Monday, 24 March 2008

பேய்


பக்கத்து பிளாட்டுகளில் இந்த அதிகாலை 6 மணிக்கு சமத்தாய் கந்த சஷ்டி கவசம் , சுப்ரபாதம் என கேட்டுக் கொண்டு இருக்க நான் அமானுஷ்ய சங்கதி குறித்து அதுவும் சுமார் 12 வருஷம் முந்தி நடந்ததைப் பற்றி எழுத வேண்டிய அவஸ்யத்தை கடைசியில் சொல்கிறேன்.



அழகப்பா யுனிவர்சிட்டியின் 10 நாள் தொடர்சியான CONTACT CLASS க்காக காரைக்குடியில் யுனிவர்சிட்டி ஹாஸ்டலில் தங்கி இருந்தேன்.ஒரு அறையில் ஆறு பேர்.ஸ்தாபகர் அழகப்ப செட்டியாரின் தாரளம் அறையின் அளவிலும் கட்டணத்திலும் தெரிந்தது. 150 சதுர அடிக்கு குறையாத அறை; சௌகர்யமான பாத்ரூம்; 45 ரூபாயில் மெஸ்ஸில் மூணு வேளை சாப்பாடு + 2 வேளை காப்பி+ ரூம் வாடகை


வேறு வேறு ஊர்களில்இருந்து வந்த பல தரப்பட்டவர்கள் ஒரே அறையில் இருக்கும் வித்தியாசமான அனுபவம். அது ரொம்ப வித்தியாசமாக இருக்க போகிறதென்று 9 நாள் நடு ராத்திரி தெரிந்தது.


வழக்கமான அரட்டைக்குப் பிறகு 10-10.30 மணிக்கு படுத்தோம். ஒரு மணி நேரம் ஆகியிருக்கலாம். உட்ச பட்ச டெசிபலில் ஒரு அலறல். நான் தங்கியிருந்த அறையில்தான். அறையின் பக்க சுவர்களை ஒட்டி இரண்டு இரண்டாக 4 கட்டில்கள்; வாசலுக்கு எதிரே ஒரு கட்டில் தரையில் ஒருவர். யார் இப்படி அமாணுஷ்யமாக கத்துவது என்று பார்க்க வெளிச்சம் போதவில்லை. நான் அறை வாசலுக்கு நேர் எதிரே உள்ள கட்டிலில். அமானுஷ்ய அலறல் நிற்காமல் இப்போது கொஞ்சம் வார்த்தைகளுடன் தொடர்ந்தது. குரலில் இருந்து தரையில் படுத்து தூங்கும் நண்பர்தான். என தெரிந்த்ததும் எனக்கு பயம் ஜாஸ்தியானது. காரணம் அவருக்கு மற்ற ஐவரும் சம அளவு தூரத்தில். தாக்குதல் யார் மேல் வேண்டுமானாலும் இருக்கலாம். வாசலை அடைவதற்கு அவரைத் தாண்டாமல் அந்த 150 சதுர அடி அறையில் வேறு ஷார்ட் கட் எதுவும் இல்லை. நான் தான் வாசலில் இருந்து அதிக தூரத்தில். எனக்கு லாங்க் ஜம்ப் போன்ற லாவகங்களில் கொஞ்சம் கூட பரிச்சயம் இல்லை


சத்தம் இன்னும் நிற்கவில்லை. நல்ல வேளை. பக்கத்து அறை ஆசாமிகள் காரிடார் விளக்கைப் போட்டார்கள். ஜன்னல் வழியாக வந்த வெளிச்சம் எனது பயத்தை பல மடங்கு ஜாஸ்தியாக்கியது. தரை ஆசாமி தனது பெட்ஷீட்ட்டை காற்றில் சுழற்றி சுழற்றி யாருடனோ யுத்தம் பண்ணிக் கொண்டு இருந்தார். எதிரே யாரோ நிச்சயம் இருக்கிறார்கள் என அப்போது நான் நம்பினேன். காரணம் அவரது பெட்ஷீட் சுழன்ற லாவகம். அவரது ஆக்ரோஷமான யுத்தகால வார்த்தைகள் (" இன்று நீ மாய்வதற்காகவே வந்துள்ளாய் ", "உனது யுத்த தந்திரங்கள் என்னிடம் பலிக்காது " etc .etc.). எனது அறையில் இருந்த மற்ற மனுஷ்ய நண்பர்கள் ரொம்ப ஜாக்கிரதையானவர்கள். தரை ஆசாமியின் பெட்ஷீட் வீச்சு மேலே தோளளவில் இருப்பதை சூட்சமமாக கணித்து அவரவர் கட்டிலுக்கு கீழே பதுங்கி இருந்தார்கள்.


தரை ஆசாமியின் சத்தமான இந்த திருவிளையாடல் மிக மிக விஸ்தீரமான அந்த ஹாஸ்டல் வளாகத்த்தின் வெளி விளிம்பில் வசித்தவர்களையும் இங்கே ஓடி வர வழைத்தது. வந்த எலோரும் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தனர். யாரும் என்னை ரட்சிக்க ஒரு உபாயம் சொல்லவில்லை.
கடைசியில் நமது தரை ஆசாமி யுத்தையும் சத்தத்தையும் நிறுத்தி மயக்கமானார்.


"சார் கதவைத் திறங்க " ஜன்னல் வழியே கோரஸ். எனக்கு பயம் போகவில்லை. ஒரு வேளை தரை ஆசாமி தோற்று விழுந்த்திருக்கலாம். அவரை வீழ்த்திய அந்த அமானுஷ்ய எதிரி அவர் நெஞ்சு மேல் கால் வைத்துக் கொண்டு இன்னும் அங்கேயே நிற்கலாம் என உத்திரவாதமாய் நம்பினேன். எனது அறையில் இருந்த யாரோ கட்டிலுக்கு அடியில் இருந்து தைரியமாய் வெளியே வந்து கதவைத் திறந்ததுதான் தாமதம். அவரை முந்திக் கொண்டு நான் வெளியே பாய்ந்தேன். அதற்கப்புறம் தரை ஆசாமியை டாக்டரிடம் கூட்டிப் போனார்கள். ஹாஸ்டலில் இருந்த வாட்ச்மேன் தமிழ் நாடு கவர்னர், மந்திரிகள் தவிர அந்த யுனிவர்சிட்டிக்கு சம்பந்தாமன எல்லோருக்கும் போன் செய்து விட்டார். கீழே காரிடார் முழுவதும் கூட்டம்.


இந்த சம்பவத்தில் எனக்கு ஒரிரண்டு லாபங்களும் இருந்தது


தரை ஆசாமியை டாக்டரிடம் கூட்டிப் போன பின்பு கூட்டமாக இருந்த எல்லோரும் அவரவர் ஜோலியை பார்க்க கலைந்த போது தான் எனது அறைக்கு பக்கத்து அறையில் தங்கியிருந்த திரு. சந்திரசேகரன் அறிமுகமானார்.


இந்த சம்வத்தை என் தாத்தவிடம் சொன்ன போது இது மாதிரி இக்கட்டுகளில் சொல்லத்தக்க ஒரு ரகஸ்ய மந்திரத்தை உபதேசம் செய்தார். அந்த மந்திரத்துக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்காமல் பத்திரமாய் இருக்கிறேன்.


சில வருடங்களுக்கு முன் இந்த சம்பவம் ஞாபகம் வந்ததும், அழகப்பா யுனிவர்சிட்டியில் விரிவுரையாளராக பணியாற்றும் நண்பர் முனைவர். மொரார்ஜியை தொடர்பு கொண்டு,


"ஸார் யுனிவர்சிட்டியில் விசாலாஷி ஹாஸ்டல் எல்லாம் இப்போ இருக்கா; இல்ல இடிச்சு மாத்தி கட்டிட்டாங்களா "


"கட்டடம் அப்படியே இருக்கு. ஆனா அதுல தான் எங்க CORPORATE SECRETARYSHIP DEPARTMENT இருக்கு" என்று சொல்லி என்னை ஒரு முறை காரைக்குடிக்கு வருமாறு அழைத்தார்.


கொஞ்சம் யோசித்து , "சரி சார் கட்டாயம் வரேன்; வீட்டுல கேட்டதாக சொல்லுங்க" என சொல்லி போனை வைத்தேன்.


இன்று காலை ஐந்து மணிக்கு எனது மனைவி , தன் தோழியிடமிருந்து அந்த அகால நேரத்தில் வந்த ஒரு ஹாஸ்ய எஸ்.எம்.எஸ் ஐ காட்ட எழுப்பிய போது திடுக்கிட்டு நமது தரை ஆசாமி மாதிரி கூச்சல் போட்டு எழுந்தேன்.

No comments: