Friday 21 March 2008

ரயில் பயணம்


தூங்கிக்கொண்டு போகலாம் ; பாத்ரூம் இருக்கிறது ; பகல் ட்ரெயினில் தொடர்ச்சியாக பட்சண ஊர்வலம் வரும் என்று சில சௌகர்யங்கள் இருந்தாலும் ரயில் பயணத்தில் பல அசௌகர்யங்களும் உண்டு என்று ஒத்துக் கொள்வீர்கள்.


சென்னை சென்ட்ரல் போன்ற பெரிய ஸ்டேஷன்களில் முகப்பு வாசலுக்கும் டிரெயின் நிற்கும் இடத்துக்கும் உள்ள தூரம் பல கி.மி இருக்கும். ராமேஸ்வரம் கோவில் பிரகாரத்துக்கு போட்டியான நீளமான பிளாட்பாரங்கள் என் போன்ற மினி கஜேந்திர ஆகிருதி கொண்டவர்களின் சத்ரு. சிலருக்கு மட்டும் எப்போதும் பிளாட்பாரத்தின் தலைப்பில் உள்ள கம்பார்ட்மென்ட்டில் ரிசர்வேஷன் கிடைத்துவிடும். இவர்கள் பெருமாளுக்கு ப்ரீதியானவர்கள் என நினைக்கிறேன். இவர்கள் பெருமாளுக்கு செய்யும் நைவேத்திய சங்கதிகள் என்னவென்று கேட்டு வைத்துக்க் கொள்ள வேண்டும்.

இப்போது AIRTEL , RELIANCE போன்ற நம் கால புரவலர்கள் சென்னை , பெங்களூர் ஸ்டேஷன்களில் மினி பாட்டரி கார்கள் உபயம் செய்து என்னை மாதிரி ஆசாமிகளை ரட்சித்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் இந்த கார்களில் ஸ்டேஷன் வாசலில் இருந்து எனது கம்பார்ட்மெண்ட் வரை சென்று விடுகிறேன். அங்கே இறங்கியவுடன் இந்த கார்களை ஓட்டும் அன்பர்களை ,
"என் உயிர் அன்பாய் நீ ; என் இளவல் உன் இளையான் இந்நன்னுதலவள் நின் கேள்" என ராமன் குகனிடம் பரிவு செய்தது போல் அன்பாகத்தழுவிக் கொள்வேன்.

ஸ்லீப்பர் கோச்சில் நான் பெரிதும் காதலிப்பது சைட் லோயர் பெர்த். தூக்கம் வரவில்லை என்றால் உட்கார்ந்து வரலாம். இதர பர்த்துகளில் இது சாத்தியம் இல்லை.

இப்போது ஸைட் லோயருக்கும் ஸைட் UPPER க்கும் இடையிலான அந்த சொற்ப இடத்திலும் ஸைட் மிடில் என ஒரு பெர்த் வரப்பபோவதாக அறிவிப்பு.

இந்த ஐடியாவை லாலுஜியின் நினைவு மண்டலதிலிருந்து நீக்கிவிட பெருமாளை சேவிக்கிறேன்

ரயில்வே நிர்வாகம் பல வருடங்களாக ஒரு சங்கதியை கவனிக்கவில்லை. லால் பகதூர் ஸாஸ்திரியார் ரயில்வே மந்திரியாக இருந்த போது அவரது உயரத்தை கணக்கிட்டு பெர்த் நீளம் டிஸைன் செய்யப்பட்டிருக்க வேண்டும். இப்போது பெரிய மனசு பண்ணி வேறு நீளமான பர்த்துகளை வடிவமைக்க வேண்டுகிறேன்.

அப்பர் பெர்த் ( UPPER BERTH) என்ற பொறியில் சிக்கும் அன்பர்களுக்கு சில யோசனைகள்

ஒரு பனையோலை விசிறி, மூவ் போன்ற ஏதாவது சுளுக்கு போக்கும் சங்கதி போன்றவற்றுடன் மேலே ஏறவும்.
கம்பார்ட்மெண்டில் பொறுத்தியுள்ள ஃபேன்கள் UPPER BERTH க்கு காத்து தராது. எனவே விசிறி அவசியம்.

திடீர் என முழிப்பு வந்தால் வீட்டில் எழுந்து உட்கார்வது போல் முடியாது. கூரை இடித்து கழுத்தில் சுளுக்கு நிச்சயம். ஆகவே சுளுக்கு நீக்கி கட்டாய தேவை

1 comment:

cheena (சீனா) said...

சைடு அப்பர் - அதுவும் சைடு மிடிலுக்கு மேலே உள்ள சைடு அப்பரில் பயணம் செய்வது நாம் போன ஜென்மத்தில் செய்த பாவம்.