அய்யா நீங்க தஞ்சாவூரா? நானும் தஞ்சாவூர் தான்.

Simulation said...

அலெக்சாந்தரும் ஆறுமுகனும்

http://simulationpadaippugal.blogspot.com/2010/03/blog-post_11.html

- சிமுலேஷன்