Sunday 16 March 2008

திருவல்லிக்கேணி பிரசித்தங்கள்


திருவல்லிக்கேணி பிரசித்தங்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் பார்த்தசாரதிக்கு கூட இரண்டாம் இடம் தான். மான்ஷன்களுக்குதான் முதல் இடம். பெருமாள் சர்வ வியாபி என்பது கருத்து. மான்ஷன்கள் திருவல்லிக்கேணியின் எல்லா தெருக்களிலும் இருக்கின்றன. இதனால் அந்த மீசை வைத்த பெருமாளின் அனுமதியுடன், மான்ஷன்களை "சர்வ வியாபி" என்று அழைக்க கேட்டுக்கொள்கிறேன். இதில் மாற்று கருத்து உள்ளவர்களை மன்னித்து மேலே தொடர்கிறேன்.


மான்ஷன்கள் விதி விலக்கில்லாமல் இரண்டு பொது அம்சங்கள் கொண்டவை . கவரச்சியான ரிஷப்ஷன். இதன் பின்னால் ஒளிந்திருக்கும் புறா கூண்டு சைஸ் ரூம்கள். முதல் தடவை வரும் எல்லாரும் கவர்ச்சியில் விழுவது திண்ணம்.ரூம் சைஸ் சிறிதானாலும் வாடகை சல்லிசு. வசதிகள் ஏராளம். கூப்பிட்ட தூரத்தில் எல்லா சௌகர்யங்களும் கிடைக்கும். திருவல்லிக்கேணி மெஸ்ஸில் சாப்பிடாதவர்கள் என்னளவில் அபாக்கியவான்கள்.

சென்னையின் நித்திய வசீகரங்கள் இரண்டு. ஒன்று ஸ்பென்சர் பிளாசா. அடுத்தது மெரீனா. இவை திருவல்லிக்கேணியின் மிக அருகில் அமைந்து மான்ஷன்வாசிகளின் நித்யானுஷ்டமான டைம் பாஸ் சங்கதிக்கு இலவச சேவை செய்வது இப்பிரதேசத்தின் கூடுதல் சிறப்பு.

குதிரை மேல் சவாரி செய்தபடி டிராபிக் ஒழுங்கு செய்யும் போலீஸ் திருவல்லிக்கேணியில் மட்டுமே பார்க்க கிடைக்கும். சேப்பாக்கம் ஸ்டேடியம் சுற்றி ஓட்ட நடையில் குதிரை வர அதிகாரமாய் போலீஸ் அதன் மீது. பெரிய மீசையுடன் ஏதாவது போலீசை குதிரை மீது பார்த்தால் எனக்கு "பெரிய பழுவேட்டரை " பார்த்த மாதிரி தோன்றும். அவர் அந்த வம்சமா என கேட்க தோன்றும் ஆனால் மாட்டேன். மேனியில் அறுபத்து மூன்று விழுப்புண் கண்ட வீரர் என்றெல்லாம் பெயர் வாங்க எனக்கு ஒரு போதும் ஆசையில்லை.

ஹர்த்தால் , சண்டே இன்ன பிற அசாதாரண நாட்கள் தவிர பிற நாட்களில் ஒரு பந்தயம் வைத்து அதற்கு ஒரு கார் பரிசு தர நான் தயார் பந்தய விதிகள் வருமாறு
அமீர் மகாலிலிருந்து கண்ணகி சிலை வரை டுவீலர் காலை ஊன்றாமல் ஓட்ட வேண்டும் . பைகிராப்டஸ் சாலை என அறியப்படும் இந்த சாலையில் உள்ள ஜன நெருக்கத்தை கணக்கு பண்ணி துணிச்சலாக நீங்களும் என்னுடன் co sponser ஆக வாத்சல்யல்யத்துடன் அழைக்கிறேன்.

பைக்ராப்ட்ட்ஸ் சாலையில் காணப்படும் புத்தக கடைகள் என் போன்ற அசடுகளுக்கு மணிக்கணக்காக கம்பெனி தரும். பல புதையல் புத்தகங்களை அங்கே வாங்கியிருக்கிறேன். உதரணமாக ஸ்ரீனிவாச சாஸ்திரியாரின் அபார ஆங்கிலம் பொதிந்த THE OTHER HARMONY கட்டுரை தொகுப்பை இங்கே மூன்று ரூபாய்க்கு வாங்கினேன். இன்று பதிப்பித்தால் அது முன்னூறு ரூபாய்க்கு வரும் .

திருவல்லிக்கேணியின் இம்சை மழைக்காலம். ஜோவென்று பெய்து கொண்டிருக்கும் மழையில் குடை பிடித்து கூட இங்கே வெளியில் போக முடியாது. பெரும்பாலும் அடைத்துக்கொன்டுவிட்ட டிரைனேஜ - ஏணி வைத்து ஏறினால் தான் ஏற முடியும் என்கிறதான உயரமாய் உள்ள பிளாட்பாரம் இவைகளின் காருன்யத்தால் ரோட்டில் வெள்ளமாய் ஜலப்பிரவாகம்.
கோவர்த்தனகிரியை குடையாக்கி ஜனங்களையும் ஆநிரை கூட்டத்தையும் காப்பாற்றியதாக பார்த்தசாரதியை
"அந்தமில்வரையால் மழை தடுத்தானைத் திருவல்லிக்கேணி கண்டேனே " என்று பெரிய திருமொழியாய் வியந்த திருமங்கை ஆழ்வார் இப்போதைய திருவல்லிக்கேணி மழையை பார்த்தால் என்ன சொல்வாரோ?

பெருமாளை பற்றி மட்டும் சொல்லி திருவேட்டீஸ்வரனை கண்டு கொள்ளமால் விட்டால் எனக்கு ஸ்பெஷல் சங்கதிகளை எம லோகத்தில் அறிமுகம் செய்யும் அபாயம் காத்திருப்பதால் அவரைப்பற்றி ஒரு வரி இங்கே சொல்லி அவருக்கென ஒரு பிரத்தியேக போஸ்டிங் இங்கே வெளியிடுகிறேன் என உங்களை சாட்சியாக்கி அந்த ஈஸ்வரனிடம் GOD PROMISE செய்கிறேன்.

2 comments:

cheena (சீனா) said...

கனேஷின் கூர்ந்து கவனிக்கும் திறமை உங்களிடமும் பளிச்சிடுகிறது. சிறு சிறு செய்திகளைக்கூட விடாமல் தருவது நன்று.

BalHanuman said...

அன்புள்ள மௌளீ,

எனக்கு மிகவும் பிடித்தமான உங்களது ஒரு பதிவு இது.

சரளமான நடை, இடையோடும் நகைச்சுவை.

இதை எனது தளத்தில் படித்த அன்பர் ஒருவர் 'ரத்னா கஃபே இட்லி சாம்பாரை' இங்கு நீங்கள் குறிப்பிடாமல் விட்டு விட்டீர்களே என்று குறைப்படுகிறார்....