திரிலோக சஞ்சாரியான நாரதர்.. சில தினங்களுக்கு முன்பு சென்னைப் பட்டிணத்துக்கு வந்து சென்றதாக நேற்று இரவில் கனவில் வந்து சொன்னார்.
"இங்கே வந்து என்ன செய்தீர்கள்"
"வயது முதிர்ந்த ஒரு பெரியவரை சந்தித்து அவருக்கு கதை சொன்னேன்"
மிகுந்த ஆர்வத்தில், "யாரை சந்தித்தீர்கள்"
"அது தேவ ரகசியம் என்றும் அதை சொல்வதற்கில்லை"
"சரி என்ன கதை சொன்னீங்க"
"அந்த உரையாடலை அப்படியே இங்கே சொல்கிறேன். கவனமாக கேளுங்கள்
நான் சந்திக்கும் போது அந்த முதியவர் மிகவும் கவலையில் இருந்தார். அவருக்கு நிறைய பொறுப்புகள் என்பது எனக்கு தெரியும் ஆகையால் சமாதானம் சொன்னேன். அவருக்கு சமாதானம் உண்டாகவில்லை;நான் அவருக்கு பாரதத்தில் வரும் சம்பவம் ஒன்றையும் அதை ஒட்டிய கதை சொன்னேன்
பாரதத்திலே கிருஷ்ணனிடம் அறிவுரைகள் பெற்றவர்கள் ஏராளம்
கீதையாகவும், எச்சரிக்கையாகவும், பதவிசாகவும், மறைமுக எச்சரிக்கையாகவும் ஏராளம் ஏராளம்
ஆனால் கிருஷ்ணனே ஆலோசனை கேட்கும் தருணம் உண்டு.. அதை அம்புப் படுக்கையில் இருந்தவாறு பீஷ்மர் தர்மனுக்கு சொல்லும் அறிவுரைகளில் சொல்கிறார்
“ போற்றுதலுக்குரிய பாட்டனாரே. ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொண்ட உறவினர்களைக் கொண்ட அரசன் அவர்களைக் கையாள்வது எப்படி”
“என் பிரியத்துக்குரிய யுதிஷ்டிரா. இதற்கு நான் கிருஷ்ணன் ஒரு சமயம் நாரதரிடம் பெற்ற உபதேசத்தை மேற்கோளாக காட்டினால் உனக்கு எளிதில் புரிந்து விடும்”
கிருஷ்ணர் நாரதரிடம் கேட்கிறார்,
“ நாரதரே. நான் ஒரு பரந்த தேசத்தினை ஆள்கிறேன் என்று வெளிப்பார்வைக்கு சொல்லலாம். ஆனால் நான் என் உறவுகளின் அடிமை போல உணர்கிறேன். அவர்களின் சுடு சொற்களும், குத்தலும் குதர்க்கமும் நிறைந்த பேச்சுகளும் என்னை மிகவும் சங்கடப்படுத்துகின்றன. அவர்களில் தங்கள் அழகினால் கர்வம் கொண்டவர்களாகவும், சிலர் தங்கள் பதவிகளால் கர்வம் கொண்டவர்களாகவும்
இருக்கிறார்கள். மூர்கமாகவும் நடக்கிறார்கள் என்னை ஆலோசியாமல் அவர்கள் செய்யும் காரியங்களுக்கு பின்னர் நான் பழி சுமக்கிறேன்”
“கேசவா, நாராயணா , மதுசூதனா... பரந்த ராஜ்ஜியத்தில் சில பொறுப்புகளை நீ அவர்களுக்கு தந்திருக்கலாம். அவர்களின் சுடு சொற்களை நீ நல்ல வார்த்தைகள்மூலமே எதிர் கொள்ள வேண்டும். அவர்களிடம் இருந்து அதிகாரத்தைப் பறிப்பது நீ கக்கிய உணவை நீயே சாப்பிடுவது போல். அவர்களை மென்மையானதும் அதே சமயம் இரும்பைவிட உறுதியானதுமான ஒரு சக்தி ஆயுதம் கொண்டு கையாளவேண்டும்”
“அதென்ன ஆயுதம் நாரதா”
”அவர்களின் சக்திக்கு தக்கவாறு உணவு, தேவையான அளவே கருணை, நாம் எப்போதும் பொறுமையாக இருப்பது. மிக முக்கியமாக தகுதிக் கேற்ற அளவே அவர்களை மரியாதையாக நடத்துவது இது தான் நான் சொன்ன ஆயுதம்”
இந்த கிருஷ்ண நாரத உரையாடலை பீஷ்மர் தர்மனின் கேள்விக்கு பதிலாக சொல்கிறார்
இது தான் நான் அந்த முதியவரிடம் சொன்ன கதை"
”இதற்கு அந்த முதியவர் என்ன பதில் சொன்னார்”
”முதியவர் ஏதும் பதில் சொல்லவில்லை அவர் பக்கத்தில் ஒருவர் உட்கார்ந்திருந்தார் தன் பெயர் வடிவேலு எனச் சொன்னார். அவர் தான் எனக்கு பதில் சொன்னார்”
"என்ன பதில்"
ஏம் பெரிசு இதச் சொல்லத்தான் வந்தியா நீ லேட் பிக் அப்; இதான் ஊருக்கே தெரிஞ்ச சங்கதியாச்சே" எனச் சொன்னார்
3 comments:
அன்பின் மௌளி
உண்மை - நடைமுறைப்படுத்த இயலுமா ? - பாரதத்திலேயே இயலவில்லையே ! ம்ம்ம்ம் - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
நன்றி! ஊருக்கே தெரிஞ்ச சங்கதி வயசானவருக்கும் எப்பதான் தெரியப் போகுதோ. மக்களுக்கு இனிமேலாவது நல்ல நேரம் ஆரம்பம் ஆகட்டும். நன்றி.
நல்ல நகைச்சுவை. பெரிசுக்கு சொல்லீட்டீங்களா?
Post a Comment