Saturday, 15 March 2008

சுஜாதா நினைவுகள்


குமுதத்தில் "கொலையுதிர் காலம்" வந்த சமயம். அவர் எங்கள் குடும்ப உறுப்பினர் ஆனார். குமுதம் வரும் நாள் மிக கவனமாக தொடரப்படும். அதைக் கொண்டு தரும் நபர் தெரு முனையிலேயே என் அண்ணனால் பெரும்பாலும் மடக்கபடுவார். இப்படி எங்களை ஆக்கிரமித்தவர் வெறித்தனமாக தேடி தேடி படிக்கப்பட்டார். தமிழ் இலக்கியத்தின் மீது எனக்கு இருக்கும் ப்ரேமையின் முகவரியாக சுஜாதா ஆனார். அவரைக்கொண்டே இலக்கிய அறிமுகங்களை செய்ய தொடங்கினேன்.எனது மூத்த சகோதரி திருமணமாகி பெங்களூர் போனதும் அவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு (பனசங்கரி தேர்ட்ஸ்டேஜ் ) சுஜாதா குடி வந்ததும் அவரை நேரில் சந்திக்க திருப்பதி ஸ்ரீ பாலாஜி செய்த கருணை. அந்த வீட்டில் தான் அவரை முதலில் சந்தித்தேன்.நான், எனது அக்கா , என் அண்ணன் எல்லோரும் போனோம். அப்போது CMC கம்ப்யூட்டர் கம்பெனி அனுப்பிய ஒரு கோர்ஸ் சம்பந்தப்பட்ட தபால் ஒன்றை அவரிடம் காட்டி ஆலோசனை பெற என் அண்ணன் விரும்பினான். அவன் கையில் அந்த கவர்.சுஜாதா சாரின் மனைவியுடன் ஏற்கனவே என் அக்கா அறிமுகம் ஆகியிருந்தார். ஆகவே அவர் எங்களை சாருக்கு அறிமுகம் செய்து வைத்தார். உடனே சார் அது என்ன சி. எம். சி கவர் என கேட்டார். அவரது கவனிக்கும் திறன் !!!. அதுவே கனேஷாக நம்முன் உலாவியது"விக்ரம் படத்தில் கையாளப்பட்ட சில நையாண்டிகளை சொன்ன போது மெல்லிசாக சிரித்தார்."ரத்தம் ஒரே நிறம் " கதையில் காணப்பட்ட சில தகவல்அவரது தேடுதலை அதில் உள்ள தீவிரத்தை சொன்னது. புதுக்கோட்டை சம்பந்தமாக என் அண்ணன் சில குறிப்புகளை அவரிடம் கொடுத்து "இது சம்மந்தமாகவும் கதை எழுதுங்கள் சார்" எனச்சொன்ன போது அதை ஆமோதித்து தலை அசைத்து சிரித்தார்.விடை பெறும்போது வாசல் வரை வந்து வழி அனுப்பினார்.


அவர் தினமும் அலுவலகம் போகும் நான் பார்ப்பேன். சிரித்து தலை அசைப்பார்அதன் பிறகு நெடு நாள் கழித்து அவரை சென்னை புத்தக கண்காட்சியில் சந்த்திதேன். பேச முடியவில்லை.ஆயினும் அவர் எங்கள் வீட்டுக்கு கட்டுரையாக , சிறு கதையாக , நாவலாக , கேள்வி பதிலாக , பாசுரமாக , ஹைக்குவாக, விமர்சனங்களாக வந்த வண்ணம் இருந்தார் . என் புரிந்து கொள்ளும் ஆற்றலின் மூலமே சுஜாதாவின் எழுத்து எனக்கு அளித்த கொடை. நான் பேசும் போது செய்யும் நையாண்டி கேலி ஜோக் எல்லாம் அவர் வசந்தாக தந்துவிட்டுப்போன ஜீவ சுவை.எனது பத்து வயது மகளுக்கு அவரின் திருக்குறள் உரையிலிருந்தே சொல்லித்தருகிறேன் . அவளின் பல சந்தேகங்களுக்கு அவரின் " ஏன் எதற்கு எப்படியில் " இருந்தே பதில் சொல்லுகிறேன்எனக்கு அவர் எப்போதுமே ஒரு விந்தை !! அதிசயம் !!.அவர் தனி மனித ரசனைகளின் பிம்பம்.அவர் ரசனைகளின் வழி விட்டுச்சென்றது வாசனை அல்ல சில காலம் கடந்த பின் மறைய !!! அவை ஜீவ சுவை !!!. அழிவில்லாத ஊற்று !!!மனித பிறவியாக , ரங்கராஜனாக அவர் அந்த அரங்கனிடம் போனது நிஜம் . ஆனால் சுஜாதவாக இங்கே பூலோகத்தில் தமிழ் பேசும் எல்லோரிடமும் கலந்துள்ள அந்த வாத்தியாரை அரங்கனால் கவர முடியாது . இது அரங்கனே விரும்பி ஏற்கும் தோல்வி

2 comments:

சுரேகா.. said...

அற்புதம்

cheena (சீனா) said...

மனம் விரும்பும் ஆதர்ஷ ப்ருஷருக்கு ஒரு அஞ்சலி - அருமை அருமை