Wednesday, 19 March 2008

நளவெண்பா-1
இன்று ஒரு நாள் லேசான ஜுரம் வந்து , லீவு போட்டுவிட்டு டாக்டரிடம் போய் பாராசிட்டமால் இன்ன இதர இத்தியாதி சின்னதும் பெரிசுமாய் மாத்திரைகள் முழுங்கிவிட்டு அவரது அட்வைஸ்படி முழு ஓய்வு எடுத்துவிட்டு இரவு ஒன்பது மணிக்கு ஆபிஸ் மெயில் செக் செய்து நாளைக்கு மனதளவில் தயாராகி எதாவது படிக்கலாம் என புத்தக அலமாரியில் கண்ணை ஓட்டி "புகழேந்தி"யில் நிறுத்தினேன்.புகழேந்தியின் நளவெண்பா ரசிக்க வியக்கவைக்கும் நாலுவரி வெண்பா. சில சாம்பிள் பார்க்கலாம்
அள்ளிக் கொளலாய், அடையத் திரண்டு ஒன்றாய்
கொள்ளிக்கும் விள்ளாத கூர் இருளாய், உள்ளம்
புதையவே வைத்த பொதுமகளிர் தங்கள்
இதயமே போன்றது - இரா


இரவை வருணிக்கும் பாடல் இதுஇரவின் இருட்டு அள்ளிக் கொள்ளத்தக்க மாதிரி ஒன்றாய் திரண்டு , வெளிச்சத்தால் விண்டு போகாததாய் இருக்கிறது எனச் சொல்லி அத்தோடு விடாமல் அது விலைமாதர் மனசு போல புதைந்த இருட்டாய் இருந்ததாய் சொல்லுகிறான் புகழேந்தி

சாயங்காலம் வருவதை எப்படிச் சொல்கிறான் கவனியுங்கள்
மல்லிகையே வெண் சங்கா வண்டு ஊத வான்கருப்பு
வில்லிகணை தெரிந்து மெய்காப்ப முல்லைஎனும்
மென்மாலை தோளசைய மெல்ல ந்டந்ததே
புன்மாலை அந்திப் பொழுது

வண்டுகள் மல்லிகை அரும்பையே வெண்ணிறச்சங்காகக் கொண்டு ஊதவும் , சிறந்த கரும்பு வில்லையுடைய மன்மதனானவன் மலர் அம்புகளை ஆராய்ந்து எடுத்துத் தன் உடம்பைப் பாதுகாத்துக்கொண்டு வரவும், முல்லை மலர் என்னும் மென்மையான மாலை தன் தோள்களில் அணியப் பெற்று அசைந்துகொண்டிருக்கவும் சிறிய மாலைக்காலம் என்னும் அரசு, மெல்ல நடந்து வந்தது.இந்த பாட்டின் முதல் வரி நீங்கள் ஏற்கனவே ராகவேந்திரா படத்தில் ரஜினி வாயசைக்க ஜேசுதாஸ் பாடும் "ஆடல் கலையே தேவன் தந்தது " என்ற பாட்டில் கேட்டதுதான்.படித்துகொண்டே வந்த நான் "நள தமயந்தி இன்ப வாழ்க்கை " என்ற TITLEலிட்ட பாடல்களில் ஸ்தம்பித்து நிற்கிறேன்."ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி ", "கால் வளைத்து " போன்ற சென்சார் பதங்கள் அந்த இரண்டு பாடல்களில் மிகுதியாய் காணப்படுவதாலும், பாடல்களை விளக்க முனைந்தால் இந்த போஸ்டிங் ADULTS ONLY CERTIFY செய்யப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளதாலும், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் இது போன்ற ஜிகினா சங்கதிகளை அவர்களே தேடிப் படித்து விடுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாகவும் மிக முக்கியமாக இதுபோன்ற சங்கதிகளை ராத்திரி 10 மணி வாக்கில் படித்தால் உண்டாகும் ______ களை கருத்தில் கொண்டு போதுமென வருணனைகளை நிறுத்திக் கொள்கிறேன்.

1 comment:

cheena (சீனா) said...

எதைச் சொல்ல வேண்டும் எதை மறைமுகமாகச் சொல்லி ஆவலைத் தூண்ட வேண்டும் என்ற வித்தி தெரிந்தவர் நீங்கள்