Sunday, 18 December 2011
சங்கரன் எனும் மாமனிதன்
எனது பணியின் காரணமாக என்னைத் தொடர்பு கொள்பவர்கள் அதிகம் பேர்..அவர்களில் என்னை நினைவு வைத்துக் கொண்டே இருப்பவர்கள் குறைவு.
அவர்களுக்கு அவர்களது Curriculum Vitae க்குத் தகுதியானதொரு வேலையினை அமர்த்திக் கொடுத்தவன் எனும் ரீதியில் சந்தோஷமும், நினைவுகளின் ஏதாவது ஓரத்தில் சில சதவீதங்கள் நன்றியும் இருக்கலாம்.. நானில்லாவிட்டால் இன்னொருத்தர் அந்தக் காரியத்தைச் செய்திருக்கலாம்
சில வருஷங்களுக்கு முன்பு ஒருவர் ... Phone ல் கேட்டார்
'என் பெயர் சங்கரன். உங்களை சந்திக்க விழைகின்றேன் அப்பாய்ன்ட்மென்ட் கிடைக்குமா"
சராசரியானதொரு உயரம்.. என்னைப் போன்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு ஒல்லி. சிரித்த முகம்.. சிரிப்பிற்கிடையில் போனால் போகிறதென வார்த்தைகளைச் சேர்த்துக் கொண்ட உரையாடல். முதல் சந்திப்பில் ஒரு கேண்டிடேட்டை அணுகும் மனித வள மேம்பாட்டுத்துறை ஆசாமியாகத் தான் நானிருந்தேன். ஆனால் அவர் அப்படியில்லை.
அவரது அந்த முதல் கரிகுலம்விட்டே இன்றைக்கும் என் மெயில் பாக்ஸில் இருக்கின்றது.. அதன் பிறகு அவருக்கு பணி வாய்ப்புகளுக்கு தகுதியாக அந்த கரிகுலம்விட்டேயினைப் பட்டை தீட்டிக் கொடுத்திருக்கின்றேன். அதெல்லாம் கடந்து என் குடும்பத்தில் ஒருவர் போல மாறினார் சங்கரன்
நான் மாற்று வேலைக்காக ஒரு முறை கேண்டிடேடாக நேர் காணலுக்கு சென்ற் போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி, " இத்தனை வருஷம் .. நீங்கள் இந்தத் துறையில் இருக்கின்றீர்கள்.. நீங்கள் என்ன காரியத்தினை மிகவும் பெருமையாக நினைக்கின்றீர்கள்"
"தான் வேலை மாற்றத்தினை விரும்புவதாகவும், நல்ல வாய்ப்பு வந்தால் அதனைத் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொண்டு ஒருவர் என்னிடம் கேண்டிடேட்டாக வந்தார்.. ஆனால் அவர் இன்றைக்கு மிக நெருங்கிய நண்பராக , ஏன் ஒரு சகோதரர் போல ஆகிவிட்டார்.. இதனை எனது பழகும் தன்மைக்கு கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்"
"இதென்னங்க பிரமாதம் இது எல்லாருக்கும் ஃப்ரென்ட் கிடைக்கின்ற மாதிரி தானே"
"எனது தந்தை 2008 ல் நவம்பர் 3 ம் தேடி அதிகாலை 2.30 மணிக்கு பேச்சு மூச்சு இல்லாமல் நினைவிழந்த போது.. நான் முதலில் அவரைத் தான் துணைக்கு அழைத்தேன்.. எனது வீட்டுக்கும் அவர் வீட்டுக்கும் தூரம் அதிகம்.. நேரமோ அகால நேரம்.. ஆனால் அவர் மனைவியுடன் என் இல்லத்துக்கு வரும் போது மணி 3.30.. ஆஸ்பத்திரிக்கு செல்வது, அங்கே அதன் அவசரங்களைச் சமாளிப்பது இதை அனைத்தினையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார்.. அவர் மனைவி எங்கள் வீட்டில் இருப்பவர்கள் யாரையும் சமைக்க விடாமல் தானே எல்லாவற்றையும் செய்து கொடுத்தார்.. சங்கரன் அப்போது பன்னாட்டு வங்கி ஒன்றில் மிகவும் முதுநிலைப் பொறுப்பில் இருந்தார்.. எனக்காக 10 நாளும் லீவு போட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்கும் இன்ன பிற இடங்களுக்கும் அலைந்தார். எனது தந்தையின் மரணத்தின் போதும் அவர் தான் எல்லாவற்றிற்கும் அலைந்தார்; ஆஸ்பத்திரியின் ஆரம்ப நாளை நினைத்தால் என் கண்களில் நன்றிப் பெருக்கில் நீர் தளும்ப நிற்கிறது’
என்னைக் காட்டிலும் என்னை இன்டெர்வ்யூ செய்தவருக்கு சங்கரனை மிகவும் பிடித்துப் போனது போலும்.. அந்த இன்டெர்வ்யூவில் நான் தேர்வாகவில்லை என்பது தனி சங்கதி
ஆனால் என்னை இன்டெர்வ்யூ செய்தவர் என்னை அடிக்கடி தொடர்பு கொண்டே இருந்தார்..
இரண்டு நாட்களுக்கு முன்னால் என்னை போனில் அழைத்தார்.
"மௌளீ எப்படி இருக்கீங்க.. மிஸ்டர் சங்கரன் எப்படி இருக்கிறார்"
"எப்போதும் போல மாமனிதனாக இருக்கிறார் சார்"
"நீங்க சொல்வதையெல்லாம் வைத்துப் பார்த்தால் I think you owe him a lot and you could not repay him”
"ஆமாம் சார்.. என்னால் திருப்பித் தர இயலவே இயலாது.. சின்ன ஆசையுண்டு.. அவரைப் பத்தி உங்க கிட்ட சொன்ன மாதிரி இன்னும் நிறைய பேரிடம் சொல்லனும்னு"
அந்த ஆசையினை இன்றைக்கு ஓரளவு பூர்த்தி செய்து கொள்கிறேன்
நட்பை நட்பு கொண்டே சொல்லிக் கொடுத்த சங்கரன் எனும் மாமனிதன்
திருப்பாவைத் திறன்
இறை நம்பிக்கை இல்லாதவர்களிடம் பேச்சுக் கொடுப்பதில் அனுகூலங்களும் இருக்கத் தான் செய்கின்றன
சில வருடங்களுக்கு முன்பு இப்படியாக ஒருவரிடம் உரையாடும் சந்தர்ப்பத்தில், பேச்சு பெரியாழ்வார் குறித்தும், அப்படியே ஆண்டாள் குறித்தும் திசை கொண்டது.
ஆண்டாளின் "மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்" எனும் வைராக்கியத்தை அவர்," ஏங்க நான் கடவுளைத் தான் கலியாணம் செய்து கொள்வேன் என்பதாக ஒரு பொண்ணு சொன்னா, அவங்க அப்பா அதை நினைத்து பெருமைப்படுவாரா.. நானாயிருந்தா டாக்டர்கிட்டே கூட்டிட்டுப் போவேன்" என்று சொல்லிவிட்டு, என்னை மூலையில் மடக்கிக் கொண்டுபோய் நிறுத்திவிட்டு , அந்தப் பக்கம் இந்தப் பக்கம் நகர முடியாது அஸ்திரத்தால் கட்டி வைத்து விட்ட சந்தோஷத்துடன் சிரித்தார்.
அவரிடம் இனிமேல் இந்த சப்ஜெக்டில் பேசும் போது, அவர் என்னைக் கட்டிவைத்த அஸ்திரங்களைச் செயலிழக்கச் செய்யும் திறன் கொண்ட பின்பு தான் பேசணும் என நினைத்துக் கொண்டேன்
வருடங்கள் சில கடந்தன, நான் அந்த சப்ஜெக்டை மறக்காமல் அஸ்திரங்களைக் கட்டுடைக்க அவ்வப்போது தேடிப் படித்துக் கொண்டிருந்தேன்
எனது முயற்சியின் போதாமை காரணமாக் என்னால், ஆண்டாளின் பாசுரங்களில் Bridal Mysticism, Austerity , Apocryphal என்ற அளவிலேயே சுற்றிக் கொண்டிருந்தேன்.
பெருமாளுக்கு, என்மீது விஷேஷ ப்ரீதி இருக்கின்றதென நினைக்கின்றேன்.
வெள்ளிக் கிழமை 9 டிசம்பர் 2011, ஆபிசில் வழக்கமான வேலைகளில் இருந்தேன்.. பகல் சுமார் 2.30 மணியிருக்கும்.. போனில் என்னை இறையன்பு அவர்கள் அழைத்தார்.
"மௌளீ.. கடைசி நேரத்தில் அழைக்கின்றேன் என தவறாக நினைக்க வேண்டாம்.. நாளை மாலை தி. நகர், பி.டி தியாகராசர் மன்ற அரங்கில் , எனது புத்தகங்கள் வெளியீட்டு விழா இருக்கின்றது.. நீங்க அவசியம் கலந்து கொள்ள வேண்டும். விழா 5.30 மணிக்கு.. உங்களை 5.00 மணிக்கே எதிர்பார்க்கின்றேன்"
இதே வருஷம் மே மாதம், நான் காஞ்சிபுரத்துக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். காமாட்சி கோவிலில் அன்றைக்கு கூட்டம் அதிகம் என்பதாலும், அதில் முண்டிச் செல்வதில் எனக்கு இருக்கும் சாத்தியங்களை ஆராய்ந்து பார்த்துவிட்டு , குடும்பத்தினரை மட்டும் உள்ளே போகச் சொல்லி விட்டு, நான் காரிலேயே இருந்த போது இறையன்பு அவர்கள் என்னை அழைத்தார்.
அவர் முதன் முதலில் என்னிடம் பேசின சந்தர்ப்பம். என் பதிவுகளை அவர் படிக்கின்றார் என்பதில் தொடங்கி, அவற்றில் அவர் விரும்பிப் படித்த சிலவற்றை குறிப்பிட்டு பேசினார். அதன் பின்பு பல முறை என்னிடம் பேசி எனது பதிவுகள் குறித்துப் பேசி எனக்கு ஊக்கம் தந்திருக்கின்றார்.
10 டிசம்பர் 2011 என்னைக் கட்டி வைத்திருந்த அஸ்திரங்கள் செயலிழந்த நாள்.
புத்தக வெளியீட்டு விழாவுக்கு 4.30 மணிக்கே சென்று விட்டேன்.. வாசலில் நின்று எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்.. நான் தான் இன்னார் என்று சொன்னபோது மிகவும் சந்தோஷமாக வரவேற்று உபசரித்து மகிழ்ந்தார்.
அவரது புத்தகங்கள் காட்சிக்கு வைத்திருந்தார்கள்
நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும் , திருப்பாவைத் திறன், Ancient Yet Modern ; Management Concepts in Thirukkural என்ற புத்தகங்களை வாங்கி, அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டு அரங்கத்துள் சென்று அமர்ந்தேன்..
விழா தொடங்க இன்னும் நேரமிருக்கின்றது.. கையிலோ புத்தகங்கள்
மாபெரும் இயற்கையாக கண்ணனைக் கண்டாள் ஆண்டாள் என்பதை, எப்போதும் போல தகவல்கள், சுவாரசியங்கள், புதிய சிந்தனைத் தூண்டல் என்பதாக பல தளங்களில் பயணித்து இறையன்பு சொல்லி, என்னை பலவருடங்களாக கட்டியிருந்த அஸ்திரத்தின் கட்டவிழ்த்தார்
காலை உணவை ஏன் சாப்பிடுகின்றீர்கள் என்ற வியட்நாமின் புத்த துறவி Thích Nhat Hạnh குழந்தைகளைக் கேட்ட கேள்வி போல, நண்பர் ஒருவர் வால்டேருடன் நடத்திய உரையாடல் போல ... நான் சொல்லிக் கொண்டே போகலாம்.
மார்கழியின் மூன்றாம் நாள் (நாளைக்குத் தான் இந்த வருஷத்து மார்கழியின் மூன்றாவது நாள்) பாடும் கோதையின் ,
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!
எனும் பாசுரத்தினை அனுபவிக்கும் இறையன்பு அவர்கள் ஆண்டாளின் பாடல், தனியொரு மனிதனின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் அவாவில் பிறக்கவில்லை என்பதை சொல்லி,, அதனையே புத்தகம் முழுவதும் சொல்லியிருக்கின்றார்
பக்தி என்பது லீவு நாளில் கார் எடுத்துக் கொண்டு கோவிலுக்குப் போகின்றதென்பதான ஒரு பயணத்தினைக் குறிப்பது அல்ல..
எம் எஸ் சுப்புலஷ்மி அவர்களின் பஜ கோவிந்தம் இசைக் தட்டில் முகவுரையில் , ராஜாஜி சொல்வார், When Knowledge become fully matured it becomes Bakthi.. இதனை மிகவும் எளிமையாக புரிய வைக்கின்றது திருப்பாவைத் திறன்
Sunday, 4 December 2011
சனிக்கிழமை 03 டிசம்பர் 2011 அடுத்த பாதி
எனது தலைமுறைக்கு அடுத்த தலைமுறையில் எங்கள் குடும்பத்தில் கலியாணங்கள் வரிசையாக நடக்கத் தொடங்கியுள்ளன.. அதில் ஒன்றின் ரிசப்ஷனுக்கு செல்வதற்காக கிளம்பினேன்.
மௌண்ட் ரோடில் நிறைய வரவேற்பு பளபளப்புகள்.. கனிமொழி ஜாமீனில் வந்து சென்னை வருகிறார் என்பதை சென்னையில் எல்லோருக்கும் தெரிவிக்கும் விசுவாச ஊழியத்தினை இரண்டு பேர் குத்தகை எடுத்திருக்கின்றார்கள் போலும்.. அவர்கள் பெயர் தாங்கி.. வித விதமான காப்ஷனுடன்..
அந்த பேனர்களைப் பார்ப்பவர்களில் பலருக்கு என்ன மாதிரி உணர்ச்சிகள் உருவாகும் என்பது தெரிந்திருக்கும்.. இதனையும் தாண்டி இது மாதிரி பேனர்கள் வைப்பதன் சைக்காலஜி என்னவென்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே.. சாலை கடக்கும் பாதசாரிக் கூட்டம் என்னைக் கவனிக்க வைத்தது
இந்த பெடஸ்ட்ரியன்ஸ் அந்த அந்த இருப்பிடங்களின் கலாச்சார அடையாளம் என ஒரு சித்தாந்தம் வைத்திருக்கின்றேன்.. அந்தக் கூட்டத்தைக் கவனிப்போம்.
பலர் செல்போனில் பேசியபடியே கடக்கின்றனர். பொதுவில் எல்லோருக்கும் அடுத்து சிவப்பு விழுவதற்குள் ரோட்டின் அந்த் மூலையினை அடைந்து விட முடியும் என்கிறதான் தீர்மானம் அவர்கள் நடையின் நிதானத்தில் தெரிகிறது; எல்லா சிக்னலிலும் கடந்து செல்பவர்களில் இரண்டு பேராவது கர்ப்ப ஸ்திரீக்களாக இருக்கின்றனர். அப்படியானவர்கள் கூட நடந்து வருபவர்களிடம் பேசுவது சிக்னலுக்கு காத்திருக்கும் போது முன்வரிசை கிடைக்கும் போதெல்லாம் கேட்கிறது.. அந்தப் பேச்சுகளில் அவர்களின் மத்திய தர வாழ்க்கை இருக்கின்றது.. அவர்கள் அரசியல் பளபள பேனர்களை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதில்லை
அந்தப் பெண்களின் உலகத்தில் சம்பந்தப்பட்ட எல்லா அம்சங்களும் உடன் வேலை செய்யும் சகாக்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.. இந்தப் பகிர்தலின் காரணமாக உசுப்பேத்துதல் , ஆறுதல் செய்வது என இரண்டும் கலந்தே இருக்கின்றன.. இந்த மாதிரியான வாழ்க்கைச் சூழல் கொண்ட டிவி நாடகங்கள் சக்கை போடு போடுகின்றன.. இந்த நாடகங்களின் புரவலர்களாக சோப்பு, ஷாம்பு, பைனாஸ், கூல் டிரிங்க்ஸ் ... இத்தியாதி இத்தியாதி கம்பெனிகள் இருக்கின்றன
ஆறு மணிக்கு மேல் சிக்னல் முன் வரிசையில் ஸ்கூல் யூனிபார்ம், மிகவும் லகுவான எடை கொண்ட சைக்கிளில் விழப்போகும் பச்சைக்கு காத்திருந்து , அந்தக் காத்திருப்பில் பக்கத்து சைக்கிள் சகாவிடம் சச்சின் டென்டுல்கர் , மஹேந்திர சிங்க் தோனி எனப் பேசும் பசங்கள் ட்யூஷன் முடிந்து திரும்புகிறார்கள்
கோட்டூர்புரம் ரிவர் வ்யூ ரோடில் இருக்கிறது அந்த கலியாண மண்டபம்.. நான் போவதற்குள் கையில் பளபள் பேப்பர் சுற்றி சின்னதும் பெரிசுமாய் டப்பாக்களை வைத்துக் கொண்டு, கிஃப்ட் தந்துவிட க்யூ கட்டிக் கொண்டிருந்தார்கள்
நடப்பது எனது பெரியப்பா மகளின் மகனின் திருமண ரிசப்ஷன் என்கிறதான் ப்ரத்யேக சலுகை எடுத்துக் கொண்டு மேடையேறி, சுள் சுள் என அவர்கள் போட்டோ வீடியோ எடுக்க திரும்பி வந்து இரண்டாம் வரிசை நாற்காலியில் அமர்ந்தேன்.
எனது சொந்தக்காரர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு இரண்டு சங்கதிகள் நன்றாகத் தெரிந்திருக்கின்றது
"ஏன்டாப்பா நீ என்னமோ ப்ளாக் எழுதிண்டு இருக்கியாமே"
"சுகர் கண்ட்ரோல்ல இருக்கோல்லியோ"
சில சொந்தங்கள் எத்தனை வருஷம் கழித்துப் பார்த்தாலும் ஒரே மாதிரி உடல்வாகு கொண்ட்வர்களாக இருந்தார்கள்
சிலருக்கு அந்த லாவகம் கை கூடவில்லை என்பது உத்திரவாதமாகத் தெரிந்தது.. அவர்கள் நடந்து வரும்போது சுவற்றுக்கும், சைடில் முதல் நாற்காலி வரிசைக்கும், இடையிலான அகலம் போதவில்லை.. நாற்காலிகளை வரிசையாக நகர்த்திக் கொண்டே வந்து,
"நீ மதராசிலே தான் இருக்கியான்னே சந்தேகமாக இருக்கு.. எங்காத்துக்கல்லாம் வரதேயில்லை " என புகார் படிக்கின்றார்கள்.. போனால் போகிறதென அவர்கள் வசிக்கும் பிராந்தியத்திற்கு சென்னை பின்கோடு வரிசையில் இடம் தந்திருக்கின்றார்கள் எனச் சொன்னால்
"சோழிங்க நல்லூர் என்ன அத்தனை தூரமா” என்றும் கேட்கின்றார்கள்
"ஏம்பா மொபைல் நம்பர் மாத்திட்டியா"
"இல்லையே மாமா.. நான் இன்னும் ரென்டு ஜென்மாவிற்கு ஏர்டெல் கம்பெனியாருடன் ஒப்பந்தம் போட்டிருக்கேன்.. ஆமா என்னோடதுன்னு நீங்க என்ன நம்பர் வச்சிருக்கீங்க"
இந்தக் கேள்விக்கு பதில் தேடிப் போன மாமா நான் மண்டபத்தை விட்டு கிளம்பும் வரை காணவில்லை
ஏகதேசம் போன வருஷத்தில் இது போன்றதொரு முகூர்த்த சீசனில் கலியாணம் செய்து கொண்டவர்கள், புதுசாக பிறந்த நாட்கள் / சில மாசங்கள் வயதே உடைய தங்கள் புதுகுழந்தைகளை வீட்டில் பெரியவர்களிடம் விட்டுவிட்டு வந்திருக்கின்றார்கள் . ஆனால் நீலக் கலரில் டர்க்கி டவலில் சுற்றி, பொக்கை வாய் சிரிப்பை தங்கள் ப்ளாக்பெர்ரியில் பத்திரப்படுத்தி, வயதான பெரியவர்களிடம் காட்டி சந்தோஷப்படுகிறார்கள் & சந்தோஷப்படுத்துகிறார்கள்
எழுபது வயது கடந்து, இது போன்றதான் சந்தர்ப்பங்களில் கலந்து கொள்பவர்களிடம் இருப்பதான் பொதுத் தன்மையினை உணரமுடிகின்றது.. நேரடி, ஒன்று விட்ட என்பதான் மிகப்பெரிய பேரக்குழந்தைகளின் சாம்ராஜ்யத்தில் எல்லா இளவரசர்களையும் இளவரசிகளையும் பார்த்துப் பேசி அவர்கள் கைபிடித்து ஆசிர்வதிக்கின்றார்கள்
கனகாரியமாக என்னிடம் மெயில் ஐடி வாங்கும் சொந்தங்கள், அதைத் தொலைத்துவிட்டு, அடுத்த ரிசப்ஷனுக்கு அதே கேள்வியை பத்திரமாக ரிசர்வ் செய்து வைத்திருப்பார்கள்
நின்று கொண்டே சாப்பிடும் இந்த பஃபே நாகரீகம் எனக்கு ஒத்து வருவதில்லை.. அங்கே இருக்கும் சொற்ப நாற்காலிகளுக்கும் சீனியர் சிட்டிசன் எண்ணிக்கைக்கும் சம்பந்தமேயில்லை
முகலாய கிட்சன்அடையாளங்கள், இது போன்ற விருந்துகளில் நுழைந்து விட்டதை கவனிக்க முடிகின்றது
ருமாலி ரொட்டி...
இந்த ரொட்டிக்கும் டிஷ்யூ பேப்பருக்கும் அதிக வித்தியாசம் தெரிவதில்லை..
அநியாயத்துக்கு மெல்லிசாக இருக்கும் இந்த ஐட்டத்தினை மட்டும் சாப்பிட்டு பசியாறி விட்டதாக ஒரு மாமி சொல்லிக் கொண்டிருந்தார்
வீட்டுக்கு வந்த உடன் மனைவியிடம் கேட்டேன்.. அடுத்த ரிசப்ஷன் என்னிக்கு
Saturday, 3 December 2011
சனிக்கிழமை 03 டிசம்பர் 2011 முதல் பாதி
கமல், ரஜினி படங்களில் இருந்து கலர் கலராக பாடல்கள்.. பாடல்களில் ஒரு பொது அம்சங்கள் இருந்தன.. தரையெங்கும் கண்ணாடி.. அவற்றின் பின்னாலே பச்சை , சிவப்பு, மஞ்சள் என விளக்குகள்.. இப்படி அப்படி எரிந்து கொண்டிருந்தன.. லோகத்தில் இருக்கும் அனைத்து ஜிகினாக்களையும் சேகரித்துக் கொண்டு வந்து நடன மங்கைகளின் உடைகளில் பொருத்தி ஆடவிட்டிருந்தார்கள்.. அந்த மங்கைகளில் சிலருக்கு மட்டும் க்ளோசப் பாக்கியம் கிடைத்திருந்தது.. சிலருக்கு முகம் க்ளோசப்பில் காட்டப்படவில்லையென்றாலும், குனிந்து நடனமிடுவது போல் காட்சி அமைத்து, அவர்களே சொற்ப துணியில் ரவிக்கை போன்றதான ஒன்றினைக் கொண்டுமறைத்து வைத்திருக்கும், மேலழகினை காமிராவுக்கு சில மில்லி மீட்டர்கள் சமீபத்தில் கொண்டு வந்து விலக்கிப் போனார்கள்
நாயகர்களாகப்பட்ட ரஜினி / கமல் உடன் ஆடும் இரண்டு நடன மாதுக்கள்.. அவர்களின் காஸ்ட்யூமில் வித்தியாசம் இருந்தது.. இன்ன பிற நடன மாதுக்கள் அணிந்திருக்கும் துணியின் மொத்தப் பரப்பில் சுமார் 70 சதவீதம் கழிவு செய்து இவர்கள் துணி அணிந்திருந்தார்கள்.. இவர்களுக்கு இரண்டு விதமான க்ளோசப் பாக்கியங்களும் அனுக்கிரஹம் ஆகியிருந்தன.
ஏதாவது ஒரு காஸ்ட்யூம் மாறும் சந்தர்ப்பத்தில் ரஜினி / கமல் ப்ரௌன் கலரில் தோலினாலான வஸ்திரம் தரித்து அபத்தமாக ஆடினார்கள்.. பின்னனிக் குரல் மலேசியா வாசுதேவன்,, இல்லெயன்றால் கட்டைக் குரலில் எஸ் பி பாலசுப்ரமண்யன்..
இப்படியாகப் போய்விடுமா நாள்.. இல்லை இல்லை
உங்களைப் பார்க்க விரும்புகிறேன்.. என்பதான் அந்த செலிபிரிட்டியின் அழைப்பினை ஏற்று இன்றைக்கு சென்று பார்த்து வரலாம் என நினைத்து அவருக்குப் ஃபோன் செய்தேன்.. இடம் தெரிந்து கொண்டேன்
கே. கே நகர் வழியாக விருகம்பாக்கம் செல்லும் மார்க்கத்தில் எல்லா ரோடும் குறைந்த பட்சம் 80 அடி விஸ்தீரணம் இருக்கின்றது.. அதிலே சினிமாவுக்கு அவுட்டோர் ஷூட்டிங்கிற்கு உபயோகம் ஆகும் வாகனங்கள்.. சாஃப்ட்வேர் கம்பெனியில் ஊழியம் செய்பவர்களை காலையில் கவர்ந்து சென்று அகால நேரத்தில் இறக்கிவிடும் கம்பெனிப் பேருந்துகள்.. வடியாமல் இருக்கும் மழைத் தண்ணீர்.. அதற்குள் நின்று கொண்டிருக்கும் ஆட்டோ.. ஹெல்மெட் வியாபாரிகள்.. திராவிட / காங்கிரஸ் கட்சிகளில் தலைவர்கள் நினைவாக எழுப்பப்பட்டுள்ள் பஸ் பயணியர் நிழற்குடை.. ரோடு போட்டுவிடுவார்கள் என்பதான அபத்த நம்பிக்கையூட்டும் தார் கலக்கும் எந்திர வாகனங்கள்.. அம்மா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் என்பதாக ஜெயலலிதாவுக்கு வயசாகி விட்டதை நினைவுபடுத்தும் பளபள பேனர்கள்.. என்பதான பல ரூப ஆக்கிரமிப்புகள் போக என்பது அடியில் எட்டு அடிதான் வாகன போக்குவரத்துக்கு மிச்சமிருக்கின்றது..
அதிலே மிகுந்த கனத்த ஆகிருதி கொண்ட என்னைப் போன்ற ஆசாமிகளைச் சுமந்து கொண்டு 90 சி.சி ஸ்கூட்டர் சுலபமாகப் போய் வரலாம்..
அந்த தெருவின் மொத்தமான சொற்ப அகலத்தில் 60 சதவீதம் எதற்காகவோ முந்தின இரவு தோண்டப்பட்டிருந்தது.. அதனை இன்றைக்கு காலையிலே அப்டேட் செய்திருந்த கூகிள் மேப்ஸை வியந்து கொண்டேன்..
இரண்டாவது மாடியில் வீடு.. காலிங் பெல் அடித்தேன்..
வாங்க மௌளீ என்று சொல்லி உள்ளே அழைத்துப் போனார்.. பாரதி மணி சார்
சுமார் இரண்டு மணி நேரம்.. பேசிக் கொண்டிருந்தோம்..
பொதுவில் எனக்கு என்னிலும் வய்தானவர்கள் தான் நட்பு வட்டத்தில் ஜாஸ்தி.. ஆனால் அவர்களில் யாரும் என் தந்தை வயதுக்கு இருந்ததில்லை. எனக்கு முந்தைய தலைமுறையின் ஒருவரால் என்னை இப்படி வசீகரமாகப் பேச்சினைக் கவனிக்க வைக்க இயலும் என்பதை இத்தனை சமீபத்தில் அமர்ந்து கேட்பது என்பது அபூர்வமானதொரு சந்தர்ப்பம்
அப்போதைய சி. என் அண்ணாதுரை எம்.பி ஆக இருந்த போது, "மணி ஒரு நல்ல ஐயர் ஹோட்டலாக அழைத்துப் போங்க. காஃபி சாப்பிடணும்'னு சொன்னாராம்
இவரும் அவரை கரோல்பாக்கில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு சொன்னாராம், "இந்த ஹோட்டல் அய்யர் ஹோட்டல்.. ஆனால் அவர் நல்ல ஐயரா இல்லையானு எனக்குத் தெரியாது"னு சொன்னாராம்
இப்படி சொல்லும் போது அவரே தயாரித்த காஃபியினை எனக்கு தந்துவிட்டு சொன்னார்.
அவரது டெல்லி வாழ்க்கை, நாடகங்கள், அவரது பெர்சனல் வாழ்க்கை, சமைக்கும் திறமை,, மிகக் குறிப்பாக ஆவக்காய் ஊறுகாய், பைப்பில் திணிக்கப்படும் பல நாட்டு புகையிலை, அவரது மாமனார் பெரியவர் கா.நா.சு அவர்கள் , இன்னும் பல புத்தகங்கள், நாஞ்சில் நாடன் வந்து தங்கியிருந்தது என சஞ்சரித்து இன்னும் மிச்சமிருக்கின்றது என சொன்னாலும்..
நான் கிளம்பலாம் என யத்தனித்தேன்..
தனது ம்யூசிக் கலெக் ஷனில் இருந்து மதுரை மணி அய்யரை விட்டு என்னை நகரவிடாமல் செய்தார்.
நீளமானதொரு ஆலாபனை இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே இன்ன ராகம் என கேட்பவ அடையாளம் காணத்தக்க்தாய்ப் பாடும் அபார மேதமை மதுரை மணி அய்யருக்கு உண்டு
ஸ்ரீ ரஞ்சனி
ஸொக ஸுகா ம்ருத ங்க தானமு ஜத கூர்ச்சி நிநு
ஜொக்க ஜேயு தீ ருடெ வ்வோடோ
நிக மசிரோர்த் த்த மு கல் நி க
நிஜவாகுலதோ ஸ்வரசு த முதோ
யதி விச்ரம ஸத் ப க்தி வி
ரதித் ராஷாரஸ நவரஸ
யுத க்ருதிசே ப ஜியிஞ்சே
யுக்தி த்யாகராஜூநி தரமா ஸ்ரீ ராமா
வேதங்களின் முடிவாகிய உபநிஷதங்களின் பொருள் நிறைந்து உண்மையான வாக்குடன் ஸ்வரசுத்தத்துடன் சொகுசாக ம்ருந்தங்க தாளம் சேர்த்து உன்னை மயங்கச் செய்யும் தீரன் எவனோ
எதுகை , விச்ரமம் ( ஓய்வு), உத்தம பக்தி, பத வாக்கியங்களின் முடிவில் விச்ராந்தி, திராட்சையின் ருசி, நவரசங்கள் இவற்றுடன் கூடிய க்ருதிகளால் உன்னை பஜனை செய்யும் சாமர்த்தியம் இந்த தியாகராசனுக்கு சாத்தியமா ராமா
எதிரே பேச்சுக் கேட்டுக் கொண்டு இருப்பவனுக்கு இப்படி ஒரு நவரசம் தர பாரதி மணி அவர்களுக்கு ரொம்பவே சாத்தியம்
இன்னும் ஜாஸ்தி கேட்டுக் கொண்டிருக்கவும்.. அவர் தயாரிப்பில் ஆவக்காய் ஊறுகாய் ( சார் 3 பாட்டிலாவது .. ப்ளீஸ்) வாங்கவும் மறுபடியும் போக வேணும்
அவர் தான் எழுதிய பல நேரங்களில் பல மனிதர்கள் புத்தகத்தை கையொப்பமிட்டுத் தந்தார்..
விடைபெற்று வீட்டுக்கு வந்து ஒரு க்ளான்ஸ் படித்தேன்.. அவர் எழுத வேண்டியதில் மிகக் கொஞ்சம் தான் எழுதியிருக்கின்றார் எனத் தோன்றுகிறது
அடுத்த வால்யூம்கள் எப்போது பாரதி மணி சார்..
Saturday, 26 November 2011
இவர்கள்-1
மத்திய அமைச்சர், சரத் பவாரினைக் கன்னத்தில் அறைந்ததன் எதிரொலியாக, இணையத்தின் சமூக தளங்களில் பரிமாறப்பட்ட கருத்துகள் உரையாடல்களில், பிரபல எழுத்தாளர், இரா. முருகன் அவர்கள் பதிந்திருந்த ஃபேஸ் புக் மெசேஜ் என்னை இதனை எழுதத் தூண்டியதெனச் சொல்லலாம்
காவியக் கதாபாத்திரங்களில் ஒருவரைக் கன்னத்தில் அறைய வாய்ப்புக் கிடைத்தால் கொலவெறியோடு கையை ஓங்குவது யாரை நோக்கி? எனக்கு - மகாபாரதத்தில் தருமன் என்பதாக முருகன் அவர்கள் சொல்லியிருந்தார்
பாரதம் சொல்ல விழைந்த மூலக் கருத்தின் அடையாளம் தர்மன் என்பது நான் நம்புகின்ற சிந்தனை. அதனை மறுமொழியாக்கி
Draupadi tells her husband, to give up this forest living, raise an army and fight evil kauravas for what is this rightfully thiers,
I think king of men, is time to use your authority on the greedy dhiridharashtras who are always offensive. there is no more time to ply the kurus with forgiveness: and when the time for authority has come, authority must be employed. the meek are despised, but the people shrink from the severe; he is a king who knows both
Yudhishtra respons by reminding draupadi that he has given his word. to figh, he says to her is easy; to forgive is more difficult. to be patient is not to be weak; to seek peace is always wiser course. Draupadi however wonders why her husband does not feel outrage, like kshatriya warrior, at the injustice of their situation
why does not your anger blaze ? truly O best of bharathas, you have no anger, else why is that your mind is not moved at the sight of your brothers and me ?
YUDISHTRA : FOREBEARANCE IS SUPERIOR TO ANGER
------
Let me add what the German Philosopher Immanuel Kant said : when moral worth is at issue, what counts is not actions, which one sees, but those inner principles of action that one does not see
------
பாரதம் சொல்ல வந்த சாரத்தின் மொத்த வடிவம் தர்மன் தான்.. முருகன் சார் கையைக் கெட்டியா புடிச்சுண்டு வாண்டாம் சார்னு சொல்லுவேன்.
இந்த மேற்கோள் குருசரண்தாஸ் எழுதிய The Difficulty of being good என்ற புத்தக்த்திலிருந்து
பிறகு உதித்த சிந்தனை தான் இந்த தொடர்
காப்பியக் கதாபாத்திரங்களை முன்னிறுத்தி ஒரு தொடர் பதிவு
பாரதத்திலிருந்தே தொடங்கலாம்.. அகர வரிசையில்
அபிமன்யு
அர்ஜுனன்
அஸ்வத்தாமன்
பீமன்
பீஷ்மர்
தர்மன்
த்ருஷ்டத்யும்னன்
திருதராஷ்ட்டிரன்
திரௌபதி
துரோணர்
துச்சாதனன்
துரியோதனன்
கர்ணன்
காந்தாரி
க்ருஷ்ணன்
குந்தி
நகுலன்
சகாதேவன்
சகுனி
விதுரன்
என்பதாக நான் ஒரு முதற்கட்ட பட்டியலைத் தயார் செய்தேன்.. இவற்றில் விட்டுப் போனதாகக் கருதப்படும் பெயர்களை நண்பர்களும் சொன்னார்கள்
கதாபாத்திரங்கள் வெறும் புனைவின் வடிவமல்ல என நமது கிரேக்கப் பாட்டன் அரிஸ்டாட்டில் Poetics ல் சொன்னதில் எனக்கு முழு சம்மதம் இருக்கின்றது
இந்த முதல் பட்டியலில் யாரிடமிருந்து தொடங்கலாம் என்பதில் எனக்கு தடுமாற்றமும் தீர்மானமும் கலந்து இருக்கின்றது
அதை சீக்கிரமே முடிவுக்குக் கொண்டு வந்து தொடரை தொடங்குகிறேன்
இவர்களில் யாரிலிருந்து தொடங்கலாம் என்று நீங்களும் சொல்லலாம்.. சுருக்கமாக ஒரு காரணமும் சொல்லி..
Thursday, 24 November 2011
பீஷ்மர் சொன்ன கதை ( கதை நம்பர் 3)
காட்டிலே ஒரு வேடன் மாலை வேளையில் வலை விரித்துச் செல்வான். இரவு அதிலே சிக்கும் விலங்கினை தன் வேட்டைப் பொருளாக மறுநாள் காலையிலே எடுத்துச் செல்வான் அப்படி அவன் ஒரு நாள் விரித்த வலையில் ஒரு பூனை சிக்கியது.
காலையிலே அந்தப் பக்கம் வந்த எலி ஒன்று பூனை வலையிலே சிக்கியிருப்பதை பார்த்து ஆனந்தம் கொண்டது. “அப்பாடா பூனை சிக்கிச்சி. வேடன் வந்து இந்தப் பூனையைக் கொண்டு செல்வான். நாம இனிமே சுதந்திரமா இருக்கலாம் “ என நினைத்த எலி குதியாட்டம் போட்டது. அப்போது அந்த எலியைப் பிடித்துவிடும் நோக்கில் ஒரு கீரி பாய்ந்து வந்த்து. ஒரு கோட்டானும் வானில் இருந்து எலியைக் குறிவைத்துப் பறந்து வந்தது. பூனைத் தொந்தரவு இருக்காது என்ற எலியின் ஆனந்தம் ஷண நேரம் தான் நிலைத்திருந்தது. ஓடி சென்று வலையில் ஒளிந்தது.
அங்கிருந்த படி பூனையிடம் பேசியது.
”பூனையாரே !. நான் உங்களை இந்த வலையின் பிடியிலிருந்து விடுவிக்க தயார்.ஆனால் அதற்காக நான் உங்கள் அருகில் வந்த்தும் நீங்கள் என்னை லபக்கென கடிக்கக் கூடாது”
எலியின் இந்த யோசனை அதன் பயத்தின் காரணமானது. அதற்கு, பூனை, கீரி, கோட்டான் என மூன்று விரோதிகளை ஒரே நேரத்தில் எதிர் கொள்ள் திராணியில்லை. எதிரியில் ஒருவர் இப்போது ஆபத்தில் இருக்கிறார். அவருடன் நாம் தற்காலிக நட்பு கொண்டு அவரை விடுவித்து அதன் மூலம் தானும் மற்ற இரண்டு எதிரிகளிடமிருந்து தப்ப ஒரு வாய்ப்பு. இப்படியான சிந்தனை எலியுடையது.
எலியின் யோசனையினைப் பூனை ஏற்றது. எலி வேகமாக வலையிலிருந்து ஓடி வந்து பூனையின் மடியில் படுத்தவாறு வலையினை தன் கூர்மையான பல்லால் கடித்து வலையினை அறுக்கத் தொடங்கியது.
எலி இப்போது பூனையுடன் நட்பு கொண்டது கண்ட கீரியும், கோட்டானும் அங்கிருந்து விலகின.
பூனை எலியிடம், “என்னப்பா இத்தனை மெதுவாக கடிக்கிறாய். வேடன் வருவதற்குள் நான் தப்ப வேண்டாமா ‘ என்றது
“ நான் காரணமாகத்தான் மெதுவாக செய்கிறேன். அதோ தெரிகிறதே ஒரு ஒற்றையடிப்பாதை அது வழிதான் வேடன் வருவான். அவன் தொலைவில் வரும் போதே இங்கிருந்து பார்த்துவிடலாம். அவன் வருவதற்கு முன்பே நான் இந்த வலையினை முழுவதும் கடித்து உன்னை விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடமாட்டாய் என்பது என்ன நிச்சயம். வேடன் வந்தபின் அவன் வலையிலே நீ சிக்கியிருப்பதைப் பார்ப்பான். உடனே விரைந்து இந்த இட்த்தை அடைய வேகம் கூட்டுவான். நான் அந்த சமயம் பார்த்து உன்னை முழுவதும் விடுவித்தால் உன் கவனம் அவனிடமிருந்து எப்படியாவது தப்ப வேண்டும் என்பதில் இருக்கும் . என்னைக் கடித்து விழுங்க வேண்டும் என்ற எண்ணம் உனக்கு அப்போது வராது”
அதே போல் தூரத்தில் வேடன் தலை தெரிந்த்து. அவனும் வலையிலே பூனை சிக்கியிருப்பதைப் பார்த்துவிட்டான். நடையிலே வேகம் கூட்டினான், எலியும் தன் கடிக்கும் வேகத்தை அதிகப்படுத்தியது. டக்கென வலை முழுமையாக அறுந்த்து. பூனையும் எலியும் வேடனிடம் பிடிபடாமல் ஓடினர்.
நெடுந்தூரம் ஓடிக் களைத்தனர்.
ஓர் ஆற்றங்கரையில் நின்றனர்.
பூனை எலியினை நன்றிப் பெருக்குடன் பார்த்து, ”தக்க சமயத்தில் என்னைக் காத்தாய். நான் இனி உன் நண்பன். என் பூனை இனமே உன்னை ஒன்றும் செய்யாது. வா இருவரும் இணைந்தே இந்தக் காட்டிலே வாழலாம்” என்றது.
”இதோ பாரப்பா.. கீரியிடமிருந்தும் கோட்டானிடமிருந்தும் தப்பிக்கவே
உன்னிடம் வந்தேன். நாம் நட்பு கொள்வதென்பது இயற்கையாகாது. காரணம் என் இனம் உன் இனத்தின் உணவு. அது தான் இயற்கை. அதை உன்னால் மாற்ற முடியாது.
அது போல உன் பூனை இனமே என்னை நட்பாக ஏற்கும் என்பது சாத்தியமில்லாத விஷயம். அப்படி உன் இனம் சார்பாக ஒரு உத்திரவாத்த்தினை நீ எப்படித் தரமுடியும். நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள உன்னிடம் வந்தேன். நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ள என் உதவியை ஒப்புக் கொண்டாய். இது அவ்வளவு தான்.” எனச் சொல்லி வேகமாக ஓடி மறைந்தது
Wednesday, 23 November 2011
பீஷ்மர் சொன்ன கதை ( கதை நம்பர் 2)
”பாட்டனாரே ! நல்லொழுக்கம் கொண்ட பெண்கள் எப்படி விளங்குகிறார்கள்?”
“தர்மா இதற்கு நான் இரண்டு பெண்களுக்கிடையே நிகழ்ந்த உரையாடலைச் சொல்கிறேன்...
ஸூமனை எனும் பெண், சொர்க்கத்துக்கு அப்போது தான் வரும் சாண்டிலி எனும் பெண்ணைக்
கேட்கிறாள்
“நீ வரும் போது பார்த்தேன்.. மிகவும் ஒளியுடன் பிரகாசமாக வந்து இறங்கினாய்.. நீ
பூலோகத்திலே என்ன தவம் செய்தாய்.. என்ன மாதிரி யாகம் செய்தாய்”
“அதெல்லாம் ஒன்றும் இல்லை; நான் என் கணவனுடன் சுமூகமாக இருந்தேன். என் மாமியார்
, மாமனாருடன் நல்லுறவு வைத்திருந்தேன். என் குழந்தைகளை கோபித்ததில்லை.. என்
வீட்டில் பொருட்களை கவனமாக வைத்திருந்தேன். உணவு பொருட்களையும் தானியங்களையும்
கண்டபடி விரயம் செய்ததில்லை.. உணவு உண்ணும் போது அவை சிந்தாமல், விரயமாகாமல்
பார்த்துக் கொண்டேன்.. கணவன் வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிட்டால் நான்
அலங்காரமே செய்து கொள்ள மாட்டேன்”
-----------------------------
உபரியாகக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம் ;
கணவன் ஊரில் இல்லாத போது அலங்காரம் எதற்கு என கேட்கும் பாட்டு ஒன்று விவேக
சிந்தாமணியில் இருக்கிறது தெரியுமோ
உண்ணல்பூச் சூடல் நெஞ்சுஉவத்தல் ஒப்பனை
பண்ணல்எல் லாமவர் பார்க்கவே அன்றோ
அண்ணல்தம் பிரிவினை அறிந்தும் தோழீநீ
மண்ணவர் தனைஇது மடமை ஆகுமால்
இதே மாதிரி நம்ம பாட்டி ஔவை சொன்னதும் ஒன்னு இருக்கு
நாளல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே ஆளல்லா மங்கைக்கு அழகு
ராமாயணத்திலே இப்படித்தான் இராமனைப் பிரிந்தாள் சீதை.. அசோகவனத்தில் அலங்காரமின்றியே இருந்தாள்.. அவளைக் கண்ட அனுமன் இதை இராமனிட்த்திலே சொல்லியும் இருக்கான்.. ஆனால் இலங்கை மீது படை கொண்டு இராவணன் வதமும் முடிந்து இராமன் சீதையைப் பார்க்க இருக்கும் சமயம்..
சீதை தான் அதே கோலத்தில் தான் வர விழைகின்றாள்.. ஆனால். விபீடணன் வேண்டுகோளினால் அலங்காரம் செய்து கொண்டு வருகிறாள். இதைக் கண்ட இராமன் சீற்றம் கொண்டு ,” ஒரு குடும்ப்ப் பெண் கணவல்லாத தருணத்திலே இப்படி அலங்காரம் செய்வாளா என
கம்பராமாயணம் யுத்த காண்டம் திருவடி தொழுத படலம் பாடல் 47 முதல் 55 வரை
இராமனின் சீற்றம்
பீஷ்மர் சொன்ன கதை ( கதை நம்பர் 1)
“சில நேரங்களில் நல்லவர் தீயவர் போலவும் தீயவர் நல்லவர் போலவும் காட்சி
அளிக்கிறார்கள் . அப்படியான தருணத்திலே அவர்களின் தன்மையினை எப்படி
அறிந்து கொள்வது”
இதற்கு ஒரு நரி, புலியின் கதையினை சொல்கிறேன்..
“புரிகன் என்ற அரசன் மக்களை கொடுமை செய்து அரசாண்டதால் மறு பிறவியிலே ஒரு
நரியாகப் பிறந்தான்.. தெய்வ அருளால் அந்த நரி தன் முற்பிறப்பின் நிலையினை
அறிந்த்து. இப்பிறப்பிலே நல்ல வாழ்வு வாழ வேண்டும் என நினைத்து, நரியின்
இயற்கை குணமான மாமிச குணத்தைக் கூட விட்டு காய், கனிகளை தின்று வாழ்ந்து
வந்த்து. காட்டிலே இல்லாமல் மயானத்திலே வாழ்ந்தது. இந்த நரியினை மற்ற
நரிகள் பொறமையுடன் பார்த்தன. ஒரு நரி இப்படி மாமிசன் உண்ணாமல் இருப்பது
இயற்கைக்கு முரணானது எனச் சொல்லி அந்த நரியின் உறுதியினைக் குலைக்க மற்ற
நரிகள் முயன்றன.
ஆனால் அந்த நரி மசியவில்லை.
ஒரு நரி இப்படி வாழ்வதை அந்த காட்டரசின் ராஜாவான புலி கேள்விப்பட்டது .
அப்படியான நரியினை தனது அமைச்சராக்கலாம் என நினைத்து அந்த நரியினை
வரவழைத்தது புலி..
புலியின் பேச்சைக் கேட்ட நரி நிதானமாகப் பதிலளித்தது
”உங்களின் அரச போகங்களைக் கண்டு எனக்கு மயக்கமோ ஈடுபாடோ உண்டாகவில்லை.
என்னுடைய குணத்தை அறிந்து நீங்கள் என்னை மந்திரியாக்க அழைத்த்தாகச்
சொன்னீர்கள். என்னுடைய குணம் இங்கே ஏற்கனவே பதவியிலிருப்பவர்களுடன்
ஒத்துப் போகாது. அதனால் நிறைய பிரச்சனைகள் தோன்றும். ஆதலால் உங்களிடம்
மந்திரியாக இருப்பதில் எனக்கு விருப்பமில்லை”
புலிக்கு நரியை விட மனமில்லை.
நரியின் குணத்திற்கு தகுந்த படியே தான் ஆட்சி செய்வதாகவும் ஏற்கனவே
பதவியிலிருப்பவர்களால் நரிக்கு எந்த சிரம்மும் வராமல் பார்த்துக் கொள்வதாகவும் உத்திரவாதம் தந்து நரியை சம்மதிக்க வைத்துவிட்டது புலி.
நரியும் சுலபத்தில் சம்மதிக்கவில்லை. நிறைய நிர்பந்தங்களைச் சொன்னது
“இதோ பாருங்கள் புலி ராசா. நான் சொல்வதைக் கவனமாக கேளுங்கள்..
நான் உங்களுக்கு சொல்லும் ஆலோசனைகளை தனிமையில் தான் சொல்வேன். அதை
நீங்கள் என்னை சபையிலே சொல்ல வற்புறுத்தக் கூடாது.
என் மீது நீங்கள் ஒரு போதும் நம்பிக்கை இழக்க்க் கூடாது.
இங்கே ஏற்கனவே பதவியில் இருப்பவர்கள் சொல்வதைக் கேட்டு நீங்கள் என்மீது
எந்த அபிப்ராயம் கொள்ளக் கூடாது. அதன் வழி என் மீது எந்தக் குற்றமும்
சுமத்தக் கூடாது.
நான் ஆலோசனை சொல்லும் போது சில ஆலோசனைகள் எச்சரிக்கை போலத் தோன்றும்.
அதன் காரணமாக நீங்கள் யாரையும் துன்புறுத்தக் கூடாது”
இத்தனை நிர்பந்த்த்தையும் புலி ராசா ஒப்புக் கொண்டார்
நரியின் செயல்பாடுகள் மிக திருப்தியாக இருந்தன.
ஏற்கனவே பதவியில் இருந்தவர்கள் செய்த மோசடிகள் முறியடிக்கப்பட்டன.
அவர்கள் மேற்கொண்டு மோசடிகள் செய்ய முடியவில்லை..
நரியின் செல்வாக்கு அதிகமானது.
ஏற்கனவே பதவியில் இருந்து சுகமனுபவித்து வந்தவர்களுக்கு நரியின் நேர்மையான செயல்பாடு பெரும் எரிச்சலை உண்டு செய்தது. புலி ராசா நரியினை முழுமையாக நம்பினார். அதனால் அவை நரியை ஒழிக்க ஒரு திட்டம் தீட்டின
புலி அரசனுக்கு எனத் தயாரிக்கப்பட்ட விசேஷ விருந்து உணவினை ரகசியமாகக் கிளப்பிக் கொண்டு போய் அந்த நரியின் வீட்டிலே போட்டு விட்டன அப்படி திட்டம் தீட்டிய விலங்குகள். அப்படியே செய்தும் விட்டன.
இது அந்த நரிக்குத் தெரிந்தும் சும்மா இருந்து விட்டது; காரணம் புலி
அரசனுக்கு தான் விதித்த நிபந்தனைகளை அவன் கடைபிடிக்கிறானா என அறிய ஒரு
சந்தர்ப்பம் கிடைத்ததாக நினைத்தது நரி.
தனக்காக தயாரிக்கப்பட்ட விசேஷ உணவு களவு போனதாகவும் அது அந்த நரியின் வீட்டில் இருப்பதாகவும் தகவலை புலி அரசன் பெற்றான். அதனை சோதித்தும் அறிந்தான். அவனுக்கு பெரும் கோபம் வந்தது. அந்த நரியினை கடுமையாக தண்டிக்க முடிவு செய்து கர்ஜனை செய்தான்.
புலியின் தாயார் புலி தன் மகனுக்கு புத்திமதி சொன்னது. “இதோ பாரப்பா நீயாக மனம் உவந்து தந்த பரிசுகளையெல்லாம் அந்த நரி இதுவரை ஏற்றுக் கொண்டது இல்லை. அவையெல்லாம் மிக விலை உயர்ந்த பரிசுகள். அப்படிப்பட்ட நரி அரசனான உனக்காக தயாரிக்கப்பட்ட உணவை களவு செய்து இருப்பான் என நினைப்பது மடமை. அரசனாகிய உனக்கு இன்னும் சற்று பொறுமை வேண்டும். இது அந்த நரியின் மீது பொறாமை கொண்டவர்கள் செய்த செயலாக இருக்க வேண்டும். நல்ல ஆலோசனை கூற நீ அந்த நரியினை அமைச்சராக்கிய உடன் அந்த நரி சம்மதிக்கவில்லை. அது வெகு நேரம் யோசித்த்து. பின்னர் உனது வற்புறுத்தலின் பேரில் சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அது சம்மதித்த்து.”
இப்படி தாய்ப்புலி மகன் புலிக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டு இருக்கும் வேளையில் புலி அரசனின் நம்பிக்கைக்குப் பாத்திரமான சேவகன் ஒருவன் இது பொறாமை கொண்ட பிறர் செய்த சதி தான் என்பதை சாமர்த்தியமாக கண்டுபிடித்து புலி அரசனிடம் தெரிவித்தான்.
நரியினை அவசரப்பட்டு சந்தேகித்த தனது மட்ததனத்தை நினைத்து புலி ராசா ரொம்பவே வருந்தினான். அந்த நரியினை வரவழைத்து மன்னிப்பு கேட்டது . ஆனால் அந்த நரி இந்த சம்பவத்தை ஒரு அவமானமாக கருதி தான் உயிர் விட்த் தீர்மானித்திருப்பதாக சொன்னது. புலி அதிர்ச்சி அடைந்தது முடிவை மாற்றிக் கொள்ள மன்றாடியது.
நரி சொன்னது , புலி ராசாவே நல்லவர் தீயவர் போலவும் தீயவர் நல்லவர் போலவும் தோன்றுவது இயற்கை. ஒரு அரசன் இதனை நல்ல ஆலோசனையின் மூலமும் அவசரப்படாத சிந்தனை மூலமுமே தீர்க்க இயலும் . என் மரணம் அதனை உனக்கு சொல்லட்டும்” எனச் சொல்லி உயிரை விட்டது
-----------
பாரத்த்திலே தர்மன் பலரிடம் ஆலோசனை கேட்பதாக சம்பவங்கள் வருவதைக் காணலாம். அது தர்ம்ம் எது என அவர் கேட்கும் கேள்விகளுக்கு பலர் விடை சொல்லுகின்றனர். ஏன் தர்மர் இப்படி கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார் என்பதைக் கவனிக்கையில்
சரியானது எது எனத் தெரிந்து கொள்வதில் அவருக்கு இருந்த முனைப்பு என்றே நினைக்கத் தோன்றுகிறது.
பெட்ரண்ட் ரஸ்ஸலின் Outline of Philosophy எனும் நூலில் படித்த்து நினைவுக்கு வருகிறது. அதை அப்படியே இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்
Philosophy arises from an unusually obstinate attempt to arrive at real
knowledge. Where passed for knowledge in ordinary life suffers from three defects: it is cocksure, vague and self-contradictory. The first step towards philosophy consists in becoming aware of these defects, not in order to rest content with lazy sceptisim, but in order to substitute an amended kind of knowledge which shall be tentative, precise and self-consistent. There is of course another quality which we wish our knowledge to posses namely comprehensiveness; we wish the area of our knowledge to be wide as possible.
தர்மனிடம் கேட்பதற்கு பொறுமை இருந்தது எல்லாவற்றையும் விட தெரிந்தது போதும்
எனும் lazy Sceptisim இல்லை. Cocksure இல்லை; vague இல்லை
Saturday, 19 November 2011
ஒரு தட்டும் அதில் இட்லி ஒன்றும் இருந்தது
அன்றைக்கும் இப்படி இரவு 7.25 ஆகியிருந்தது.. இரவு ட்யூட்டிக்கு அப்பாவைக் கவனித்துக் கொள்ள வர வேண்டிய நர்ஸ் இன்னும் வந்திருக்கவில்லை
போன் செய்த போது, கோடம்பாக்கம் சமீபத்தில் வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்.
டிராபிக் ஜாம் சார்.. அதான் லேட்டாகுது.. பஸ் நகர மாட்டேங்குது சார்
என்னங்க எத்தனை தரம் சொல்லிருக்கேன்.. ஆட்டோ புடிச்சு வாங்க.
நர்ஸ் வருவதற்கு எப்படியும் இன்னும் ஒரு மணி நேரம் ஆகிவிடலாம்..
தானே டியூப் ஃபீடிங் செய்வதாக என் மனைவி சொல்லி, அப்பாவுக்கு மூக்கு வழியே பொருத்தப்பட்ட குழாய் வழி அந்த திரவ உணவினை வார்த்தாள். அப்பாவின் வயிற்றில் அது சென்று விழும் சப்தம் தெளிவாகக் கேட்டது.
அளவுக் குவளையில் இருந்த உணவு முழுவதும் மூக்கு வழி சென்று முடிந்தது
நான் அப்பாவின் கால்பக்கத்தில் நின்று கொண்டு கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நவம்பர் 20, 2008, இரவு 7.40 அப்பா கடைசி மூச்சை இழுத்து விட்டார்
தகனம் முடிஞ்சு வீட்டுக்கு போறதுக்கு முன்னாலே , ஷவரம் செய்துண்டு போகணும்..
வீட்டுல போய் செய்துக்கலாமா
இல்லை வேண்டாம்.. சலூன்லே செய்துண்டு போங்க
நானும் என் அண்ணனும், அந்த சலூனின் பக்கத்து பக்கத்து இருக்கைகளில், வெள்ளை ஏப்ரான்கள் போர்த்தப்பட்டு, கன்னங்களில் கத்தி உறவாடிக் கொண்டிருந்த்து
சின்ன வயசில் நான் முடிவெட்டிக் கொள்ள ரொம்பவே அடம்பிடிப்பேன்.. அப்பா என்னை சைக்கிளின் பின்னால் வைத்துக் கொண்டு ஏசியா சலூனுக்கு கொண்டு போவதற்குள் அழுது
அழுது சட்டைக் காலர் நனைந்திருக்கும்.
அன்றைக்கு சாயங்காலம் க்ருஷ்ணபவன் ஹோட்டலில் இட்லி வாங்கித் தருவாதாக அப்பா சத்தியம் செய்தபின்பு தான் தான் சலூன் நாற்காலியிலேயே உட்காருவேன்..
வாசலில் கால் அலம்பிக் கொண்டு வீட்டிற்குள் வந்தேன்.
ராத்திரிக்கு இட்லி..
ஹாலின் மூலையில் ஒரு விளக்கு வைத்திருந்தார்கள்.. அதன் முன்பு ஒரு தட்டும் அதில் இட்லி ஒன்றும் இருந்தது
நாளைக்கு இந்த வருஷத்தின் நவம்பர் 20.
Thursday, 17 November 2011
அப்பா என்ற உன்னதம்
பேச்சின்றி, அழைத்த குரலுக்கு அவர் பதிலின்றி இருக்கும் போது, என் சகோதர சகோதரிகளுக்கு 18 நவம்பர் 2008 ல் எழுதிய மெயில்
--------
அப்பா என்ற உன்னதம்
இது இயற்கை- இதில் நாம் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை
அவர் தனது கடமை எல்லாம் முடித்துவிட்டார். அவர் செய்தே ஆக வேண்டியதென ஒன்றும் இல்லை
நம்மை நன்றாக படிக்க வைத்தார்.
நாம் விரும்பியவாறே கல்யாணம் செய்து வைத்தார்.
பிறருக்கு தீங்கு நினைக்காத வாழ்க்கை வாழ்ந்திருக்கார்.
இதை நமக்கும் சொல்லிக் கொடுத்திருக்கார்.
நாம் எந்த தவமும் செய்யாமல் கிடைத்த வரம் அவர் பிள்ளை நாம் என்ற நிலை.
இதை விட அவர் நமக்கு என்ன செய்ய வேண்டும்.
அவருக்கு நாம் தான் எதுவும் செய்ய முடியாது.
நம்முள் அப்பா எத்தனை வியாபித்திருக்கார் என்பதனை நாம் முழுமையாக புரிந்து கொள்ள ஒரு சோகமான சந்தர்ப்பத்தை அவரே நிறுவிக் கொண்டிருக்காரோ என நினைக்கிறேன்.
நமக்கு இன்னமும் ஒரு 40 ஆண்டு வாழ்வு என உத்தேசமாக கணக்கு வைத்தாலும் அவர் அத்தனை காலமும் நமக்கு பக்கத்தில் இருந்த வழி நடத்தினாலும் எனக்கு ஆசை அடங்காது.
ஆனால் இயற்கை அப்படி ஒரு தளர்ந்த நிலைக் கணக்கை எப்போதும் எழுதுவதில்லை.
இத்தனை புத்தகம் படிக்க சொல்லிக் கொடுத்த அவர் நடத்தும் கொஞ்சம் கஷ்டமான பிராக்டிகல் வகுப்பு இது.
நாம் பாஸ் பண்ணும் போது அவர் இருக்க மாட்டார்.
அவர் சபாஷ் என சொல்வது கேட்காது.ஆனால் கண்டிப்பாக சபாஷ் என சொல்லிருப்பார்.எப்பவும் நேரடியாகப் பாராட்டமாட்டாரே.இப்பவும் அப்படித்தான் செய்யப் போகிறார்.செய்யட்டுமே அப்பாதானே.
அவர் நம்மை விட்டுப் பிரிவதில்லை என்பது சம்பிரதாயமான வார்த்தைகள் இல்லை.
தந்தை என்பது வெறும் உயிர் தந்த உறவில்லை.
அது நமது ஞானம்
என்றும் நம்மோடு உடன் வரும் ஞானம்
இன்றே புறப்பட்டுப் போய் நாளை என் பிள்ளை வருவான், பெண் வருவாள் அவாளுக்கு இப்படி இது பிடிக்கும் என பெருமாளிடம் வாதாடி நமக்கென மீண்டும் புத்தேளிர் உலகில் ஒரு கிளாஸ் ரூம் வைத்துக் கொண்டு காத்திருப்பார். அவரிடம் வாதாடி ஸ்ரீபாலாஜி தோற்றுத்தான் போவான்
அவர் அப்படியான ஓர் உன்னதம்
சும்மா மூன்றே எழுத்தில் இந்த உன்னதத்தை அப்பா எனச் சொல்கிறோம். அப்படிக் கூப்பிட்டால் எப்பவுமே என்ன எனத் திரும்பிப் பார்ப்பார்
இப்ப பார்க்காம இருக்கார்
Saturday, 5 November 2011
டைரிக் குறிப்பு-4
ஒரு குறிப்பிட்ட நாளைச் சொல்லி, "அன்னிக்கு நான் பெங்களூருவுக்கு வந்து உன்னைப் பார்த்துவிட்டு கிளம்பிச் சென்றேன் நினைவிருக்கா.. மறுநாள் டைரியில் என்ன எழுதிருக்கேன்னு படிச்சுக் காட்டறேன்.. டைரியை எடுத்துட்டு வா”
ஆசையாக அவள் எடுத்து வந்த டைரியிலிருந்து :
முழு ராத்திரி பஸ்ஸில் உடகார்ந்து கொண்டு பயணித்து வருவது, ரொம்பவுமே ஆயாசத்தை உண்டாக்குகின்றது.. இன்றைக்கு ஆபிசுக்குப் போகவில்லை.. பகல்பொழுதிலே தூங்கி கழித்து, சாயங்காலம் வெளி வெராண்டாவிலே நாற்காலியினைப் போட்டுக் கொண்டு, ரோட்டைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன்..
அப்போது தான் இதனை எழுதுகிறேன். கிராமத்துப் பக்கத்தில் இரண்டு வேளை குளிப்பார்கள் என்பதனை தினசரி ஊர்ஜிதம் செய்து கொள்கிறேன். குளித்து முடித்து ஈர உடையுடன் பெண்கள் அந்த ரோட்டின் வழியே நடந்து போகின்றார்கள்.. பக்கத்திலே இருக்கும் பிள்ளையார் கோவில் குளத்து ஸ்நானமாக இருக்க வேணும்.. இப்படி தினசரி நங்கையர்கள் மட்டும் குளித்து விட்டு வீடு போகின்றார்களே.. இவர்கள் வீட்டு ஆண்பிள்ளைகள் குளிக்க மாட்டார்களா
இதென்ன நேற்றைக்கான பக்கம் எழுதுவுமே எழுதாமல் காலியாக இருக்கின்றதென்பதை
அப்போது தான் கவனித்தேன்.. சரி நேற்றைக்கு என்ன செய்தோம்.. பெங்களூருவில் இருந்தமையால் டயரி எழுதவில்லை..
ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்று திரும்பி வரும்போது, தலை வலிக்கிறதாகச் சொல்லி மாத்திரை கேட்டாள், வாங்கிக் கொடுத்தேன்.. தலை நோவு சரியானதா எனக் கூட விசாரிக்கவில்லை.. பஸ்ஸுக்கு நேரமானதால்,, அவசரமாக கிளம்பி வந்தேன்.. இன்றைக்கு ஒரு போஸ்ட் கார்ட் எழுதிப் போடலாம்.. தலைவலி விசாரணைக்கு போஸ்ட் கார்ட் போதும்
இப்போது புதுசா சில பெண்கள் அடுத்த தெரு பிள்ளையார் கோவில் குளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள். இத்தனை நாள் இந்தப் பெண்களை நான் கவனித்ததில்லை.. இந்த ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆகிவந்தவர்களாக இருப்பார்களா?
சரி புதுசாக ஜெண்டில்மேன் என ஒரு படம் வந்திருக்கின்றதாகவும், அது நன்றாகவும் இருப்பதாகவும், பக்கத்து அறைகளில் வாசம் செய்யும் எல்லோரும் பொதுவாகப் பேசிக் கொள்கிறார்கள்.. இன்றைக்கு மாலை ஆட்டத்திற்கு செல்ல நேரமிருக்கின்றதா.. தாராளமாக இருக்கின்றது.. கொஞ்ச நேரத்திலேயே அந்த சினிமா ஆசையினைத் துறந்தேன்.
காரணமிருக்கின்றது…
இப்போது புதுசாக நாலு பெண்கள், குளத்துப் பக்கத்திலிருந்து வருவது தெரிகிறது..
“நீங்க எனக்கு படிச்சு காட்டினது போதும்”.. வெடுக்கென கையிலிருந்த டைரியினைப் பறித்தாள்
(2011 வருஷத்திய டைரியினை மட்டும், வெளியில் விட்டு வைத்து, எனது பிற டைரிகள் அனைத்தினையும், தனது பீரோவில் பூட்டி வைத்து விட்டாள் என் மனைவி)
Tuesday, 1 November 2011
ஸப்த கன்னியர்
இதனை நவராத்திரி சமயத்தில் எழுதியிருக்க வேண்டும். கொஞ்சம் லேட்டாகி விட்டது. அத்தனை துக்கத்தில் இருந்தேனாகையால் எழுதவில்லை.
இதன் தொடக்கம் எனது இளம் பிராயத்தில், முதல் டில்லி பயணத்தில் என வைத்துக் கொள்ளலாம்
டில்லிக்கு முதன் முறை பயணிக்கின்ற எல்லோரையும் போல், அந்த ஊரைச் சுற்றிப் பார்க்கும் அம்சம் பின்னர் ஆக்ரா வரை ஒரு நடை சென்று தாஜ்மஹாலைப் பார்த்து விட்டு வரலாம் எனும் இன்னொரு அம்சமாக எனக்கும் வாய்த்தது.
பணிக்கர் டிராவல்ஸ் பஸ்ஸில் விடிகாலையிலேயே ஓல்ட் ராஜீந்திரா நகரில் ஏதோ ஒரு ஒடுக்கமான வீதியில் எப்படி அத்தனை பெரிய பஸ் நுழைகிறது என வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே, என் பக்கத்தில் வந்து நின்று என்னை ஏற்றிக் கொண்டார்கள்..
ஃபதேபூர் சிக்ரி, ஆக்ரா கோட்டை, தாஜ்மஹால் என சென்று டெல்லிக்குத் திரும்பும் போது தான் அது நிகழ்ந்தது..
டீ குடிப்பதற்காக சாலையோரமாக நிறுத்தினார்கள்.. இறங்கி சாலையின் எதிர்ப்புறம் பார்த்தேன். எனக்கு அசாத்திய கோபம் வந்தது.. இந்த இடத்தை அந்த பணிக்கர் பஸ் ஆசாமி வெறுமனே டீ குடிக்க மட்டும் தேர்ந்தெடுத்திருந்த அநியாயாத்தினால் எனக்கு கோபம் வந்தது.
சிக்கந்த்ரா.. அக்பரின்.. நினைவிடம் எதிரே இருக்கும் டூரிஸ்ட் வசீகர டீ கடையில் ,'வண்டி 10 நிமிடம் நிற்கும்.. டீ காபி... ' என ஹிந்தி அறிவிப்பு செய்யும் இடமா அது..
பள்ளிப் படிப்பின் சரித்திர பாடங்களில் மொகலாய ராஜாக்களில், மிகவும் ஃப்ரென்டிலியான ராஜாவாக அறியப்பட்ட அக்பர் பாதுஷாவின் கல்லறை எதிரே இருக்கிறது.. அதை சுற்றிக் காட்டாமல், அதற்கு எதிரே இருக்கும் டீ கடைக்கு முக்கியத்துவம் தந்திருக்கும் அநியாயம்.
பஸ் டிரைவரை விசாரித்தேன்.. இந்த ட்ரிப்பிற்கு இது வரை காண்பித்த இடங்கள் தானாம். அக்பர் லிஸ்டில் இல்லை என கராறாகச் சொல்லிவிட்டான். அதுவுமில்லாமல் அக்பரையும் சேர்த்துக் கொண்டிருந்த பயணத்துக்கு துட்டு அதிகம் தர வேண்டுமாம். இது மஹா அநியாயம் அல்லவா
கூட வந்த எல்லா பயணிகளையும் அழைத்து விபரம் சொன்னேன்,' பாருங்கள் நாமெல்லாம் இதோ எதிரே இருக்கும் அக்பர் பாதுஷாவின் கல்லறையினைச் சுற்றிப் பார்த்துவிட்டு வர அதிகபட்சம் 45 நிமிடங்கள் ஆகலாம்.. ஆனால் இந்த இடம் அவர்கள் லிஸ்டில் இல்லை என டிரைவர் சொல்வது நியாயமில்லை.. இந்த இடத்தில் டீ குடிக்க நிறுத்துவார்களாம்.. ஆனால் அக்பரை பார்க்க நிறுத்த மாட்டார்களாம'
இந்த பிரசங்கம் நன்றாக வேலை செய்தது எனத் தெரியவந்தது.. என்னைக் காட்டிலும் ஹிந்தியில் பிரவாகமாகப் பேசக் கூடிய வட தேசத்து அன்பர்கள் சிலர் டிரைவரை உலுப்பி எடுத்தனர்.. ஏகதேசம் வண்டியில் இருப்பவர் எல்லோரும் அக்பரை தரிசிக்காமல் விடப்போவதில்லை என்பது டிரைவருக்கு ஒருவழியாகப் புரிந்தது
தான் செத்துப் போய் சுமாராக முந்நூற்றி என்பத்தி ஏழு வருஷம் கழித்து தன் சமாதி முன்பு, தீன் இலாஹிக்க்காக இப்படி ஒரு இந்தியக் குடிமகன், தனது சமாதிக்கு முன்பு அமைதியாக கை கூப்பி சேவிப்பான் என பாதுஷா நினைத்திருக்கவே மாட்டார்
ரோடு கிராஸ் செய்யும் போது தான் அந்த பொம்மைக் கடையினைக் கவனித்தேன்
வழக்கமான சாலையோர பொம்மைக் கடைதான் என்றாலும், ஒரு மாதிரியாக என்னை இழுத்தது..
எத்தனையோ வசீகரமான பொம்மைகளில் அந்த ஸப்த கன்னிகைகள் பொம்மை செட் என்னை ரொம்பவே கவர்ந்தது. ஆச்சரியமென்ன 24 பிராயமே நிறைந்து, கலியாணமாக பிரம்மச்சாரி பிள்ளைக்கு, மொழுக்கென்று செய்யப்பட்ட கன்னிகைகள் பொம்மைகள் பிடிக்காது போகுமா என்ன?. உபரியாக அந்த பொம்மைக் கலைஞன், மிக ஜாக்கிரதையாக எந்தப் பொம்மைக்கும் வஸ்திரம் இல்லாது செய்திருந்தான் என்பதையும் கவனித்தேன்.. வழக்கமாகவே கடைகளில் நான் பேரம் பேசுவதில்லை. சொன்ன விலையினைக் கொடுத்து வாங்கி விடுவேன்.. இந்த பொம்மைகளுக்கா பேரம் பேசப் போகின்றேன்.. ஏழு பொம்மைகளையும் கவர்ந்து கொண்டு டெல்லி வந்து சேர்ந்தேன்.
அக்கா , அத்திம்பேர், அப்பா, அம்மா எல்லோருக்கும் அந்த ஸப்த கன்னிகைகளை ரொம்ப பிடித்திருந்தது.. அந்த ஏழு பேரும் , நான் எந்த ஊருக்கு ட்ரான்ஸ்பர் ஆனாலும் என் சாமான் செட்டுகளோடு கூடவே வந்தார்கள்.. என் அறைகளில் பிரதான இடத்தினை வகித்தார்கள்
இது கலியாணம் ஆகும் வரை நீடித்தது. கலியாணம் ஆகி, புது மனைவியுடன், ஆரத்தி தட்டில் காசு போட்டு வீட்டுக்குள் வந்த முதல் காரியமாக, மனைவியாகப் பட்டவள் என் ரீடிங் ரூமைப் பார்க்க வேண்டும் என்றாள். பெருமையாக அழைத்துச் சென்றேன்.
மிகவும் பிரதான இடத்தில் வஸ்திரம் தரிக்காத இந்த ஸப்த கன்னியர் இருப்பதை கவனித்து முகம் சுளித்தாள். இந்த சிலைகளின் மீதான் எனது ரசனை, என் மனைவியின் மனதில் எனக்கு வழங்கப்பட்டிருந்த மரியாதை (!!! ) என்பதாக , புது மனைவி மனதில் ஒரு போராட்டம் நடந்திருக்க வேண்டும் என யூகிக்க முடிந்தது.. கராறாகச் சொல்லிவிட்டாள். இந்த ஸப்த கன்னியர்கள் சிலைகளை சின்னதாக ஒரு அட்டைப் பெட்டியில் அடைத்து, பரணில் ஏற்றி வைக்க வேண்டும் என..
எனது மறுப்புகள் மெல்ல மெல்ல வலுவிழந்தன. ஸப்த கன்னியர்கள் பெட்டிக்குள் பேக்காகி, பரணை அடைந்தனர்.
என்னிடம் வந்ததிலிருந்து 6 வருடங்கள் அலங்காரமாக இருந்து பின்னர் பரணில் தஞ்சமான அந்த ஸ்ப்த கன்னியரையும் , ஒவ்வொரு நவராத்திரி சமயத்தில், கொலுவில் வைத்து விடலாம் என செய்த எந்த பிரார்த்தனைக்கும் என் மனைவி செவி சாய்க்கவில்லை.. ஏன் கலியாணம் ஆனபின்பு 13 வருடம் , அந்த அட்டைப் பெட்டி கூட என் கண்ணில் காட்டப்படவில்லை.
இந்த வருடம் எப்படியோ , அந்த அட்டைப் பெட்டி கண்ணில் பட்டுவிட்டது.. கொலு பொம்மைகளை இறக்கி வைக்க தனியாக ஒரு வேலையாளை அமர்த்தியிருந்தேன்.
அவர் பரணிலிருக்கும் பெட்டிகளை இறக்கி வைக்கலாம் என வந்த தருணம், என் மனைவி வீட்டில் இல்லாத தருணம்.. அது
ஆனாலும் அந்த கன்னிகைகளுக்கு இந்த வருடம் கொலுவில் கொலுவிருக்க சான்ஸ் தரப்படவில்லை.
" என்ன கண்றாவி இது ..என் ப்ரென்ட்ஸ் எல்லாம் இன்வைட் பண்ணுவேன்.. அவங்க கிட்டயெல்லாம்.. என்ன சொல்லுவேன். என் ஹஸ்பென்ட் இதை பல வருஷம் முந்தி வாங்கிட்டு வந்தார்.. ரொம்ப வருஷம் பொத்தி பொத்திப் பாதுகாத்தார்.. இப்படி சொல்லனுமா"
"ஏன் சொன்னா என்னவாம்"
"வரவங்க எல்லாம் .. ஷேம் ஷேம் பப்பி ஷேம்னு சொல்லப் போறாங்க " இது என் மகள்.
ஸப்த கன்னியர் மறுபடியும் பரண் வாசம் தொடங்கினர்
நவராத்திரி கடந்து இத்தனை நாளான பின்பு இப்ப என்ன திடீரென ஸப்த கன்னியர் ஸ்டோரி என்பவர்களுக்கு உபரியாக நானும் என் மனைவியும் நேற்று இரவு நிகழ்த்திய இந்த உரையாடல் தெளிவைத் தருவதாக
" அது என்ன புது புக் வாங்கிருக்கீங்களா"
’ஆமாம். Akbar the Emperor of India அப்படினு Dr. Richard Von Garbe என்பவர் எழுதின பொஸ்கம்
இந்த புஸ்தகத்தையும் என்னிடம் இருந்து பறித்து ஒளித்து வைத்து விட்டாள்..
Sunday, 23 October 2011
Carl Friedrich Gauss
குறித்து மிகவும் எளிமையாக விளக்கும் பதிவு
Saturday, 22 October 2011
நாதஸ்வர போட்டிக் கதை
ரங்கசாமி அந்த நாதஸ்வர போட்டிக்கு தன்னைத் தானே நடுவராக நியமித்துக் கொண்டார்.
இப்படி தீடீரென ரங்கசாமியில் தொடங்கினால், புரிவதற்கு கஷ்டமாக இருக்கும். விஸ்தாரமாகச் சொல்கிறேன்.
ரங்கசாமிக்கு வாத்திய இசையில் ப்ரேமை அதிகம். அதுவும் நாதஸ்வர வாத்தியத்திலே மோகம் கொஞ்சம் அதிகம். இதற்கு காரணமிருக்கின்றது
சில காலத்துக்கு முன்பு அவருக்கு, மோகனசுந்தரம் எனும் வித்வானுடன் சிநேகிதம் உண்டானது. இந்த மோகன சுந்தரமாகப்பட்டவர் தன்னை சிக்கல் ஷண்முகசுந்தரத்துக்கு நிகராக நினைத்து, நாதஸ்வரம் வாசிக்கப் பழகினார். நாதஸ்வரம் செய்த புண்ணியமா, அல்லது வேறு என்ன காரணமோ அவருக்கு சுத்த சாஸ்திரிய சங்கீதம் கைவரவில்லை. ஆனாலும் எப்படியோ வித்வான் எனும் அந்தஸ்தினை தன்னுடன் ஒட்டிக் கொண்டார். சங்கீதம் கைவரவில்லை என்பதற்காக மோகன சுந்தரம் மனசு தளரவில்லை. கலியாணத்தில் நாதஸ்வரம் வாசிப்பவர்களுடன் ஏற்பாடுகள் செய்து முகூர்த்த மாசத்திலெல்லாம் எல்லா முகூர்த்த நாளிலும் ஏதானும் ஒரு கலியாணத்தில் வாசிக்க சான்ஸ் கிடைக்குமாறு பார்த்துக் கொண்டார்.
கலியாணத்துக்கு வருபவர்களில் யாரும் சங்கீதப் ப்ரேமை கொண்டு, இன்ன கீர்த்தனை வாசி.. இப்படி நிரவல் செய் என் விருப்பம் சொல்வதில்லையாதலின், மோகன சுந்தரத்தின் நிஜமான சாஸ்திரிய சங்கீத பலம் இன்னதென்று தெரியாமல், ஒரு வழியாக கோஷ்டி கானமாக போய்க் கொண்டிருந்தது. எப்போதாவது, யாராவது சங்கீத அபிமானி இவரிடம் ஒரு ராகத்தை சொல்லி வாசிக்க முடியுமா எனக் கேட்டால், இவர் சாமர்த்தியமாக , “நான் ரகுபதி ராகவ ராஜாராம்” என காந்திக்கு ப்ரீதியான பாட்டை வாசிக்கின்றேனே” என்று சொல்லி வாசித்து சமாளிப்பார்.. இதுமட்டும் எப்படியோ அந்த ராகவன் கருணையால் இவருக்கு சித்தித்து விட்டது. நாதஸ்வரக் கோஷ்டியில் இருக்கும் இரண்டு பிரதான இடத்திலிருந்து இவர் வாசிப்பதில்லை. பெரும்பாலும் ஒத்து ஊதுவது தான் இவர் வேலை
மோகன சுந்தரத்து தனக்கு இன்னது தெரியும் இன்னது தெரியாது என்ற பேதம் தெரியாது.. அல்லது யார் கவனிக்கப் போகின்றார் எனும் அசட்டு தைரியமும் ஜாஸ்தி.. எங்கே கலியாணக் கச்சேரிக்குப் பயணமானாலும், அங்கே சுத்த ஸாவேரி, பந்துவராளி என பேசுவார். இவரது பேச்சிலே ஒரு ரீதியான பிரமிப்பு உண்டு.. அது தான் இவரோட பலம்.. மத்தபடி சங்கீதமானது இவருக்குத் ரொம்ப தூரம்
இவர் தனது கோஷ்டியுடன் வெளியூர் கலியாணத்திற்கு ரயிலில் பிரயாணித்துக் கொண்டிருந்தார். எதிர்சாரியில் மிக அம்சமாக வேஷ்டி, சட்டை அங்கவஸ்திரம் என பளீரிடும் லட்சணங்களுடன், ஒருவர் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் நமது மோகன சுந்தரம் பேச்சுக் கொடுத்தார்.
" அடியேன்.. மோகன சுந்தரம்.. நாதஸ்வர வித்வான்.. சார் என்ன பேர்னு நான் தெரிஞ்சுக்கலாமா”
அந்த புதிய மனுஷ்யன், இவரை ஒரு தரம் தீர்க்கமாகப் பார்த்துவிட்டு, ‘ என் பேர். ராமசந்திரன்..”
”சார் என்னவா இருக்கீங்க”
அவர் ஒரு பிரபல கலாசாலையின் பெயரைச் சொல்லி அங்கே சங்கீதம் போதிக்கும் உத்தியோகத்தில் இருப்பதாகச் சொன்னார்.
வழக்கமாக காதில் கேட்கும் தவில் சப்தம் இந்த முறை , மோகன சுந்தரத்திற்கு தொண்டையில் தொடங்கி, அடி வயிறுக்கு சென்று அங்கே சொற்ப நேரம் தனி நடை வாசித்து, பின் அந்தரங்கப் பாகத்தில் மெதுவாக வாசிப்பது போலிருந்தது.
’நீங்க எங்கே நாதஸ்வரம் அப்யாசம் செய்தீங்க “ ராமசந்திரன் கேள்வி, மோகனசுந்தரத்தின் அந்தரங்க பாகத்தில் இருந்த தவில் சப்தம் இப்போது ஹிருதயத்துக்குப் பக்கத்தில் கேட்பது போலிருந்தது..
வேர்வையைத் துடைத்தபடி, “ எனக்கு பல குரு உண்டு” என்பதான பொது பதில் போட்டு சம்பாஷணையினை நிறுத்தலாம் என்று பார்த்தார்.. ராமசந்திரன் சிரித்துக் கொண்டே, “நாதஸ்வரம் மட்டும் தானா வாய்ப்பாட்டும் உண்டா” எனக் கேட்டு வைத்தார்.
இதற்கு சங்கீத ரீதியாக ராகம், ஸ்வரம் என தனக்கு தெரியாத சங்கதியெல்லாம் மோகன சுந்தரம் உளறி, அவர் உளறுகிறார்.. கேள்விக்கு சரியாக பதில் சொல்லவில்லை என ராமசந்திரன் சுட்டிக் காட்ட ஏக ரகளையானது.
இந்த ரயில் பயணத்தினை அந்த வாத்திய கோஷ்டிக்கு அமைத்துத் தந்த புரவலரான ரங்கசாமியும் அங்கே இருந்தார். அவருக்கு மோகன சுந்தரம் இப்படி, சிக்கிக் கொண்டதில் ஏக வருத்தம். ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து ராமசந்திரனைப் பார்த்து, “இவ்வளவு பேசுகின்றீரே.. உமக்கு வாத்தியம் வாசிக்கத் தெரியுமோ.. அதுவும் எமது மோகன சுந்தரத்தின் வாசிப்புக்கு பதில் வாசிப்பு செய்யணும்.. ரெடியா” எனக் கேள்வி போட்டு, மோகன சுந்தரத்தை கர்வமாகப் பார்த்தார்.
மோகன சுந்தரம், தனது குல தெய்வம் , எப்படியாகினும் ராமசந்திரன் நாவில் இறங்கி போட்டிக்கு தயாரில்லை எனச் சொல்ல வைக்கனும் என வேண்டிக் கொண்டார். குலதெய்வம் அவருக்கு ஒத்தாசை செய்யவில்லை.
தனக்கு முறையான வாத்தியப் பயிற்சி உண்டெனவும், ஆகவே போட்டிக்கு தயார் எனவும் சொல்லி, ரங்கசாமியே போட்டியினை ஏற்பாடு செய்யலாம் எனவும் சொல்லி, ராமசந்திரன் அந்த சம்பாஷணைக்கு முற்றுப் புள்ளி வைத்தார்,
“நான் போட்டி ஏற்பாடு செய்துவிட்டு உங்களுக்கு தகவல் தருகிறேன்” எனச் சொல்லி ரங்கசாமி நிறுத்திக் கொண்டார்.. ஆனால் அந்தரங்கத்தில் தானே இந்தப் போட்டிக்கு நடுவராக இருக்கலாகும் என நினைத்துக் கொண்டார்.
இப்படியாக இந்த சங்கீத வாத்திய யுத்தம் நிச்சயமாகி, அதற்கு ரங்கசாமி தன்னையே நடுவராக நியமித்துக் கொண்ட பூர்வ கதை இதுவே.
போட்டி வெகு விமரிசையாக நடந்தது. முறையான சங்கீத அப்பியாசம் உள்ளபடியால், ராமசந்திரன் எந்த ராகம் சொன்னாலும் அவரது வாத்தியம் அவர் சொல்படி கேட்டது. தினசரி சாதகம் இருப்பதால், ராகத்தின் லஷணங்களை கேட்போருக்கு புரியும்படி வாசித்துக் காண்பிக்க அவருக்கு சாத்தியமானது.
மோகன சுந்தரம், தனது வேர்வையினைத் துடைத்துக் கொள்ளவே நேரம் போனது.. எதிரே வாசிப்பவரின் சாயலைப் பிடித்து வாசித்து விடலாம் என ரொம்பவும் பிரயத்தனப்பட்டார். சாத்தியமாகவில்லை. எந்த ராகத்துக்கு என்ன ஆரோகணம், அவரோகணம் என ஸ்வர வரிசை தெரியாததால் காப்பியடித்து வாசித்தாலும் அவரது வாசிப்பு அபஸ்வரமாகவே தொனித்தது.. பார்த்தார் மோகன சுந்தரம்.. தனக்கு மிகவும் கைவந்ததும், பரிச்சயமானதுமான ஒத்து ஊதுவதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். வாயிலே வைத்த வாத்தியத்தை நெடு நேரம் எடுக்காது, தொடர்ந்து ’ஹொய்ங்” என்பதான சப்தம் கூட்டி ஊதத் தொடங்கினார். அவருக்கு எப்போது இன்னும் மூச்சுக் கட்டுவது பிராண அபாயத்தில் கொண்டு விடும் என்றாகிறதோ அது வரை ‘ஹொய்ங்” கை நிறுத்தவில்லை.. அவர் அப்படி ஒரு கட்டத்தில் அதை நிறுத்தினது தான் தாமதம், ரங்கசாமி தனது தீர்ப்பைச் சொல்லிவிட்டார்..
“சபையோரே.. இதுவரை இந்த இரண்டு வித்வான்களும் வாசித்ததனைக் கேட்டீர்கள்.. ஆனால் ராமசந்திரன். இந்த ராகம் அந்த நடை என சொல்லி வாசித்தாலும். அவரால் நமது மோகனசுந்தரம் இப்போது வழங்கியது போல நிறுத்தாமல் இசை வழங்க இயலவில்லை. ராமசந்திரன் வாசிப்பிலே ஆங்காங்கே இடைவெளி விட்டு வாசித்தார் அது இசையாகாது ஆகவே இந்த போட்டியில் நமது மோகன சுந்தரமே வென்றவராகிறார்”
ராமசந்திரன் தனது உத்யோகத்தை ராஜினாமா செய்துவிட்டு.. வட தேசத்தில் காவி உடை தரித்து இலக்கில்லாமல் திரியும் தேசாந்திரியாக மாறக் கூடும் என யூகமாகிறது
Friday, 21 October 2011
டைரிக் குறிப்பு-3
இந்த நிகழ்வினைத் என் டைரியிலிருந்து தேடிப் பதிவு செய்கிறேன்
திட்டமிட்டபடி ராக்ஃfபோர்ட் எக்ஸ்பிரசில் எங்களது பயணம் தொடங்கிவிட்டது.
நட்ட நடு நிசியில் என்னை டிக்கெட் பரிசோதகர் எழுப்பினார். குறைந்த விளக்கு வெளிச்சத்தில் டயம் பார்த்தேன். நள்ளிரவு தாண்டி 1.30 என்றது கைக்கடிகாரம்.
என்ன்வென்று கேட்டேன். வண்டி விழுப்புரத்தில் நிற்பதாகவும், மிகவும் அவசரம் என்று சொல்லி என்னைக் கேட்டுக் கொண்டு , ராதாகிருஷ்ணன் என்று ஒருவர் ப்ளாட்பாரத்தில் நிற்பதாகவும் சொன்னார். எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. ஜன்னல் ஷட்டரை உயர்த்தி, வெளியே பார்த்தேன். எங்கள் டிபார்ட்மெண்ட் விழுப்புரம் யூனிட் ஜூனியர் என்ஜிநியர் நின்று கொண்டிருந்தார். அந்த அர்த்த ஜாம வேளையிலும், “வணக்கம் சார்.. ஒன்னும் பதட்டப்படாதீங்க.. உங்க ஃபேமிலியில் எல்லாரும் நலம். இது ஆபிஸ் விஷயம்..”
சங்கதி இது தான்.. நான் வேலை செய்யும் டிபார்ட்மெண்ட் மூலம் , நான் தலைமை ஏற்றுள்ள யூனிட் பொறுப்பெடுத்து நடந்து வரும் மிகப் பிரபலமான ப்ராஜெக்ட் ஸ்தலத்துக்கு, அந்த துறையின் மந்திரி விஜயம் செய்கிறார். ஆகவே நான் உடனே எனது ஹெட்குவார்ட்டர்ஸ் திரும்பச் சொல்லி மங்களச் செய்தி. பிரயாணத்தைத் துறந்து, மனைவி, கை குழந்தை சகிதம் விழுப்புரம் ஸ்டேஷனில் நிற்கிறேன்.
”சார், புதுக்கோட்டை ஈ.ஈ தான், இந்த ட்ரெயினில் நீங்க சென்னை போறதா சொல்லி, ராதாகிருஷ்ணன், எப்படியும் மௌளீயைக் கண்டுபுடிச்சி அவரை திருப்ப புதுக்கோட்டை அனுப்புங்க. அவர் காலைல பத்து மணிக்கு சைட்ல இருந்தாகனும். மினிஸ்டர் விசிட்னு சொல்லி, நீங்க விழுப்புரத்தில் இறங்கின உடனே, அவர் வீட்டு நம்பருக்கு உங்களை போன் செய்யச் சொன்னார்.. அதோ எஸ்.டி.டி பூத்”
“சார் மௌளீ பேசறேன். விழுப்புரத்திலிருந்து”
“மௌளீ .. ரொம்ப சாரி.. இப்படி உன்னைத் தொந்தரவு செய்றதுக்கு.. மினிஸ்டர் புதுக்கோட்டைக்கு ஒரு கல்யாணத்துக்கு வரதா ராத்திரி 11 மணிக்குதான் கலெக்டர் கேம்ப் க்ளார்க் போன் செய்தார்.. உடனே மினிஸ்டர் பி ஏ கிட்ட நானே போன் செய்து பேசினேன். மினிஸ்டர் ப்ராஜக்ட் சைட்டுக்கு வர சான்ஸ் இருக்கிறதா சொன்னார்”
“சார்... உங்களுக்குத் தெரியாதா.. அந்த ப்ராஜக்ட் சைட்லே நிறைய டிஸ்ப்யூட் இருக்குனு. அதனாலே வேலை நடக்காம நிக்குது.. அந்த இடம் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தம்னு முன்சீப் கோர்ட்லே ஸ்டே வாங்கிருக்காங்க. அந்த சைட்டுக்கு ஏன் மினிஸ்டர் வரணும்”
“ இதெல்லாம் நடுராத்திரி மினிஸ்டர் பி ஏ கிட்ட சொல்ல முடியுமா. அதுவுமில்லாம, ஸ்டே வாங்கினவங்க கிட்ட மினிஸ்டர் பேசினாக் கூட அவங்க கேஸ் வாபஸ் வாங்க சான்ஸ் இருக்கு.. நீங்க திரும்பி வாங்க.. பஸ்லே வந்து சிரமப்பட வேண்டாம். ராதாகிருஷ்ணன் கிட்ட சொல்லிருக்கேன்.. டாக்சி ஏற்பாடு செய்யச் சொல்லி.. நான் காலைல 8 மணிக்கெல்லாம் ட்ராவலர்ஸ் பங்களாவிலே இருப்பேன்.. நீங்க அதுக்கு முன்னாலே வந்தா என் வீட்டுக்கு வந்துடுங்க.. சேர்ந்து போய்டலாம்.. மினிஸ்டருக்கு சால்வை.. மத்த பார்மாலிட்டஸ் எல்லாம் நான் ஏற்பாடு செய்துடறேன்”
என் மனைவிக்கு ஒன்றுமே புரியவில்லை.
“சார் மணி 2 ஆகுது.. பக்கத்துல தான் என் வீடு.. நீங்க ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு 3 மணிக்குப் புறப்பட்டாலும் 7 மணிக்குள்ள புதுக்கோட்டை போய்டலாம்”
“இல்லை ராதாகிருஷ்ணன்.. இப்பவே புறப்படறேன்.. நீங்க டாக்சி கொண்டு வாங்க”
“டாக்சி எடுத்துட்டேன் சார். ஸ்டேஷன் வாசல்ல நிக்குது.. ஈ.ஈ எனக்கு போன் செய்த உடனே டாக்சி எடுத்துட்டு தான் வந்தேன் .. போற வழில தான் என் வீடு நான் இறங்கிக்கிறேன்.. நீங்க புதுக்கோட்டை போய் இறங்கி காருக்கு பணம் ஏதும் தரவேண்டாம்.. நான் பார்த்துக்கிறேன்”
ராதாகிருஷ்ணன் மனைவி வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். கையிலே ப்ளாஸ்க்.. பிஸ்கெட் பாக்கெட்டுகள், வாழைப்பழம்
“ராத்திரி நேரம்.. முழிச்சிருந்தா பசிக்கும். வழில நிறுத்தினா லேட்டானாலும் ஆகும் அதான் சார் .. ஒன்னும் தயங்காம வாங்கிக்குங்க”
”தாங்க்ஸ் ராதாகிருஷ்ணன்”
விழுப்புரம் நகர எல்லை தாண்டும் வரை என் மனைவி எதுவும் பேசவில்லை.. நன்றி மீண்டும் வருக விழுப்புரம் நகராட்சி என்ற நட்பு பாராட்டிய போர்டு தாண்டியதும் பிடித்துக் கொண்டாள்
“ ஒன்னுமே பேசாம.. எல்லாத்துக்கும் ஒத்துகிட்டு இப்படி வரீங்களே.. முடியாது.. நான் மெட்ராஸ் போய்த்தான் ஆகணும்னு சொன்னா அந்த மந்திரி என்ன செய்வார்”
“ஒன்னும் செய்ய மாட்டார் தான்.. ஆனா சில சமயம் .. நம்ம விருப்பங்களை பொது வேலைக்காக விட்டுக் கொடுக்க வேண்டி வரும்.. இதும் அது மாதிரி தான்”
“என்ன பொது வேலையோ.. அடுத்த முறை இப்படி ஆச்சு நான் ட்ரெயினை விட்டு இறங்க மாட்டேன் ஆமா”
இது போல இன்னும் ஒரு முறை , மந்திரி வருகைக்காக நாம் ரயில் வண்டி விட்டு நடுராத்திரி இறங்கி, மடை திருப்பிய வெள்ளமாக திசை மாறி பயணிப்போம் என நினைக்கின்றாயா என மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.
ரோஸ் லேண்ட் (Rose Land) என்று வசீகரப் பெயர் கொண்டதும்.. ஒரு ரோஜாச் செடி கூட தனது காம்பவுண்டுக்குள் இல்லாததுமான புதுக்கோட்டையின் ட்ராவலர்ஸ் பங்களா.
அமைச்சர் இன்றைக்கு வருவது நேற்று நடு நிசியில் தான், எங்கள் செயற்பொறியாளருக்குத் தெரிந்திருக்கு.. ஆனால் கட்சிக்காரர்கள் எப்படி வரவேற்பு போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஒட்டினார்கள் என தெரியவில்லை..
ஹெட்குவார்டஸ் டெபுடி தாசில்தார், புன்னகையுடன் கையைப் பற்றிக் கொண்டார்.. ‘ மெட்ராஸ் போய்ட்டு இருந்து பாதில வந்துட்டீங்கனு உங்க ஈ.ஈ சொன்னார்”
“எப்ப வரார் மினிஸ்டர் .. எங்கேர்ந்து வரார்.. “
“அவர் ஊர்லேர்ந்து தான் வரார்.. இன்னும் அங்கேர்ந்து புறப்படலையாம்”
”அவர் ஊரிலிருந்து இப்ப புறப்பட்டாலும் 5 மணி நேரம் ஆகுமே. மணி இப்பவே 8 ஆச்சு. பகல் 1 மணிக்கோ .. 2 மணிக்கோ தான் வருவார் ”
“என்ன செய்ய.. மாவட்டம் நேரா கலெக்டருக்கு போன் செய்துட்டார். கலெக்டர் என்னைக் கூப்பிட்டு , நீங்க போய் ரோஸ் லேண்ட்ல ஏற்பாடெல்லாம் பண்ணிட்டு வாங்கனுட்டார்.. அதான் இத்தனை சீக்கிரம் வந்தேன்.. எந்த டிபார்ட்மெண்ட் மந்திரி வந்தாலும் ரெவினியூ டிபார்ட்மெண்ட் ஆசாமிங்க தலை தான் உருளும்.”
ஈ.ஈ என் பக்கத்திற்கு வந்து என்னவோ பேச ஆரம்பித்தார். நான் முறைக்கத் தொடங்கியவுடன் அமைதியானார்.
அங்கும் இங்கும் நடமாடிய கட்சிக்காரர்கள் ஓரிரு வார்த்தைகள் பேசினார்கள்.
நானே வலுவில் ஈ.ஈ யிடம் பேசினேன், “ சார் மணி 11.30 ஆச்சு.. கலெக்டர் ஆபிசுக்கு போன் செய்து கேளுங்க.. மினிஸ்டர் எப்ப புறப்பட்டார்னு.. டயம் தெரிஞ்சா.. நாம லஞ்ச் முடிச்சுட்டு கூட வந்து வெயிட் செய்யலாம்”
‘அதும் சரி தான்.. இங்கே இருக்கும் போன் எப்பவும் கட்சிக்காரங்க கைலே இருக்கும்; வா.. அப்படி கோர்ட் வாசல்ல நல்ல டீ குடிச்சிட்டு.. அப்படியே ஃபோன் செய்யலாம்”
ஆஸ்திரேலியாவில் ஒரு மங்கையைக் கலியாணம் செய்து, அதன் வழி சிட்னி தொண்டைமான் , என ஒரு வாரிசு கொண்ட புதுக்கோட்டை மன்னர் பரம்பரையின் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் கோர்ட் கட்டிடங்களுக்கு வெளியே உயரமான பீடத்தில் சிலையாக நின்று நாங்கள் டீ குடிப்பதை கேலியாகப் பார்க்கின்றார்.
பக்கத்தில் இருந்த டெலிபோன் பூத்துக்குள் ஈ. ஈ சென்றார்.. இன்னும் எத்தனை நேரம் காத்திருக்க வேண்டுமோ என நினைத்து , நான் குமுதம், ஆனந்த விகடன் என வாங்கினேன்
“சார் நான் குழந்தைவேலு ஈ.ஈ பேசறேன்.. வணக்கம் நல்லாருக்கீங்களா...” பூத் கதவைச் சாத்திக் கொண்டார்.
சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு வெளியே வந்தார்.
“மௌளீ.. மினிஸ்டர் வரலையாம்.. விசிட் கான்சலாம் என்னமோ அர்ஜெண்ட் வேலையாம். மெட்ராஸ் போறாராமாம்.. கலெக்டர் கிட்ட போன் செய்து சொன்னாராமாம்”
------
என் டைரியின் அந்த தினப் பக்கத்தில் குத்தி வைக்கப்பட்ட அந்த பழைய அட்டை டிக்கெட்டை என் மனைவியிடம் காட்டி இன்றைக்கும் திட்டு வாங்கினேன்
Thursday, 20 October 2011
How to Hug
அவனுக்கு ட்ரெயினுக்கு நேரமாகிவிட்டது.. ரொம்ப வேகமாக ஸ்டேஷனுக்குள் ஓடி வந்து கொண்டிருக்கிறான்.. எந்த ப்ளாட்பாரம். எந்தப் ப்ளாட்பாரம்.. அய்யோ 4 வது ப்ளாட்பாரம்.. படியேறி ,, எதிரே வந்தவர்.. முன்னே போய்க் கொண்டிருப்பவர் எல்லாரையும் தள்ளி விட்டபடி பாய்கிறான்.. போச்சு.. அதோ ட்ரெயின் வந்து .. ஐயோ கிளம்பி விட்டதே.. பல படிகளை தாவித் தாவிக் கடக்கிறான். படி இறங்குமிடத்தில் புக் ஸ்டால்.. மிகப் பெரிசாக ஒரு புத்தகம் How to Hug என்று தலைப்பு.. ஆகா சுவாரசியமாகப் படித்துக் கொண்டே போகலாம்; கிளு கிளுப்பான கதை போலும்.. கடைக்காரரிடம் காசைத் தூக்கி எறிந்து அந்தப் புத்தகத்தைக் கவர்ந்து பையில் திணித்து.. வேக வேகமாக ஓடி.. எப்படியோ ட்ரெயினுக்குள் ஏறிவிட்டான்.. ஆனால் அவன் ஏற வேண்டிய கோச் இது இல்லை.. பக்கத்துக் கோச்.. டிக்கட் பரிசோதகர் , “ சார் என்ன இது .. இப்படி சாகசம் செய்து கொண்டு ,, மிகவும் ஆபத்தான் வேலை நீங்கள் செய்தது” அன்பாக கடிந்து அடுத்த கோச்சுக்கு போகும் வெஸ்ட்யூபில் கதவினைத் திறந்து விட்டார்.
டைரிக் குறிப்பு -2
பார்த்திருக்கின்றேன்.ஒரு பஸ் வந்து இவன் கடைக்கு சற்று முன்பே நிற்கும் போது, அதிலிருந்து இறங்குபவரில் சிலர் இவன் கடைக்குள் நுழைவதை பார்த்திருக்கின்றேன்
Wednesday, 19 October 2011
டைரிக் குறிப்பு -1
Monday, 17 October 2011
பொட்டி ஸ்ரீராமலு
Sunday, 16 October 2011
படுக்கையறைக் கதை
Saturday, 15 October 2011
காஃபி குடிப்பது
வெளிமண்டலத்தில் காஃபி குடிப்பது எப்படி என்று ஃபில்டர் காஃபி குடித்துக் கொண்டே இந்த சுட்டியில் படித்தேன்