Saturday, 8 March 2008

RECRUITER

இந்த பதத்துக்கு சரியான தமிழ் நிகர் வார்த்தை கண்டுபிடித்துச் சொன்னால் அவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியை தருகிறேன். இந்த வியாசம் அதைப்ப்பற்றியது இல்லை. Recruiter உத்தியோகத்தில் உள்ளவர்களின் சௌகர்ய / அசௌகர்யங்களை சொல்லிவைப்பதுதான் . இந்த உத்த்யோகத்துக்கு பெரும்பாலும் பெண்கள் தான் வருகிறார்கள்.

காலையில் எழுந்து பதிசேவை இன்ன பிற சேவைகளை, தாய் பாஷையில் புலம்பிக்கொண்டே முடித்துவிட்டு , பஸ் / எலெக்ட்ரிக் டிரெயின் பிடித்து ஆபிஸ் நுழைந்ததுமே ஆங்கிலம் வந்து விடும். இந்த 'சடக் பாஷை மாற்றம்'
எப்படி நடக்கிறது என்பது பல நாள் ஆராய்ச்சிக்கு பிறகும் புரியவில்லை.
இவர்களின் தினசரி வேலை , நேற்றய சாயங்கால சம்பாஷணைகளின் தொடர்ச்சி போன்ற புண்ணிய காரியங்களுக்குப்பின் தொடங்கும்.

Requirement எனப்படும் ஜீவாதார சங்கதியுடன் வேலையை ஆரம்பிப்பார்கள்.

Requirement என்பது இன்ன வேலைக்கு இன்ன படிப்புடன் இத்தனை வருஷம் முன் அனுபவம் இந்த டெக்னாலஜியில் இன்ன இன்ன மாதிரி தகுதிகள் கொண்டு இந்த அளவுக்குள் சம்பளம் வாங்கும் இந்த அளவுக்கு மேல் சம்பளம் எதிர் பார்க்காத இத்தனை பேர் இத்தனாம் தேதிக்குள் வேணும் என்று கிளையன்ட் கம்பெனிகள் தரும் "ஆள் வேண்டும் " பட்டியல் . இதை வைத்துக்கொண்டு வேட்டை தொடங்கும் . இந்த இத்தனை போன்ற தகுதி உள்ள கேண்டிடேட் என செல்லமாக அழைக்கப்படும் மகானுபாவர்களின் விவரங்கள் NAUKRI, MONSTER போன்ற பேருதவியாளர்களின் வலை தளத்தில்(இவை தளங்கள் இல்லை புண்ணிய ஸ்தலங்கள்) இருக்கும். அவர்களை கவனமாக தேடி கண்டு பிடித்து போனில் பேசவேண்டும். அவர்களுக்கு புது வேலை மாறும் உத்தேசம் உள்ளதா என்கிற மகா ரகசியத்த்தை ஜாலக்காக கண்டுபிடித்தே ஆக வேண்டும். இது ஆதார விதி !! கேண்டிடேட் சரளமாக ஆங்கிலத்தில் உரையாட வல்லவரா என்பதை கவனிக்க வேண்டும். அப்புறம் அவர் இன்ன இந்த இத்தனை போன்ற விசேஷங்களை உண்மையிலேயே கொண்டுள்ளாரா என சரி பார்க்க வேண்டும் . அவர் இது வரை எத்தனை தடவை வேலை மாறியுள்ளார் - அதற்கெல்லாம் என்ன காரணம் போன்ற போலீஸ் கேள்விகளும் அவரிடம் கேட்டு அவரை பற்றி ஒரு குறிப்பு தயார் செய்ய வேண்டும் . இப்படி ஒரு சரியான ஆசாமியை கண்டுபிடிப்பதற்குள் பல அசௌகர்யங்கள் வரும். உதாரணங்கள் கீழே :

  1. வேலை பற்றி எல்லாம் கேட்டுவிட்டு கடைசிவரியில் சும்மா மார்க்கெட் எப்படி இருக்கு என்று பார்க்கிறேன் என் சொல்லும் வெறுப்பு ஆசாமிகள்
  2. Phone செய்த உடன் பேசாமல் இப்போது பேசவும் அப்புறம் பேசவும் என பேசவே இழுத்தடிக்கும் பந்தா ஆசாமிகள்
  3. நீங்கள் வேலை பற்றி சொன்னது பாதி தான் ; இன்னும் விவரமாக மெயில் அனுப்ப முடியுமா என கேட்கும் முன் ஜாக்கிரதை ஆசாமிகள்

இப்படியாக பல எரிச்சல்கள் சவால்களை தாண்டி சரியான ஆசாமிகளை இனம் கண்டு கிளயன்ட்டுக்கு "சிவி " எனப்படும் அவர்களது ஜாபிதவை அனுப்ப வேண்டும்

இதன் பின் தான் இந்த உத்தியோகத்தின் உச்சகட்டம்

கிளையன்ட் என்கிற அன்னபூரணன் கேண்டிடேடை நேரில் சந்தித்து interview எனப்படும் பரிசோதனை நடத்த முகூர்த்த நாளும் நேரமும் தருவார். இந்த முகூர்த்தத்துக்கு கேண்டிடேட் சரியான படி போய்ச்சேரும் படி செய்ய வேண்டியது இவர்களது வேலை.

கேண்டிடேட் குறிப்பிட்ட நேரத்தில் போகாமல் கழுத்தருப்பது; மொபைல் போனை எடுக்காமல் தொடர்புக்கு கிடைக்காமல் கண்ணா மூச்சி காட்டுவது ; அதே நாளில் வேறு interview க்கு போய் உட்கார்ந்து கொண்டு நக்கல் செய்வது போன்ற பிளட் பிரஷர் சமாசாரங்கள் ஏராளமாய் சந்திக்க வேண்டும்.

இதை தாண்டி கேண்டிடேட் interview க்கு போய் செலக்ட்டாக வேண்டும். செலக்க்ஷனுக்கும் வேலையில் சேருவதற்கும் இடையே ஒரு நீளமான அவஸ்த்தையான காலம் - இந்த தொழிலின் MINE WALK கால கட்டம்

  • "மேடம் எனக்கு வேற ஒரு சி.எம் எம் பைவ் லெவல் கம்பெனியில் இருந்து இதைவிட கூட இத்தனை லட்சம் ஆபர் வந்திருக்கு "என தொலை பேசி மூலமான அல்லது மெயில் மூலம் தெரிய வரும் counter offer அபாயங்கள்
  • "என்னை current employer ரிலீவ் பண்ண லேட் ஆகுது" என்பதான சால்ஜாப்புகள்
  • "எனக்கு இங்கேயே ஒரு வாய்ப்பு அமெரிக்கா போக வந்திருக்கு - அதனால " என்கிற வெளி நாட்டு புளி கரைசல்"
  • எங்க கம்பெனியிலேயே இப்ப எனக்கு ஹைக் தராங்க - அதனால இப்ப மாற வேண்டாம்னு பாக்கிறேன் என்பதான லஜ்ஜை இல்லாத வழிசல்கள்

இப்படி எதுவும் உபத்திரவம் தராமல் சமத்தாய் ஜாயின் பண்ணுகிற பரமாத்மாக்களும் ஏராளமாய் உண்டு.

இந்த மாதிரி பரமாத்மாக்களுக்காக நான் திருப்பதி ஸ்ரீ பாலாஜியிடம் வேண்டுவது

  • இவர்கள் கால காலத்துக்கும் இப்படியே சமத்து புத்தியுடன் இருக்க கிருபை செய்யுங்கள்
  • இவர்கள் வேண்டும் சகல சம்பத்துக்களையும் லேட் பண்ணாமல் கொடுங்கள்

குடும்ப கஷ்டம் , குழந்தையை பார்த்துக்க ஆளில்லை போன்ற பல சங்கடங்களை ,மறையாத ,மாறாத கஷ்டங்களை காட்டிக் கொள்ளாமல் உற்சாகமாய் போனில் பேசும் எனது சக பெண் RECRUITERS உற்சாகம் எனக்கு ஒரு டானிக்

உலக மகளிர் தினத்தில் எழுதிய இந்த வலைப்பதிவு, என்னுடன் பணியாற்றும் பெண் RECRUITERS க்கு சமர்ப்பணம்

2 comments:

ஜோசப் பால்ராஜ் said...

அய்யா, அதே ஆட்களை, குறைந்த அளவு அனுபவம் உள்ள கேண்டிடேட்டுகள் தங்களுக்கு நல்ல வேலை வாய்பு ஏற்படுத்தித் தருமாறு கேட்டு அணுகும் போது என்ன பாடுபடுத்துகின்றார்கள் என கொஞ்சம் பாருங்கள். அப்ப என்னைய படாதபாடு படுத்துனல்ல, இப்ப என் டர்ன், நான் உன்னை அலைகழிக்கிறேன்னு, அவன படுத்துன ரெக்ரூட்டர மட்டும் இல்லாம எல்லா ரெக்ரூட்டரயும் போட்டு தாக்குவாங்க. நான் எல்லாம் ஆரம்பத்துல எனக்கு அனுபவம் கம்மியா இருந்தப்ப வேலைகாக அணுகிய போது படாதபாடு பட்டேன். இப்போ நான் நல்ல அனுபவத்தோட இருக்கப்ப எனக்கு போன் பண்றவங்ககிட்ட கொஞ்சம் விளையாடனும்னு தான் தோணுது.

cheena (சீனா) said...

அனைத்துத் துறைகளிலும், குறிப்பாக மார்க்கெட்டிங்க் எனப்படும் சந்தைப்படுத்துதல் துறையில் உள்ள பெண்கள் படும் / படுத்தும் பாடு தான் பெரிய பாடு.

கடன் அட்டை வழங்கும் நிறுவனப் பெண்கள் கதை கூறவும் வேண்டுமா ?