Saturday 16 April 2011

வைகோ வுக்கு கலைஞர் சொன்ன கதை


எஸ்.வி.சேகர் கலைஞர் குதிரை பதிவு ரேஸ் குதிரை மாதிரி ஆகிவிட்டது. தமிழ் இன்டெலி எனும் வலைத் திரட்டி தளத்தில் கொடுத்துப் பாருங்கள் என என் நண்பர் சொன்ன யோசனை வேறு அதன் மவுசைக் கூட்டி விட்டது. பதிவின் லிங்கை காப்பி பேஸ்ட் தான் செய்தேன். ஒரே நாளில் அதற்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்துவிட்டது. இன்டெலியிலிருந்து ஒரு மெயில் வேறு வந்தது. இன்டெலி
உபயோகிப்போர் ஒன்று கூடி அதனை பாப்புலர் பதிவு என செய்துவிட்டதாக. அங்கே ஆரம்பித்தது இன்னும் வேகம். அந்தப் பதிவு டாப் டென் வரிசையில் மூன்றாவது இடத்துக்கு ஒரே இரவில் வந்துவிட்டது. கூகிள் அனலிடிக்ஸ் ஹிட் எண்ணிக்கை தருகிற நம்பரைக் கவனித்தால் எஸ்.வி சேகரின் மகத்துவம் புரிந்தது.

இந்தப் பதிவு இப்படி ஈகோ ட்ரிப் அடிபதற்கல்ல. இந்தப் பதிவை நினைத்துக் கொண்டே உறங்கப் போனேன். கனவில் வைகோ வந்தார்.

உங்களுக்கு நம்புவதற்கு சிரமமாகத் தான் இருக்கும். என் போன்ற ஆசாமிகள் கனவில் அந்த கால டி. ஆர் இராஜகுமாரி தேவிகா வருவது தான் நியதி வாஸ்தவமும் கூட. திரிஷா. ஷ்ரேயா கனவில் வருவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகள் கூட பலிக்க்கவில்லை.

அதிர்ஷ்டமாய் வைகோ வந்தார்

"ஏங்க நான் எப்பவுமே புலிக்கு எதிரா பேசற ஆசாமி.. என் கிட்ட சண்டை புடிக்க வந்தீங்களா"

"அது இல்லீங்க.. எஸ்.வி.சேகர் கலைஞருக்கு குதிரைக் கதை சொன்னதாவும் பதிலுக்கு அவர் ஒரு குதிரைக் கதை சொன்னதாகவும் எழுதிருந்தீங்களே"

"அது கற்பனைங்க.."

"நல்லது நான் போனவாரம் தேர்தலுக்கு முன்னே கலைஞருக்கு போன் செய்தேன். அப்ப எனக்கு ஒரு குட்டிக் கதை சொன்னாரு"

"என்னது குட்டிக் கதையா”

"சின்னக் கதைங்க"

"சின்னக் கதையா"

"அதாங்க பாரபிள்னு ஆங்கிலத்துல சொல்வாங்களே"

"சொல்லுங்க சொல்லுங்க"

"போன் செய்தனா;; அவரே போனை எடுத்தார்

என்ன தம்பி நலமா"

"எங்கண்ணே உங்களுக்குத் தெரியாதா"

"ஒரு கதை சொல்கிறேன் கேள்" அப்படின்னார்

"எனக்கு கொஞ்சம் பதை பதைப்பு. ஏதானும் சினிமாவுக்கு எழுதும் கதையை போன்ல சொல்லப் போறாரா. ப்ரிபெய்டு சிம்.. பாலன்ஸ் வேற கம்மியா இருந்தது. இருந்த காசெல்லாம் அம்மா வீட்டுக்கு ஆட்டோவிலே போய் வந்தே கரஞ்சு போச்சு அதான்"

"ஓக்கே ஒக்கே புரிஞ்சுது ..நீங்க மேட்டருக்கு வாங்க'

"அவர் சொன்ன கதை இது தான். அப்படியே சொல்றேன் நீங்க உங்க வலையிலே போடணும்"

கலைஞர் வைகோவிடம் சொன்ன கதை

வளம் பெருகிய நாடு

ஆனால் அந்த நாட்டின் அரசி கொடுங்கோல் ஆட்சி செய்து வந்தாள். அவளுக்கு தன்னை விமர்சனம் செய்பவரைக் கண்டால் ஆகாது.

உடனே கடும் சிறைத் தண்டனைதான். அப்படியாக ஒரு நாடக ஆசிரியரை தன்னை விமர்சனம் செய்தார் என சிறையில் தள்ளினாள்.

அரசியின் காவலர்கள் அந்த நா.ஆ வைக் கைது செய்யும் போது அவர் செய்த சூளுரைகள் நாடெங்கும் பேசப்பட்டன.

சிறையில் நாடக ஆசிரியர் சும்மா இருக்கவில்லை. அங்கே ஊர்ந்து கொண்டிருந்த ஓர் எறும்பை நட்பாக்கிக் கொண்டார். தனது விடா முயற்சியால் தொடர் முயற்சியால் அந்த எறும்புக்கு பேசக் கற்றுக் கொடுத்து விட்டார். நாடக ஆசிரியரின் எழுச்சி முழக்கங்களையும், நாடக வசனங்களையும் அந்த எறும்பு நன்கு பேசப் பழகிவிட்டது. அவரது இந்த அரிய முயற்சி சிறைக் காவலர்களின் கவனத்தில் வராமலே நடந்தது.. ஆண்டுகள் உருண்டோடின. நா.ஆ விடுதலை ஆகும் நாளும் நெருங்கியது. அப்போது அந்த எறும்பு நா.ஆ அளவுக்கே பேச, முழங்க தயாராகி இருந்தது.

நாடக ஆசிரியரின் நம்பிக்கை இப்போது பன்மடங்கு பெருகியிருந்தது..

தனது கொள்கை முழக்கங்களை ஒரு எறும்பைக் கொண்டு நாடெங்கும் பரப்பிட நல்ல வாய்ப்பு கிட்டியிருப்பதாக நினைத்தார். ஓர் எறும்பு பேசுகிறது அதுவே பெரும் ஆச்சரியம். அதுவும் தூய தமிழில் கொள்கை முழக்கம் செய்கிறது. தனது முழக்கங்களுக்கு சரியான ஆதரவு கிட்டும் என அவருக்கு திண்ணமாக தோன்றியது..

விடுதலை நாள் வந்தது.. சிறைக் கதவுகள் திறந்தன ... நா.ஆ வெளியே வந்தார்.. பல ஆண்டுகள் கழித்து வெளி உலகம் காணும் உவகை. அதுவுமின்றி தன்னிடம் இருக்கும் கருத்துக்கள்.. அதை முழங்கும் எறும்பு..

கால்களை அழுந்தப் பதிந்து நடந்தார்.. களைப்பு இருந்தாலும் உற்சாகம் குறையவில்லை.. ஆனால் பசித்தது.

ஆ அதோ ஓர் உணவு விடுதி.. என்னவோ பெயர் பலகையில் காணப்படுகிறதே.. ஜெயம்மா உணவு விடுதி..இங்கேயே பசியாறலாம்..

நா.ஆ உள்ளெ நுழைந்தார்.

அங்கே ஒரு பணியாள் வந்த அனைவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டிருந்தான்

இவரிடம் வந்து என்ன வேண்டும் எனக் கேட்டான். இருப்பதில் ஒன்றைக் கொடப்பா என்றார் நா.ஆ என்னது இருபத்தி ஒன்றா என்றான் பணியாள்.. இருபத்தி ஒன்றல்ல அப்பா இருப்பதில் ஏதாவது ஒன்று எனச் சொன்னேன் என்றார் நா.ஆ

அவனும் சென்றான்.. நா.ஆ சிந்தித்தார். இந்த உணவு விடுதியில் ஆட்கள் நிறைய உள்ளனர். இங்கேயே பேசும் எறும்பைக் காட்டி அதனை பேச வைத்து மக்களை தன் பக்கம் இழுத்தால் என்ன.. இது தான் நல்ல வாய்ப்பு அப்படியே செய்யலாம் என முடிவும் செய்தார்

பத்திரமாக வைத்திருந்த மேசை மேல் அந்த அதியசய எறும்பை எடுத்து வைத்தார் நா.ஆ

கையில் ஒரு தட்டுடன் வந்தான் பணியாள்.

நா.ஆ அவனிடம் ஆர்வமாக அந்த எறும்பைக் காட்டி இதோ பார்த்தாயா எனக் கேட்டார்

அவன் பதறிப் போய் அந்த எறும்பை சடேரென தன் கையால் அடித்து நசுக்கிக் கொன்று போட்டான்.. என்னை மன்னித்து விடுங்கள்

அய்யா உணவு அருந்தும் இடத்தே எறும்பு வந்தது எங்கள் தவறு தான் எனவும் சொன்னான்

No comments: