இப்படி ஒரு சங்கதியை அனுபவித்து அறியாதவர்கள் ஒன்று குழந்தையாய் இருக்க வேண்டும் அல்லது இமய மலை , திருவண்ணாமலையில் வசிக்கும் ரிஷியாக இருக்க வேண்டும்
என்னைப் போல சேவை செய்யும் தொழில் சார்ந்தவர்கள் ( SERVICE INDUSTRY), வொர்க் பிரஷர் ஜாஸ்தி என சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்வோம். பெருமை தவிர இந்த பிரஷரை சாக்கிட்டு வாரக் கடைசியில் குளிந்த பார்லி ஜலம் என்று தீர்த்த யாத்திரை போகவும் வாய்ப்புகள் ஜாஸ்தி
வாடிக்கையாளர்களுக்கு எங்களது சேவையை படம் போட்டு விளக்கி ( POWER POINT PRESENTATION) அவர்களை நைச்சியம் செய்து, வேகம் , விவேகம், நம்பகத்தன்மை என்று பல உத்திரவாதம் தந்து பிஸினெஸ் ஆர்டர்கள் கவர்ந்து வரும் முன்னனி மறவர்கள் எங்கள் அலுவலக விற்பனை பிரிவு மேலாளர்கள். இது ஒரு டீம். இவர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற உடல், பொருள், ஆவி இவற்றை துச்சமாக மதித்து கருமமே கண்ணாயினார் வம்சமாய் கடமையாற்ற பல வீர ஆடவர் , வீர மங்கையர் கொண்டது ஒரு BACK END TEAM. நானிருப்பது இரண்டாவது டீமில். இந்த இரண்டு டீமும் காதலாய் கருத்தொருமித்து கரம் கோர்த்து வேலை செய்கையில் எல்லாம் சுளுவாய் தெரியும். கொஞ்சம் ஊடல் வந்தாலும் எல்லாமே பளுதான்.
விற்பனை பிரிவு மேலாளர்கள் எங்கள் அணியிடம் வேலை வாங்கும் தந்திரத்தைப் பார்த்தால் இவர்கள் போன ஜன்மத்தில் ஒரு விஷமக் குழந்தைக்கு சாதம் ஊட்டும் பேஜாரான வேலை பார்த்திருப்பார்கள் என நினைக்கச் சொல்லும். அவ்வளவு சாமர்த்தியமாக, "அதோ நிலா பார்" ," ஒரு ஊர்ல ஒரு ராஜா" மாதிரி, "அது வந்து கிளையண்ட் என்ன சொல்றார்னா", "இந்த கிளையண்ட் லட்டு மாதிரி. இப்ப சி.வி குடுத்தா இன்னும் 15 நிமிஷத்தில் FEEDBACK என்கிறதான பரிவு கலந்த போஷாக்கான வார்த்தைப் பிரயோகங்கள் இருக்கும். இதில் நிஜம் எத்தனை சதவீதம் என்பது உணர முடியாத விந்தை
விற்பனை பிரிவு மேலாளர்கள் பல நேரம் அபிமன்யு கணக்காய் யுத்த களத்தில் தனியாய் மாட்டிக் கொள்வர். எங்கள் BACK END TEAM சரியானபடி ஒத்துழைக்காத தருணங்களில், வாடிக்கையாளர்களிடம் மாட்டிக் கொண்டு புண்ணாகி என்னவோ சொல்லி சமாளித்து
சிதைவிடத்(து) ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றும் களிறு
பட்டுப்பா டூன்றும் களிறு
கணக்காய் ஊக்கமாய் நிற்பார்கள்.
அப்படி என்ன காரணம் சொல்லி சமாளிக்கிறீர்கள் என்று அந்த அணி நண்பர்கள் செந்தில், க்ருஷ்ண குமார் (KRUSHNA KUMAR- க்ருஷ்ண என்ற சமஸ்க்ருத வார்த்தைக்கு சரியான ஆங்கில ஸ்பெல்லிங் வைத்திருக்கும் இவருக்கு ஒரு தனி சபாஷ்), ரஞ்சித், வித்யா, ரோஹித் எல்லோரிடமும் கேட்டிருக்கிறேன். ஒரு மழுப்பலான சிரிப்பை பதிலாகத் தருவார்கள். தொழில் ரகஸ்யம் போலும்..
சரியானபடி டீல் முடிந்து வாடிக்கையாளர் திருப்தி அடைந்த சந்தர்பங்களில் அவர்கள் எங்களிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் போதும் இது அத்தனைக்கும் நீ தான் காரணம் என்று மகுடம் சூட்டும் போதும் நாங்கள் மனசளவில் ராஜா / ராணி டிரஸ் அணிந்து ஒரு சாரட் ஊர்வலம் வருவோம்.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
கூடி முயங்கப் பெறின்
என்று தாடி வைத்த அய்யன் திருவள்ளுவர் சொன்னது கிளு கிளுப்பான சங்கதிக்கு மட்டுமில்லை; அலுவலகத்தில் டீமில் உண்டாகும் ஊடலுக்கும் கூடலுக்கும் பொருந்தும்.
என்னை விரட்டி சுளுக்கெடுக்கும் ரோஹித்( ரோஹித்துக்கு தமிழ் தெரியாது !!!! ) உள்ளடங்கிய எங்கள் விற்பனை ப்ரிவின் வீர ஆடவர், வீர மங்கையருக்கு ஒரு ராயல் சல்யூட்டுடன் இந்த போஸ்டிங்கை சமர்ப்பிக்கிறேன்
2 comments:
அன்பு நண்ப
வேலைப்பளு பற்ரிய பதிவு உண்மையில் நடக்கும் செயல் தான் . இதனை இத்தனை விவரமாக - பார்லி ஜலம் - தாடிக்காரன் உட்பட எழுதியது அருமை அருமை. (க்ருஷ்ன - krushna)
ஆம் - தமிழ் மணத்தில் இணைந்துள்ளீர்களா ? தங்களின் அருமையான - பலகலைகளையும் தொடும் பதிவுகள் சக பதிவர்களுக்குத் தெரிகிறதா ? ஏன் ஒருவர் கூட மறுமொழி இட வில்லை. இப்பக்கம் யாருமே வர முடியாத பக்கமா ?
ஏன் புரியவில்லை.
அருமையான பதிவுகள் பல இருந்தும் ரசிகர் பட்டாளம் திரும்ப மறுப்பதேன் ? ஆத்ம திருப்திக்காக எழுதுகிறீர்களா ? மற்றவர்கள் படிக்க வேண்டும் என்ற நினைப்பே இல்லையா ?
சுட்டிக்காட்டுவதில் தவறில்லை என நினைக்கிறேன்
cheenakay@gamail.com
சுவாரசியமான பதிவு...நீங்கள் இப்போது இந்த 'back end team'ல் இருக்கிறீர்களா அல்லது 'Recruitment' டீமிலா?
Essex
சிவா
Post a Comment